“எந்தவொரு வழக்கையோ சட்டமுறையையோ மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அல்லது மத்திய அரசு அதிகாரிக்கும் மாநில அரசு அதிகாரிக்கும் எதிராக நல்லெண்ணத்திலோ உள்நோக்கம் கொண்டோ இச்சட்டத்தின்படி எவரும் தொடுக்க முடியாது.”

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020-ன் 13ம் பிரிவு இதுதான். இந்தச் சட்டம்தான் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வாரியத்தின் மண்டிகளை முற்றிலுமாக அழிக்கும் முனைப்பைக் கொண்டிருக்கும் சட்டம்.

புதிய சட்டங்கள் விவசாயிகள் சம்பந்தப்பட்டவை என்றா நினைத்தீர்கள்? அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் வாய்ப்பை மறுக்கும் பிற சட்டங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டம் அவற்றைக் காட்டிலும் அதிக பிரச்சினையானது. இச்சட்டம் பாதுகாக்கும் நபர்களை நல்லெண்ணத்துடன் செயல்படுபவர்கள் எனக் குறிப்பிடுவது மிகைப்படுத்தப்படும் விஷயம். ‘நல்லெண்ணத்துடன்’ அவர்கள் செய்த ஒரு குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது என்பது மட்டுமின்றி, வருங்காலத்தில் அவர்கள் செய்யவிருக்கும் ‘நல்லெண்ண’ குற்றங்களிலிருந்தும் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

உங்களுக்கு புரியவில்லை எனில், விஷயம் இதுதான். உங்களுக்கென சட்ட உதவி பெறும் உரிமை இச்சட்டத்தில் இல்லை. சட்டத்தின் 15ம் பிரிவு,

”எந்த நீதிமன்றத்துக்கும் இச்சட்டத்தின் சார்பாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை தொடுக்கவோ கையாளவோ அதிகாரம் கிடையாது” எனக் குறிப்பிடுகிறது.

’நல்லெண்ண’ அடிப்படையில் நடந்து கொள்ளும் ‘எந்தவொரு நபர்’ என்கிற அந்த நபர் யார்? சட்டம் பாய முடியாத அந்த மனிதர் யாராக இருப்பார்?  விடைக்கான சிறு குறிப்பு: விவசாயிகள் இடும் கோஷங்களில் இடம்பெற்றிருக்கும் கார்ப்பரெட் பகாசுரர்களின் பெயர்களை கவனித்துப் பாருங்கள். அவர்களின் வேலைகளை சுலபமாக்கி விடத்தான் இப்படியொரு விஷயம் நடத்தப்பட்டிருக்கிறது.

“எந்த வழக்கும் எந்த சட்டமுறையும் தொடுக்க முடியாது….” வழக்கு தொடுக்க முடியாதவர்கள் விவசாயிகள் மட்டும் அல்ல. யாருமே தொடுக்க முடியாது. பொது நல வழக்குக்கும் இது பொருந்தும். தொண்டு நிறுவனங்களோ விவசாயச் சங்கங்களோ எந்தவொரு தனி நபரோ ( நல்லெண்ணம் கொண்டோரோ கெட்டெண்ணம் கொண்டோரோ) என யாராலும் தலையிட முடியாது.

1975-77 வரை இருந்த நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு (அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட காலம்) குடிமகனுக்கான சட்ட உரிமை முற்றிலுமாக மறுக்கப்படுவது நிச்சயமாக இப்போதுதான்.

The usurping of judicial power by an arbitrary executive will have profound consequences
PHOTO • Q. Naqvi

நீதித்துறையின் அதிகாரம் அதிகாரிகளால் அபகரிக்கப்படுவது ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும்

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பாதிக்கப்படுகிறான். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகையில் இச்சட்டங்களின் சட்டமொழி கடைநிலை அதிகாரியைக் கூட நீதிபதி ஆக்குகிறது. நீதிபதியாகவும் நீதியுரைப்பவர்களாகவும் தண்டனை நிறைவேற்றுபவர்களாகவும் அவர்களை ஆக்குகிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் அதிகார ஏற்றத்தாழ்வை இன்னும் இது அதிகப்படுத்துகிறது.

எச்சரிக்கையடைந்த தில்லி வழக்குரைஞர் கழகம் மோடிக்கு எழுதிய கடிதத்தில் , “குடிமை சமூகத்தில் விளைவு ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் எந்த அடிப்படையில் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது?” எனக் கேட்கப்பட்டது.

நீதித்துறையின் அதிகாரங்களை அதிகாரிகளுக்கு வழங்கும் மாற்றம் “ஆபத்து மற்றும் மாபெரும் தவறு” என  தில்லியின் வழக்குரைஞர் கழகம் சுட்டியிருக்கிறது. குறிப்பாக இச்சட்டம் சட்டத்தொழிலில் ஏற்படுத்தும் பாதிப்பையும், “மாவட்ட நீதிமன்றங்களை பாதித்து வழக்கறிஞர்களை இல்லாமலாக்கும்,” எனக் குறிப்பிடுகிறது.

இன்னும் இச்சட்டங்கள் விவசாயிகள் சம்பந்தப்பட்டது மட்டும்தான் என நினைக்கிறீர்களா?

நீதித்துறையின் அதிகாரம் அதிகாரிகளுக்கும் மாற்றப்படும் வேலை, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020-லும் இருக்கிறது.

18ம் பிரிவில் ‘நல்லெண்ண’ வாதம் மீண்டும் வருகிறது.

19ம் பிரிவு, “வழக்கு தொடரவோ சட்டமுறை தொடுக்கவோ எந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது. துணை அதிகார அமைப்பு அல்லது மேல் முறையீட்டு ஆணையத்துக்கு மட்டுமே இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் இருக்கிறது. எந்த அதிகாரத்தாலும் நீதிமன்றத்தாலும் இச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைக்கும் தடை உத்தரவும் போட முடியாது” எனக் குறிப்பிடுகிறது.

ஆனால் இந்திய சட்டத்தின் 19ம் சட்டப்பிரிவுபடி பேச்சுரிமை, கருத்துரிமை, அமைதியாக கூடும் உரிமை, இயங்கும் சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை எல்லாம் இருக்கிறதே?

விவசாயச் சட்டத்தின் 19ம் பிரிவின் அடிப்படையே அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் சட்ட நிவாரணத்துக்கான உரிமையை இல்லாமலாக்குவதுதான். அரசியல் சாசனத்தின் அடிப்படையாக 32ம் பிரிவு கருதப்படுகிறது.

வெகுஜன ஊடகம் (70 சதவிகித மக்கள்தொகையை புறக்கணிக்கும் தளங்களுக்கு வழங்கப்படும் விந்தையான பெயர்) நிச்சயமாக புதிய வேளாண் சட்டங்கள் ஜனநாயகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்தே இருக்கும். ஆனால் லாபத்தை தேடும் அவர்களின் இயக்கம் மக்கள்நலம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் எதையும் பற்றி கவலைப்படாமலிருக்க வைத்திருக்கிறது.

Protestors at Delhi’s gates were met with barricades, barbed wire, batons, and water cannons – not a healthy situation at all
PHOTO • Q. Naqvi
Protestors at Delhi’s gates were met with barricades, barbed wire, batons, and water cannons – not a healthy situation at all
PHOTO • Q. Naqvi

தில்லியின் எல்லையில் போராட்டக்காரர்களை முள்வேலிகளும் தடுப்புகளும் தடிகளும் நீர் பாய்ச்சும் வாகனங்கள் வரவேற்கின்றன. முற்றிலும் ஆரோக்கியமற்ற சூழல்

இருக்கும் முரண்பாடுகளை பற்றிய கற்பனைகள் தொலைந்ததா? இந்த ஊடகங்கள் பெருநிறுவனங்களாகவும் இருக்கின்றன. இந்திய நிறுவனங்களின் பிக் பாஸாக இருக்கும் நிறுவனம்தான் இந்தியாவின் பெரிய ஊடக நிறுவனமாகவும் இருக்கிறது. தில்லியில் போராடும் விவசாயிகளின் கோஷங்களில் ‘அம்பானி’ என்ற பெயரும் இடம்பெறுகிறது. நான்காவது தூணுக்கும் வணிகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை பல காலமாக நாம் ஆராய்வதில்லை. வெகுஜன ஊடகமும் குடிமக்களின் நலன்களை நிறுவனங்களின் லாபங்களுக்கு மேலானதாக மதிப்பதில்லை.

தொடர்ச்சியாக அவர்களின் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பஞ்சாபை சேர்ந்தவர்கள், காலிஸ்தானிகள், காங்கிரஸ்காரர்கள், புரட்டுவாதிகள் என விவசாயிகளுக்கு பலவகை பெயர்கள் சூட்டும் வேலை ஓய்வின்றி தொடர்ந்து நடக்கிறது.

பெரிய ஊடக நிறுவனங்களில் ஆசிரியர் குழுக்கள் வேறு வகையான உத்தியை பயன்படுத்துகின்றன. முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதாவது அரசு இப்பிரச்சினையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என அறிவுரை வழங்குகிறார்கள். அரசின் பொருளியல் வல்லுநர்களும் பிரதமரும் கொண்டு வந்திருக்கும் இந்த அக்கறை மிகுந்த சட்டங்கள் விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள முடியாத, தவறாக வழிநடத்தப்பட்ட அப்பாவிகள்தான் போராடுகிறார்கள் என சொல்கிறார்கள். இப்படியெல்லாம் சொல்லிவிட்டு இறுதியில் இந்த சட்டங்கள் அவசியமானவை எனவும் நிச்சயமாக அமல்படுத்தப்பட வேண்டியவை எனவும் சொல்லி அவர்கள் முடிக்கிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் தலையங்கம், “இப்பிரச்சினையில் இருக்கும் முக்கியமான பிரச்சினை சட்டம் முன்வைக்கும் சீர்திருத்தங்களில் இல்லை. மாறாக அவை சட்டமாக்கப்பட்ட முறையிலும் மக்களை தொடர்பு கொள்வதில் அரசு தவறியதிலும்தான் இருக்கிறது,” எனக் குறிப்பிடுகிறது. மேலும், இப்படி தவறாக இப்பிரச்சினை கையாளப்படுவது, இந்திய விவசாயத்தின் உண்மையான ஆற்றலை வெளிக்கொணர வழிவகுக்கும், வேளாண் சட்டங்களை போன்ற, பிற அற்புதமான திட்டங்கள் வருவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் கவலைப்படுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா தன் தலையங்கத்தில், “எல்லா அரசாங்களுக்கும் இருக்கும் முக்கியமான கடமை என்னவென்றால், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் போய்விடும் என்கிற விவசாயிகளின் தவறான நம்பிக்கையை போக்குவதுதான்….” என்கிறது. மேலும், “மத்திய அரசின் சீர்திருத்தம், விவசாய வணிகத்தில் தனியாரை பங்கேற்க வைப்பதற்கான உண்மையான முன்னெடுப்பு. இந்த சீர்திருத்தங்கள் வெற்றியடைவதில்தான் விவசாய வருமானம் பெருகுவது அடங்கியிருக்கிறது…” எனவும் குறிப்பிடுகிறது. இத்தகைய சீர்திருத்தங்கள் “இந்திய உணவுச் சந்தையில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை சரியாக்கும்.”

PHOTO • Q. Naqvi

தில்லியில் போராடும் விவசாயிகள் மூன்று அநியாயச் சட்டங்களையும் தாண்டிய பிரச்சினைக்காக போராடுகிறார்கள். அவர்கள் நம் உரிமைகளுக்கும் சேர்த்துதான் போராடுகிறார்கள்

இந்துஸ்தான் டைம்ஸ்ஸின் தலையங்கம், “சட்டங்களுக்கு பின்னால் நியாயமான காரணம் இருக்கிறது. சட்டங்கள் கொண்டிருக்கும் தன்மை மாறாது என்கிற யதார்த்தத்தை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்,” எனக் குறிப்பிடுகிறது. அதுவும் ஏன் விவசாயிகள் உணர்ச்சிவசப்படுகின்றனர் எனக் கேட்டு கைவிட்டுவிடுகிறது. விவசாயிகள் பிரச்சினையையே, “அடையாள அரசியலுடன் உறவாடும்” போக்காக பார்த்து அவர்கள் தீவிரக் கூச்சல் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது.

விவசாயிகள் யார் சொல்லி போராடுகிறார்கள், எந்தக் சதிகாரக் குழுவை அவர்களறியாமலே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அரசாங்கம் ஒருவேளை திணறலாம். தலையங்கம் எழுதும் ஆசிரியர்களுக்கு தாம் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதில் தெளிவு இருக்கிறது. அவர்களுக்கு உணவளிக்கும் கார்ப்பரெட் கைகளை அவர்கள் கடிக்கும் ஆபத்தும் இல்லை.

ஓரளவுக்கு பாரபட்சம் குறைவாக இருக்கும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகள் கூட அரசின் வல்லுநர் குழு விரும்பும் தன்மையிலேயே இருக்கின்றன.

தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்விகள் ஒருமுறை கூட கேட்கப்படவில்லை: ஏன் இப்போது? தொழிலாளர் விதிகளையும் வேகவேகமாக கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடி அறுதி பெரும்பான்மையில் ஜெயித்திருக்கிறார். குறைந்தபட்சம் 2-3 வருடங்களுக்கு பெரும்பான்மை இருக்கும். ஆனாலும் ஒரு பெருந்தொற்று காலத்தில் அவசர அவசரமாக பாரதீய ஜனதா கட்சி இச்சட்டங்களை கொண்டு வரக் காரணம் என்ன?

கோவிட்-19 பாதிப்பு இருக்கும் பெருந்தொற்று காலத்தில் விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றாகி எதிர்த்து போராடும் வாய்ப்பு இருக்காது என நினைத்திருப்பார்கள். இது நல்ல நேரம் மட்டுமல்ல, மிகச் சிறந்த நேரமும் கூட.  குழப்பம், துயர் முதலியவற்றை பயன்படுத்தி தீவிர சீர்திருத்தங்களை கொண்டு வரக் கூடிய ‘இரண்டாம் 1991ம் ஆண்டு’க்கான வாய்ப்பு நிலவுவதாக கணித்த வல்லுநர் குழுவால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னணி ஆசிரியர்களாலும் “ஒரு நல்ல நெருக்கடியை வீணடித்து விடாதீர்கள்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.  “இந்தியாவில் அதிகமாக ஜனநாயகம் இருக்கிறது” என சங்கடப்பட்டுக் கொண்ட நிதி ஆயோக் தலைவரையும் மறந்துவிட வேண்டாம்.

இச்சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என்ற விமர்சனங்களும் மேம்போக்காகவும் அக்கறையற்றும்தான் இருக்கின்றன. மத்திய அரசோ தனக்கு உரிமையில்லாத மாநில விஷயத்தில் இறங்கி எந்த தயக்கமுமின்றி சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

PHOTO • Binaifer Bharucha

2018ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பஞ்சாப் மட்டுமென இன்றி, 22 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேச விவசாயிகள் தில்லியில் பாராளுமன்றத்தை நோக்கி இப்போதைய கோரிக்கைகளை போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பேரணி சென்றனர்

அவமதிக்கப்பட்ட உணர்வுடன் விவசாயிகள் புறக்கணித்த, மண்டிகளை அழிக்கும் அரசின் முன்னெடுப்பை பற்றி எந்த ஊடக ஆசிரியர் குழுவும் விவாதம் நடத்தவில்லை. நாட்டில் இருக்கும் எல்லா விவசாயிகளுக்கும் தெரிந்த ஓர் அறிக்கை உண்டென்றால், அவர்கள் அனைவரும் செயல்படுத்த கேட்கும் ஓர் அறிக்கை இருக்கிறதென்றால், அது தேசிய விவசாயிகள் ஆணையத்தின் அறிக்கைதான். சுவாமிநாதன் அறிக்கை எனக் குறிக்கப்படும் அறிக்கை. 2004ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ்ஸும் 2014ம் ஆண்டிலிருந்து பாஜகவும் அந்த அறிக்கையை செயல்படுத்துவதாக சொல்லிவிட்டு போட்டி போட்டுக் கொண்டு அதை புதைக்கும் வேலைகளை செய்தன.

2018 நவம்பர் மாதத்தில் 1 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் பாராளுமன்றத்துக்கு அருகே திரண்டு அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கேட்டனர். கடன் தள்ளுபடி, உத்திரவாத குறைந்தபட்ச ஆதார விலை முதலிய பிற கோரிக்கைகளுடன் விவசாய நெருக்கடியை பற்றி விவாதிக்க சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்தையும் கோரினார்கள். சுருங்கச் சொல்வதெனில், தற்போது தில்லி தர்பாரில் விவசாயிகள் கேட்கும் பல கோரிக்கைகள் அப்போதும் இருந்தன. அவர்கள் பஞ்சாபிலிருந்து மட்டும் வரவில்லை. 22 மாநிலங்களிலிருந்தும் 4 யூனியன் பிரதேசங்களிலிருந்தும் வந்திருந்தனர்.

அரசிடமிருந்து ஒரு கோப்பை தேநீரை கூட ஏற்க மறுத்த விவசாயிகள் நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை செய்து காட்டியிருக்கிறார்கள். அச்சம் மற்றும் முடக்கம் போன்ற விஷயங்களின் துணை கொண்டு அவர்களை ஒடுக்கிவிட முடியும் என அரசு போட்ட எல்லா திட்டங்களையும் தவிடுபொடியாக்கி இருக்கின்றனர். அவர்களின் உரிமைக்காகவும் நம் உரிமைக்காகவும் போராடி இச்சட்டங்களை எதிர்க்க எந்த இடருக்கும் செல்ல அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

வெகுஜன ஊடகம் அவர்களை புறக்கணிப்பதாகவும் அடிக்கடி சொல்கிறார்கள். கார்ப்பரெட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் உணவும் சென்றுவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி விவசாயிகள் நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். அதை பற்றிய தலையங்கம் எதையாவும் பார்த்திருக்கிறீர்களா?

அங்கிருக்கும் பலருக்கு மூன்று வேளாண் சட்ட ரத்து என்பதையும் தாண்டியவொரு போராட்டத்தில் இருப்பது தெரிந்திருக்கிறது. சட்டங்கள் ரத்து செய்யப்பட்டால், இதற்கு முன் நாம் இருந்த நிலைக்கு திரும்பிச் செல்வோம். அந்த நிலையும் ஒன்றும் சிறப்பான நிலை கிடையாது. கொடுமையான விவசாய நெருக்கடி அது. ஆனால் அப்படி திரும்பிப் போவது விவசாயத் துயரில் புதிதாக தற்போது சேர்க்கப்படும் துயர்களை நிறுத்தி வைக்கும். மேலும் வெகுஜன ஊடகத்தை போலல்லாது, இச்சட்டங்கள் குடிமக்களுக்கு மறுக்கும் சட்ட உதவி உரிமை பற்றியும் விவசாயிகள் தெரிந்தே வைத்திருக்கின்றனர். அவர்களால் நேரடியாக சொல்ல முடியவில்லை எனினும் அவர்களின் போராட்டம் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை காப்பதற்கான போராட்டம் ஆகும்.

முகப்பு படம்: பிரியங்கா பொரார் , புதிய வகை அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் தொழில்நுட்பம் கொண்டு பரீட்சித்துப் பார்க்கும் புது ஊடகக் கலைஞர். கற்றல் மற்றும் விளையாட்டு அனுபவங்களை வடிவமைக்கிறார். ஒரு பேனாவும் பேப்பரும் இருந்தால் வீட்டிலிருப்பதை போல் உணர்பவர்.

இக்கட்டுரை முதன்முதலாக The Wire-ல் டிசம்பர் 19, 2020-ல் வெளியானது.

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath
psainath@gmail.com

పి సాయినాథ్ పీపుల్స్ ఆర్కైవ్స్ ఆఫ్ రూరల్ ఇండియా వ్యవస్థాపక సంపాదకులు. ఆయన ఎన్నో దశాబ్దాలుగా గ్రామీణ విలేకరిగా పని చేస్తున్నారు; 'Everybody Loves a Good Drought', 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' అనే పుస్తకాలను రాశారు.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan