புதிய நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன உருவாக்கம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவற்றை லேசான அவநம்பிக்கையோடே அவதானித்தார். "அரசியலமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், அதை எரிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்," என்றும் கூறினார்.

குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை அச்சுறுத்தும்வகையிலான 2023-ம் ஆண்டின் முக்கியமான மசோதாக்களை பாரி நூலகம் அலசி ஆராய்கிறது.

வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2023-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் காடுகள், எல்லைகளுக்கு அருகில் இருந்தால் அவை இனி காப்பாற்றப்படும் என சொல்ல முடியாது. பல நாடுகளுடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் வடகிழக்கை இதற்கு உதாரணமாக கவனியுங்கள். வடகிழக்கின் 'வகைப்படுத்தப்படாத காடுகள்' பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. அவை இப்போது திருத்தத்திற்குப் பிறகு, இராணுவம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.

டிஜிட்டல் தனியுரிமை தளத்தில், ஒரு புதிய சட்டம் - பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாவது) சன்ஹிதா சட்டம் - விசாரணையின் போது தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வதை விசாரணை நிறுவனங்களுக்கு எளிதாக்குகிறது. இது குடிமக்களின் தனிநபர் உரிமை என்னும் மிக அடிப்படை உரிமையை அச்சுறுத்துகிறது. இதேபோல், புதிய தொலைத்தொடர்பு சட்டம், தொலைத்தொடர்பு சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் சரிபார்க்கக்கூடிய பயோமெட்ரிக் அடிப்படையிலான அடையாளத்தைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறது. பயோமெட்ரிக் பதிவுகளை கையகப்படுத்துதல் மற்றும் சேமிப்பது தனிநபர் உரிமை மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.

இந்த புதிய சட்டமன்ற நடவடிக்கைகள் 2023-ல் இந்தியாவின் நாடாளுமன்ற அமர்வுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாடாளுமன்றத்தின் 72 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, 2023 டிசம்பரில் நடத்தப்பட்ட குளிர்கால கூட்டத்தொடரில் 146 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) நீக்கப்பட்டனர். இது ஒரே அமர்வில் அதிக எண்ணிக்கையிலான இடைநீக்க நடவடிக்கை.

மாநிலங்களவையின் 46 உறுப்பினர்களும், மக்களவையின் 100 உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், குற்றவியல் சட்டத் திருத்த விவாதம் நடந்தபோது எதிர்க்கட்சி இருப்பிடங்கள் காலியாக இருந்தன.

இந்திய குற்றவியல் சட்டங்களை சீர்திருத்துதல் மற்றும் காலனித்துவ நீக்கம் செய்யும் நோக்கத்துடன் மக்களவையில் விவாதத்தின்போது மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது: இந்திய தண்டனைச் சட்டம், 1860; குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973; மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872. பாரதிய நியாய (இரண்டாவது) சன்ஹிதா, 2023 (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாவது) சன்ஹிதா, 2023 (BNSS), மற்றும் பாரதிய சாஷியா (இரண்டாவது) மசோதா, 2023 (BSB) ஆகியவை முறையே இந்த முதன்மைச் சட்டங்களை மாற்றின. 13 நாட்களுக்குள் இந்த மசோதாக்கள் டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றன. மேலும் 2024 ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வருகின்றன.

பாரதிய நியாய (இரண்டாவது) சன்ஹிதா, 2023 ( BNS ) சட்டம் முக்கியமாக தற்போதுள்ள விதிகளை மறுகட்டமைப்பு செய்யும் அதே வேளையில், BNS மசோதாவின் இரண்டாவது மறுவரைவின் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது அதன் முன்னோடியான இந்திய தண்டனைச் சட்டம், 1860 ( IPC )-லிருந்து விலகிச் செல்கிறது.

இந்த சட்டம் தேசத்துரோக குற்றத்தை (இப்போது ஒரு புதிய தலைப்பின் கீழ் பெயரிடப்பட்டுள்ளது) தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்," என்று அதன் வரம்பை விரிவுபடுத்துகிறது. முன்மொழியப்பட்ட பிரிவு 152, தேசத்துரோக குற்றச்சாட்டுகளை தூண்டுவதற்கான விதிமுறைகளாக "வன்முறையைத் தூண்டுதல்" அல்லது "பொது ஒழுங்கை சீர்குலைத்தல்" என்ற முந்தைய அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டது. அதற்கு பதிலாக, "பிரிவினை, பிரிவினைவாதம் அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி, அல்லது நாசகார நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் அல்லது தூண்டிவிட முயற்சிக்கும்" எந்தவொரு செயலையும் அது குற்றமாக்குகிறது.

பி.என்.எஸ் சட்டத்தின் இரண்டாவது மறுவரைவில் மற்றொரு குறிப்பிடத்தக்க திருத்தம் ஐபிசியின் பிரிவு 377-ஐ விலக்குவதாகும்: "எந்தவொரு ஆண், பெண் அல்லது விலங்குடனும் இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக தானாக முன்வந்து உடலுறவு கொண்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் [...]." இருப்பினும், புதிய சட்டத்தில் தேவையான விதிகள் இல்லாததால், பிற பாலின பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பாதுகாப்பை இழக்க நேரிடுகிறது.

BNSS சட்டம் என குறிப்பிடப்படும் 2023-ம் ஆண்டின் பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாவது) சன்ஹிதா சட்டம், 1973-ம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மீறுகிறது. இந்த சட்டம், போலீஸ் காவலின் அனுமதிக்கப்பட்ட காலத்தை 15 நாட்களிலிருந்து அதிகபட்சம் 90 நாட்கள் வரை நீட்டித்திருக்கிறது. மரணம், ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை போன்ற தண்டனைகள் கொண்ட கடுமையான குற்றங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் பொருந்தும்.

மேலும், விசாரணையின் போது தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்ய இந்த சட்டம் அமைப்புகளை அனுமதிக்கிறது. இது தனிநபர் உரிமையை மீறக்கூடும்.

பாரதிய சாஷியா (இரண்டாவது) சட்டம் , 2023, 1872-ம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டத்தின் கட்டமைப்பை குறைந்தபட்ச திருத்தங்களுடன் பாதுகாக்கிறது.

வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2023, வன (பாதுகாப்பு) சட்டம் , 1980 -க்கு மாற்றாக முற்படுகிறது. திருத்தப்பட்ட சட்டம் அதன் விதிகளின் கீழ் சில வகையான நிலங்களுக்கு விலக்கு அளிக்கிறது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

"(அ) ஒரு இரயில் பாதை அல்லது அரசால் பராமரிக்கப்படும் ஒரு பொது சாலைக்கு அருகில் அமைந்துள்ள வன நிலம், ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இரயில் மற்றும் சாலையோர வசதிக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகபட்சம் 0.10 ஹெக்டேர் வரை அணுகலை வழங்குகிறது;

(ஆ) உட்பிரிவு (1)-ன் உட்பிரிவு (அ) அல்லது பிரிவு (ஆ)-வில் குறித்துரைக்கப்படாத நிலங்களில் எழுப்பப்படும் அத்தகைய மரம், மரம் நடுதல் அல்லது மறு காடு வளர்ப்பு; மற்றும்

(இ) அத்தகைய வன நிலம்:

(i) சர்வதேச எல்லைகள் அல்லது கட்டுப்பாட்டுக் கோடு அல்லது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் நூறு கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைந்திருப்பது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வியூக திட்டங்களை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது; அல்லது

(ii) பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 10 ஹெக்டேர் நிலம்; அல்லது

(iii) பாதுகாப்பு தொடர்பான திட்டம் அல்லது துணை ராணுவப் படைகளுக்கான முகாம் அல்லது பொது பயன்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது [...]."

முக்கியமாக இந்தத் திருத்தம் காலநிலை நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற பிரச்சினைகள் பற்றி பொருட்படுத்தவில்லை.

தொலைத்தொடர்புச் சட்டம் 2023 , டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் 2023 ( DPDP சட்டம் ) மற்றும் ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023 ஆகியவற்றை நிறைவேற்றியதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்ட சில சட்ட நடவடிக்கைகளையும் நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியது. குடிமக்களின் டிஜிட்டல் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியில் பாதுகாக்கப்பட்ட தனியுரிமை உரிமைகள் மீது நேரடி செல்வாக்கு செலுத்தும் இந்த நடவடிக்கைகள், இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பை ஒரு ஒழுங்குமுறை கருவியாக பலவந்தமாக நிறுத்துகின்றன.

எதிர்க்கட்சிகளின் குரல்கள் இல்லாத நிலையில், தொலைத்தொடர்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவரிடம் விரைவாக ஒப்புதலைப் பெற்றது. இந்திய தந்தி சட்டம் , 1885 மற்றும் இந்திய தந்தியில்லா டெலிகிராபி சட்டம் , 1933 ஆகியவற்றை சீர்திருத்துவதற்கான அதன் முயற்சியில், இந்த சட்டம் நவீனமயமாக்கல் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உறுதிப்படுத்துகிறது:

"(அ) [...] குறிப்பிட்ட சில செய்திகள் அல்லது குறிப்பிட்ட செய்திகளின் பகுதியைப் பெறுவதற்கு பயனர்களின் முன் ஒப்புதல்;

(ஆ) "தொந்தரவு செய்யாதே" பதிவேடு என்று அழைக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவேடுகளைத் தயாரித்தல் மற்றும் பராமரித்தல், பயனர்கள் முன் அனுமதியின்றி குறிப்பிட்ட செய்திகளையோ அல்லது குறிப்பிட்ட செய்திகளின் வகையையோ பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துதல்; அல்லது

(இ) இந்த பிரிவுக்கு முரணாக பெறப்பட்ட எந்தவொரு முறைகேடான தொழில்நுட்பம் அல்லது குறிப்பிட்ட செய்திகளையும் பயனர்கள் புகாரளிக்க உதவும் செயல்திட்டம்."

குற்றச் செயல்களுக்கான தூண்டுதல்களைத் தடுக்க பொது அவசர காலங்களில் "எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை அல்லது தொலைத்தொடர்பு நெட்வொர்க்கையும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து தற்காலிகமாக கைப்பற்றுவதற்கு" இந்த சட்டம் அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

இந்த விதி, பொதுமக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்துதல் என்ற பெயரில் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் முழுவதிலும் தகவல்தொடர்புகளை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் அதிகாரிகளுக்கு கணிசமான அதிகாரங்களை வழங்குகிறது.

மூலச் சட்டங்களில் உள்ள இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் உள்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி "குடிமக்களை மையமாகக் கொண்டவை" என்று கருதப்படுகின்றன. வகைப்படுத்தப்படாத காடுகளுக்கு அருகில் வாழும் வடகிழக்கின் பழங்குடி சமூகங்கள் - நம் நாட்டின் குடிமக்கள் - தங்கள் வாழ்வாதாரம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இழக்க நேரிடும். புதிய வன பாதுகாப்பு (திருத்த) சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாது.

குற்றவியல் சட்ட திருத்தங்கள் குடிமக்களின் டிஜிட்டல் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட தனியுரிமையை பாதிக்கின்றன. இந்த சட்டங்கள் குடிமக்களின் உரிமைகள் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு இடையிலான சமநிலையை வழிநடத்துவதில் சவால்களை முன்வைக்கின்றன, திருத்தங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பின் தலைமை சிற்பி, ஒன்றிய அரசின் கூற்றுப்படி, 'குடிமக்களை மையமாகக் கொண்டது' எது என்பதைக் கண்டுபிடிப்பதில் நிச்சயமாக ஆர்வமாக இருப்பார்.

முகப்பு வடிவமைப்பு: ஸ்வதேஷா ஷர்மா

தமிழில்: சவிதா

Siddhita Sonavane

சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

Other stories by Siddhita Sonavane
Editor : PARI Library Team

பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.

Other stories by PARI Library Team
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha