கடும் வெயிலுக்கு பிறகு, குளிர்காலம் மகாராஷ்டிராவின் மராத்வடா பகுதியை வந்தடைந்திருக்கிறது. தாமினி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இரவுப்பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். “நான் காவல் நிலைய அதிகாரி பணியில் இருந்தேன். வாக்கி டாக்கிகளையும் ஆயுதங்களையும் வழங்குவது என் பொறுப்பு,” என்கிறார் அவர்.

ஒருமுறை காவல் ஆய்வாளர், காவல் நிலைய வளாகத்துக்குள் இருக்கும் தன் அதிகாரப்பூர்வ வீட்டுக்கு வாக்கி டாக்கிக்கான பேட்டரிகளை கொண்டு வரும்படி அவரிடம் சொன்னார். நள்ளிரவு கழிந்திருந்த நேரம். அந்த நேரத்தில் அப்படி வீட்டுக்கு வரச் சொல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு இருந்தாலும் அதுவே வழக்கமாக இருந்தது. “அதிகாரிகள், வீட்டுக்கு கருவிகளை கொண்டு சென்று விடுவார்கள்… அதிகாரிகளின் உத்தரவுகளை நாங்கள் கேட்டாக வேண்டும்,” என விளக்குகிறார் தாமினி.

எனவே நள்ளிரவு 1.30 மணிக்கு தாமினி, காவல் ஆய்வாளர் வீட்டுக்கு சென்றார்.

ஆய்வாளர், சமூகப் பணியாளர் மற்றும் கராம்சாரி (அதிகாரப்பூர்வமற்ற பணிகளுக்கென காவல் நிலையத்தால் பணியமர்த்தப்பட்டவர்) ஆகிய மூவரும் உள்ளே அமர்ந்திருந்தனர். “நான் அவர்களை பொருட்படுத்தவில்லை. பேட்டரி மாற்றுவதற்காக மேஜையில் இருந்து வாக்கி டாக்கி நோக்கி சென்றேன்,” என நினைவுகூருகிறார் 2017ம் ஆண்டு நேர்ந்த அந்த இரவை சங்கடத்துடன். திடீரென அவரது முதுகுக்கு பின் கதவு தாழிடும் சத்தம் கேட்டது. “அறையை விட்டு வெளியே செல்ல முயன்றேன். என் முழு வலிமையையும் பிரயோகித்தேன். ஆனால் அவர்களில் இரண்டு பேர் என்னுடைய கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு, படுக்கையில் போட்டனர்… பிறகு ஒவ்வொருவராக என்னை வல்லுறவு செய்தனர்.”

இரவு 2.30 மணிக்கு கண்ணீர் மல்க தாமினி வீட்டை விட்டு வெளியேறி, பைக்கில் ஏறி அவரது வீட்டுக்கு சென்றார். “என் மனம் மரத்துப் போயிருந்தது. என் வேலைக்கான எதிர்காலத்தை பற்றியும் நான் சாதிக்க விரும்பியவற்றை பற்றியும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, இப்படி ஏன்?” என்கிறார் அவர்.

PHOTO • Jyoti Shinoli

மகாராஷ்டிராவின் மராத்வடா பகுதியில் பல காலமாக கடும் நீர் பஞ்சம் நிலவுகிறது. விவசாயத்தை நம்பி வாழ்க்கை ஓட்ட முடியாத நிலை. காவல்துறை வேலைகளெல்லாம் விலைமதிப்பற்றவை

*****

தாமினி, உயர் அரசதிகாரியாக விரும்பியவர். ஆங்கில இலக்கியம், சட்டம், படிப்பு ஆகியவற்றில் பெற்றிருக்கும் மூன்று பட்டங்கள் அவரின் லட்சியத்துக்கும் கடும் உழைப்புக்கும் சாட்சிகள். “எப்போதுமே நான் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தேன்… இந்திய காவல்துறை சேவையில் (IPS) கான்ஸ்டபிளாக சேர்ந்து, பிறகு ஆய்வாளர் தேர்வுக்கு தயாரிப்பதென விரும்பியிருக்கிறேன்,” என்கிறார் அவர்.

2007ம் ஆண்டில் தாமின் காவல்துறையில் சேர்ந்தார். முதல் சில வருடங்களுக்கு அவர் போக்குவரத்து துறையிலும் மராத்வடா காவல்நிலையங்களில் கான்ஸ்டபிளாகவும் பணியாற்றினார். “பணிமூப்பு பெறவும் என் திறன்களை ஒவ்வொரு வழக்கிலும் வளர்த்துக் கொள்ளவும் கடுமையாக உழைத்தேன்,” என நினைவுகூருகிறார் தாமினி. என்னதான் கடின உழைப்பை கொடுத்தாலும் ஆணாதிக்கம் நிறைந்த காவல் நிலையங்கள் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை.

“ஆண் காவலர்கள் அடிக்கடி சமிக்ஞைகள் தருவார்கள். குறிப்பாக சாதி மற்றும் பாலினம் சார்ந்து ஜாடை பேசுவார்கள்,” என்னும் தாமினி தலித் சமூகத்தை சேர்ந்தவர். “ஒருமுறை ஒரு பணியாளர் என்னிடம், ‘சார் சொல்வது போல் நடந்து கொண்டால், குறைவான வேலை செய்து நல்ல ஊதியம் பெறலாம்,’ என்றார்.” அந்த பணியாளர்தான், அவரை வல்லுறவு செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான கராம்சாரி . அதிகாரப்பூர்வமற்ற வேலைகளை காவல்நிலையத்தில் செய்வதை தாண்டி அவர் ‘மாமூல்’ வசூலிப்பார் என்கிறார் தாமினி. மேலும் அவர் பாலியல் தொழிலாளர்களையும் பெண் கான்ஸ்டபிள்களையும் ஆய்வாளரின் வீட்டுக்கும் ஹோட்டல்களுக்கும் லாட்ஜுகளுக்கும் கொண்டு சென்று விடுவார்.

“நாங்கள் புகார் அளிக்க நினைத்தாலும் எங்களின் உயரதிகாரிகளும் ஆண்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எங்களை பொருட்படுத்த மாட்டார்கள்,” என்கிறார் தாமினி. பெண் உயரதிகாரிகளுக்கும் இத்தகைய துன்புறுத்தல்கள் நடப்பதுண்டு. ஓய்வு பெற்ற ஐபிஎஸ்ஸும் மகாராஷ்டிராவின் முதல் பெண் ஆணையருமான டாக்டர் மீரான் சதா போர்வாங்கர், பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு பணிச்சூழலில் எப்போதும் பாதுகாப்பு இருப்பதில்லை என்கிறார். “பணியிடத்தில் பாலியல் சீண்டல் என்பதுதான் யதார்த்தம். கான்ஸ்டபிள் மட்டத்தில் இருக்கும் பெண்கள் அந்த சீண்டலை அதிகம் எதிர்கொள்கிறார்கள். மூத்த பெண் அதிகாரிகளுக்கும் கூட அது நேர்கிறது. எனக்கும் நேர்ந்திருக்கிறது,” என்கிறார் அவர்.

2013ம் ஆண்டில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டம் , பணியிட பாலியல் அச்சுறுத்தலிலிருந்து பெண்களை பாதுகாக்கவென நிறைவேற்றப்பட்டது. வேலை நிறுவனங்கள் அச்சட்டம் குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டுமெனவும் அச்சட்டம் வலியுறுத்தியது. “காவல் நிலையங்களும் இச்சட்டத்தின் கீழ் வருவதால், அதை அவையும் பின்பற்றப்பட வேண்டும். காவல்துறை ஆய்வாளர்தான் ‘வேலை தருபவர்’. சட்டம் சரியாக பின்பற்றப்படுவதற்கு அவர்தான் பொறுப்பு,” என்கிறார் பெங்களூருவின் மாற்றுச் சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக இருக்கும் பூர்ணா ரவிஷங்கர். அச்சட்டத்தின்படி பணியிட பாலியல் சிக்கல்கள் குறித்த புகார்களை கையாளவென உள் புகார்கள் குழு (ICC) உருவாக்கப்பட வேண்டும். அக்குழுவின் நடவடிக்கைக்கு ஆய்வாளரும் கூட உட்பட்டவர்தான். ஆனால் டாக்டர் போர்வாங்கர், யதார்த்தச் சூழலை குறிப்பிடுகிறார்: “ICC-கள் காகித அளவில்தான் இருக்கின்றன.”

2019ம் ஆண்டின் இந்தியாவில் காவல்துறை நிலை என்கிற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது. வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தின் (CSDS) ஜனநாயகம் குறித்த லோக்நீதி அமைப்பு நடத்திய ஆய்வில் மகாராஷ்டிரா உள்ளிட்ட 21 மாநிலங்களில் 105 இடங்களில் 11,834 காவல் பணியாளர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர். அதில், நான்கில் ஒரு பங்கு பெண் காவலர்கள் (24 சதவிகிதம்) இத்தகைய புகார் குழுக்கள் தங்களின் பணியிடங்களில் இல்லை என தெரிவித்திருக்கின்றனர். பெண் காவலர்களுக்கு தொடுக்கப்படும் பாலியல் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கையை கண்டறிவதில் உள்ள சிரமத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

“இத்தகைய சட்டம் இருப்பதை பற்றி எங்களுக்கு யாரும் சொல்லவில்லை. புகார் குழுவென எதுவும் இல்லவும் இல்லை,” என்கிறார் தாமினி.

2014ம் ஆண்டிலிருந்து ‘பெண்ணுக்கு எதிரான குற்றம் மற்றும் அவரின் சுயமரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கோடு செய்யப்படும் விஷயம்’ என்கிற வகைமைக்குக் கீழ், ( IPC -ன் 354 பிரிவும் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் பாரதீய நியாய சன்ஹிடா வின் 74வது பிரிவும் ஆகும்) பணியிடத்தில் நடைபெறும் பாலியல் ரீதியிலான அச்சுறுத்தல்கள் பற்றிய தரவுகளை சேகரித்து வருகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB). 2022ம் ஆண்டில் இந்த வகையின் கீழ் நாடு முழுவதும் 422 சம்பவங்களை பதிவு செய்திருக்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் . அவற்றில் 46 மகாராஷ்டிராவில் நடந்தவை. யதார்த்தத்தில் அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

*****

நவம்பர் 2017ல் அந்த நாளின் இரவில், தாமினி வீட்டுக்கு திரும்பிய போது அவரின் மனதில் பல கேள்விகள் இருந்தன. நடந்ததை வெளியில் சொல்வதா, அடுத்த நாள் மீண்டும் அதே கொடூர முகங்களை பார்ப்பதா, ஏதேனும் நடவடிக்கை எடுப்பதா போன்ற கேள்விகள். “கடும் பாதிப்பில் இருந்தேன். இத்தகைய சூழலில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென (உதாரணமாக உடனே எடுக்க வேண்டிய மருத்துவப் பரிசோதனை) எனக்கு தெரியும். ஆனாலும் எடுக்க முடியவில்லை… எனக்கு தெரியவில்லை,” என தயங்குகிறார் தாமினி.

ஒரு வாரம் கழித்து, மராத்வடாவின் மாவட்டங்களில் ஒன்றின் காவல் கண்காணிப்பாளரை புகாருடன் சந்தித்தார் அவர். காவல் கண்காணிப்பாளர், முதல் தகவல் அறிக்கை பதியும்படி அவரிடம் சொல்லவில்லை. பதிலாக, தாமினி இன்னும் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். “காவல் கண்காணிப்பாளர், அவரது காவல் நிலையத்திலிருந்து பணி ஆவணத்தை கேட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட ஆய்வாளர், அந்த ஆவணத்தில் என்னுடைய நடத்தை சரியில்லை என்றும் பணியிடத்திலேயே நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டார் என்றும் குறிப்பிட்டார்,” என்கிறார் தாமினி.

சில நாட்கள் கழித்து, தாமினி இரண்டாம் புகாரை காவல் கண்காணிப்பாளருக்கு எழுதினார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. “உயரதிகாரிகளை நான் பார்க்காத நாள் இல்லை. அதே நேரத்தில், எனக்கான வேலையையும் நான் செய்து கொண்டுதான் இருந்தேன்,” என நினைவுகூருகிறார். “பிறகுதான் வல்லுறவால் நான் கருவுற்றிருப்பது தெரிய வந்தது.”

அடுத்த மாதத்தில் அவர் இன்னொரு நான்கு பக்க புகார் கடிதத்தை எழுதி காவல் கண்காணிப்பாளருக்கு தபாலாகவும் வாட்சப் மூலமாகவும் அனுப்பினார். முதல் கட்ட விசாரணை ஜனவரி 2018-ல் நடத்த உத்தரவிடப்பட்டது. வல்லுறவு சம்பவம் நடந்து இரு மாதங்களுக்கு பின். “ஒரு பெண் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) விசாரணை அதிகாரியாக இருந்தார். கர்ப்பகால பரிசோதனை அறிக்கைகளை அவரிடம் சமர்ப்பித்தும் கூட, அவற்றை தன் அறிக்கையில் அவர் இணைக்கவில்லை. வல்லுறவு நடக்கவில்லை என அவர் புகாரை முடித்து வைத்தார். ஜுன் 2019-ல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டேன். விசாரணை முடிந்திருக்கவில்லை,” என்கிறார் தாமினி.

PHOTO • Priyanka Borar

’புகாரளிக்க நினைத்தாலும் உயரதிகாரிகள் ஆண்களாக இருப்பார்கள். அவர்கள் நம்மை பொருட்படுத்த மாட்டார்கள்’ என்கிறார் தாமினி. பெண் உயரதிகாரிகள் கூட இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்

இத்தனை விஷயங்களையும் குடும்பத்தின் ஆதரவின்றிதான் தாமினி செய்தார். சம்பவம் நடப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன், 2016, கணவரை விட்டு அவர் பிரிந்து விட்டார். நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் அவருக்கு உண்டு. அவர் மூத்தவர். ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளான தந்தையும் தாயும் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என அவர் நம்பினார். “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், காவல்நிலையத்தில் பாலியல் விஷயங்கள் செய்வதாக சொல்லி என் தந்தையை தூண்டி விட்டார்… நான் பயனற்றவள் என்றும் அவர்களுக்கு எதிராக நான் புகார்கள் அளிக்கக் கூடாது என்றும் கூறினார்,” என்கிறார் அவர். தந்தை பேசுவதை நிறுத்தியது அவருக்கு அதிர்ச்சி அளித்தது. “என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் பொருட்படுத்தவில்லை. என்ன செய்ய முடியும்?”

இன்னும் மோசமாக, தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தாமினி நினைக்கிறார். “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், குறிப்பாக கராம்சாரி எல்லா இடங்களுக்கும் என்னை பின்தொடர்ந்து வந்தார். நான் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தேன். தூங்கவில்லை. சரியாக சாப்பிடவில்லை. என் மனமும் உடலும் சோர்வுற்றுவிட்டது.”

ஆனாலும் ஓயவில்லை என்கிறார். பிப்ரவரி 2018-ல் தாலுகாவின் முதல் மட்ட மாஜிஸ்திரேட்டை அணுகினார். பொதுத்துறை பணியாளர் மீது வழக்கு தொடுப்பதற்கான உயரதிகாரிகளின் அனுமதி இல்லாததால் ( குற்றவியல் நடைமுறை சட்ட ப்பிரிவு 197 மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாரதிய நகாரிக் சுராஷா சன்ஹிடா பிரிவு 218) அவரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு வாரம் கழித்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இறுதியில் முதல் தகவல் அறிக்கையை காவல் நிலையம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

”மூன்று மாத விரக்தி மற்றும் மனச்சோர்வுக்கு பிறகு கிடைத்த நீதிமன்ற உத்தரவு எனக்கு ஊக்கமளித்தது,” என்கிறார் தாமினி அந்த நிமிடத்தை மீண்டும் வாழ்ந்தபடி. ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து, குற்றம் நடந்த இடமான ஆய்வாளரின் வீடு ஆய்வு செய்யப்பட்டது. எந்த தடயமும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு பிறகு நிச்சயமாக எந்தத் தடயமும் கிடைக்காது. யாரும் கைது செய்யப்படவில்லை.

அதே மாதத்தில், தாமினிக்கு கருக்கலைந்தது.

*****

ஜூலை 2019ல் நடந்த நீதிமன்ற விசாரணைக்கு பிறகு ஐந்து வருடங்கள் கழிந்து விட்டது. பணியிடை நீக்கத்தில் இருந்தபடி, அவர் தன்னுடைய பிரச்சினையை காவல்துறை தலைவருக்கு (IG) கொண்டு செல்ல முற்பட்டார். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள், அவரது காரை மறித்து, தன் பிரச்சினையை விவரித்தார். “எனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி எல்லாவற்றையும் சொல்லி, நான் அவருக்கு கோரிக்கை வைத்தேன். பிறகு அவர் மீண்டும் என்னை பணியலமர்த்த உத்தரவிட்டார்,” என நினைவுகூருகிறார் தாமினி. ஆகஸ்ட் 2020-ல் மீண்டும் அவர் பணியில் இணைந்தார்.

இன்று, அவர் மராத்வடாவின் தூரப் பகுதியில் வாழ்கிறார். சில விவசாய நிலங்களை தாண்டி அவரின் வீடு ஒன்று மட்டும்தான் அப்பகுதியில் தட்டுப்படுகிறது. மிகவும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.

PHOTO • Jyoti Shinoli

தாமினி ஓர் அரசதிகாரியாக விரும்பியவர். வேலையின்மை இல்லாத பகுதியில் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை விரும்பினார் அவர்

“இங்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன். சில விவசாயிகளைத் தவிர வேறு யாரும் இங்கு வர மாட்டார்கள்.” அவரின் குரலில் நிம்மதி தெரிகிறது. இரண்டாம் மணத்தின் மூலம் கிடைத்த ஆறு மாத மகளை தொட்டிலில் ஆட்டியபடி பேசுகிறார். “எல்லா நேரமும் நான் பதற்றமாக இருந்திருக்கிறேன். இவள் பிறந்த பிறகு நிம்மதி கிடைத்தது.” அவரின் கணவர் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். தந்தையுடனான அவரின் உறவு, குழந்தை பிறந்த பிறகு சரியாகி விட்டது.

வல்லுறவு செய்யப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டும் காவல்நிலையத்தில் அவர் பணிபுரியவில்லை. அதே மாவட்டத்தின் இன்னொரு காவல் நிலையத்தில் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். இரண்டு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் அவருக்கு வல்லுறவு நேர்ந்த விஷயம் தெரியும். பணியிடத்தில் உள்ள எவருக்கும் அவர் வசிக்கும் இடம் தெரியாது. அப்போதும் கூட அவரால் பாதுகாப்பாக உணர முடியவில்லை.

“நான் வெளியில் சீருடை இல்லாமல் இருந்தால் என் முகத்தை துணியால் மூடிக் கொள்வேன். தனியாக எங்கும் செல்வதில்லை. முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் என் வீட்டை கண்டுபிடித்து விடக் கூடாது,” என்கிறார் தாமினி.

இது கற்பனையான அச்சத்தால் ஏற்படவில்லை.

புது பணியிடத்துக்கும் தான் வேலை பார்க்கும் செக்போஸ்டுக்கும் அடிக்கடி கராம்சாரி வந்து தன்னை தாக்குவதாக குற்றஞ்சாட்டுகிறார் தாமினி. “ஒருமுறை, மாவட்ட நீதிமன்றத்தில் என் வழக்கு வந்தபோது பேருந்து நிலையத்தில் வைத்து என்னை தாக்கினான்.” ஒரு தாயாக மகளின் பாதுகாப்புக்கு கவலைப்படுகிறார். “அவளுக்கு ஏதேனும் அவர்கள் செய்தால் என்ன செய்வது?” எனக் கேட்கும் அவர் குழந்தையை இறுக்கப் பிடித்துக் கொள்கிறார்.

கட்டுரையாளர் தாமினியை மே 2024-ல் சந்தித்தார். மராத்வடாவின் கொளுத்தும் வெயில், நீதிக்கென நடந்திருக்கும் ஏழு வருடப் போராட்டம், உண்மையைப் பேசியதற்காக தாக்கப்படுவோம் என்கிற அச்சம் ஆகியவற்றை தாண்டி அவர் உறுதியுடன் இருக்கிறார். வலிமையுடன் இருக்கிறார். “குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அனைவரும் சிறை செல்ல வேண்டும். நான் சண்டையிட தயாராக இருக்கிறேன்.”

இந்தியாவில் பாலியல் மற்றும் பாலின ரீதியிலான வன்முறைக்கு (SGBV) ஆளாகி மீண்டவர் ஆதரவு பெற சமூகத்திலும் நிறுவனங்களிலும் அமைப்பிலும் எத்தகைய தடைகள் இருக்கின்றன என்பதை பற்றிய நாடு முழுவதிலுமான செய்தி சேகரிக்கும் பணியில் ஒரு பகுதிதான் இக்கட்டுரை. இது இந்தியாவின் எல்லை கடந்த மருத்துவர்கள் அமைப்பின் முன்னெடுப்பு ஆகும்

இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கதை மாந்தரின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டிருக்கிறது

தமிழில்: ராஜசங்கீதன்

ஜோதி ஷினோலி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Other stories by Jyoti Shinoli
Editor : Pallavi Prasad

பல்லவி பிரசாத் மும்பையை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். யங் இந்தியாவின் மானியப் பணியாளர். லேடி ஸ்ரீராம் கல்லூரியின் ஆங்கில இலக்கிய பட்டதாரி. பாலினம், பண்பாடு மற்றும் மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்.

Other stories by Pallavi Prasad
Series Editor : Anubha Bhonsle

அனுபா போன்ஸ்லே, 2015 ல் பாரியின் நல்கையை பெற்றவர். சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் ICFJ Knight நல்கையை பெற்றவர். இவருடைய Mother, where's my country? என்கிற புத்தகம் மணிப்பூரின் சிக்கலான வரலாறு, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் , அதன் தாக்கம் போன்றவற்றை பேசும் புத்தகம்.

Other stories by Anubha Bhonsle
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan