நான் தர்பா வாசிக்கையில் எங்களின் வார்லி மக்களுக்கு காற்று உடலுக்குள் புகுந்து அவர்களை ஆட்டுவிக்கும். காற்றில் ஆடும் மரம் போல் அவர்களின் உடல்கள் ஒரு மணி நேரம் ஆடும்.

வாசிக்கும்போது சவாரி தேவியையும் அவளுடன் இருப்பவர்களையும் அழைப்பேன். எங்கள் மக்களில் அதை ஏற்கும் எவரையும் இசை பிடித்து ஆட்டுவிக்கும்.

இது நம்பிக்கைதான். நம்பிக்கை கொண்டவருக்கு கடவுள் இருக்கிறார். இல்லாதவருக்கு கடவுள் கிடையாது. என்னை பொறுத்தவரை என் தர்பாதான் என் தெய்வம். எனவே என் கைகளை கூப்பி அதை வணங்குகிறேன்.

என் கொள்ளுத்தாத்தா நவ்ஷ்யா தர்பா வாசித்திருக்கிறார்.

அவரின் மகன் தாக்லியா. அவரும் வாசித்திருக்கிறார்.

தாக்லியாவின் மகன் லட்கியா. அவரும் அதை வாசித்திருக்கிறார்.

லட்கியாதான் என் தந்தை.

Bhiklya Dhinda’s father Ladkya taught him to play and make tarpa from dried palm toddy tree leaves, bamboo and bottle gourd. ‘It requires a chest full of air. One has to blow in the instrument and also make sure that your body has enough air to breathe,’ says Bhiklya baba
PHOTO • Siddhita Sonavane
Bhiklya Dhinda’s father Ladkya taught him to play and make tarpa from dried palm toddy tree leaves, bamboo and bottle gourd. ‘It requires a chest full of air. One has to blow in the instrument and also make sure that your body has enough air to breathe,’ says Bhiklya baba
PHOTO • Siddhita Sonavane

பிக்லியா திண்டாவின் தந்தை லட்கியா அவருக்கு தர்பா வாசிக்கவும் காய்ந்த பனைமர இலைகள், மூங்கில் மற்றும் சுரைக்காய் ஆகியவற்றை வைத்து செய்யவும் கற்றுக் கொடுத்தார். ‘அதை வாசிக்க நெஞ்சு முழுக்க காற்று கொண்டிருக்க வேண்டும். கருவியை ஊதவும் வேண்டும், உடலில் போதுமான அளவு காற்று இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்,’ என்கிறார் பிக்ல்யா பாபா

அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். சுதந்திரம் இன்னும் கிடைத்திருக்கவில்லை. எங்கள் ஊர் வல்வாண்டேவில் ஒரே ஒரு பள்ளிதான் இருந்தது. அதுவும் ‘பெரிய மனிதர்கள்’ (உயர்சாதியினர்) படிக்கும் பள்ளி. ஏழைகளுக்கு பள்ளி இல்லை. அச்சமயத்தில் எனக்கு 10-12 வயது இருக்கும். நான் கால்நடைகளை பார்த்துக் கொண்டேன். என் பெற்றோர் ’கால்நடைகளை நான் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வேன் என நினைத்தார்கள். பள்ளிக்கு சென்றால், பசியில் வாடுவேனென நினைத்தார்கள்.’ ஏழு குழந்தைகளை என் தாய் பார்த்துக் கொண்டார்.

என் தந்தை, ‘மாடுகள் மேயும்போது நீ ஒன்றும் செய்ய மாட்டாய். நீ தர்பா வாசிக்கலாமா? உன் உடலுக்கும் (ஆரோக்கியம்) நல்லது. பொழுதும்போகும்.’ எனக் கேட்டார். சத்தத்தினால் பூச்சிகளும் மாடுகளிடம் வராது.

காடுகளிலும் மேய்ச்சல் நிலங்களிலும் இருக்கும்போதுதான் நான் அதை வாசிக்க ஆரம்பித்தேன். மக்கள் புகார் சொல்வார்கள், ‘நாள் முழுக்க திண்டியாவின் மகன் சத்தம் போடுகிறான்,’ என. என் தந்தை ஒருநாள், ‘நான் உயிருடன் இருக்கும் வரை, உனக்கு தர்பா செய்து தருகிறேன். நான் இறந்தபிறகு, யார் செய்வார்?’ எனக் கேட்டார். எனவே நான் அக்கலையை கற்றுக் கொண்டேன்.

தர்பா செய்ய மூன்று விஷயங்கள் தேவை. கூட்டில் சத்தம் எதிரொலிப்பதற்கான பனை இலைகள். இரண்டு மூங்கில் துண்டுகள். ஒன்று ஆண் மூங்கில். இன்னொன்று பெண் மூங்கில். ஆண் மூங்கிலில் ராகம் இருக்க தட்டுவதற்கென சிறு துண்டும் இருக்கும். மூன்றாவதாக காற்றை சேமிக்க உதவும் சுரைக்காய் கூடு வேண்டும். நான் ஊதத் தொடங்கியதும் ஆண் மூங்கிலும் பெண் மூங்கிலும் சேர்ந்து அற்புதமான சத்தத்தை எழுப்பும்.

தர்பா ஒரு குடும்பத்தை போல. ஆணும் பெண்ணும் அதில் உண்டு. காற்றை நான் ஊதியதும் அவை இணைந்து, கிடைக்கும் சத்தம் அற்புதமாக இருக்கும். ஒரு கல்லை போல, அதற்கும் உயிர் கிடையாது. ஆனால் என் மூச்சில் அது உயிர் பெற்று, சத்தத்தை உருவாக்கி இசையாக்கும். அதற்கு காற்று சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். கருவியில் ஊத வேண்டும். உங்களின் உடலில் போதுமான காற்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய கருவியை உருவாக்க கடவுளளித்த ஞானம்தான் காரணம். இது கடவுளுக்குரியது.

என் தந்தை ‘மாடுகள் மேயும்போது நீ ஒன்றும் செய்ய மாட்டாய். நீ தர்பா வாசிக்கலாமல்லவா? உன் உடலுக்கும் (ஆரோக்கியம்) நல்லது. பொழுதும்போகும்,’ எனக் கேட்டார்

காணொளி: ‘என் தர்பாதான் என் தெய்வம்’

*****

என் பெற்றோரும் முதியவர்களும் எங்களுக்கு பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள். இப்போது அதை சொன்னால், என்னை கண்டபடி பேசுவார்கள். ஆனால் இவை எங்களின் முன்னோர்களுக்கு எங்களுக்கு சொன்னவை.

அண்டத்தை உருவாக்கிவிட்டு கடவுளர் சென்றுவிட்டனர். வார்லிகள் எங்கிருந்து வந்திருப்பார்கள்?

கந்த்ராம் தெலியா எழுதியது.

கந்த்ராம் தெலியாவுக்கும் அவரது தாய்க்குமென கடவுளர் கொஞ்சம் தயிர் வைத்திருந்தனர். அவர் தயிரை உண்டார். கூடவே எருமையையும் உண்டார். தாய் கோபமடைந்து அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

முதல் வார்லியான கந்த்ராம் தெலியா எப்படி இங்கு வந்தாரென முன்னோர்கள் சொல்வார்கள்.

கந்த்ரம்  தெல்யாலாஹுன்

பல்சந்த்யாலா பர்சங் ஜாலா
நடவ்சந்திடா நடல
கர்வண்டியாலா கரா ஜாலா
ஷிங்கர்படியாலா ஷிங்க்ராலா
ஆத்கடகலா ஆத் ஜாலா
கடா கொச்சாய் கசத்வாடி ஜாலா
கசெலிலா யெயுன் ஹசாலா
ஆன் வல்வண்டியாலா யெயுன் பசாலா.
கொரியாலா ஜான் கரா ஜாலா
கொரியாலா ரஹாலா கொண்டியா
சந்தியா ஆலா, கம்பிர்கடா ஆலா

Kandram Dehlyalahun

Palsondyala parsang jhala
Natavchondila Natala
Kharvandyala khara jhala
Shingarpadyala shingarala
Aadkhadakala aad jhala
Kata khochay Kasatwadi jhala
Kaselila yeun hasala
Aan Walwandyala yeun basala.
Goryala jaan khara jaala
Goryala rahala Gondya
Chandya aala, Gambhirgada aala

*இக்கவிதை, பல்கார் மாவட்ட ஜவஹர் ஒன்றியத்தின் கிராமங்களின் பெயர்கள் மற்றும் குக்கிராம பெயர்களை எதுகை மோனையுடன் சொல்லும் வார்த்தை விளையாட்டு ஆகும்.

Left: Bhiklya Dhinda with his wife, Tai Dhinda.
PHOTO • Siddhita Sonavane
Right: He says, ' Tarpa is just like a family. There is a male and a female. When I blow some air, they unite and the sound that you get is magical. Like a stone, it is lifeless. But with my breath it comes alive and produces a sound, a musical note’
PHOTO • Siddhita Sonavane

இடது: பிக்ல்யா திண்டா, தன் மனைவி தாய் திண்டாவுடன். ‘தர்பா ஒரு குடும்பத்தை போல. ஆண் மூங்கில், பெண் மூங்கில் உண்டு. நான் காற்று ஊதியதும் இரண்டும் ஒன்றிணைந்து எழுப்பும் ஒலி அற்புதமாக இருக்கும். கல்லை போல அது உயிரற்று இருக்கும். என் மூச்சில் உயிர்பெற்று அற்புதமான இசையை அது அளிக்கும்’

வார்லிகளை போல பல சமூகத்தினர் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். ராஜ்கோலி, கோக்னா, கட்கரி, தாகூர், மகர், சம்பார்… அரசனின் தர்பாரில் பணிபுரிந்தது எனக்கு நினைவிலிருக்கிறது. பயன்படுத்தப்பட்ட இலைகளை தூக்கிப் போடும் வேலையை அங்கு செய்து கொண்டிருந்தேன். எல்லா சமூகத்தினரும் அங்கு சேர்ந்து ஒரே வரிசையாக உண்ணுவார்கள். யாருமே அடுத்தவருக்கு குறையாக நடத்தப்பட மாட்டார்கள். அங்குதான் அதை கற்றுக் கொண்டேன். கட்காரி அல்லது முஸ்லிமின் கையிலிருந்து நீர் வாங்கத் தொடங்கினேன். வார்லிகள் தொட்ட நீரை ராஜ்கோலிகள் ஏற்க மாட்டார்கள். எங்கள் சமூகத்தினர், கட்காரியோ சம்பாரோ தோர் கோலியோ தொட்ட நீரை ஏற்க மாட்டார்கள். இப்போதும் இதுதான் நிலை. ஆனால் எனக்கு இந்த பாகுபாட்டில் உடன்பாடில்லை.

ஹிர்வா தேவாவையும் தர்பாவையும் வழிபடும் எவரும் வார்லி ஆதிவாசிதான்.

நாங்கள் விழாக்களை ஒன்றாக கொண்டாடுவோம். புது அரிசி அறுவடை செய்யப்பட்டதும், குடும்பத்துடனும் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் பகிர்ந்து கொள்வோம். முதலில் கிராம தெய்வம் கூந்தேவிக்கு கொண்டு செல்வோம். முதல் கவளத்தை தெய்வத்துக்கு அளித்து விட்டுதான், நாங்கள் சாப்பிடுவோம். இதை மூட நம்பிக்கை என நீங்கள் நினைக்கலாம். அப்படி கிடையாது இது. இது எங்களின் நம்பிக்கை.

புது அறுவடையுடன் நாங்கள் உள்ளூர் தெய்வம் கூந்தேவி கோவிலுக்கு செல்வோம். அவளுக்கு கோவில் கட்டி இங்கு ஏன் அழைத்து வர வேண்டும்? ‘எங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் கால்நடைகளையும் தொழிலாளர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள். நிலமும் பழத்தோட்டங்களும் செழிப்படைய செய். வேலையில் இருப்பவர்களுக்கு வெற்றி கொடு. எங்களுக்கு எங்கள் குடும்பங்களுக்கும் நல்ல காலத்தை கொடு’ என அவளிடம் வேண்டுவோம். ஆதிவாசிகளாகிய நாங்கள் கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் வேண்டுவோம். அவளின் பெயரை சொல்லி, எங்களின் வேண்டுதலை சொல்வோம்.

Bhiklya baba in the orchard of dudhi (bottle gourd) in his courtyard. He ties each one of them with stings and stones to give it the required shape. ‘I grow these only for to make tarpa . If someone steals and eats it, he will surely get a kestod [furuncle] or painful throat’ he says
PHOTO • Siddhita Sonavane

முற்றத்திலுள்ள சுரைக்காய் தோட்டத்தில் பிக்லியா பாபா. ஒவ்வொன்றுக்கும் கம்பிகளும் கற்களும் கட்டி வடிவம் கிடைக்க வைக்கிறார். ‘தர்பாவுக்காகதான் இவற்றை நான் வளர்க்கிறேன். யாரேனும் திருடி இதை உண்டால், அவருக்கு நிச்சயமாக கட்டிகளோ தொண்டை வலியோ வரும்,’ என்கிறார் அவர்

தர்பா எங்களின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

வக்பராஸில் சாவித்ரி தேவி விழா கொண்டாடுவோம். உங்களுக்கு அவளை ஷபரியாக தெரியும். பாதி சாப்பிட்ட இலந்தைப் பழங்களை ராமருக்கு கொடுத்தது அவள்தான். எங்களிடம் வேறொரு கதை இருக்கிறது. சவரி தேவி, ராமருக்காக காட்டில் காத்துக் கொண்டிருந்தார். ராமர் அங்கு சீதாவுடன் வந்தார். ராமரை சந்தித்த சவரி, ரொம்ப காலமாக அவை பார்க்க காத்திருந்ததாக சொல்கிறாள். அவரை பார்த்தபிறகு, அவளுக்கு வாழ வேண்டிய தேவையே இல்லை என்றும் சொல்கிறாள். இதயத்தை தன்னுள்ளிருந்து வெளியே எடுத்து கைகளில் பிடித்தபடி கிளம்பி சென்றாள். திரும்பி வரவே இல்லை.

அவளின் அன்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில் நாங்கள் தர்பாவை மலைகளுக்கும் காடுகளுக்கு கொண்டு செல்வோம். காட்டுக்குள் பல தெய்வங்கள் வாழ்கின்றன. டங்க்டா சவரி, கோரா சவரி, போப்தா சவரி, தும்பா சவரி மற்றும் குங்கா சவரி போன்றவை. அவை எல்லாமும் சவரி தேவியின் தோழிகள். இயற்கை தெய்வங்கள். அவை இன்னும் இருக்கின்றன. அவற்றை நாங்கள் வழிபடத் தொடங்கினோம். தர்பா வாசித்து, அவர்களை கொண்டாட்டத்துக்கு அழைப்பேன். ஒவ்வொரு சவரிக்குமென ஒவ்வொரு மெட்டை வாசிப்பேன். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மெட்டை மாற்றுவேன்.

*****

2022ம் ஆண்டு. நந்துர்பார், துலே, பரோடா போன்ற இடங்களிலிருந்து வந்த ஆதிவாசிகளுடன் மேடையில் இருந்தேன். அங்கே முன்னால் அமர்ந்திருந்தவர்கள் நான் ஆதிவாசி என்பதை நிரூபிக்கும்படி கேட்டார்கள்.

இந்த பூமிக்கு முதலில் வந்து மண்ணை பரிசோதித்தது ஆதிவாசிதான் என்று சொன்னேன். மனிதன் தான் எனக்கு முன்னோர் என்றேன். மூச்சை கொண்டு உருவாக்கும் ஒலிதான் நம் பண்பாடு என்றேன். எங்களின் கைகள் கொண்டு நாங்கள் வாசிப்பதைதான், ஓவியத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். ஓவியம் பின்னால்தான் வந்தது. மூச்சும் இசையும் எப்போதும் இருப்பது. அண்டம் உருவானதிலிருந்து ஒலி இங்கு இருக்கிறது.

தர்பா ஒரு ஜோடியை அடையாளப்படுத்துவதாக சொல்லி முடித்தேன். ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும் துணையாக இருப்பார்கள். தர்பாவும் அதே போல்தான் இயங்குகிறது. மூச்சு அவற்றை ஒருங்கிணைத்து, அற்புதமான ஒலியை உருவாக்குகிறது.

என் பதில் முதல் இடம் பெற்றது. மாநிலத்தின் முதல் மதிப்பெண்ணை நான் பெற்றேன்.

கைகூப்பி தர்பாவிடம் சொல்வேன், ‘அன்பு கடவுளே, உன்னை வழிபடுகிறேன். உனக்கு சேவை செய்கிறேன். பதிலுக்கு நீ என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். நான் பறக்க விரும்புகிறேன். விமானத்தில் என்னை ஏற்றிவிடு.’ நம்பினால் நம்புங்கள், என் தர்பா என்னை விமானத்தில் ஏற்றிவிட்டது. பிக்லியா லட்கியா திண்டா விமானத்தில் பயணித்தார். நான் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆலந்தி, ஜெஜூரி, பராமதி, சன்யா (ஷானி) ஷிங்கானாபூர்… பல இடங்களுக்கு நான் பயணித்திருக்கிறேன். இங்கிருக்கும் எவரும் கோவாவின் தலைநகர் பஞ்சிமுக்கு கூட சென்றதில்லை. ஆனால் நான் சென்றிருக்கிறேன். அங்கு ஒரு சான்றிதழ் கூட எனக்குக் கிடைத்தது.

Left: The many tarpas made by Bhiklya baba.
PHOTO • Siddhita Sonavane
Right: He has won many accolades for his tarpa playing. In 2022, he received the prestigious Sangit Natak Akademi Award and was felicitated in Delhi. One wall in his two-room house is filled with his awards and certificates
PHOTO • Siddhita Sonavane

இடது: பிக்லியா பாபா தயாரித்த பல தர்பாக்கள். வலது: தர்பா வாசித்ததற்காக நிறைய பாராட்டுகளையும் விருதுகளையும் அவர் வென்றிருக்கிறார். 2022-ல் அவர் மதிப்புக்குரிய சங்கித் நாடக அகாடமி விருது பெற்று டில்லியில் பாராட்டு விழா அவருக்கு நடத்தப்பட்டது. அவரின் இரண்டறை வீட்டில் ஒரு சுவர் முழுக்க அவரின் சான்றிதழ்களும் விருதுகளும்தான் இடம்பெற்றிருக்கின்றன

பல விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. ஆனால் வேண்டாம். 89 வயதாகி விட்டது. பல கதைகள் இருக்கின்றன. அவற்றை நான் சொல்வதில்லை. மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். பல செய்தியாளர்களும் பத்திரிகையாளர்களும் வந்து என் செய்தியை எழுதி பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். நான் பிரபலமாகி விட்டதாக உலகுக்கு சொல்வார்கள். பல இசைஞர்கள் வந்து என் இசையை திருட முயலுவார்கள். எனவே நான் அனைவரையும் சந்திப்பதில்லை. நீங்கள் என்னை சந்திக்க முடிந்தது உங்கள் அதிர்ஷ்டம்.

சங்கித் நாடக அகாடமி விருது எனக்கு கிடைத்தது. விழா டெல்லியில் நடந்தது. விருது பெற்றபோது கண்ணீர் வந்துவிட்டது. என் தந்தை பள்ளிக்கு என்னை அனுப்பியதில்லை. எனக்கு வேலை கிடைக்குமா என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் ‘இக்கருவிதான் நம் தெய்வம்’ என சொன்னார். உண்மையில் இது தெய்வம்தான். இதுதான் எனக்கு எல்லாமும் தந்தது. மனிதத்தைக் கற்றுக் கொடுத்தது. என் பெயர் உலகம் முழுக்க தெரியும். என் தர்பா அச்சிடப்பட்டு ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. என் பெயரை உங்கள் செல்பேசியில் உள்ளிட்டு பார்த்தால், என் காணொளியை நீங்கள் பார்க்க முடியும்… வேறென்ன வேண்டும்? கிணற்றில் இருக்கும் தவளைக்கு வெளியே என்ன இருக்கிறதென தெரியாது. ஆனால் நான் அந்த கிணற்றை தாண்டி விட்டேன்… உலகத்தை பார்த்துவிட்டேன்.

இன்றைய இளைஞர்கள் தர்பா மெட்டுகளுக்கு ஆடுவதில்லை. டிஜெவை வரவழைக்கிறார்கள். நானும் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயத்தை சொல்லுங்கள். நம் வயலில் அறுவடை செய்து, புது அரிசியை கூந்தேவிக்கு படைக்க போய், அவளை வேண்டும்போது டிஜே இசையா இசைப்போம்? அந்த கணங்களில் தர்பாதான், வேறு எதுவும் கிடையாது.

PARI, இதை ஆவணப்படுத்த உதவிய AROEHAN-ன் மாதுரி முகானேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

நேர்காணல், ஒலிபெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு: மேதா கலே
புகைப்படங்கள் மற்றும் காணொளி: சிதிதா சொனாவனே

இக்கட்டுரை, பாரியின் அருகி வரும் மொழிகள் பணியின் ஒரு பகுதியாகும். நாட்டின் அருகி வரும் மொழிகள் பற்றி ஆவணப்படுத்தும் பணி இது.

வார்லி, இந்தியாவின் குஜராத், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா போன்ற இடங்களில் வசிக்கும் வார்லி பழங்குடியினரால் பேசப்படும் இந்தோ ஆரிய மொழி ஆகும். யுனேஸ்கோவின் மொழிகளுக்கான வரைபட நூல், வார்லியை அதிகம் பாதிக்கப்படக் கூடிய மொழியாக வரையறுத்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் பேசப்படுவதை போல் வார்லி மொழியை ஆவணப்படுத்துவதே எங்களின் நோக்கம்.

தமிழில் : ராஜசங்கீதன்

Bhiklya Ladkya Dhinda

பிக்லியா லட்கியா திண்டா, பல்கார் மாவட்டத்தின் ஜவ்ஹர் ஒன்றியத்திலுள்ள வல்வாண்டேவின் விருது பெற்ற தர்பா இசைஞர் ஆவார். 2022ம் ஆண்டில் அவர் சங்கீத் நாடக அகாடமி விருது பெற்றார். அவரின் வயது 89.

Other stories by Bhiklya Ladkya Dhinda
Photos and Video : Siddhita Sonavane

சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

Other stories by Siddhita Sonavane
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan