சுஷிலாவின் குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் அவர்களின் சிறு வீட்டு வராண்டாவில், தன் சம்பளத்துடன் சுஷீலா வருவதை எதிர்பார்த்து அமர்ந்திருக்கின்றனர். இரண்டு வீட்டில் வேலை பார்த்து அவர் 5,000 ரூபாய் சம்பாதித்திருக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு 45 வயது சுஷீலா, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலுள்ள அமரா கிராமத்திலுள்ள அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.
”இரண்டு வீடுகளில் பாத்திரம் துலக்கியும் தரையை சுத்தப்படுத்தியும் அம்மா 5,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்,” என்கிறார் 24 வயது வினோத் குமார் பாரதி. “மாதந்தோறும் ஒன்றாம் தேதி அவருக்கு சம்பளம் வந்து விடும். இன்று ஒன்றாம் தேதி. அப்பா, ஒயரிங் வேலை செய்து ஒரு எலக்ட்ரீஷியனுக்கு உதவியாக இருக்கிறார். வாய்ப்பிருந்தால் அவருக்கு ஒரு நாள் வேலை கிடைக்கும். நிலையான வருமானம் எங்களுக்கு கிடையாது. நான் தொழிலாளராக வேலை பார்க்கிறேன். கூட்டாக மாதந்தோறும் நாங்கள் 10-12,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம். எனவே 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கான வரி விலக்கு எங்களுக்கு எப்படி பயன்படும்?”
”சில வருடங்களுக்கு முன் வரை நாங்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்தோம். இப்போது வேலை இல்லையென அவர்கள் சொல்கிறார்கள்.” சுஷிலா காட்டும் அட்டையில் 2021ம் ஆண்டு வரை பதிவு போடப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகுதான் எல்லாமும் டிஜிட்டல்மயமாகி விட்டது. இது பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி ஆகும்.
![](/media/images/02a-DSC01459-JM-For_whom_the_budget_bells_.max-1400x1120.jpg)
![](/media/images/02b-DSC01458-JM-For_whom_the_budget_bells_.max-1400x1120.jpg)
இடது: சுஷிலா தன் மகன் வினோத் குமார் பாரதியுடன். வலது: உத்தரப்பிரதேச அமரச்சக் கிராமத்தில் அவரது அண்டை வீட்டாராக பூஜா இருக்கிறார். ‘அரசாங்கத்தை சார்ந்து நான் இருந்தால், இரண்டு வேளை சாப்பாடு கூட கிடைக்காது,’ என்கிறார் பூஜா
![](/media/images/03-DSC01446-JM-For_whom_the_budget_bells_d.max-1400x1120.jpg)
நூறு நாள் வேலைத் திட்ட அட்டையுடன் சுஷிலா. 2021ம் ஆண்டுக்கு பிறகு அவர் அத்திட்டத்தில் வேலை இல்லை
சுஷிலாவின் கணவரான 50 வயது சத்ரு, கடந்த இரு வருடங்களில் 30 நாட்களுக்கு கூட நூறு நாள் வேலைத்திட்ட வேலை கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். “ஊர்த்தலைவரிடம் இன்னும் அதிக நாட்களுக்கு வேலை வேண்டுமென கேட்டபோது, ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று கேட்கும்படி எங்களுக்கு சொல்லப்பட்டது,” என்கிறார் அவர்.
சத்ருவின் இரு சகோதரர்களின் குடும்பங்களும் அமரசக் கிராமத்திலுள்ள சுஷிலா வீட்டில்தான் வசிக்கின்றன. மொத்தத்தில் 12 பேர் கூட்டுக்குடும்பமாக இங்கு வாழ்கின்றனர்.
“2023ம் ஆண்டில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்த 35 நாட்களுக்கு இன்னும் எனக்கு சம்பளம் வந்து சேரவில்லை,” என்கிறார் ஒரு சகோதரரின் விதவையான 42 வயது பூஜா. “என் கணவர் கடந்த மாதம் இறந்தார். எனக்கு இரு மகன்கள். வருமானத்துக்கு வழி இல்லை,” என்கிறார் அவர். “வீட்டு வேலை பார்க்க ஒரு காலனி இருந்ததால் நாங்கள் பிழைத்தோம்,” என்கிறார் அவர். “அரசாங்கத்தை நம்பினால், இரு வேளை சாப்பாடு கூட எங்களுக்குக் கிடைக்காது.”
தமிழில்: ராஜசங்கீதன்