ரேணு தாகூர் தனது வாடிக்கையாளரின் புருவங்களை மெல்லிய நூலைப் பயன்படுத்தி திறம்பட வடிவமைக்கிறார். "கம்லேஹரில் உள்ள அனைத்து கல்லூரி பெண்களுக்கும் நான்தான் புருவங்களை வடிவமைக்கிறேன்," என்று கம்லேஹர் கிராமத்தின் அழகு நிலைய தொழில்முனைவோரான அவர் கூறுகிறார்.
"மேக்கப்பில் இது மிகவும் கடினமான பணி." அவரது வாடிக்கையாளர் ஜோதியின் முகத்தில் ஒரு மெல்லிய அடுக்கைப் பூசுகிறார். அவருடைய கண்களைச் சுற்றி தூரிகையைத் தடவிக் கொடுக்கிறார். "இந்த கிரீம் சருமத்தை மென்மையாக்கும், இதனால் ஒப்பனை பளபளப்பாக இருக்கும்," என்று 32 வயதான அவர் கூறுகிறார்.
ரேணு தனது 21 வயதில் தொடங்கி 11 ஆண்டுகளாக அழகு கலைத் துறையில் இருக்கிறார். ''சிறு வயது முதலே பியூட்டி பார்லர் வேலையை கற்க நினைத்தேன். நான் இந்த துறையை மிகவும் நேசிக்கிறேன். நான் சிறுமியாக இருந்தபோதே இதைக் கற்றுக்கொள்ள விரும்பினேன்.” அவருக்கு 16 வயதாக இருந்தபோது, விடுமுறையைக் கழிக்க அவரது தந்தை பணிபுரிந்த டெல்லிக்குச் சென்றார். அங்கு ரூ.3,000 செலுத்தி ஆறு மாத ஒப்பனை பயிற்சி கற்றுக்கொண்டார். "எனது கிராமத்தில் யாரும் அதைச் செய்யவில்லை என்பதால் நான் பயிற்சி பெற முடிவு செய்தேன்," என்று அழகுக் கலை தொழில்முனைவோரான அவர் கூறுகிறார்.
21 வயதில் திருமணமான பிறகு, ரேணு தனது கணவர் அமித் தாக்கூரிடம் ஒரு அழகு நிலையம் தொடங்க விரும்புவதாகக் கூறினார். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது மாமியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "நீங்கள் கிராமத்தில் முந்தானை அணிவீர்களா அல்லது உங்கள் வேலையைச் செய்வீர்களா?" என்று இளம் மணப்பெண்கள் தங்கள் தலையை மறைத்து பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை அவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் ரேணுவைப் பொறுத்தவரை, வசதிக்கேற்ப தனது திறமையை வெளிப்படுத்துவது முக்கியம்.
தனது கடையைத் திறக்க ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்க்ரா மாவட்டத்தின் டிராமன் கிராமத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.45,000 கடன் பெற்றார். முயற்சிகள் இருந்தபோதிலும், "என்னால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை, அது இப்போது ரூ.60,000 ஆக உயர்ந்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.
ரேணு ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். ஆனால் அது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. "புருவம் வடிவமைக்க 30 ரூபாய் வசூலிக்கிறேன். புருவத்துடன், மேல் உதட்டு முடி அகற்றுவதற்கு, நான் 40 ரூபாய் வசூலிக்கிறேன். ரேணுவை திருமண அலங்காரத்திற்கு அழைக்கும் போது வருவாய் கணிசமாக உயர்கிறது - அவர் ஒரு நாளைக்கு ரூ.3000 சம்பாதிக்கிறார். மணமகள் தேவையான மேக்கப் பொருட்கள் வைத்திருந்தால், ரேணு ரூ.1,000 மட்டுமே வாங்குகிறார். "சில நாட்கள் நான் எதுவும் சம்பாதிப்பதில்லை," என்று அவர் கூறுகிறார்.
393 (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் உள்ள அவரது கடை எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும். கோவிட்-19 தாக்கும் வரை "வியாபாரம் நன்றாக இருந்தது," என்று அவர் கூறுகிறார். "என் கணவர் எனது கடையை மூடிவிட்டார். நாங்கள் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அவர் பயந்தார்.” அப்போதிருந்து, ரேணு தனது சொந்த வீட்டில் இருந்து தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சுற்றுவட்டாரத்தில் பல பார்லர்கள் முளைத்துள்ளதால், ரேணுவுக்கு வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரேணு தனது தொழிலைத் தொடங்கியபோது, கம்லேஹரில் ஒரு பியூட்டி பார்லர் கூட இல்லை. "இப்போது கிராமத்தில் பல அழகு நிலையங்கள் உள்ளன," என்கிறார் அவர்.
கம்லேஹர் ஆண்களால் நடத்தப்படும் கடைகளால் நிரம்பியுள்ளது. இப்பகுதியில் பெண்கள் நடத்தும் ஒரே வணிகம் ரேணுவின் வணிகமாகும். முடி திருத்தம் முதல் மெஹந்தி, வேக்ஸிங், முகம் மற்றும் முழு ஒப்பனை வரை அனைத்திற்கும் தேவையான அனைத்து தயாரிப்புகளும் அவரிடம் உள்ளன. பார்லருக்கு மேக்கப் பொருட்களை வாங்க ரேணு பாலம்பூருக்கு பேருந்தில் சென்று வருகிறார். மலிவான விலையைப் பெறுவதற்காக மொத்த விற்பனையாளரிடமிருந்து பொருட்களை வாங்குகிறார்.
பக்கத்து கிராமங்களில் பேசப்படும் இந்தி மற்றும் பஹாரி மொழிகளில் சரளமாக பேசுவதால் - ரேணு தனது கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நானாஹார் மற்றும் ராச்சியாரா கிராமங்களிலிருந்து வரும் தனது வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டை அடிக்க முடிகிறது.
ரேணுவின் கணவர் அமித் கோழிக்கறிக்கடை நடத்துகிறார். ஓட்டுநராகவும் உள்ளார். ரேணுவின் மூத்த மகள் ரித்திமாவுக்கு 10 வயது. ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது மூன்று வயதாகும் இளைய மகள் ஸ்மைரா தாயுடன் வீட்டில் தங்கியிருக்கிறார். பியூட்டி பார்லர் பிசினஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ரித்திமாவின் பள்ளிக் கட்டணத்தை ரேணு கட்டுகிறார்.
ரேணு தனது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வீட்டு வேலைகளில் முடங்கிக் கிடக்காமல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். "பெண்கள் [இங்கே] தங்களுக்கான இடத்தை உருவாக்குகிறார்கள். அவர்களின் குடும்பங்களும் ஆதரவாக இருக்கின்றன," என்று அவர் கூறுகிறார். இந்த பெண்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு பின்னல், விவசாயம் சிறு கடைகளை நடத்துகிறார்கள். "இன்னும் நிறைய பெண்கள் இதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
இந்தக் கட்டுரைக்கு உதவிய பர்வீன் குமார், அம்ரிதா ராஜ்புத் மற்றும் நவோமி ஃபார்கோஸ் ஆகியோருக்கு எங்கள் நன்றி.
தமிழில்: சவிதா