ஷீலா வாக்மரே இரவில் நன்றாகத் தூங்கிப் பல காலமாகிறது.

"என்னால் இரவில் தூங்க முடியாது... பல வருடங்கள் ஆகிறது," என்கிறார் 33 வயது ஷீலா. 33, தரையில் விரிக்கப்பட்ட கோதாடியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, அவளது சிவந்த விளிம்பு கொண்ட கண்கள் ஆழ்ந்த வலியால் பளபளத்தன. அவள் நீண்ட இரவு நேரங்களை விவரிக்கையில், அவள் அடக்க முயற்சிக்கும் அழுகையால் அவளது உடல் சிதைந்துள்ளது. "நான் இரவு முழுவதும் அழுகிறேன். நான் உணர்கிறேன்...நான் மூச்சுத் திணறுவதைப் போல உணர்கிறேன்."

ஷீலா மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ராஜூரி கோட்கா கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் பீட் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். இரண்டு அறை வீட்டில் அவர் தூங்கும் போது, அவரது கணவர் மாணிக் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளான கார்த்திக், பாபு மற்றும் ருதுஜா ஆகியோர் பக்கத்தில் இருப்பார்கள் என்றும் அவரது விம்மல்கள் நிறைந்த அழுகை மற்றவர்களை எழுப்பி விடுவதாகவும் அவர் கூறுகிறார். “என் அழுகை அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது. பிறகு நான் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன்.”

ஆனால் தூக்கம் வரவில்லை. கண்ணீரும் நிற்கவில்லை.

"நான் எப்போதும் சோகமாகவும், கவலையாகவும் உணர்கிறேன்," என்று ஷீலா கூறுகிறார். சிறு அமைதிக்குப் பிறகு, எரிச்சலுடன் பேசுகிறார். “என் கருப்பை அகற்றப்பட்ட பிறகு இது தொடங்கியது. இது என் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றி விட்டது. 2008-ம் ஆண்டு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு 20 வயதுதான். அதன்பிறகு, அவர் சோகம், தூக்கமில்லாத இரவுகள், விவரிக்க முடியாத எரிச்சல் மற்றும் நீண்ட நேரத்துக்குத் தொடரும் உடல் வலிகள் ஆகியவற்றால் அவதிப்படுகிறார்.

PHOTO • Jyoti

ஷீலா வாக்மரே ராஜூரி கோட்கா கிராமத்தில் உள்ள தனது வீட்டில். 'நான் எப்போதும் சோகமாகவும், கவலையாகவும் உணர்கிறேன்' என்கிறார்

“சில சமயங்களில் காரணமே இல்லாமல் குழந்தைகளிடம் கோபப்படுவேன். அவர்கள் ஏதாவது அன்பாகக் கேட்டாலும், நான் அவர்களிடம் கத்துகிறேன்,” என்று ஷீலா நிராதரவாகப் பார்க்கிறார். "நான் முயற்சிக்கிறேன். நான் உண்மையில் எரிச்சலடையாமல் இருக்க முயற்சிக்கிறேன். நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை.”

12 வயதாக இருந்தபோது மாணிக்கைத் திருமணம் செய்து கொண்டார்.18 வயதிற்கு முன்பே மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார்  ஷீலா.

ஆறு மாத கரும்பு அறுவடை காலத்தில் மராத்வாடா பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, அக்டோபர் முதல் மார்ச் வரை, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் கரும்பு வயல்களில் வாழ்ந்து வேலை செய்யும் சுமார் 8 லட்ச கரும்பு வெட்டும் தொழிலாளர்களில் அவரும் மாணிக்கும் அடங்குவர். சொந்தமாக நிலம் இல்லாத ஷீலா மற்றும் மாணிக் ஆகியோர், ஆண்டின் மிச்ச மாதங்களில் தங்களின் கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள கிராமங்களிலோ விவசாயக் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்கள் நவ் பௌத்த( (நவபவுத்த) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மஹாராஷ்டிராவின் இந்தப் பகுதியில் கருப்பை நீக்கத்திற்குப் பிந்தைய நோய்களின் அனுபவம் அரிதான நிகழ்வல்ல. பீடில் கரும்பு வெட்டும் பெண்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கருப்பை நீக்கம் செய்யப்பட்டதை விசாரிக்க, 2019-ம் ஆண்டு மாநில அரசால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழு, அவர்களிடையே நோய் அறிகுறிகள் சார்ந்த அகச்சிக்கல் இருப்பதை கண்டறிந்தது.

அந்த நேரத்தில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் டாக்டர் நீலம் கோர்ஹே தலைமையில், அக்குழு ஜூன்-ஜூலை 2019-ல் கணக்கெடுப்பை நடத்தியது மாவட்டத்தில் ஒரு முறையாவது கரும்பு அறுவடை செய்ய இடம்பெயர்ந்த 82,309 பெண்களை கணக்கெடுப்பு உள்ளடக்கியது. கருப்பை நீக்கம் செய்யப்பட்ட 13,861 பெண்களில், 45 சதவீதத்திற்கும் அதிகமானோர் - 6,314 பேர் - பின்னர் தூங்குவதில் சிரமம், மனச்சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்கள், மூட்டு வலி மற்றும் முதுகு வலி வரை மன மற்றும் உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்தனர்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

ஷீலா மற்றும் அவரது குழந்தைகள், கார்த்திகா மற்றும் ருதுஜா (வலது). கரும்பு அறுவடைக் காலத்தில் குடும்பம் முழுவதும் இடம்பெயர்கிறது

கருப்பை நீக்கம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும், இது குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பெண்ணின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மும்பையைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணரும் வி.என்.தேசாய் அரசு மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கோமல் சவான் கூறுகிறார். "மருத்துவ மொழியில், நாங்கள் அதை அறுவைசிகிச்சை மாதவிடாய் என்று அழைக்கிறோம்," என்று டாக்டர் சவான் கூறுகிறார்.

அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஷீலா மூட்டு வலி, தலைவலி, முதுகுவலி மற்றும் நிலையான சோர்வு உள்ளிட்ட உடல் உபாதைகளின் நீண்டப் பட்டியலை அனுபவித்துள்ளார். "ஒவ்வொரு இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, எனக்கு கொஞ்சம் வலி ஏற்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

வலி நிவாரண களிம்புகள் மற்றும் வாய்வழி மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளிக்கின்றன. “நான் இந்த க்ரீமை என் முழங்கால் மற்றும் முதுகு வலிக்கு தடவுகிறேன். நான் ஒரு மாதத்தில் இரண்டு க்ரீம்களைப் பயன்படுத்துகிறேன், ”என்று அவர் 166 ரூபாய் விலை கொண்ட டைக்லோஃபெனிக் ஜெல்லைக் காட்டுகிறார். மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளும் உள்ளன. மாதம் இருமுறை, களைப்பைப் போக்க, நரம்பு வழியாகச் சொட்டு சொட்டாக குளுக்கோஸ் அவருக்கு உட்செலுத்தப்படுகிறது.

அவர் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் மருந்து மற்றும் ஆலோசனைக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் செலவாகிறது. பீடில் உள்ள அரசு மருத்துவமனை அவரது கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர் கிளினிக்கிற்கு நடந்து செல்லவே விரும்புகிறார். போக்குவரத்துக்காக அதிகச் செலவு செய்து அவ்வளவு தூரம் யார் செல்வார்கள்?” எனக் கேட்கிறார்.

மருந்துகள் உணர்வெழுச்சிக்கு தீர்வு கொடுக்காது. “இவ்வளவுப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், வாழ்க்கை மதிப்புக்குரியது என்று நான் ஏன் உணர்கிறேன்?”

கருப்பை நீக்கத்தால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை, உடல் ரீதியான பக்கவிளைவுகளைத் தவிர, மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைத் தூண்டும் என மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் அவினாஷ் டி சௌசா கூறுகிறார். கருப்பை நீக்கம் அல்லது செயலிழந்த கருப்பைகள் தொடர்பான நோய்களின் தீவிரம் மாறுபடும் என்கிறார் அவர். "இது நபருக்கு நபர் வேறுபடுகிறது. சில பெண்களுக்கு கடுமையான பாதிப்புகள் இருக்கும், சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.”

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

வாய்வழி மருந்து மற்றும் டைக்ளோஃபெனாக் ஜெல் போன்ற வலி நிவாரண களிம்புகள் ஷீலாவுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றன. 'நான் ஒரு மாதத்தில் இரண்டு களிம்புகளைப் பயன்படுத்துகிறேன்'

Eஅறுவைசிகிச்சைக்குப் பிறகும், ஷீலா கரும்பு வெட்டுவதற்காக மாணிக்குடன் மேற்கு மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தார். பீடில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலாப்பூரில் உள்ள கரும்பு அரைக்கும் தொழிற்சாலைக்கு அவர் குடும்பத்துடன் செல்வது வழக்கம்.

"16 முதல் 18 மணிநேரம் வரை உழைத்து, ஒரு நாளைக்கு இரண்டு டன் கரும்புகளை வெட்ட முடிந்தது," என்று ஷீலா தனது அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாட்களை நினைவு கூர்ந்தார். வெட்டப்பட்டு மூட்டையாக கட்டப்பட்ட ஒவ்வொரு டன் கரும்புகளுக்கும் ரூ.280 கொடுக்கப்படும். தொழிலாளர் ஒப்பந்ததாரர்களால் பணியமர்த்தப்பட்ட இரண்டு உறுப்பினர் குழுவுக்கு முன்கூட்டியே ஒரு மொத்தத் தொகை வழங்கப்படுகிறது.

“ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 50,000 முதல் ரூ. 70,000 வரை வருமானம் ஈட்டுகிறோம்,” என்கிறார் ஷீலா. கருப்பை நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, ஒரு நாளில் ஒரு டன் கரும்புகளை வெட்டி முடிப்பது தம்பதிகளுக்கு கடினமாக இருந்தது. "என்னால் அதிகச் சுமைகளைத் தூக்க முடியாது, முன்பு போல் வேகமாக வெட்ட முடியாது."

ஆனால் ஷீலாவும் மாணிக்கும் முன்பணமாக 50,000 ரூபாயை 2019-ம் ஆண்டில் வீட்டைப் பழுதுபார்க்கவென ஆண்டுக்கு 30 சதவீத வட்டியில் வாங்கினர். எனவே அந்தத் தொகையை செலுத்த அவர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். "இது ஒருபோதும் முடிவதில்லை," என ஷீலா கூறுகிறார்.

*****

கரும்பு வயல்களில் முதுகு உடைக்கும் உழைப்பு பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் மிகவும் சவாலானது. வயல்களில் கழிப்பறைகள் அல்லது குளியலறைகள் இல்லை என்றாலும், அவர்களின் வாழ்க்கைச் சூழல்களும் அதே அளவு சவால் நிறைந்தவையாக இருக்கின்றன. சில சமயங்களில் தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து, கரும்பு தொழிற்சாலைகள் மற்றும் வயல்களுக்கு அருகில் கூடாரங்களில் வாழ்கின்றனர். "மாதவிடாய் நேரத்தில் வேலை செய்வது கடினமாக இருந்தது," என ஷீலா நினைவு கூர்ந்தார்.

ஒரு நாள் விடுப்பு கூட அபராதமாகத்தான் வருகிறது, அன்றைய ஊதியத்தை ஒப்பந்ததாரர் அபராதமாகக் கழித்துக் கொள்கிறார்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: ஷீலா கரும்புத் தோட்டங்களில் வேலைக்குச் செல்லும்போது குடும்பத்தின் பொருட்களை எடுத்துச் செல்லும் பெட்டி. வலது: வளைந்த அரிவாள் கடினமான கரும்புத் தண்டுகளை வெட்டப் பயன்படுகிறது

பெண் தொழிலாளர்கள், தாங்கள் பயன்படுத்திய காட்டன் உள்பாவாடைகளால் செய்யப்பட்ட துணி நாப்கின்களை அணிந்து வேலைக்குச் செல்வதாக ஷீலா கூறுகிறார். அவர்கள் அதை மாற்றாமல் ஒரு நாளைக்கு சுமார் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். "நாள் வேலையின் முடிவில் நான் அதை மாற்றுவேன்," என்று அவர் கூறுகிறார். "முழுமையாக நனைந்து, அதிலிருந்து ரத்தம் சொட்டும்."

முறையான துப்புரவு வசதிகளோ அல்லது பயன்படுத்திய துணி நாப்கின்களைத் துவைக்க போதுமான தண்ணீரோ, உலர்த்துவதற்கு இடவசதியோ இல்லாமல், அவர் அடிக்கடி ஈரமான நாப்கின்களைப் பயன்படுத்துவார். “அது வாசனையாக இருக்கும். ஆனால் வெயிலில் உலர்த்துவது சங்கடமாக இருந்தது. சுற்றி நிறைய ஆண்கள் இருப்பார்கள்." அவருக்கு சானிட்டரி நாப்கின் பற்றித் தெரியாது. “என் மகளுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியபோதுதான் நான் கண்டுபிடித்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

15 வயது ருதுஜாவுக்கு சானிட்டரி நாப்கின்களை அவர் வாங்குகிறார். "அவளுடைய உடல்நிலையில் நான் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை."

2020-ம் ஆண்டில், பெண் விவசாயிகளுக்காக பணிபுரியும் மகளிர் அமைப்புகளின் கூட்டமைப்பான மக்காம், மகாராஷ்டிராவின் எட்டு மாவட்டங்களில் நேர்காணல் செய்யப்பட்ட 1,042 கரும்பு வெட்டும் பணியாளர்களின் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. கரும்பு வெட்டும் பெண்களில் 83 விழுக்காட்டினர் மாதவிடாய் காலத்தில் துணியைப் பயன்படுத்துவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 59 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்தத் துணி நாப்கின்களைத் துவைக்க தண்ணீர் கிடைத்திருக்கிறது.  கிட்டத்தட்ட 24 சதவீதம் பேர் ஈரமான நாப்கின்களை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.

சுகாதாரமற்ற நடைமுறைகள் அதிக ரத்தப்போக்கு மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் போன்ற தொடர்ச்சியான மகளிர் நோய் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. "எனக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி மற்றும் அடர்த்தியான வெள்ளைத் திரவ வெளியேற்றம் இருந்தது," என ஷீலா கூறுகிறார்.

மோசமான மாதவிடாய் சுகாதாரத்தால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவானவை. எளிய மருந்துகளால் குணப்படுத்த முடிபவை என்று டாக்டர் சவான் கூறுகிறார். "கருப்பை அகற்றுதல் என்பது முதன்மையான விருப்பமல்ல. ஆனால் புற்றுநோய், கருப்பைச் சரிவு அல்லது நார்த்திசுக் கட்டிகள் போன்றவற்றில் கடைசிப் புகலிடமாகச்  செயல்படுத்தப்படுகிறது."

PHOTO • Labani Jangi

கரும்பு வயல்களில் முதுகு உடைக்கும் உழைப்பு, பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் மிகவும் சவாலானது. வயல்களில் கழிப்பறைகள் அல்லது குளியலறைகள் இல்லை என்றாலும், அவர்களின் வாழ்க்கைச் சூழல்களும் அதே அளவு சவால்களைக் கொண்டுள்ளன

மராத்தியில் தனது பெயரைக் கையெழுத்திடுவதைத் தாண்டி எழுதவோ படிக்கவோ தெரியாத ஷீலாவுக்கு நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. பல பெண் தொழிலாளர்களைப் போலவே, பீட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அணுகினார். வலியைக் குறைக்கும் மருந்துகளைப் பெறுவார். இதனால் அவர் மாதவிடாய் காலத்தில் தொடர்ந்து பணியாற்றலாம்.  ஒப்பந்தக்காரருக்கு அபராதம் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.

மருத்துவமனையில் ஒரு மருத்துவர் புற்றுநோய் சாத்தியம் பற்றி அவரை எச்சரித்தார். “ரத்தப் பரிசோதனையோ சோனோகிராபியோ எதுவும் செய்யப்படவில்லை. என் கருப்பையில் ஓட்டைகள் உள்ளன என்றார். ஐந்து முதல் ஆறு மாதங்களில் நான் புற்றுநோயால் இறந்துவிடுவேன் என்றும் கூறினார், ”என்று ஷீலா நினைவுகூர்கிறார். பயந்துபோன அவர், அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டார். "அதே நாளில், சில மணிநேரங்களுக்குப் பிறகு, மருத்துவர் என் கணவரிடம் அகற்றப்பட்டக் கருப்பையைக் காட்டி, இந்தத் துளைகளைப் பாருங்கள் என்றார்" என அவர் கூறுகிறார்.

ஷீலா ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். மொத்த செலவுக்கான ரூ. 40,000 பணத்தை தங்கள் சேமிப்பை காலி செய்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியும் மாணிக் திரட்டினார்.

"இந்த அறுவை சிகிச்சைகளில் பெரும்பாலானவை தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன," என்கிறார் பீட் சார்ந்த சமூக ஆர்வலர் அசோக் டாங்டே. கரும்புத் தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் அவர். "எந்தவொரு மருத்துவக் காரணமும் இல்லாமல் கருப்பை நீக்கம் போன்றத் தீவிர அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்வது மனிதாபிமானமற்றது."

கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தனியார் கிளினிக்குகளில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் நியமித்த குழு உறுதிப்படுத்தியுள்ளது.

பக்க விளைவுகள் குறித்து ஷீலா மருத்துவ ஆலோசனை பெறவில்லை. "நான் மாதவிடாய்களில் இருந்து விடுபட்டேன், ஆனால் நான் இப்போது மிக மோசமான வாழ்க்கையை வாழ்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

ஊதியக் குறைப்பு, தொழிலாளர் ஒப்பந்தக்காரர்களின் அடக்குமுறை விதிகள் மற்றும் லாப வெறி கொண்ட தனியார் அறுவைசிகிச்சை நிபுணர்களின் அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் பீட் மாவட்டம் முழுவதும் உள்ள பெண் தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்ள பொதுவானக் கதைகள் உள்ளன.

*****

PHOTO • Jyoti

லதா வாக்மரே தனது சமையலறையில் சமையல் செய்கிறார். வேலைக்குச் செல்லும் முன் வீட்டு வேலைகளை முடித்துவிடுவார்

ஷீலாவின் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதோடா கிராமத்தைச் சேர்ந்த லதா வாக்மரேவின் கதை மிகவும் வித்தியாசமானது அல்ல.

32 வயதான லதா, 20 வயதில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

“இப்போது எங்களுக்கிடையில் காதல் என்று எதுவும் இல்லை,” என்று அவர் தனது கணவர் ரமேஷுடனான உறவைப் பற்றி கூறுகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடத்திற்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது, ஏனெனில் அவர் அதிகம் விலகியிருந்தார். எரிச்சலும் அதிகரித்தது.

"அவர் அருகில் வரும்போதெல்லாம் நான் அவரைத் தள்ளிவிடுவேன்" என்று லதா கூறுகிறார். "அப்போது சண்டைகள், கூச்சல்கள் இருக்கும்." அவரது பாலியல் ஆசைகளை அவர் தொடர்ந்து நிராகரித்ததால், கணவனின் ஆசை முடிவுக்கு வந்தது என்று அவர் கூறுகிறார். "இப்போது என்னிடம் சரியாகப் பேசுவதில்லை."

விவசாயக் கூலி வேலைக்குச் செல்வதற்கு முன், வீட்டு வேலைகளை முடிப்பதில் அவரது நாள் கழிகிறது. அவர் தனது சொந்தக் கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள கிராமங்களிலோ மற்றவர்களின் வயல்களில் வேலை செய்து, ரூ.150 தினசரிக் கூலி பெறுகிறார். முழங்கால் மற்றும் முதுகில் வலியால் அவதிப்படுகிறார். அடிக்கடி தலைவலி வருகிறது. நிவாரணத்திற்காக, மாத்திரைகள் எடுக்கிறார் அல்லது வீட்டு வைத்தியம் முயற்சிக்கிறார். "அவருடன் நெருங்கி செல்ல எனக்கு எப்படி தோன்றும்?" என அவர் கேட்கிறார்.

13 வயதில் திருமணமான லதா, ஒரு வருடத்தில் ஆகாஷ் என்ற மகனைப் பெற்றெடுத்தார். 12-ம் வகுப்பு வரை படித்திருந்தாலும் பெற்றோருடன் கரும்பு தோட்டத்தில் வேலை செய்கிறார்.

PHOTO • Jyoti

கரும்பு வெட்டுவதற்காக இடம்பெயராத மாதங்களில் லதா தனது கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்கிறார்

லதாவுக்கு ஒரு மகள் இருந்தார். ஆனால் சிறுமி ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது கரும்புத் தோட்டத்தில் டிராக்டர் ஏறிவிட்டது. நசுக்கி இறந்துவிட்டார். கைக்குழந்தைகள் அல்லது குழந்தைகளுக்கு எந்த வசதியும் இல்லாததால், கரும்பு வெட்டும் தம்பதிகள் தம் குழந்தைகளை வேலை செய்யும் போது வயல்களுக்கு அருகிலுள்ள ஒரு வெட்டவெளியில் விட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அந்த சோகத்தை விவரிப்பது அவருக்குக் கடினமாக இருக்கிறது.

"எனக்கு வேலை செய்யத் தோன்றவில்லை. எதுவும் செய்யாமல் இருப்பது போல் உணர்கிறேன்," என்று அவர் கூறுகிறார். எந்த வேலையிலும் அவருக்கு ஆர்வம் இல்லாதது பிழைகளுக்கு வழிவகுக்கிறது. "சில நேரங்களில் நான் பால் அல்லது சப்ஜியை அடுப்பில் வைப்பேன். அது நிரம்பி வழிந்தாலும் அல்லது கருகினாலும், நான் எதிர்வினையாற்ற மாட்டேன்."

மகளை இழந்தாலும், கரும்பு வெட்டும் பருவத்தில் லதாவும் ரமேஷும் இடம்பெயர்வதை நிறுத்தவே முடியவில்லை.

பின்னர் லதாவுக்கு அஞ்சலி, நிகிதா, ரோகினி என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். மேலும் அவர் தன் குழந்தைகளை வயல்களுக்கு தொடர்ந்து அழைத்துச் செல்கிறார். “நீங்கள் வேலை செய்யவில்லை என்றால், குழந்தைகள் பட்டினியால் இறந்துவிடுவார்கள். வேலைக்குப் போனால் விபத்தில் சிக்கி இறந்துவிடுவார்கள்” என்றுச் சொல்கிறார் லதா. "என்ன வேறுபாடு உள்ளது?"

தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்டதாலும், வீட்டில் செல்பேசி இல்லாமல் இணையவழிக் கல்வியை அணுக முடியாததாலும், அவரது மகள்களின் கல்வி திடீரென முடிவுக்கு வந்தது. அஞ்சலி 2020-ல் திருமணம் செய்து கொண்டார். நிகிதா மற்றும் ரோகிணிக்கு பொருத்தமான வரன் தேடுதல் ஏற்கனவே நடந்து வருகிறது.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: லதா தனது குழந்தைகளான நிகிதா மற்றும் ரோகிணியுடன். வலது: நிகிதா சமையலறையில் வேலை செய்கிறார். 'நான் படிக்க விரும்புகிறேன். ஆனால் என்னால் இப்போது முடியாது,' என அவர் சொல்கிறார்

மார்ச் 2020-க்குப் பிறகு தினசரி கூலிக்கு விவசாயத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கிய நிகிதா, கரும்பு வெட்டப் பெற்றோருடன் செல்லத் தொடங்கினார். “நான் ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்,” என்கிறார் அவர். "எனக்குப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் இப்போது முடியாது. என் பெற்றோர் எனக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டுள்ளனர்,” என்று அவர் கூறுகிறார்.

நீலம் கோர்ஹே தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அமலாக்கம் மெதுவாகவே உள்ளது. கரும்பு வெட்டுபவர்கள் வேலை செய்யும் இடத்தில் சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் மற்றும் தற்காலிக வீடுகளை வழங்குவதற்கான உத்தரவுகள் காகிதத்தில் உள்ளன என்பதை ஷீலாவும் லதாவும் உறுதிப்படுத்துகின்றனர்.

"என்ன கழிப்பறை மற்றும் என்ன வீடு," ஷீலா அவர்களின் பணி நிலைமைகள் எப்போதாவது மாறக்கூடும் என்ற எண்ணத்தை உதாசீனப்படுத்துகிறார். "எல்லாம் ஒன்றுதான்."

கரும்பு வெட்டும் பெண்களின் உடல்நலக் கவலைகளைத் தீர்க்கக்கூடிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் குழுக்களை உருவாக்குவது மற்றொரு பரிந்துரை.

PHOTO • Jyoti

கதோடா கிராமத்தில் லதாவின் வீட்டிற்குள்

ஊதியக் குறைப்பு, ஒப்பந்தக்காரர்களின் அடக்குமுறை விதிகள் மற்றும் லாப வெறி கொண்ட தனியார் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு மத்தியில் பிடிபட்ட பீட் மாவட்டம் முழுவதும் உள்ள பெண் கரும்புத் தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்ள பொதுவான கதைகள் உள்ளன

கிராமத்தின் சுகாதாரப் பணியாளர் பார்க்க வருகிறாரா என்று கேட்டதற்கு, லதா, “யாரும் வருவதில்லை. தீபாவளி முடிந்து ஆறு மாதங்கள் கரும்புத் தோட்டங்களில் இருக்கிறோம். வீடு பூட்டியே கிடக்கிறது," என்கிறார். கத்தோடாவின் விளிம்பில் உள்ள 20 குடும்பங்களைக் கொண்ட ஒரு தலித் குடியிருப்பில் வாழும் நவபௌத்த குடும்பமான அவர்களிடம் கிராம மக்கள் பாகுபாடு காட்டுகின்றனர் என்று அவர் மேலும் கூறுகிறார். "எங்களிடம் கேட்க யாரும் வருவதில்லை."

குழந்தைத் திருமணப் பிரச்சனைகள் மற்றும் கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாகக் கையாளப்பட வேண்டும் என்கிறார் பீட் சார்ந்த ஆர்வலர் டாங்டே. "வறட்சியும் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் இல்லை," என்று அவர் தொடர்கிறார். "கரும்புத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் புலம்பெயர்தல் மட்டும் அல்ல."

இவற்றுக்கிடையில் ஷீலா, லதா மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் தற்போதைய கரும்பு அறுவடைப் பருவத்தில் உள்ளனர், அவர்கள் வீட்டை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் மோசமானக் கூடாரங்களில் வாழ்கின்றனர், இன்னும் சுகாதார வசதிகள் இல்லாமல் துணி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர்.

“நான் இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டியிருக்கிறது,” என்கிறார் ஷீலா. "எனக்கு எப்படி வாழ்வது என்று தெரியவில்லை."

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected]  மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில்: ராஜசங்கீதன்

జ్యోతి పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియా లో సీనియర్ రిపోర్టర్. ‘మి మరాఠీ’, ‘మహారాష్ట్ర 1’ వంటి వార్తా చానెళ్లలో ఆమె గతంలో పనిచేశారు.

Other stories by Jyoti
Illustration : Labani Jangi

లావణి జంగి 2020 PARI ఫెలో. పశ్చిమ బెంగాల్‌లోని నాడియా జిల్లాకు చెందిన స్వయం-బోధిత చిత్రకారిణి. ఆమె కొల్‌కతాలోని సెంటర్ ఫర్ స్టడీస్ ఇన్ సోషల్ సైన్సెస్‌లో లేబర్ మైగ్రేషన్‌పై పిఎచ్‌డి చేస్తున్నారు.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan