வாழ்நாள் முழுவதும் விலங்குகளை பராமரிக்க வேண்டும். இதுவே ரெய்காக் களாக எங்களின் வேலை: நாங்கள் விலங்குகளுக்கு சேவையாற்றுகிறோம்.
என் பெயர் சீதா தேவி. எனக்கு 40 வயதாகிறது. விலங்குகளை பராமரிப்பதில் எங்கள் சமூகத்திற்கு என வரலாறு உள்ளது. குறிப்பாக ஒட்டகங்களுடன் இப்போது செம்மறியாடுகள், ஆடுகள், பசுக்கள், எருமைகளும் சேர்ந்துள்ளன. ராஜஸ்தானின் பாலி மாவட்டம் ஜெய்தரன் வட்டார குர்கி கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எங்கள் தரமாக்ரி கிராமம்.
எனக்கு ஹரி ராம் தேவாசியுடன்[46] திருமணமாகி இரண்டு மகன்கள்- சவாய் ராம் தேவாசி, ஜம்தா ராம் தேவாசி ஆகியோர் உள்ளனர். ஆச்சு தேவி, சஞ்சு தேவி அவர்களின் மனைவிகள். ஆச்சு, சவாய் தம்பதிக்கு 10 மாத மகன் இருக்கிறான். 64 வயதாகும் என் அம்மா ஷாயாரி தேவியும் எங்களுடன் வசிக்கிறார்.
காலை 6 மணிக்கு என் மருமகள்கள் அல்லது நான் ஆட்டுப்பால் தேநீர் ஒரு கோப்பை தயாரித்து அன்றைய நாளை தொடங்குகிறோம். சமைத்துவிட்டு பாடாவிற்கு [விலங்குகளுக்கான கொட்டகை] செல்கிறோம். அங்கு எங்கள் ஆடுகள், செம்மறியாடுகள் உள்ளன. அங்கு மண் தரையை கூட்டி சுத்தம் செய்து, கால்நடைகளின் புலுக்கைகளை சேகரித்து உரத்தேவைக்கு பயன்படுத்துவோம்.
எங்கள் வீட்டின் பின்புறமுள்ள பாடாவில் செம்மறியாடுகள், ஆடுகள் என 60 கால்நடைகள் உள்ளன. அதற்குள் ஒரு சிறிய பிரிவினை உள்ளது. அங்கு நாங்கள் ஆட்டுக்குட்டிகளை வைத்திருக்கிறோம். பாடாவின் ஒரு முனையில் உலர் தீவனத்தை சேமித்து வைக்கிறோம் - இது பெரும்பாலும் உலர்ந்த பயறுச் செடிகள். செம்மறியாடு, ஆடுகள் தவிர, எங்களிடம் இரண்டு பசு மாடுகள் உள்ளன. அவற்றுக்கு வீட்டின் முன் வாசல் அருகே தனி கொட்டகை உள்ளது.










