ஷஷி ருபேஜாவுக்கு உறுதியாக தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு தெரிந்து விட்டது. அவர் பூத்தையல் போடுவதை பார்த்துக் கொண்டிருந்த கணவரை அவர் கவனித்து விட்டார். “ஃபுல்காரி வேலை செய்வதை பார்த்து நான் கடினமாக வேலை பார்ப்பதாக அவர் நினைத்திருக்க வேண்டும்,” என்கிறார் ஷஷி சந்தோஷமான நினைவை குறிப்பிட்டபடி. அவர் கைகளில் பாதி முடிந்த ஃபுல்காரி இருந்தது.

பஞ்சாபின் குளிர்கால நாள் அது. தோழி பீம்லாவுடன் ஷஷி இளம் வெயிலில் அமர்ந்திருக்கிறார். தங்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றி பேசிக் கொண்டிருக்க, அவர்களது கைகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் கவனம், துணியில் வண்ண நூல்களைக் கொண்டு ஃபுல்காரி வடிவங்களை தைத்துக் கொண்டிருந்த ஊசிகளில் இருந்து சிதறவில்லை.

“ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவர் ஃபுல்காரி துணி தைப்பவராக இருந்த காலம் ஒன்று இருந்தது,” என்கிறார் 56 வயது நிறைந்த அவர். பாடியாலா நகரத்தில் வசிக்கும் அவர், சிவப்பு துப்பட்டாவில் போட்டுக் கொண்டிருக்கும் பூத்தையலில் இன்னொரு தையலை கவனமாக தைக்கிறார்.

ஃபுல்காரி என்பது துப்பட்டா, சல்வார் கமீஸ் மற்றும் புடவை போன்ற துணிகளில் பூக்கள் தைக்கப்படும் பூத்தையல் பாணி ஆகும். மரக் கட்டைகளை துணியில் வைத்து முதலில் வடிவங்கள், குறிக்கப்படும். அந்த அடையாளங்களை சுற்றி கலைஞர்கள் பின்னர், பாடியாலா நகரிலிருந்து பெறப்பட்ட வண்ணப் பட்டு மற்றும் பருத்தி நூல்கள் கொண்டு பூத்தையல் போடுவார்கள்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

ஷஷி ருபேஜா (கண்ணாடி) தோழி பீம்லாவுடன் ஃபுல்காரி துணி வேலைப்பாடு செய்கிறார்

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

வண்ண நூல்களை கொண்டு பூ வடிவங்களை போடும் பூத்தையல் கலைதான் ஃபுல்காரி ஆகும். வடிவங்கள் முதலில் மரக்கட்டைகள் கொண்டு துணியில் குறிக்கப்படும் (வலது)

“எங்களின் ஊர் திரிபுரி ஃபுல்காரிக்கு எப்போதுமே பிரபலம்,” என்கிறார் நாற்பது வருடங்களுக்கு முன் மணம் முடித்ததும் பக்கத்து மாநிலம் ஹரியானாவிலிருந்து பஞ்சாபின் பாடியாலா மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து வந்த அவர். “திரிபுரி பெண்கள் தைப்பதை பார்த்துதான் நான் இந்தத் திறனை கைப்பெற்றேன்.” இந்தப் பகுதியில் மணம் முடித்துக் கொடுத்தப்பட்டிருந்த சகோதரியின் வீட்டுக்கு வரும்போது அவர் தைப்பதை பார்த்துதான் ஃபுல்காரி கலையில் ஆர்வம் கொண்டார் ஷஷி. அவருக்கு அப்போது 18 வயது. ஒரு வருடத்துக்கு பிறகு உள்ளூர்க்காரர் வினோத் குமாரை மணந்து கொண்டார்.

இக்கலைக்காக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 2010ம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றன. வீட்டிலிருந்து வேலை பார்க்க விரும்பும் இப்பகுதியின் பெண்கள் இந்த வேலை செய்வது வழக்கம். 20-50 கலைஞர்கள் கொண்டு கூட்டுறவு குழுக்களை அமைத்துக் கொண்டு, கொடுக்கப்படும் பூத்தையல் வேலையை தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள்.

“இப்போதெல்லாம் கொஞ்ச பேர்தான் ஃபுல்காரி தையலை கையில் போடுகிறார்கள்,” என்கிறார் ஷஷி. இயந்திரம் செய்யும் பூத்தையல் மலிவாக இருப்பதால் அதற்கு டிமாண்ட் அதிகமாகி விட்டது. அப்போதும் கூட சந்தைகளில் இக்கலைப் பொருட்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. திரிபுரியின் பிரதான சந்தையில் ஃபுல்காரி துணி விற்கும் கடைகள் ஏராளம்.

23ம் வயதில்  இக்கலையின் முதல் வருமானத்தை பெற்றார் ஷஷி. 10 செட் சல்வார் கமீஸை வாங்கி பூத்தையல் போட்டு அவர் உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் அவற்றை விற்று மொத்தம் ரூ.1000 வருமானம் ஈட்டினார். இக்கட்டான சூழல்களில் ஃபுல்காரி பூத்தையல்கள் அவருக்கு உதவியிருக்கிறது. “குழந்தைகளுக்கான கல்வி செலவை தாண்டி பல செலவுகள் இருக்கின்றன,” என்கிறார் அவர்.

காணொளி: சன்னான் டி ஃபுல்காரி

ஷஷியின் கணவர் தையற்காரராக இருந்தவர். நிறைய நஷ்டங்கள் அவருக்கு ஏற்பட்டபோதுதான், ஷஷி வேலை பார்க்கத் தொடங்கினார். கணவரின் உடல் நலிந்து, குறைவாக மட்டுமே வேலை செய்ய நேர்ந்தபோது, ஷஷி பொறுப்பெடுத்துக் கொண்டார். “ஆன்மிக பயணம் சென்றுவிட்டு என் கணவர் வீட்டுக்கு திரும்பிய போது, தையற்கடை வடிவமைப்பை நான் மாற்றி வைத்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார்,” என்கிறார் ஷஷி, தையல் இயந்திரங்களை இடம் மாற்றியது மற்றும் நூல் மற்றும் வடிவக்குறிப்பு கட்டைகள் சேர்த்தை நினைவுகூர்ந்து. அவை அனைத்தையும் அவர் தன் சேமிப்பான ரூ.5,000 கொண்டு செய்து முடித்தார்.

துணிச்சலான பூத்தையற்காரரான அவர், பாடியாலா நகரத்தின் பரபரப்பான லஹோரி கேட் போன்ற பகுதிகளுக்கு சென்று ஃபுல்காரி பூத்தையல் பொருட்களை விற்றதை நினைவுகூருகிறார். 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்பாலா மாவட்டத்தில் வீடு வீடாக விற்பதற்கென அவர் ரயிலில் கூட பயணித்தார். “என் கணவருடன் சேர்ந்து ஃபுல்காரி துணி கண்காட்சிகளை நான் ஜோத்பூர், ஜெய்சால்மெர் மற்றும் கர்னால் பகுதிகளில் நடத்தினேன்,” என்கிறார் அவர். தொடர் பணிகள் கொடுத்த அலுப்பால், அவர் விற்பனையிலிருந்து விலகி, பூத்தையல் போடும் வேலையை பொழுதுபோக்காக தற்போது செய்து கொண்டிருக்கிறார். அவரது மகனான 35 வயது தீபான்ஷு ருபேஜா, ஃபுல்காரி துணிகளை விற்கும் பணியை செய்கிறார். பாடியாலாவின் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

“இயந்திர பூத்தையல் துணிகள் அறிமுகமானாலும் கையால் தைத்து உருவாக்கப்படும் ஃபுல்காரி துணிகளுக்கான டிமாண்ட் குறையவில்லை,” என்கிறார் தீபான்ஷு. செழுமையைத் தாண்டி இந்த இரு பாணிகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் விலையிலும் இருக்கிறது. கையால் தைக்கப்பட்ட ஃபுல்காரி துப்பட்டா ரூ.2000-க்கு விற்கப்படுகிறது. இயந்திரம் தயாரித்த துணி ரூ.500-800 வரை விற்கப்படுகிறது.

“தைக்கப்படும் பூக்கள் எண்ணிக்கை மற்றும் வேலைப்பாடு வைத்து எங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது,” என விளக்குகிறார் தீபான்ஷு. கலைஞர்களின் திறன் சார்ந்தும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பூவின் விலை ரூ.3 முதல் ரூ.16 வரை இருக்கும்.

தீபான்ஷூவுடன் பணிபுரியும் கலைஞர்களில் 55 வயது பல்விந்தர் கவுரும் ஒருவர். பாடியாலாவிலுள்ள மியால் கிராமத்தை சேர்ந்த பல்விந்தர், 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிபுரியின் கடைக்கு மாதந்தோறும் 304 முறை சென்று வருவார். அங்கு அவர் நூல்களையும் ஃபுல்காரி வடிவங்கள் கொண்ட துணிகளையும் பூத்தையல் போட வாங்குவார்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

ஷஷி ருபேஜா தன் கணவருடன் ஜோத்பூர், ஜெய்சால்மர் மற்றும் கர்னால் ஆகிய பகுதிகளில் ஃபுல்காரி துணி கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். அவரின் மகன் தீபான்ஷு (இடது) தற்போது வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார்

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

அனுபவம் வாய்ந்த ஃபுல்காரி கலைஞரான பல்விந்தர் கவுர், ஒரு சல்வார் கமீஸில் நூறு பூக்களை இரண்டு நாட்களில் தைத்து விடுவார்

அனுபவம் வாய்ந்த பூத்தையல் கலைஞரான பல்விந்தர், 100 பூக்களை ஒரு சல்வார் கமீசில் இரண்டு நாட்களில் தைத்து விடுவார். “யாரும் எனக்கு முறையாக ஃபுல்காரி தையலை கற்றுத் தரவில்லை,” என்னும் பல்விந்தர், 19 வயதிலிருந்து இப்பணி செய்து வருகிறார். “என் குடும்பத்துக்கு சொந்தமாக நிலம் இல்லை. அரசாங்க வேலையும் எங்களில் எவருக்கும் இல்லை,” என்கிறார் மூன்று குழந்தைகள் இருக்கும் பல்விந்தர். தினக்கூலியாக இருந்த அவரின் கணவர், அவர் வேலை பார்க்கத் தொடங்கியபோது வேலையின்றி இருந்தார்.

”உன் விதி என்னவோ அது நடக்கும். இப்போது எந்த வேலையாவது பார்த்து எங்களின் உணவைப் பார்த்துக் கொள்,” என தாய் சொன்னதை நினைவுகூருகிறார் பல்விந்தர். அவருடன் வேலை பார்த்த சிலர், திரிபுரியின் துணி வியாபாரிகளிடமிருந்து ஃபுல்காரி பூத்தையலுக்கான ஆர்டர்களை பெருமளவுக்கு எடுப்பார்கள். “எனக்கு பணம் தேவை என சொல்லி, துப்பட்டா ஒன்று தைக்கக் கிடைக்குமா எனக் கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள்.”

ஃபுல்காரி வேலைக்கான துணிகளை முதன்முதலாக பல்விந்த பெற்றபோது விற்பனையாளர்கள் அவரிடமிருந்து வைப்புத் தொகை பாதுகாப்பு கருதி கேட்டனர். 500 ரூபாய் அவர் கொடுக்க வேண்டும். “விற்பனையாளர்களுக்கு என் திறமை மீது நம்பிக்கை பிறந்தது,” என்னும் பல்விந்தர், திரிபுரியில் இருக்கும் ஃபுல்காரி வியாபாரிகள் அனைவருக்கும் தன்னை தற்போது தெரியும் என்கிறார். “இந்த வேலைக்கு பஞ்சம் இல்லை,” என்கிறார் அவர். மாதந்தோறும் 100 துணிகள் வேலை பார்க்க கிடைப்பதாக சொல்கிறார். அவர் வேலைகளை பிரித்துக் கொடுக்கும் வண்ணம் ஒரு ஃபுல்காரி கூட்டுறவு குழுவை கூட உருவாக்கினார். “யாரையும் சார்ந்திருக்க நான் விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

35 வருடங்களுக்கு முன் வேலை பார்க்கத் தொடங்கியபோது, துப்பாட்டாவில் பூத்தையல் போட பல்விந்தருக்கு ரூ.60 கிடைத்தது. இப்போது அவர் நுட்பமான வேலைக்கு ரூ.2,500 பெறுகிறார். கையால் பல்விந்தர் பூத்தையல் செய்த சில துணிகள், வெளிநாட்டு வாழ் மக்களுக்கான பரிசுகளாக கொண்டு செல்லப்படுகிறது. “என் வேலை அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளுக்கு பயணிக்கிறது. நான் செல்ல முடியாத வெளிநாடுகளுக்கு அவை செல்வது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது,” என்கிறார் அவர் பெருமையாக.

இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Other stories by Sanskriti Talwar
Naveen Macro

நவீன் மேக்ரோ தில்லியை சேர்ந்த சுயாதீன புகைப்பட பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Other stories by Naveen Macro
Editor : Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Other stories by Dipanjali Singh
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan