"கடந்த காலத்தில், எங்கள் வாழ்க்கை வெறும் நாடகம் மட்டுமே. எதையும் சம்பாதிப்பதற்காக, கிராமம் கிராமமாக சென்று நகரந்தோறும் சென்று எங்கள் நந்தியை (சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் ஒரு காளை) கொண்டு மக்களை மகிழ்விக்க வேண்டும். எங்களுக்கு என்று சொந்தமாக வீடோ நிலமோ கிடையாது. நாங்கள் இடம் பெயர்ந்த வண்ணம் இருந்ததால், எங்கள் குழந்தைகளால் கல்வி கற்க இயலவில்லை.

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள திர்மலி நந்திவாலே நாடோடி பழங்குடியினரின் புரா கைக்வாட் இவ்வாறு கூறுகிறார். அவரும் இந்த பழங்குடிக் குழுவைச் சேர்ந்த சுமார் 300 பேரும் பீட் நகரத்திலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்டி தாலுகாவில் உள்ள கனடி புத்ருக் கிராமத்தில் வசிக்கின்றனர். அவர்களின் இடம்(பஸ்தி), கிராமத்தின் புறநகரில் ஒரு சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

"நாடோடியாக அலைவதை விட்டுவிட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தரிசு நிலத்தில் தங்கி விவசாயத்தைத் தொடங்க முடிவு செய்தோம்," என்கிறார் கைக்வாட். ஆனால் ஒரே இடத்தில் குடியமர்வது முன்னாள் நாடோடிகளுக்கு எளிதானது அல்ல. அதற்கு முதல் காரணம், ஏறக்குறைய 3,200 பேர் கொண்ட அருகாமை கிராமத்தின் உயர் சாதியினர் குடியமர்ந்த புதியவர்களை வெறுத்தனர். அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மற்றும் தலித் உரிமை ஆர்வலர்களின் உதவியுடன், நந்திவாலே மக்களின் சார்பில் அஸ்தி காவல் நிலையத்தில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில், எதிர்க் குழுக்கள் இணக்கமாக பிரச்சினையை முடித்துக் கொள்ள முன்வந்ததால், வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் பின்னர் மற்றொரு சிக்கல் எழுந்தது. "எங்களுக்கு விவசாயத்தில் அனுபவம் கிடையாது," என்று கைக்வாட் கூறுகிறார். "எனவே நாங்கள் அதை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிவு செய்தோம். ஒருநாள் எங்களில் சிலர் எங்கள் அண்டை வீட்டாரான தலித் கிராம மக்களிடம் விவசாயத்தைப் பற்றி எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிக் கொண்டோம். அவர்களும் உண்மையில் அடக்கமாகவும், கனிவாகவும், எங்களுக்குக் கற்பிக்கத் தயாராக இருந்தனர். வேளாண் கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பணி தொடங்கியது. கடின உழைப்பாலும் முயற்சியாலும் நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம். பெண்களும் ஆண்களுமாக எங்கள் முழு சமூகமும், தரிசு நிலத்தை பசுமையான நிலமாக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தது. எங்கள் மக்களில் சிலர் இப்போது விவசாயத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் நாங்கள் ஒரு இயல்பான கிராமப்புற கலாச்சாரத்தை வளர்த்துள்ளோம்.

PHOTO • Shirish Khare

'விவசாயத்தில் எங்களுக்கு எந்த பின்னணியும் கிடையாது,’ என்கிறார் புரா கைக்வாட். 'அதனால் மற்றவர்களிடம் கற்றுக் கொள்ள முடிவு செய்தோம்... எங்களில் சிலர் இப்போது விவசாயத்தில் கைதேர்ந்தவர்களாகிவிட்டனர்.' இடது: கனாடி புத்ருக் கிராமத்தில் வெங்காயப் பண்ணையில் பணிபுரியும் திர்மலி பெண்கள். வலது: சந்தையில் விற்க வெங்காயப் பயிரை சுத்தம் செய்து வரிசைப்படுத்துதல் (புகைப்படங்கள்: கைலாஷ் ஜோக்தண்ட்)

1991-க்கு முன், அவர்களின் நாடோடி வாழ்க்கை காரணமாக, நந்திவாலே மக்களுக்கு பூர்வீக வீடு அல்லது அஞ்சல் முகவரி என எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை. அதாவது,  அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை. எனவே அவர்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை. அதோடு அவர்களுக்கு சிவில் உரிமைகளும் கூட இல்லை. அதனால்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திர்மலி நந்திவாலே மக்களின் எண்ணிக்கையைப் பற்றிய நம்பகமான மதிப்பீடுகள் எதுவும் மகாராஷ்டிர அரசிடம் இல்லை. காலப்போக்கில், அவர்கள் கிராம பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, ரேஷன் கார்டுகள் மற்றும் பிற ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.

திர்மலி நந்திவாலே மக்கள் அத்தாரா (18) அலுத்தேதார்களை சேர்ந்தவர்கள். இவர்களும், பாரா (12) பலுத்தேதார்களும், மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் சாதி அடிப்படையிலான தொழில் முறை அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தனர். கடந்த காலத்தில் பலுத்தேதார்களுக்கு, அவர்களின் வேலைக்கு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் அலுத்தேதார்களுக்கு ஊதியம் கேட்கும் உரிமை கூட  இல்லாத அளவுக்கு, நிலவுடமை விவசாயிகளால், அவர்களின் பணி முக்கியத்துவமற்றதாக கருதப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் பணியானது, ஆதிக்க சாதியினரை பல்வேறு வகையான கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மகிழ்விப்பதாகும்.

பி.வி. பானு அவர்களால் தொகுக்கப்பட்டு, 2004-ம் ஆண்டு வெளியான The People of India: Maharashtra, ஃபுல்மாலி நந்திவாலே, தேவ்வாலே நந்திவாலே மற்றும் திர்மலி நந்திவாலே போன்ற நந்திவாலே மக்களின் பல்வேறு துணைக் குழுக்களைப் பற்றி பேசுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து திர்மலி மக்கள், மகாராஷ்டிராவின் அகமதுநகர், புனே, சாங்லி, சதாரா, கோலாப்பூர், அவுரங்காபாத், ஜல்கான் மற்றும் பீட் மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தனர். பல நூற்றாண்டுகளாக, இந்த நாடோடி பழங்குடியின பெண்கள் பாசி பொம்மைகள் மற்றும் நாட்டுப்புற மருந்துகளை விற்றனர் என்று புத்தகம் விவரிக்கிறது; ஆண்கள், தங்கள் காளைகளுடன் நடனமாடுவதும், பாடுவதுமான வாழ்க்கையை நடத்துபவர்களாக இருந்தனர்.

PHOTO • Shirish Khare

சம்பாதிப்பதற்காக நந்திவாலே மக்கள், கிராமங்கள், சிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களை தங்கள் நந்தி (ஒரு காளை) மூலம் மகிழ்விக்க வேண்டியிருந்தது (புகைப்படம்: சிக்ரிட் விலி)

தற்போது கனாடி புத்ருக்கில் குடியேறி சீராக வாழ்க்கையை வழிநடத்தி வரும் திர்மலியைப் பார்ப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு நாடோடி பழங்குடியினருடன் பணிபுரியும் நந்திவாலே மக்களின் துன்பங்களைக் கண்ட, ராஜர்ஷி ஷாஹு கிராமின் விகாஸ் பிரகல்பின் உறுப்பினரும் வழக்கறிஞருமான சதீஷ் கெய்க்வாட், “25 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, இப்போது 150 ஏக்கர் சமூக பண்ணைகள் அவர்களுக்கு உள்ளன. அவர்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் [அரசு நடத்தும் பள்ளிகளில் சேர்க்கை மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திடமிருந்து பேருந்து டிக்கெட் போன்ற சலுகைகள்] கிடைக்கின்றன. இந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று சுதந்திரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடிகிறது.

PHOTO • Shirish Khare

பாஜிராவ் ஃபுல்மாலி (முன்புறம்), ஒரு திர்மலி விவசாயி: அவர்களின் கிராமத்தில், நந்திவாலே மக்கள் பாசனத்திற்காக இந்த கிணற்றை தோண்டுவதற்கு கடினமாக உழைத்துள்ளனர் (புகைப்படம்: அக்ஷய் ஜோக்தண்ட்)

பழங்குடிகள் மற்றும் தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும், பிரகல்ப் என்ற குழு நீண்ட காலமாக நந்திவாலே மக்களை ஆதரித்து வருகிறது. அதன் செயற்பாட்டாளர்களுடனான பலநாள் தொடர்பே காலப்போக்கில் நந்திவாலே மக்களிடம், நாடோடி வாழ்க்கையை கைவிடுவதற்கான மாற்றத்தை ஊக்குவித்தது. எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ், நந்திவாலே மக்கள், கனாடி பர்துக்கில் குடியேறுவதை உறுதி செய்வதற்காக வழக்குத் தாக்கல் செய்தததும் பிரகல்பின் நன்கு அறியப்பட்ட வழக்கறிஞரான வால்மிக் நிகல்ஜே ஆவார்.

திர்மலி நந்திவாலே இளைஞர்கள் பலர் இப்போது கல்லூரிப் பட்டதாரிகள் என்று நிகால்ஜே குறிப்பிடுகிறார். உதாரணமாக அவர்களில் ஒருவரான ரமேஷ் ஃபுல்மாரி, சிறப்புப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து தற்போது பீட் மாவட்டத்தின் காவல் துறையில் இருக்கிறார். இன்னொருவர், ரமா ஃபுல்மாரி; பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். இவை பலருக்கு சாதாரணமான வேலை விருப்பங்களாக இருக்கலாம். ஆனால் முன்னாள் நாடோடிகளுக்கு இது பெரிய மாற்றமாகும். சாஹேபா பாஜிராவ், ஒரு திர்மலி நந்திவாலே மாணவ செயற்பாட்டாளர். "நாங்கள் இப்போது கல்வியறிவு, தன்னம்பிக்கை மற்றும் ஒருங்கிணைப்போடு இருக்கிறோம்," என்கிறார் அவர்.

ஆனால் இந்த ஆதிவாசி குழுவுக்கு இன்னும் நில உரிமைகள் கிடைக்கவில்லை. “மகாராஷ்டிரா நில வருவாய் குறியீடு [1966] மற்றும் நிலமற்ற SC, ST, NT மற்றும் DNT [பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியல் பழங்குடியினர், நாடோடி பழங்குடியினர், சீர்மரபினர்] ஆகியோரின் 'ஆக்கிரமிப்புகளை' முறைப்படுத்துவதற்காக 1964 முதல் 2011 வரை அவ்வப்போது நிறைவேற்றப்பட்ட அரசு தீர்மானங்களின்படி அரசு மேய்ச்சல் (கய்ரான்) நிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருபவர்கள் அந்த நிலத்தின் உரிமையாளர்களாக மாறுகிறார்கள். இருப்பினும் [குறைந்தது] 1991-ம் ஆண்டு முதல் மேய்ச்சல் நிலத்தில் வசிக்கும் திர்மலி நந்திவாலே பழங்குடியினரின்  பெயர்களுக்கு நில உரிமைகள் மாற்றப்படவில்லை,” என்கிறார்  நிகல்ஜே.

இது, இனி வரும் காலங்களில், அவர்களின் அடுத்த பெரிய போராட்டமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மேலே உள்ள படங்களை எடுத்தவர் தீபா கிருஷ்ணன்.

இந்தியிலிருந்து இக்கட்டுரையை மொழிபெயர்த்திருக்கும் பாருன் ஸ்ரீவாஸ்தவா, பிலாஸ்பூரின் ராஜஸ்தான் பத்ரிகாவின் ஆசிரியராக இருக்கிறார். இந்தக் கட்டுரையின் பதிப்பு முதலில் ஜூலை 28, 2016 அன்று Catch News-ல் வெளியிடப்பட்டது.

தமிழில்: அகமது ஷ்யாம்

Shirish Khare

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கரே, ராஜஸ்தான் பத்திரிகா எனும் பத்திரிகையில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

Other stories by Shirish Khare
Translator : Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.

Other stories by Ahamed Shyam