"மருந்துகளும் தீர்ந்துவிட்டது, பணமும் தீர்ந்துவிட்டது, எரிபொருளும் முடிந்துவிட்டது", என்று ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் நான் அவரை சந்தித்தபோது சுரேஷ் பகதூர் என்னிடம் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு விசில் மற்றும் லத்தியினை ஏந்தியபடி இரவு நேரங்களில் சுரேஷ் மிதிவண்டியில் வளையவந்து வீடுகளையும், கடைகளையும் பாதுகாத்து வருகிறார். அவரும் அவரது தந்தை ராம் பகதூரும் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.

மார்ச் 22 ஆம் தேதிக்கு பிறகு, அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தனது மிதிவண்டியை ஓரங்கட்டி வைத்துவிட்டு தனது தொலைபேசியில் கோவிட் 19 பற்றிய செய்திகளை தேடுவதிலும், உணவு, சமையல் எரிவாயு மற்றும் தண்ணீர் வாங்குவதற்கும் தனது நேரத்தைச் செலவிட தொடங்கினார்.

23 வயதாகும் சுரேஷ், தம்மி ராஜூ நகர் பகுதியில் ஒரு வாடகை அறையில் தங்கி இருக்கிறார் அவருடன் 43 வயதாகும் சுபம் பகதூர் மற்றும் 21 வயதாகும் ராஜேந்திர பகதூர் ஆகியோரும் இருக்கின்றனர், இவர்கள் அனைவரும் அவரது தாயகமான நேபாளத்தில் உள்ள பஜாங் மாவட்டத்தில் இருக்கும் திக்லா கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள். ராம் பகதூர் பீமாவரம் பகுதியில் மற்றொரு வாடகை அறையில் தங்கியிருந்தார், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

அதுவரையில், ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களில் ராம் மற்றும் சுரேஷ் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வீடுகளில் இருந்து 10 முதல் 20 ரூபாயும், கடைகளிலிருந்து 30 முதல் 40 ரூபாயும் தங்களது ஊதியமாக வசூல் செய்வர். ஒவ்வொருவரும் 7,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்தனர். இது ஒரு முறை சாரா ஏற்பாடு என்பதால் அவர்களது வருமானம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். "சில சமயங்களில் 5,000 ரூபாய் என்ற நிலைக்கு கூட செல்லும்", என்று என்னிடம் பேசிய போது ராம் பகதூர் தெரிவித்தார். "இப்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது", என்றார்.
Suresh Bahadur's work required making rounds on a bicycle at night; he used wood as cooking fuel during the lockdown
PHOTO • Rajendra Bahadur
Suresh Bahadur's work required making rounds on a bicycle at night; he used wood as cooking fuel during the lockdown
PHOTO • Rajendra Bahadur

சுரேஷ் பகதூரின் பணியில் இரவு நேரத்தில் மிதிவண்டியில் வளைய வர வேண்டியது அவசியம்; ஊரடங்கின் போது அவர் விறகினை சமையல் எரிபொருளாக பயன்படுத்தினார்

"ஊரடங்கிற்கு முன்பு வரை நாங்கள் ஒவ்வொரு நாளும் நான்கு பேருக்கு மூன்று வேளை சமைத்ததில்லை", என்று சுரேஷ் கூறினார். சாதாரணமாக அவர் சாலையோரக் கடைகள் மற்றும் உணவகங்களில் மதிய உணவு மற்றும் இரவு உணவை உண்டு வந்தார், அதனால் மாதம் ஒன்றுக்கு உணவுக்கு மட்டுமே அவர்களுக்கு 1,500 ரூபாய் செலவு ஆனது. அவரும் அவரது தோழர்களும் ஊரடங்கிற்கு முன்பு சந்தையில் இருந்து எரிவாயு சிலிண்டரை வாங்கி காலை உணவை சமைக்க மட்டும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 22 ஆம் தேதிக்குப் பின்னர் அவர்கள் தங்களது மூன்று நேர உணவையும் தங்கள் அறையிலேயே சமைக்கத் துவங்கினர்.

"ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் போது எங்களிடம் எரிவாயுவும் தீர்ந்துவிட்டது உணவும் முடிந்துவிட்டது", என்று சுரேஷ் கூறினார். ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி அருகில் உள்ள மளிகை கடைகளில் இருந்து வாங்கப்பட்ட இரண்டு முதல் மூன்று நாட்களுக்கான பொருட்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் ஆந்திராவில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் மீட்பு குழுக்கள் நடத்தும் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அந்த தன்னார்வலர்களும் சுரேஷுக்கும் அவரது தோழர்களுக்கும் மாவு, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், சர்க்கரை, சோப்பு, சலவை தூள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை ஏப்ரல் 12 முதல் மே 2ம் தேதி வரை மூன்று முறை தந்து உதவியிருக்கின்றனர்.

மே 2 ஆம் தேதிக்குப் பின்னர் மாற்று எரிவாயு சிலிண்டர் வந்தது. அதுவரை சுரேஷும் அவரது நண்பர்களும் விறகுகளை சுற்றுப்புறத்தில் இருந்து சேகரித்து உணவு சமைக்க பயன்படுத்தி வந்தனர், எத்தனை காலம் தன்னார்வலர்கள் தொடர்ந்து உதவி செய்வார்கள் என்று தெரியாத நிலை நீடித்து வருகிறது. "இது எங்களுடைய தாயகம் அல்ல. வேறு எதுவும் எப்படி எங்களது கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?", என்று சுரேஷ் கேட்கிறார்.

ஊரடங்கிற்கு முன்பு அவர்கள் ஒவ்வொரு நாள் மதியமும் தங்கள் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கரில் இருந்து 8 முதல் 10 வாளி தண்ணீரை பெற்று வந்தனர், அது உள்ளூர்வாசிகளுக்கு இலவசமாக தண்ணீரை வழங்கி வந்தது, ஊரடங்கு காலத்திலும் அதே நிலை தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் அவர்கள் இரண்டு, 10 முதல் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனில் குடிநீரை ஐந்து ரூபாய் கொடுத்து அருகில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்திலிருந்து வாங்கி வந்தனர். ஊரடங்கு காலத்தில் இந்தக் கேன்கள் இலவசமாக கிடைத்தன.

2014 ஆம் ஆண்டு வெளிவந்த நேபாளத்தின் மக்கள் தொகை அறிக்கை, 2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட நேபாள புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறுகிறது, இது நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் இருந்து 37.6 சதவீதமாகும். 2018 - 19 ஆம் ஆண்டின் நேபாளத்தின் பொருளாதார நிதி அறிக்கை, நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கிற்கு மேலாக 'வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம்' என்று மதிப்பிட்டுள்ளது.

Rajendra (left), Ram (centre), Suresh (right) and Shubham Bahadur ran out of rations by April 12
PHOTO • Shubham Bahadur

ராஜேந்திரா (இடது), ராம் (நடுவில்), சுரேஷ் (வலது) மற்றும் சுபம் பகதூர் ஆகியோர் ஏப்ரல் 12ம் தேதி அன்று தங்களிடம் ரேஷன் பொருட்கள் காலியான போது

2016 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வருவதற்காக கல்லூரியை விட்டு இடைநின்ற சுரேஷ், "எனது குடும்பத்திற்காக நாம் சம்பாதிக்க விரும்பினேன்", என்று கூறினார். "அது உணவை பெறுவதற்கான ஒரு போராட்டமாக இருந்தது". ஆறு நபர்களை கொண்ட குடும்பத்தில் ராம் மற்றும் சுரேஷ் பகதூர் ஆகிய இருவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபர்களாக இருந்தனர். சுரேஷ் இல்லத்தரசியான தனது தாயார் நந்தா தேவியை கடைசியாக பார்த்து ஏப்ரல் மாதத்துடன் 9 மாதங்கள் ஆகிவிட்டது. அவரது இளைய சகோதரர்கள் 18 வயதாகும் ரபீந்திர பகதூர் மற்றும் 16 வயதாகும் கமல் பகதூர் ஆகிய இருவரும் திக்லா கிராமத்தில் மாணவர்களாக இருந்து வருகின்றனர். சுரேஷ் தனது பள்ளித் தோழியான சுஷ்மிதா தேவியை இந்தியா வருவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். "நாங்கள் 16 அல்லது 17 வயது இருக்கும் போது காதல் வயப்பட்டோம்", என்று அவர் ஒரு சிரிப்போடு விவரிக்கிறார். ஊரடங்கிற்கு முன்னர் வரை ஒவ்வொரு மாதமும் சுரேஷ் 2000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வீட்டிற்கு பணம் அனுப்பி வந்தார்.

ஊரடங்கின் போது "எனது மனைவி என்னிடம் பணம் கேட்பதில்லை", என்று ராம் பகதூர் கூறினார். ஊரடங்கிற்கு முன்பு ராம் மற்றும் சுரேஷ் அனுப்பிய பணத்தை வைத்து நேபாளத்தில் உள்ள அவர்களது குடும்பம் சமாளித்து வருகிறது மேலும் நேபாள அரசாங்கத்தால் அவ்வப்போது வினியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களை வைத்தும் சமாளித்து வருகிறது.

1950 இல் இருநாடுகளும் சமாதான மற்றும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான எல்லை திறந்த எல்லையாகவே இருந்து வந்தது. கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த நேபாள அரசு 2020 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அன்று அந்த எல்லையை மூடியது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் எல்லையில் புறக்காவல் நிலையங்களில் தங்களது தாயகத்திற்கு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர் என்று செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

ராம் பகதூர் முதன்முதலில் தனது 11 வயதில் வேலை தேடி திக்லா கிராமத்திலிருந்து ஓடி வந்து இந்திய நேபாள எல்லையை கடந்தார். அவர் பல்வேறு வேலைகளை மேற்கொண்டார் - தில்லியில் உள்ள திலக் நகரில் வீட்டு உதவியாளராகவும், பின்னர் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியாளாராகவும் பணியாற்றி வந்தார். "உங்களுக்கு 11 வயது தான் என்றால் கஷ்டங்கள் மற்றும் சிரமங்கள் என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியும்? எப்படியோ நான் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்", என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் இந்த மாதம் தாயகத்திற்கு திரும்புவதற்கு திட்டமிட்டு இருந்தோம்", என்று ஏப்ரல் மாதம் சுரேஷ் என்னிடம் கூறினார். அவரும் அவரது தந்தையும் ஒவ்வொரு கோடை காலத்திலும் ஒன்றரை மாதங்களுக்கு மலைப்பகுதியில் இருக்கும் தங்கள் கிராமத்திற்கு, மூன்று முதல் நான்கு நாட்கள் பயணமாக ரயில் மற்றும் பகிர்வு டாக்ஸியை பயன்படுத்தி சென்று, தங்கி வருவர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்கள் எப்போது, எப்படி அடுத்ததாக திரும்பி வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில் சுரேஷின் கவலை வேறு விதமாக இருந்தது: "எனக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை. நான் வெளியே சென்றால் என்ன நடக்கும்?" என்று அவர் கவலைப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த விபத்தின் நீட்சியான விளைவுகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார், ஒரு மதிய வேளையில் தனது மாதாந்திர ஊதியத்தை சேகரித்து விட்டு அவர் அறைக்கு மிதிவண்டியில் திரும்பிக் கொண்டிருக்கையில் லாரி ஒன்று அவர் மீது மோதியது. லாரி டிரைவர் உடனடியாக அவரை பீமாவரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. சுரேஷும் ராமும் டாக்ஸியில் 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எலுரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பயணம் செய்தனர், அங்கு சென்ற பின்னர் தான் அவர்களுக்கு அந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு போதுமான வசதி அந்த மருத்துவமனையில் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இறுதியாக விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சுரேஷ் தனது நேபாளத்தில் இருந்து புலம்பெயர்ந்த நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனை கட்டணங்களை செலுத்தினார்:  "காக்கிநாடாவிலிருந்து பீமாவரத்திலிருந்து வந்த எனது நண்பர்கள் அனைவரும் தங்களிடம் இருந்ததை கொண்டுவந்தனர்", என்று கூறினார்.

'This country is not ours', said Suresh. 'How can anything else be [in our control]?'
PHOTO • Rajendra Bahadur

'இது எங்களுடைய தாயகம் அல்ல. வேறு எதுவும் எப்படி எங்களது கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?', என்று கேட்கிறார் சுரேஷ்

ஒரு வருடம் கழித்து சுரேஷ் இன்னமும் "ஒரு லட்ச ரூபாய்" கடனில் இருக்கிறார் மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து வாங்குவதற்கு என்று 5,000 ரூபாய் ஒவ்வொரு மாதமும் தேவைப்படுகிறது. "இப்போது இங்குள்ள எனது (நேபாள) நண்பர்கள் கூட பணத்திற்காக போராடி வருகின்றனர். அவர்கள் இந்தியாவில் பல வேலைகளில் பணியாற்றினர், என்ன வேலை கிடைத்தாலும் - சிகரெட் விற்பனை செய்வது, உணவகங்களில் பணியாற்றுவது என்று அனைத்தையும் செய்தனர். எனது விபத்துக்குப் பிறகு, நான் காப்பாற்றப்பட்டேன் ஆனால் எங்களது சேமிப்பு எதுவும் மிஞ்சவில்லை என்று நான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஏப்ரல் 13 முதல் மே 10 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஐந்து முறை நான் சுரேஷுடன் தொலைபேசியில் பேசிய போது, ஒவ்வொரு முறையும் அவர் விபத்துக்குப் பின்னர் தான் முழுமையாக குணமடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மார்ச் 25 ஆம் தேதி சுரேஷ் தனது மருத்துவரை விஜயவாடாவில் சந்திக்கவேண்டி இருந்தது, ஆனால் ஊரடங்கால் அவரால் பயணம் செய்ய முடியவில்லை.

"நாங்கள் எப்படியோ சமாளித்து வருகிறோம், ஆனால் நாங்கள் பெரிய சிக்கலில் தான் இருக்கிறோம்", என்று சுரேஷ் என்னிடம் கூறினார். "எந்த வேலையும் இல்லை, எங்களுக்கு மொழியும் தெரியாது, நேபாளத்திலிருந்து இங்கு வசிக்கும் மக்களும் இல்லை - இது எப்படி தொடரும் என்பது அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்", என்று கூறினார். சுரேஷ் மார்ச் மாதத்தில் தங்களது அறைக்கான வாடகையை செலுத்தினார் மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான வாடகைக் கட்டணத்தை பிறகு வாங்கிக் கொள்ளுமாறு இட உரிமையாளரிடம் கோரியிருக்கிறார்.

மே 10 ஆம் தேதி அன்று கடைசியாக அவர் என்னுடன் உரையாடிய போது நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஒரு மாதம் மட்டுமே நீடிக்கும் என்று சுரேஷ் என்னிடம் கூறினார். அந்த தன்னார்வலர்களும் மே 10 ஆம் தேதிக்கு பிறகு புதிய கோரிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்றும், இந்த மாத இறுதிக்குள் உதவி எண்ணை முறையாக மூடுவதாகவும் அவருக்கு தெரிவித்திருந்தனர். எரிவாயு, உணவு மற்றும் அவரது மருந்துகளை வாங்குவது இனிமேல் மேலும் சிரமம் ஆகிவிடும் என்பது சுரேஷுக்கு தெரியும். மேலும் அவர்களிடம் இருந்த  3 தொலைபேசியிலும் பண இருப்பு இல்லாமல் போய் விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுரேஷ் மற்றும் ராம் பகதூர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் மே 30 ஆம் தேதிக்கு பின்னர் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கிய கடைக்காரரான மணிகண்டா, "சில நாட்களுக்கு முன்பு பல  நேபாளிகள்  தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு  புறப்படுவதை நான் கண்டேன்", என்று கூறினார். சுரேஷ் பகதூரின் அறை பூட்டி இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த நிருபர் இக்கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உதவி எண்ணை இயக்கிய ஆந்திராவின் கோவிட் ஊரடங்கு மீட்பு மற்றும் செயற்குழுவில், 2020 ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தன்னார்வலராக பணியாற்றியவர்.

தமிழில்: சோனியா போஸ்
Riya Behl

రియా బెహల్ జెండర్, విద్యా సంబంధిత విషయాలపై రచనలు చేసే ఒక మల్టీమీడియా జర్నలిస్ట్. పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియా (PARI)లో మాజీ సీనియర్ అసిస్టెంట్ ఎడిటర్ అయిన రియా, PARIని తరగతి గదిలోకి తీసుకువెళ్ళడం కోసం విద్యార్థులతోనూ, అధ్యాపకులతోనూ కలిసి పనిచేశారు.

Other stories by Riya Behl
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose