“எங்களின் கஷ்டத்தை ஏன் அரசாங்கம் கண்டு கொள்ள மறுக்கிறது?” எனக் கேட்கிறார் அங்கன்வாடி பணியாளர் மங்கள் கார்பே.
“நாடு வலிமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க நாங்கள் நிறைய பங்களிக்கிறோம்,” என்கிறார், தன்னை போன்ற அங்கன்வாடி பணியாளர்கள் தாய்சேய் நலனுக்கான அரசு திட்டங்கள் இயங்க எப்படி காரணமாக இருக்கிறார்கள் என விவவரித்து.
முப்பத்து ஒன்பது வயது மங்கள், மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்ட ரகாதா தாலுகாவிலுள்ள தோர்ஹலே கிராமத்தில் அங்கன்வாடி நடத்தி வருகிறார். அவரைப் போலவே மாநிலம் முழுக்க இரண்டு லட்சம் பெண்கள் அங்கன்வாடி பணியாளர்களாகவும் உதவியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்துக்கு கீழ் வரும் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் முதல் கட்ட முன்னெடுப்புகள் ஆகியவற்றை அவர்கள் அமல்படுத்துகிறார்கள்.
அவர்களை நோக்கி அரசு காட்டும் அலட்சியத்தை எதிர்த்து, மகாராஷ்டிரா முழுக்க நூற்றுக்கணக்கானோர் பங்கெடுக்கும் காலவரையற்ற போராட்டம் டிசம்பர் 5, 2023-லிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
”முன்பும் கூட பலமுறை நாங்கள் போராடியிருக்கிறோம்,” என்கிறார் மங்கள். “அரசாங்க பணியாளர்களாக நாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். மாத ஊதியமாக 26,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் மற்றும் பயணத்துக்கும் எரிபொருளுக்குமான பணமும் வழங்கப்பட வேண்டும்,” என போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளை அவர் பட்டியலிடுகிறார்.
போராட்டம் தொடங்கிய மூன்றாம் நாள், இக்கட்டுரை பிரசுரமாகும் வரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், டிசம்பர் 8, 2023 அன்று ஷிர்டி டவுனில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணி சென்றனர்.
“மதிப்புக்குரிய வாழ்க்கை வேண்டுமென நாங்கள் கோருவதில் ஏதும் தவறு இருக்கிறதா?” எனக் கேட்கிறார் 58 வயது அங்கன்வாடி பணியாளரான மண்டா ருகாரே. 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் கவலையோடு சொல்கிறார்: “சில வருடங்களில் நான் ஓய்வு பெற்று விடுவேன். யார் என்னை பார்த்துக் கொள்வார்?” கடந்த 20 வருடங்களாக, அகமது நகர் மாவட்டத்தின் ருய் கிராமத்திலுள்ள அங்கன்வாடியில் மண்டா பணியாற்றி வருகிறார். “சமூக பாதுகாப்பாக எனக்கு என்ன கிடைக்கும்?” என அவர் கேட்கிறார்.
அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.10,000 பெறுகிறார்கள். உதவியாளர்கள் ரூ.5,500 பெறுகிறார்கள். “நான் வேலை பார்க்கத் தொடங்கியபோது 1,400 ரூபாய் கொடுத்தார்கள். இத்தனை வருடங்களில் 8,600 ரூபாய்தான் 2005ம் ஆண்டிலிருந்து உயர்ந்திருக்கிறது,” என மங்கள் சுட்டிக் காட்டுகிறார்.
50 குழந்தைகளை மங்கள் கவ்ஹனே வஸ்தி அங்கன்வாடியில் பார்த்துக் கொள்கிறார். 20 குழந்தைகள் 3லிருந்து 6 வயதுக்குள் இருக்கின்றன. ”ஒவ்வொரு நாளும் மையத்துக்கு குழந்தைகள் வருவதை நான் உறுதி செய்ய வேண்டும்.” எனவே அவர் ஒரு ஸ்கூட்டரில் அவர்களை அழைத்து வருவார்.
அது மட்டுமில்லை. “காலை உணவு, மதிய உணவு ஆகியவற்றை தயார் செய்து அவர்கள் - குறிப்பாக சத்துகுறைபாடான குழந்தைகள் - சரியாக சாப்பிட வைக்கிறேன்.” அவருடைய நாள் அதோடு முடியவில்லை. ஒவ்வொரு குழந்தையின் தரவுகளையும் பராமரிக்க வேண்டும். POSHAN செல்பேசி செயலியில் தரவிட வேண்டும். நேரம் பிடிக்கும் கடினமான வேலை அது.
“டைரி மற்றும் இதர பொருட்களுக்கான செலவுக்கும் POSHAN செயலிக்கான செல்பேசி ரீசார்ஜ் காசுக்கும், வீடுகளுக்கு செல்வதற்கான் எரிபொருள் செலவுக்கும் எங்களின் பணம்தான் போகிறது,” என்கிறார் மங்கள். “பெரிதாக ஏதும் மிஞ்சுவதில்லை.”
பட்டதாரியான அவர் இந்த வேலையை கடந்த 18 வருடங்களாக செய்து வருகிறார். 20 வயது சாய் மற்றும் 18 வயது வைஷ்ணவி ஆகிய இரு பதின்வயது பிள்ளைகளுக்கு தனி பெற்றோராக இருக்கிறார். சாய் பொறியியல் கல்லூரி படிக்கிறார். வைஷ்ணவி நீட் தேர்வுகளுக்காக படிக்கிறார். “என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன். எங்களின் வருடாந்திர செலவுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் ஆகும். 10,000 ரூபாய் கொண்டு சமாளிக்க முடிவதில்லை,” என்கிறார் அவர்.
எனவே பிற வழிகளில் வருமானம் தேட ஆரம்பித்தார் மங்கள். “வீடு வீடாக சென்று உடை, கைச்சட்டை ஏதும் தைக்க வேண்டுமா என கேட்பேன். சிறு வீடியோக்கள் எடிட் செய்து கொடுப்பேன். ஆங்கிலப் படிவங்கள் நிரப்ப உதவுவேன். சின்ன சின்ன வேலைகள் செய்வேன். வேறு என்ன செய்ய முடியும்?” என பிற வேலைகள் பார்க்கும் காரணத்தை விளக்குகிறார் அவர்.
அங்கன்வாடி பணியாளர்களின் சிரமங்கள், ASHA பணியாளர்கள் என அழைக்கப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்களின் சிரமங்களை போன்றதுதான். (வாசிக்க: மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் பாதிப்பு காலங்களில் கிராமங்கள் மீதான அக்கறை ) இரண்டுமே முக்கியமான சுகாதார சேவைகளை தரும் பணிகள். குழந்தைப் பிறப்பு, தடுப்பு மருந்து, சத்துணவு முதலியவற்றுக்கான தரவுகளை அளிப்பது தொடங்கி காசநோய் போன்ற நோய்களை கையாளுதல், கோவிட் 19 தொற்றுப் பரவல் தடுப்பு பணிகள் வரை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
ஏப்ரல் 2022-ல் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு, அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பணியை அங்கீகரித்து சத்துணவு குறைபாட்டுக்கு எதிரான ‘முக்கியத்துவம்’ வாய்ந்த ‘குறிப்பிடத்தகுந்த’ பணி எனக் குறிப்பிட்டது. தகுதி வாய்ந்த அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் 10 சதவிகித வட்டியுடன் கூடிய கருணைத் தொகை வழங்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
குரலற்ற அப்பணியாளர்கள் சேவை தருவதற்கான நல்ல சூழலை ஒன்றிய அரசும் மாநில அரசும் தர வேண்டுமென நீதிபதி அஜய் ரஸ்தோகி தன்னுடைய பார்வையாக பதிவு செய்திருந்தார்.
இது நடைமுறைப்படுத்தப்பட மங்கள், மண்டா மற்றும் லட்சக்கணக்கான அங்கன்வாடி தொழிலாளர்களும் உதவியாளர்களும் காத்திருக்கின்றனர்.
“இம்முறை அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வேண்டும். அது கிடைக்காமல் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எங்களின் சுயமரியாதைக்கான பிரச்சினை இது. எங்களின் தனித்துவத்துக்கான போராட்டம் இது,” என்கிறார் மங்கள்.
தமிழில் : ராஜசங்கீதன்