“தாயே உன்னிடமே பெற்றேன்
என் உயிரை.
நான் பேசிய முதல் சொல்
உனது தாய்மொழியில்.
அன்போடு உன் கரம்பற்றி
என் முதல் நடையை நடந்தேன்.
தாயே, உன் கரம் பற்றியே
நான் நடக்கப் பயின்றேன்.
உன் கையைப் பிடித்தே
நான் எழுத கற்றேன்.”
கொல்கத்தாவின் கரியாஹட் சந்தையில் மோகன் தாஸ் எனும் புத்தக வியாபாரியின் கடையில் இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. கவிஞராகவும் திகழும் அவர் இக்கவிதையோடு, இன்னும் பலவற்றையும் எழுதியுள்ளார்.
"நிஜர் காஜ்கி பலோபாஷா குபி ஜரூரி அர் அமர் ஜோன்னி அமர் ப்ரோதோம் பலோபாஷா ஹோச்சி அமர் போய்" [உங்கள் வேலையை நேசிப்பது அவசியம். புத்தகங்களே என் முதல் காதல்],” என்கிறார் மணி மோகன் தாஸ் எனும் புனைப் பெயரைக் கொண்ட இந்த 52 வயதுக்காரர்.
ஹேரம்பா சந்திரா கல்லூரியில் வணிகத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றும் மோகனுக்கு முறையான வேலை கிடைக்கவில்லை. இதனால் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு சாலையோரம் கடை போட்டு புத்தகங்கள் மற்றும் இதழ்கள் விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இத்தொழிலுக்கு எவ்விதத் திட்டமின்றி நுழைந்தாலும், இதை மாற்றிக் கொள்ள அவர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. “ அது [புத்தக விற்பனை] பணம் சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் அதில் உள்ளது,” என்கிறார். “எனக்கு புத்தகங்கள் மீது தீரா காதல்.”
தெற்கு கொல்கத்தாவின் கோல்பார் அருகே இணையும் பரபரப்பான சாலையில் கரியாஹட் சந்தையில் உள்ள 300 கடைகளில் மோகனின் புத்தகக் கடையும் ஒன்று. நொறுக்குத்தீனிகள், பழங்கள், காய்கறிகள், மீன், ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள் என பலவகையான பொருட்கள் இச்சந்தையில் விற்கப்படுகின்றன. நிரந்தர மற்றும் தள்ளுவண்டி கடைகளின் தொகுப்பாக இச்சந்தை உள்ளது.
தன்னைப் போன்று தற்காலிக கடை வைத்திருப்பவர்களிடம், தெருக்களில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் குடும்பமாக பழகுவதாக மோகன் சொல்கிறார். “ இங்குள்ள கடை உரிமையாளர்களுக்கு எங்களை [தெருவோர வியாபாரிகளை] பிடிக்காது என்று மக்கள் தவறாகக் கருதுகின்றனர். அது ஒருபோதும் உண்மையில்லை,” என்கிறார். மதிய உணவை பகிர்ந்து கொண்டு நட்புடன் அவர்கள் உண்ணுகின்றனர்.
மோகனின் பொழுதுகள் நீளமானவை. காலை 10 மணிக்கு கடையை திறக்கும் அவர் இரவு 9 மணிக்கு மூடுகிறார். வாரத்தில் அனைத்து நாட்களிலும் தினமும் 11 மணி நேரம் வேலை செய்கிறார். வேலையின் இயல்பு பிடித்திருந்தாலும், அதில் கிடைக்கும் பணம் போதவில்லை என்பதால் குடும்பத்தை அதைக் கொண்டு அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. “கொகோனோ தகா பை கொக்கோனோ அபர் ஏக் பேலா கபேரர் மோட்டோனோ டகா பைனா” “ [சில சமயம் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் எங்களுக்கு உணவுக்கு கூட பணம் இருக்காது],” எனும் மோகனின் குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர்.
கவிஞரும், புத்தக வியாபாரியுமான அவரிடம் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசியலியல் பயிலும் தனது மகள் பொலோமியின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த கனவுகளும் உள்ளது. தனது சகோதரிகள் ப்ரோதிமா, புஷ்பாவின் திருமணச் செலவுகளையும் ஏற்க வேண்டும் என்கிறார் அவர்.
தனது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு வந்தபோதிலும் அவர் மனம் தளரவில்லை. “இங்கிருந்து எங்களை அகற்றிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்குக் கிடையாது. நாங்கள் [தெருவோர வியாபாரிகள்] பல பேர் இருக்கிறோம். அனைவரும் வாழ்வாதாரத்திற்கு இத்தெருவை நம்பியுள்ளோம். எங்களை எளிதாக அகற்றிவிட முடியாது.” எனினும் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
“எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,” எனும் மோகன் 1996 ‘ஆபரேஷன் சன்ஷைன்’ பற்றி நினைவுகூருகிறார். நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் நடைபாதைகளில் கடை வைத்திருப்போரை அகற்றுவதற்கான அரசு மற்றும் நகராட்சி நிர்வாகிகளின் திட்டம் அது.
அப்போது மோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சியில் இருந்தது. அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் திட்டத்தை கைவிடுமாறு கோரியும், அதிகாரிகள் அதற்கு உடன்படவில்லை என்கிறார். அப்பகுதி ஆக்கிரமிப்பு கடைகளை அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் அகற்றிய போது தனது சரக்குகளை காப்பாற்றிக் கொண்ட அதிர்ஷ்டசாலிகளில் அவரும் ஒருவர்.
“இது அரசின் திடீர் முடிவு,”எனும் அவர், “ஓர் இரவில் பலர் அனைத்தையும் இழப்பார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை,” என்கிறார். பல மாதப் போராட்டங்களுக்கு பிறகு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மீண்டும் கடை திறந்தவர்களில் மோகனும் ஒருவர். மோகன் உறுப்பினராக உள்ள வியாபாரிகள் சங்ராம் குழுவின் அங்கமான சாலையோர தெற்கு கல்கத்தா வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 1996 டிசம்பர் 3ஆம் தேதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அச்சம்பவத்திற்கு பிறகு அவர் கட்சியிலிருந்து விலகியதோடு, எவ்வித அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்கிறார்.
*****
“அஜ்கல் அர் கியூ போய் போரினா[இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை].” கூகுளிடம் தனது வாடிக்கையாளர்களை இழந்ததாக மோகன் சொல்கிறார். “இப்போது நம்மிடம் கூகுள் மட்டும் உள்ளது. மக்கள் அவர்களுக்கு தேவையான சரியான தகவல்களை அதில் பெறுகின்றனர்.” கோவிட்-19 பெருந்தொற்று நிலைமையை இன்னும் மோசமடையச் செய்துவிட்டது.
“இதற்கு முன் நான் ஒருபோதும் கடையை வேண்டுமென்றே மூடியதில்லை. ஆனால் கோவிட் காலத்தில் வேறு வழியின்றி வேலையின்றி அமர்ந்திருந்தேன்.” பெருந்தொற்று காலத்தில் மோகன் தனது அனைத்து சேமிப்புகளையும் இழந்துவிட்டார். 2023 ஜனவரி மாதம் பாரியிடம் அவர் பேசிய போது, “இதுவரை இல்லாத வகையில் தொழில் மோசமாக உள்ளது,” என்றார்.
அரசு அளிக்கும் வியாபாரிகள் உரிமம் நிச்சயமற்ற தொழில் நிலையை மாற்ற உதவும் என்று மோகன் நம்புகிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு உரிமத்திற்கு விண்ணப்பித்தும் இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. எனினும் வியாபாரிகள் சங்க உறுப்பினராக இருப்பது பாதுகாப்பாக உணரச் செய்வதாக கூறும் மோகன், இதற்காக வாரந்தோறும் ரூ.50-ஐ சங்கத்திற்கு அளிக்கிறார். சந்தையில் கடையை அமைப்பதற்கான இடத்தையும் அது உறுதி செய்கிறது.
2022ம் ஆண்டின் இறுதியில் கொல்கத்தா நகராட்சி நிர்வாகம் மேற்கு வங்க நகர தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெரு வியாபாரத்தை ஒழுங்குமுறைப்படுத்தல்) விதிகள், 2018 விதிக்க முடிவு செய்ததாக மோகன் கூறினார். அனைத்து தெரு வியாபாரிகளும் கடைகளை மூடும் நெகிழி விரிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டார்கள். “இப்போது [குளிர்காலம்] பரவாயில்லை,,” “ஆனால் மழைக்காலத்தில் என்ன செய்வது?” என்கிறார் மோகன்.
মা আমার মা
সবচে কাছের তুমিই মাগো
আমার যে আপন
তোমার তরেই পেয়েছি মা
আমার এ জীবন
প্রথম কথা বলি যখন
তোমার বোলেই বলি
তোমার স্নেহের হাত ধরে মা
প্রথম আমি চলি
হাতটি তোমার ধরেই মাগো
চলতে আমার শেখা
হাতটি তোমার ধরেই আমার
লিখতে শেখা লেখা
করতে মানুষ রাত জেগেছ
স্তন করেছ দান
ঘুম পাড়াতে গেয়েছে মা
ঘুম পাড়ানি গান
রাত জেগেছ কত শত
চুম দিয়েছ তত
করবে আমায় মানুষ, তোমার
এই ছিল যে ব্রত
তুমি যে মা সেই ব্রততী
যার ধৈয্য অসীম বল
সত্যি করে বলো না মা কী
হল তার ফল
আমার ব্রতের ফসল যেরে
সোনার খুকু তুই
তুই যে আমার চোখের মনি
সদ্য ফোটা জুঁই ।
ஓ தாயே, என் தாயே
உன்னைப் போல பிடித்தவர்கள் யாருமில்லை, தாயேநீயே என் சொந்தம்.
ஓ தாயே, உன்னிடமே பெற்றேன்
இந்த உயிரை.
நான் சொன்ன
முதல் வார்த்தை
உனது தாய்மொழியில்.
அன்போடு உன் கரம்பற்றி
என் முதல் நடையை நடந்தேன்.
தாயே,
உன் கரம் பற்றியே
நான் நடக்கப் பயின்றேன்.
உன் கையைப் பிடித்தே
நான் எழுதக் கற்றேன்.
என்னை
வளர்க்க தூங்காத இரவுகள் பல கடந்தாய்,
உனது முலைகளை எனக்கு பரிசளித்தாய்.
என்னை உறங்க வைக்க தாயே
நீ தாலாட்டு பாடினாய்.
எண்ணற்ற
தூங்காத இரவுகளை நீ கடந்தாய்
முடிவிலா முத்தம் தந்தாய்,
நீ உறுதி ஏற்றாய்
என்னுள் இருந்த மனிதனை எழுப்ப.
நீ உறுதி
ஏற்றவள்,
உனது பொறுமை எல்லையற்றது,
ஓ தாயே, என்னிடம் உண்மையைச் சொல்
அதில் உனக்கு என்ன கிடைத்தது?
என் உறுதிமொழியின் விளைவு நீயே
ஓ என்
பொன்மகளே,
நீயே என் கண்களின் ஒளியானவள்
பூத்துக் குலுங்கும் மல்லிகை.
தமிழில்: சவிதா