“அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தொலைக்காட்சியில் மட்டும்தான்,” என்கிறார் சுவாமி. இவர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் சுமார் 1,500 மக்கள் வசிக்கும் கணங்கூரு என்கிற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.
கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நேரடியாகக் களத்திலும் கசப்பான அரசியல் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மதச் சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தனது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு விவசாயியின் கடனையும் ஒரு வருடத்திற்குள் ரத்து செய்து விடுவதாகவும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு உள்ள கடனை ரத்து செய்து விடுவதாகவும் கூறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியானது(பிஜேபி) தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள ரூ 1 லட்சம் வரையிலான கடனைத் தள்ளுபடி செய்துவிடுவதாக உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடன் தள்ளுபடியைக் குறித்து எதுவும் கூறவில்லையென்றாலும், ”விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) ரூபாய் 1.25 லட்சம் கோடி செலவில் நீர்ப்பாசனத் திட்டங்கள் வகுப்போமென்றும் உறுதியளித்துள்ளது. பிஜேபி மற்றும் ஜேடிஎஸ் இரண்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலம் முழுவதற்குமான நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ரூ 1.5 லட்சம் கோடிகள் செலவழிக்கவிருப்பதாகக் கூறியுள்ளன.
ஆனால் கணங்கூருவின் விவசாயிகள் இத்தகைய வெட்டி வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. “இதை [தொலைக்காட்சியில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது] விட , அரசியல் தலைவர்கள் காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரலாம். மக்களும் தங்கள் நிலங்களில் பயிர் செய்து சாப்பிட்டு நிம்மதியாக வாழ முடியும்,” என்கிறார் சுவாமி (இப்பகுதி விவசாயிகள் தங்களது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள்.)
சுவாமியின் வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட திண்ணையில் அன்றைய பகல் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மூன்று விவசாயிகள். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து இன்னும் சில ஆட்களும் வந்து சேர்ந்துகொள்கிறார்கள். “உங்களுக்கு எங்கள் பணம் வேண்டுமா அல்லது நகை வேண்டுமா? பல்வேறு ஏமாற்றுத் திட்டங்களுக்கு நாங்கள் இதற்கு முன்பும் பலியாகியிருக்கிறோம்!” அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். பிறகு “அட, ஊடகமா – உங்களிடம்தானே அரசியல்வாதிகள் தங்கள் உயரிய வாக்குறுதிகளை பிரியத்துடன் வழங்குவார்கள்,” என அவர்களில் ஒருவரான நரசிம்மையா கேலி செய்கிறார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நீண்டகாலமாக நடந்து வரும் காவிரி நதி நீர் பிரச்சனையின் மையமாக மாண்டியா உள்ளது. 1942 ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தான் இங்குள்ள பாதி விவசாய நிலங்களுக்கு (2014 கர்நாடக அரசின் மனித வளர்ச்சி அறிக்கையின் படி, மாவட்டத்தின் 524,471 விவசாய நிலங்களின் மொத்த பரப்பளவு 324,060 ஹெக்டேர்) நீர் வருகிறது. காலங்காலமாக இப்பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு ஹேமாவதி ஆறும் பங்களித்துள்ளது.
அதிக நீர்த்தேவையுள்ள பயிர்களின் பாசனப்பரப்பு அதிகரித்தல், அதிக நிலத்தடி நீர் பயன்பாடு, மணல் கொள்ளை மற்றும் கட்டிடத்தொழிலின் அபரிமித வளர்ச்சி போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் குறைதல் மற்றும் பருவ மழை சரியாக இல்லாதது ஆகிய காரணங்களால் உருவான வறட்சி, மாண்டியாவின் விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு பெரும் வறட்சியை கர்நாடகா சந்தித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 1.81 மில்லியன் ஜனத்தொகை கொண்ட இந்த மாவட்டம்தான் கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கும் மாவட்டமாக உள்ளது.
இங்கே கணங்கூருவில் நிழலில் அமர்ந்திருக்கும் விவசாயிகளின் நேரெதிரே உள்ளன நீரற்ற வயல்வெளிகள். நீர்ப்பாசனம் செய்ய அமைக்கப்பட்ட கால்வாய்களைப் போலவே நிலங்களும் வறண்டு கிடக்கின்றன.
“கடந்த இரண்டு மாதங்களாகக் கால்வாய்களில் நீர் வரத்து இல்லை. எங்கள் நெல் எல்லாம் பாழாகிவிட்டது,” என்கிறார் பேலு. இவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி மற்றும் ராகி ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார். “சொற்ப வருமானத்திற்கும் நாங்கள் எங்கள் கால்நடைகளைத் தான் நம்பியிருக்கிறோம். நாங்கள் சேர்த்து வைத்திருக்கும் நெல் தான் எங்களுக்கு சாப்பாடு. ஆனால் அதுவும் தீரும் வரைதான். வேறு எதையும் விட எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் – அதுதான் எங்களுடைய மிகப்பெரிய பிரச்சனை,” என்று கூறுகிறார் நரசிம்மையா.
“கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் கடன் மூலமாக நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறோம். வட்டி விகிதம் அதிகம் இல்லை. ஆனால் இப்படி தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால், நாங்கள் வாங்கியிருக்கும் சிறிதளவு கடனையும் கூட எங்களால் திருப்பிச்செலுத்த முடியவில்லை,” என மேலும் கூறுகிறார் சுவாமி.
கிராமத்தில் சுமார் 60 வயல்களில் சொந்த செலவில் ஆழ்துளைக் கிணறுகள்அமைத்திருக்கிறார்கள் என்று மதிப்பிடுகிறார் நரசிம்மையா. ஆனால் அங்கும் மின்சாரம் சரியாக கிடைப்பதில்லை. 2014 ஆம் ஆண்டின் மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி மாண்டியாவில் சுமார் 83.53 சதவிகித வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஆனால் எங்கள் வீடுகளுக்கு ஒரு நாளில் 2 -3 மணி நேரம் மட்டும்தான் மின்சாரம் கிடைக்கிறது!” என எரிச்சலுடன் கூறுகிறார்கள் விவசாயிகள்.
கணங்கூருவிலிருந்து 20 கிமீ தொலைவில், பாண்டவபுரா தாலுகாவில், சுமார் 2,500 பேர் வசிக்கும் கியாதனஹள்ளி கிராமத்தில் உள்ள பி. புட்டே கௌடா கேட்கிறார், “கடந்த 20 நாட்களாக கால்வாய்களில் நீர்வரத்து இல்லை, மழையும் தேவையான அளவு பெய்யவில்லை. என்னால் எப்படி நெல் அறுவடை செய்ய முடியும் கூறுங்கள்?”, என. அவரது சகோதரர் சுவாமி கௌடா மேலும் கூறுகையில், “என்னிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் நெல் பயிருக்கு மட்டும் நான் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். விவசாயக் கூலி, உரம் மற்றும் இதர வேலைகளுக்கே பணம் சரியாகிவிடுகிறது. கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியிருக்கிறேன். அதிக வட்டி இல்லையென்றாலும் கூட பணத்தை திருப்பி செலுத்த வேண்டுமல்லவா? மழை இல்லாமல் எப்படி முடியும்? காவிரி நீர் எங்கள் நிலங்களுக்கும் நாங்கள் குடிப்பதற்கும் வர வேண்டும்.” என்கிறார்.
ஆட்சிக்கு வருபவர்களில் யார் இக்குறைகளையெல்லாம் சிறப்பாக நிவர்த்தி செய்வார்கள் என்று கேட்கையில், சுவாமி கூறுகிறார், “அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளது. ஆனால் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களால் சில லட்சங்களைக் கூட எங்கள் வாழ்நாளில் பார்க்க முடியாது. ஒருவேளை இளைஞர்கள், நன்றாகப் படித்தவர்கள் அல்லது ஊழலற்றவர்கள் வந்தால் இந்த நிலை மாறும்.” சற்று நிதானித்துவிட்டு அவர் மேலும் கூறுகிறார், “மாறலாம்.”
தமிழில்: சுபாஷிணி அண்ணாமலை