"எங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்று கூறி எங்களுக்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டனர்", என்று ஜுன்வானி கிராமத்தைச் சேர்ந்த ப்ரீதம் குஞ்சம் கூறுகிறார். "நிலத்தை எடுத்துக் கொண்ட பிறகு, அதிகாரிகள் எங்களுக்கு ஒரு சிறிய பகுதியை மட்டும் குத்தகைக்கு கொடுத்து, எங்களுக்கு சொந்தமானது என்று நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். எங்களில் சிலர் எங்கள் வீடுகள், வயல்கள் மற்றும் முற்றங்களை இழந்துள்ளோம். ஆனால் உண்மையில் இழந்தது புல்வெளிகள், காடுகள், பொது நிலங்கள், கல்லறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள். எங்கள் நிலத்தைத் திரும்பப் பெற அரசு அலுவலகங்களுக்கு பல மாதங்களாக சென்று கொண்டிருக்கிறோம். ”

ராய்ப்பூரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஜுன்வானி மக்கள், தங்கள் நிலத்தைத் திரும்பப் பெற 2015-ம் ஆண்டு டிசம்பரில் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் சட்டம் அல்லது வன உரிமைகள் சட்டத்தின் (FRA) கீழ் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். 2006-ம் ஆண்டு டிசம்பரில் இயற்றப்பட்ட இந்த சட்டம் 2008 ஜனவரி 1, முதல் நடைமுறைக்கு வந்தது. வன உரிமைகள் சட்டம் இந்தியா முழுவதும் உள்ள பழங்குடிகளுக்கு பாரம்பரிய வன உரிமைகளை மீட்டெடுக்க வழிவகுக்கிறது.  2005-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி பழங்குடிகள் விவசாயம் செய்து வந்த நிலங்களுக்கு சிறு வன விளைபொருட்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவதற்கான சமூக உரிமைகளையும், தனிப்பட்ட உரிமைகளையும் இது வழங்குகிறது.

வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலங்களை குத்தகைக்கு விடுவதில் சத்தீஸ்கர் அரசு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதாகக் கூறினாலும், 2015 நவம்பர் 15 அன்று ராய்ப்பூரில் நடைபெற்ற வன உரிமைகள் குறித்த பயிலரங்கில் வழங்கப்பட்ட தரவுகள் வேறுபட்ட உண்மையை சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளில் பழங்குடிகளின் தனிப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அல்லது வன உரிமைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட சுமார் 512,000 கோரிக்கைகளை மாநில அரசு நிராகரித்துள்ளது. வயது வந்தவருக்கு 2.5 ஏக்கர் என்ற சட்டத்திற்கு மாறாக, சத்தீஸ்கர் அரசு ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 2 ஏக்கர் வனப்பகுதியை மட்டுமே அங்கீகரித்துள்ளது.

சத்தீஸ்கரில் 44 சதவீத நிலங்கள் காடுகளாக இருக்கும்போது, அவற்றுக்கு உரிமையுள்ளவர்களுக்கு இந்த உரிமைகளை வழங்காதது இன்னும் கவனத்தைப் பெறுகிறது. பயிற்சி பட்டறை ஒன்றுக்கு அளித்த தரவுகளில், திரிபுரா மற்றும் கேரளா ஆகியவை இதேபோன்ற தனிப்பட்ட கோரிக்கைகளில் 34 சதவீதத்தை மட்டுமே நிராகரித்துள்ளன என்பதை சுட்டிக் காட்டுகின்றன.

ஜுன்வானில் ஊராட்சி வாக்காளர் பட்டியலின்படி 265 வாக்காளர்கள் உள்ளனர் - 662 ஏக்கர் அவர்களுக்கு தனிப்பட்ட உரிமையாக வழங்கப்பட வேண்டும். ஆனால் உள்ளூர் ஆர்வலர் பெனிபுரி கோஸ்வாமி கூறுகையில், "பல தசாப்தங்கள் பழைய ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 180 ஏக்கர் மட்டுமே தனிப்பட்ட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று கூறுகிறார். சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை பிரச்சனைகள் குறித்த புவனேஸ்வரை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் கொள்கைக் குழுவான வசுந்தராவின் நிர்வாகக் குழுவின் தலைவர் மது சரின் கூறுகையில், "எங்கள் சட்டம், வயது வந்தவருக்கு 2.5 ஏக்கர் நிலத்தை அனுமதிக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கு மாற்றாக ஒரு சிறிய பகுதியைக் கொடுத்துள்ளனர். அதுவும் தந்தையின் பெயரில் மட்டுமே." ஜுன்வானில் பெண்களுக்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை என்று குஞ்சம் கூறுகிறார். “ஒரு பெண்ணின் பெயர் கூட பதிவு செய்யப்படவில்லை.” மேலும், குத்தகைகளுடன் எந்த அடையாளமோ, வரைபடமோ வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

PHOTO • Shirish Khare

ஜுன்வானில் பெண்களுக்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை, அதே நேரத்தில் மற்ற கிராமவாசிகள் குறைந்த ஈட்டுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது

சத்தீஸ்கர் அரசு வழங்கும் சமூக குத்தகைகளின் எண்ணிக்கையையும் அறிவிக்கவில்லை (இவை தனிப்பட்ட உரிமை பட்டாக்களிலிருந்து வேறுபட்டவை). "சட்டத்தில் ஒரு பிரிவு இப்படி இருந்தாலும், அரசு சமூக குத்தகைக்கு நிலத்தை வழங்கவில்லை", என்று பெனிபுரி கூறுகிறார். ராய்ப்பூரில் உள்ள அதே பயிற்சி பட்டறையில் வழங்கப்பட்ட தரவுகளின்படி, குஜராத் ஒரு கிராமத்திற்கு சராசரியாக 280 ஏக்கர், கர்நாடகா சராசரியாக 260 ஏக்கர், மகாராஷ்டிராவின் 247 ஏக்கர், தெலங்கானாவின் 676 ஏக்கர் வனப்பகுதிகள் சமூக குத்தகையின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன என்கிறது.

கூடுதலாக, 2014 ஜனவரியில், 425 வன கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முடிவை சத்தீஸ்கர் அரசு அறிவித்தது. அவர்களை 'பிரதான நீரோட்டத்தில்' கொண்டு வரவும், 'வளர்ச்சிக்கு' உதவவும் இது செய்யப்பட்டது. ஆனால் இந்த செயல்முறையின் போது அங்கு வாழும் மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. வருவாய் மற்றும் வனத்துறை இரண்டும் ஒரே நிலத்தின் மீது உரிமை கோரும்போது, இரு துறைகளின் மோதலில் தங்கள் வன உரிமைகள் புதைக்கப்படலாம் என்று பழங்குடியினர் இரட்டிப்பு கவலைப்படுகிறார்கள். "ஆயிரம் ஏக்கர் நிலம் கிராமத்திற்கு சொந்தமானது," என்று குஞ்சம் கூறுகிறார், "அதை எந்த துறைக்கும் அல்லது தனியார் துறைக்கும் கொடுக்க முடியாது."

இருப்பினும், பட்டியல் இனத்தவர், பழங்குடியின துறை இயக்குநர் ராஜேஷ் சுகுமார் டோப்போ, "தனிநபர் குத்தகைக்கு வரும்போது சத்தீஸ்கர் இதில் முன்னணியில் உள்ளது. ஆனால் இப்போது சமூக குத்தகைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2015-ம் ஆண்டு நவம்பர் 20, அன்று, சமூக குத்தகை செயல்முறைக்கு உதவுமாறு தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். "அத்தகைய நிலங்களும் பதிவேடுகளில் சேர்க்கப்படும்," என்று அவர் கூறுகிறார்.

மாநில வனத்துறை அமைச்சர் மகேஷ் கக்டா இக்கட்டுரை ஆசிரியருக்கு அளித்த பேட்டியில், "பழங்குடி அல்லாத மக்களை விட பழங்குடி சமூகம் [வன] நிலத்தை மிக எளிதாக குத்தகைக்கு பெறுகிறது. நிலம் கிராம மட்டத்தில் (கிராம சபையால் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில்) விநியோகிக்கப்படுகிறது. அரசினால் அல்ல. ஆனால் பல கோரிக்கைகள் ரத்து செய்யப்பட்டு, இந்த புகார்கள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் ராய்ப்பூரில் உள்ள ஆதிவாசி சம்தா மஞ்சின் இந்து நேதம் கூறுகையில், "அரசு வாக்கு வங்கி விளையாட்டை விளையாடுகிறது. 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளாக குத்தகை செயல்முறை கிட்டத்தட்ட ஸ்தம்பித்திருந்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எவ்வாறாயினும், 2013ம் ஆண்டின் தேர்தலின் போது, ஓராண்டிற்குள் 100,000 குத்தகை நடைமுறைகள் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது இந்த செயல்முறை மீண்டும் தேக்கமடைந்துள்ளது," என்றார்.

வன உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்காக தம்தாரி பழங்குடியினர், மாநில அரசின் கதவுகளைத் தட்டினாலும், சத்தீஸ்கரில் 186,000 ஏக்கர் வன நிலங்கள் 2005-2010-ம் ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டன என்று மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுரங்கத் துறையின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திசை திருப்பப்பட்ட நிலத்தில், 97 சதவீதம் சுரங்கம் தோண்டுவதற்கு குறிக்கப்பட்டுள்ளது.

1997 முதல் 2007 வரையிலான காலங்களில் மாநிலத்தில் 233,000 ஏக்கர் வனப்பகுதிகள் ஏற்கனவே சுரங்கத்திற்காக வழங்கப்பட்டதாக இந்திய வன கணக்கெடுப்பு பதிவு செய்கிறது. மத்திய மற்றும் மாநில சுரங்கத் துறைகளின் ஆண்டு அறிக்கைகள், 2014-ம் ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் ரூ.20,841 கோடி மதிப்புள்ள கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.

PHOTO • Shirish Khare

தம்தாரி பழங்குடிகள் தங்கள் வன உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கையில், வெறும் ஐந்து ஆண்டுகளில் சத்தீஸ்கரில் 150,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் சுரங்கத் தொழிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன

அரசின் முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன. இதற்கிடையில், ப்ரீதம் குஞ்சம் சொல்கிறார், "நிலத்தை இழந்துவிட்டு நாங்கள் எங்கு செல்வது?" என.

புகைப்படங்கள்: ஷிரிஷ் கரே, தீபக் குப்தா

இந்த கட்டுரை முதலில் 2015 டிசம்பர் 4 அன்று ராஜஸ்தான் பத்திரிகாவின் ராய்ப்பூர் பதிப்பில் வெளியிடப்பட்டது.

தமிழில்: சவிதா

Shirish Khare

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கரே, ராஜஸ்தான் பத்திரிகா எனும் பத்திரிகையில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

Other stories by Shirish Khare
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha