ஒரு சட்டையை இஸ்திரி போட சரோஜினிக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகிறது. அது முண்டுவாக இருந்தால் இரண்டு நிமிடங்கள். சில நேரங்களில் மிகவும் கசங்கிய சட்டையை ஈரமான துணியின் சிறிய துண்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு காலுறையுடன் தேய்த்து அவர் மீண்டும் இஸ்திரியை தொடர்கிறார். துணியை ஈரமாக வைத்திருக்கவும், சுருக்கங்களை போக்கவும் இது ஒரு சாதுர்யமான கண்டுபிடிப்பு.
எண்பது வயதான சரோஜினி தனது 15 வயதிலிருந்து கேரளாவின் கொச்சின் கோட்டையில் சலவை (தோபி) வேலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதியான தோபி கானாவில் பணியாற்றி வருகிறார். "நான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, இதை [துணிகளை துவைப்பது மற்றும் இஸ்திரி போடுவது] செய்வேன்", என்று பொது சலவையகத்தில் இஸ்திரி போடுவதைத் தொடர்ந்தபடி அவர் கூறுகிறார்.
அதே இடத்தில் வேலை செய்யும் 60 வயதான குமரேசன் சொல்கிறார், "இங்கு கடின உழைப்பு மட்டுமே உதவும்," என. தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு, அவர் தனது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தொட்டிக்கு (சலவை தொட்டி) சைக்கிளில் செல்கிறார். அவசர டெலிவரி இருக்கும் நாட்களில், குமரேசனின் வேலை அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடக்கும். "நாளை டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதால் இன்று நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடியும். நாளை நான் வேகமாகச் செல்ல வேண்டியிருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
























