தீவுக்கூட்டமான லட்சத்தீவில் தென்னை மரங்கள் ஏராளம். தேங்காயில் இருந்து நாரைப் பிரித்தெடுத்து, கயிறு தயாரிப்பது இங்கே பெரிய தொழில்.
மீன் பிடித்தல், தேங்காய் உற்பத்தி ஆகியவற்றைப் போலவே கயிறு முறுக்குதலும் இந்த தீவில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் முக்கிய வேலை ஆகும். லட்சத்தீவில் ஏழு நாருரிக்கும் ஆலைகளும் ஆறு முறுக்கு நூல் தயாரிப்பு மையங்களும் ஏழு நார் சுருட்டும் ஆலைகளும் (கணக்கெடுப்பு 2011) இருக்கின்றன.
தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிலில் நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் . தேங்காய் நாரைப் பிரித்தெடுப்பது, அதை கயிறாக முறுக்குவது ஆகிய வேலைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், இயந்திரங்கள் வந்திருந்தாலும், கயிறு மற்றும் அது சார்ந்த பொருள்கள் தயாரிப்பது இன்னமும் பெரிதும் உடலுழைப்பு சார்ந்த தொழிலாகத்தான் உள்ளது.
லட்சத்தீவுகளில் உள்ள கவரட்டி நகரில் அமைந்துள்ள கயிறு உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்துதல் மையத்தில் 14 பெண்கள் அடங்கிய ஒரு குழு 6 இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாரைப் பிரித்தெடுத்து, கயிறு தயாரிக்கிறது. திங்கள் தொடங்கி சனிக்கிழமை வரை எட்டு மணி நேர வேலை நாள்தோறும் செய்து அவர்கள் 7,700 ரூபாய் மாதந்தோறும் ஈட்டுகின்றனர். வேலை நேரத்தின் முதல் பாதி கயிறு தயாரிக்கவும் இரண்டாம் பாதி இயந்திரம் சுத்தப்படுத்தவும் என கூறுகிறார் 50 வயது தொழிலாளரான பீகம் பி. கிலோ 35 ரூபாயென கேரளாவின் கயிறு முறுக்கும் வாரியத்தில் கயிறுகள் விற்கப்படும்.
இந்த நார் பிரிக்கும், முறுக்கும் இயந்திரங்கள் வருவதற்கு முன்பாக உரித்த தேங்காய் நாரை கைகளாலேயே பக்குவம் செய்து, அதில் இருக்கும் இழைகளைப் பிரித்தெடுத்து கயிறு முறுக்கி, அதைப் பின்னி படல்கள், வடக் கயிறுகள் போன்றவற்றை செய்வார்கள். “எங்கள் பாட்டி, தாத்தாக்கள் காலை 5 மணிக்கு எழுந்து கவரட்டிக்கு வடக்கே கடல் அருகே சென்று தேங்காய்களை மணலில் ஒரு மாதத்துக்குப் புதைப்பார்கள்,” என்கிறார் ஃபாத்திமா.
“அதன் பிறகு தேங்காய் நாரை அடித்துப் பிரித்து இது போல கயிறுகளாக செய்வார்கள்...,” என கயிறு தயாரிக்கும் நுட்பத்தை காட்டி விவரிக்கும் 38 வயது ஃபாத்திமா, அகில இந்திய வானொலியின் கவரட்டி பிரிவில் செய்தி வாசிப்பாளராக இருக்கறார். “இன்று வரும் கயிறுகள் அவ்வளவு நல்ல தரத்தில் இல்லை, மிகவும் லேசாக இருக்கின்றன,” என்கிறார் அவர்.
லட்சத் தீவுகளில் உள்ள பித்ரா கிராமத்தைச் சேர்ந்தவரான அப்துல் காதர் தாம் கைகளால் கயிறு தயாரித்தது எப்படி என்பதை நினைவுகூருகிறார். இந்தக் கயிறுகளைக் கொண்டு படகு கட்டியதாகவும் கூறுகிறார் 63 வயது மீனவரான அப்துல் காதர். படிக்க : பெருந்துயரத்தில் லட்சத் தீவு பவளப் பாறைகள்
அப்துல் காதரும், கவரட்டி கயிறு உற்பத்தி மையத் தொழிலாளர்களும் தேங்காய் நார் இழைகளைக் கொண்டு கயிறு தயாரிக்கும் முறைகளை இந்தக் காணொளி. இதில் ஒன்று பாரம்பரிய முறைப்படி கைகளால் தயாரிப்பது. மற்றொன்று நவீன முறைப்படி தயாரிப்பது.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்