“வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பருத்தியின் நிறமும் எடையும் போய்க் கொண்டிருக்கிறது. நிறம் மங்கினால், விலை குறையும்,” என்கிறார் சந்தீப் யாதவ் கவலையுடன். மத்தியப் பிரதேசத்தின் கோகாவோன் தாலுகாவின் பருத்தி விவசாயியான அவர், அதற்கான விலை உயர அறுவடை முடிந்த அக்டோபர் 2022-லிருந்து காத்திருக்கிறார்.
மத்தியப்பிரதேசத்தின் பருத்தி தயாரிக்கும் மாவட்டங்களுள் பெரிய மாவட்டமான கர்கோனேவில் 2.15 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் பயிர் நடப்பட்டு, அக்டோபர் தொடங்கி டிசம்பர் இரண்டாம் வாரம் வரை அறுவடை செய்யப்படும். எட்டு மாதங்களில் (அக்டோபரிலிருந்து மே வரை) கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கான பருத்தி கார்கோனேவின் பருத்தி மண்டியிலிருந்து தினந்தோறும் வாங்கப்படுகிறது. சந்தீப், மத்தியப்பிரதேச பேராம்புரா கிராமத்திலுள்ள தனது 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 10 ஏக்கருக்கு பருத்தி விளைவிக்கிறார்.
அக்டோபர் 2022-ன் அறுவடையில் கிடைத்த 30 குவிண்டால் பருத்தி சந்தீப்புக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அவருடைய நிலத்தில் முதல் அறுவடைப் பருவம் அது. இரண்டாம் முறை அதே அளவு கிடைக்கும் என நினைத்தார். 26 குவிண்டால் கிடைத்தது.
சில நாட்கள் கழித்து, கர்கோனே பருத்தி மண்டியில் 30 குவிண்டால்களை சந்தீப்பால் விற்க முடியவில்லை. மத்தியப்பிரதேசத்தின் எல்லா பருத்தி மண்டிகளும் வணிகர் போராட்டத்தால் அக்டோபர் 11, 2022லிருந்து மூடப்பட்டிருந்தன. விற்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் மண்டி வரியாக இருந்த ரூ.1.70-ஐ குறைக்க வேண்டுமென வணிகர்கள் போராடினர். நாட்டிலேயே அதிகமான மண்டி வரி அது. எட்டு நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது.
போராட்டத்துக்கு ஒரு நாளைக்கு முன் (அக்டோபர் 10) ஒரு குவிண்டாலின் விலை ரூ.8,749 ஆக கர்கோனே பருத்தி மண்டியில் இருந்தது. போராட்டம் முடிந்த பிறகு விலை 890 ரூபாய் வரை சரிந்து ரூ.7,850 ஆக மாறியது. அக்டோபர் 19, 2022-ல் மண்டிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, விலை சரிந்ததால் அவர் தன் விளைச்சலை விற்கவில்லை. “பயிரை இப்போது விற்றால், எனக்கு லாபம் கிடைக்காது,” என்கிறார் 34 வயது விவசாயி பாரியுடன் அக்டோபர் 2022-ல் பேசியபோது
பருத்தி விளைச்சலை வீட்டில் சேமித்து வைப்பது சந்தீப்புக்கு இது முதன்முறை அல்ல. தொற்றுக்காலத்தில் மண்டிகள் மூடப்பட்டு விட்டதாக சொல்லும் அவர், “2021-ல் பயிர்களை பூச்சிகள் பாதித்தன. பாதி அளவு அழிந்து போனது,” என்கிறார்.
எனவே அவர் 2022ம் ஆண்டின் விளைச்சல் இந்த நஷ்டங்களை தீர்த்து 15 லட்ச ரூபாய் கடனை அடைக்க உதவும் என நம்பினார். “கடன் தவணைகளை இந்த வருடம் (2022) கட்டியபிறகு ஒன்றும் மிஞ்சாது,” என்கிறார் அவர்.
விவசாயிகளின் இணையதளத் தரவு களின்படி, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக 2022-23-ன் ஒரு குவிண்டால் விலை ரூ.6,380 ஆக தீர்மானித்திருக்கிறது. இந்த விலை 2021-2022-ஐ காட்டிலும் 355 ரூபாய் அதிகம். “குறைந்தபட்ச ஆதார விலை குறைந்தபட்சம் 8,500 ரூபாயாகவேனும் இருக்க வேண்டும்,” என்கிறார் ஷ்யாம் சிங் பன்வார். பாரதிய கிசான் சங்கத்தின் இந்தூர் பிரிவு தலைவர் அவர். “வணிகர்கள் இந்த விலைக்கும் குறைவாக வாங்குவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் சட்டம் கொண்டு வர வேண்டும்,” என்கிறார் அவர்.
பர்வாகா தாலுகாவின் நாவல்புரா கிராம விவசாயியான சஞ்சய் யாதவ், ஒரு குவிண்டாலுக்கான 7,405 ரூபாய் என்கிற விலை குறைவு என நம்புகிறார். அவரின் மொத்த விளைச்சலில் 12 குவிண்டால்களை மட்டும்தான் கார்கோனே மண்டியில் விற்றார். ஒரு குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.10,000-மாவது விலை இருக்க வேண்டும் என்கிறார் 20 வயது நிறைந்த அவர். தற்போதைய விலையிலிருந்து அது 2,595 ரூபாய் அதிகம்.
“நாங்கள் (விவசாயிகள்) எதையும் (குறைந்தபட்ச ஆதார விலை) முடிவு செய்ய முடியாது. அறுவடையின் விலை எங்களின் கையில் இல்லை,” என்கிறார் சந்தீப்.
“விதைகள் மற்றும் டையம்மோனியம் பாஸ்ஃபேட் உரம் போன்றவற்றுக்கான அடிப்படை செலவு ரூ.1,400-ஐ தாண்டி, ஒரு நாளுக்கான தொழிலாளர் கூலி 1,500 ரூபாய் ஆகும். பிறகு கம்பளிப்பூச்சிகளை கொல்வதற்கான மூன்று பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 1,000 ரூபாய் ஆகும். இவை எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், ஒரு ஏக்கருக்கு எனக்கு 15,000 ரூபாய் தேவைப்படும்,” என்கிறார் சந்தீப்.
அக்டோபர் 2022-ல், பருத்தி அறுவடை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க 30,000 ரூபாய் கடன் வாங்கினார் சந்தீப். “அனைவரும் தீபாவளிக்கு புதுத் துணிகள் இங்கு வாங்குவார்கள். அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை எனில், அவர்களுக்கு செலவுக்குக் காசு இருக்காது,” என்கிறார் அவர்.
உள்ளூரில் கடன் கொடுப்பவரிடமிருந்து சந்தீப், புது வீடு கட்ட 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அப்பகுதியில் நல்ல அரசாங்கப் பள்ளி இல்லாததால், குழந்தைகளை அவர் கோவிட் தொற்றுக்கு முன் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார். வருடக் கட்டணம் கட்ட சிரமப்பட்டார்.
சப்தா கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராதேஷ்யாம் படேல், பருத்தி விவசாயம் விலை உயர்ந்தது என ஒப்புக் கொள்கிறார். “குறுவைப் பயிரை இப்போது (அக்டோபர் 2022) பயிரிட்டால், அதற்கும் பணம் தேவை. வட்டிக்கு கடன் வாங்க வேண்டும்,” என்கிறார் 47 வயது நிறைந்த அவர். “அடுத்த பயிர் (கடன் வாங்கிய பிறகு) நஷ்டத்தைக் கொடுத்தால், விவசாயிகள் மட்டும்தான் பாதிப்படைவார்கள். அதனால்தான் விவசாயி விஷம் குடிக்கிறார். இல்லையெனில் வட்டி புதைகுழியில் சிக்கியிருக்கும் நிலத்தை அவர் விற்க வேண்டும்,” என்கிறார்.
“பயிரின் மதிப்பு விவசாயிக்கு மட்டும்தான் தெரியும். விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதார விலையேனும் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்,” என்கிறார் விவசாய வல்லுநரான தேவேந்திர ஷர்மா.
ஜனவரி 2023-ல் சந்தீப்பின் குடும்பச் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அவரின் தம்பி, பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மணம் முடித்தார். அவர் பாரியிடம் ஜனவரி மாதத்தில் 30 குவிண்டால் பருத்தியை ஒரு குவிண்டாலுக்கு 8,900 ரூபாய் என்கிற விலையில் பணத்தேவையால் விற்றதாகக் கூறினார்.
இது நல்ல விலையாக இருந்தாலும் எல்லா செலவுகளும் போக கையில் காசு மிஞ்சாது என்கிறார் அவர்.
“விவசாயின் வார்த்தைக்கு எங்கும் மதிப்பில்லை,” என்கிறார் அவர் பருத்தி விலைகள் குறித்து விரக்தியோடு.
தமிழில்: ராஜசங்கீதன்