அலி முகமது லோனே ”ஒன்றிய பட்ஜெட் அதிகாரிகளுக்கானது” என நம்புகிறார். மத்திய தர வர்க்கத்தினருக்கும் அரசு அதிகாரிகளுக்குமானது என்கிற பொருளில் அவர் சொல்கிறார். காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தில் சிறு பேக்கரி கடை வைத்திருக்கும் அவரை போன்றோருக்கு பட்ஜெட் எதையும் செய்யவில்லை என்ற பொருளையும் அவரின் கூற்று கொண்டிருக்கிறது.
”2024ம் ஆண்டில் 50 கிலோ மாவை 1,400 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது அதன் விலை ரூ.2,200 ஆக இருக்கிறது,” என்கிறார் 52 வயதாகும் அவர் டேங்க்மார்க் ஒன்றியத்திலுள்ள மஹீன் கிராமத்தில். “விலைகளை குறைக்க உதவும் ஏதேனும் பட்ஜெட்டில் இருந்தால், எனக்கு ஆர்வம் எழலாம். இல்லையெனில், நான் சொன்னது போல, இந்த பட்ஜெட் அதிகாரிகளுக்கானதுதான்.”
ஸ்ரீநகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மஹீன் கிராமம், டேங்க்மார்க் மற்றும் ட்ராங் ஆகிய குளிர்கால சுற்றுலா தலங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது. 250 குடும்பங்கள் வசிக்கும் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குதிரை வாடகைக்கு விடுதல், சறுக்குப் பலகை இழுத்தல், வழிகாட்டும் பணிகள் போன்ற வேலைகள் செய்கின்றனர். குளிர் கால நிலையால், மஹீன் பிரதானமாக சோளம் தயாரிக்கிறார்.
![](/media/images/02a-DSC03371-MB-I_need_to_earn_12_lakhs_fi.max-1400x1120.jpg)
![](/media/images/02b-DSC03384-MB-I_need_to_earn_12_lakhs_fi.max-1400x1120.jpg)
இடது: அலி முகமது லோனே மஹீன் கிராமத்து பேக்கரி கடைக்குள் அமர்ந்திருக்கிறார். ஒன்றிய பட்ஜெட், அரசு அலுவலர்களுக்கும் மத்திய தர வர்க்கத்தினருக்குமானது என அவர் நினைக்கிறார். வலது: மஹீனின் காட்சி
![](/media/images/03a-DSC03378-MBI_need_to_earn_12_lakhs_fir.max-1400x1120.jpg)
![](/media/images/03b-DSC03389-MB-I_need_to_earn_12_lakhs_fi.max-1400x1120.jpg)
இடது: மஹீன் குளிர்கால சுற்றுலாதலங்களான டேங்க்மார்க் மற்றும் ட்ராங் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்திருக்கிறது. வலது: மஹீனை சேர்ந்த ATV ஓட்டுநர்கள் டேங்க்மார்கில் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றனர்
அலி முகமது மனைவி மற்றும் இரு மகன்கள் (இருவரும் மாணவர்கள்) ஆகியோருடன் வசித்து வருகிறார். அவரது பேக்கரியின் பிரட், கிராமத்தின் எல்லா வீட்டு உணவு மேஜைகளிலும் இடம்பெற்று விடுகிறது. அவரின் மூத்த மகனான யாசிர் பேக்கரி கடை வேலையில் உதவுகிறார். அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கடை பிற்பகல் 2 மணிக்கு மூடப்படுகிறது. அதற்குப் பிறகு, பக்கத்திலுள்ள மளிகைக் கடைக்கு சென்று உயரும் விலைவாசிகளை தாக்கு பிடிக்கவென வேலை பார்க்கிறார்.
“12 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசி கேள்விப்பட்டேன். கிசான் கடன் அட்டையில் கடன்கள் கிடைப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் முதலில் நான் 12 லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டும். என் வருட வருமானமே 4 லட்ச ரூபாய்க்குள்தான். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி ஏன் எவரும் பேசவில்லை எனத் தெரியவில்லை. வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறதா?” என அவர் கேட்கிறார் ஆர்வமாக.
தமிழில்: ராஜசங்கீதன்