யோ நாண் தமாஸோ மட் சம்ஜோ, புர்கா கி அமர் நிசானி சே!
நாண் நிகழ்ச்சியை வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக எடுத்து கொள்ளாதீர்கள். நம் முன்னோர்களின் பாரம்பரியம் இது

இந்த வார்த்தைகளுடன், கோடாவின் சங்கோத் கிராமத்தை சேர்ந்த காலஞ்சென்ற கவிஞரான சுரஜ்மால் விஜய், தென்கிழக்கு ராஜஸ்தானின் ஹதோதி பகுதியில் கொண்டாடப்படும் நாண் விழாவை விவரிக்கிறார்.

“இத்தகைய நிகழ்ச்சியை பல கோடி ரூபாய் செலவழித்தாலும் எந்த அரசாங்கத்தாலும் நடத்த முடியாது,” என்கிறார் கிராமத்தில் வசிக்கும் நகைக்கடைக்காரரான ராம்பாபு சோனி. “ஊர் மக்கள், தங்களின் பண்பாட்டுக்காக சொந்த விருப்பத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் விதத்தில் நிச்சயமாக அரசால் நடத்த முடியாது.” ஐந்து நாட்களுக்கு விழாவை ஊர் கொண்டாடுகிறது. ஹோலிக்கு பிறகு, நாட்டுப்புற வீரரான சங்கா குர்ஜாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவரென நம்பப்படுகிறது.

‘நாண்’ என்றால் ‘குளித்தல்’ என அர்த்தம். சுத்தப்படுத்துவது என்கிற பொருளில் வழங்கப்படும் வார்த்தை, ஹோலி பண்டிகையுடன் தொடர்பு கொண்டது. சங்கோதில் வசிக்கும் மக்கள்தான் இந்த விழாவை முழுமையாக எடுத்து நடத்துகின்றனர். தங்களின் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, அசாதாரண பாத்திரங்களை ஏற்று, தாமாகவே ஒப்பனை போட்டுக் கொண்டு, விழா ஆடைகளை உடுத்திக் கொண்டு அவர்கள் நடிக்கின்றனர்.

கோடாவின் சங்கோத் கிராமத்தில் நடந்த நாண் விழா காணொளி

“400-500 ஆண்டுகளுக்கு முன், ஷாஜகானின் ஆட்சியில் சங்கோதில் விஜய்வர்கியா மகாஜன் இருந்தார்,” என்கிறார் ராம்பாபு சோனி. “ஷாஜகானிடம் அவர் வேலை பார்த்தார். ஓய்வு பெற்றதும், நாண் நிகழ்ச்சி இங்கு நடத்த பேரரசரிடம் அனுமதி கேட்டார். அப்படித்தான் இந்த விழா சங்கோதுக்கு வந்தது.”

அருகாமை கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சங்கோதுக்கு வந்து கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளையும் மாயாஜாலங்களையும் பிற நிகழ்வுகளையும் பார்க்கின்றனர். பிரகம்மானி தெய்வத்தை வணங்கி விழா தொடங்குகிறது. பிறகு கூக்ரி (அவித்த தானியம்) பிரசாதமாக வழங்கப்படுகிறது.

”மந்திர வித்தைகள் காட்டப்படும், கத்திகள் விழுங்கப்படும். இன்னும் பல நிகழ்வுகள் இங்கு நடக்கும்,” என அறிவிக்கிறார் கலைஞராக இருக்கும் சத்யநாராயண் மாலி. “காகிதத் துண்டுகளை ஒருவர் உண்ணுவார். பிறகு 50 அடி நீள நூலை வாயிலிருந்து அவர் எடுப்பார்.”

PHOTO • Sarvesh Singh Hada
PHOTO • Sarvesh Singh Hada

இடது: கடந்த 60 வருடங்களாக ராம்பாபு சோனியின் (நடுவே அமர்ந்திருப்பவர்) குடும்பம், நாண் விழாக்களில் பாட்ஷா பாத்திரம் ஏற்று வருகிறது. வலது: சங்கோத் பஜாரில் லுகாரோ கோ செளக் பகுதியில் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியிருக்கிறது

விழா நாட்கள் தொடர்ந்து இறுதியில் பாட்ஷா கெ சவாரி யில் முடியும். சாமானியர் ஒருவர் ஒருநாளுக்கு அரசராக முடி சூட்டப்படுவார். அவரின் அரச ஊர்வலம் கிராமத் தெருக்களினூடாக நடக்கும். கடந்த 60 வருடங்களில் அரசப் பாத்திரம் ராம் பாபு குடும்பத்திடம் இருக்கிறது. “என் தந்தை அந்த பாத்திரத்தை 25 வருடங்களாக நடிக்கிறார். அந்த பாரம்பரியத்தை 35 வருடங்களாக நான் தொடர்கிறேன்,” என்கிறார் அவர். “அரசரின் பாத்திரம் முக்கியம். சினிமாவில் நாயகனைப் போன்றது அப்பாத்திரம். இதுவும் படம்தான்.”

அந்த நாளில், அந்தப் பாத்திரம் ஏற்கும் நபருக்கு மதிப்பும் கிடைக்கும்.

“ஆமாம், வருடத்துக்கு ஒருநாள் மட்டும்தான்,” என்கிறார் விழாவுக்கு வந்திருக்கும் ஒருவர். “ஆமாம், இன்றொரு நாளுக்கு அவர்தான் அரசர்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Sarvesh Singh Hada

சர்வேஷ் சிங் ஹதா ராஜஸ்தானை ஒரு பரீட்சார்த்த பட இயக்குநர். சொந்த பகுதியான ஹதோதியிலுள்ள நாட்டுப்புற பாரம்பரியங்களை ஆவணப்படுத்துவதிலும் ஆய்வு செய்வதிலும் ஆழமான ஆர்வம் கொண்டவர்.

Other stories by Sarvesh Singh Hada
Text Editor : Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Other stories by Swadesha Sharma
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan