“சாதர் பாதனி பொம்மலாட்டம் எங்கள் முன்னோர்களோடு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. நான் இதை நிகழ்த்தும்போது, முன்னோர்கள் சூழ இருப்பதாகத் தோன்றுகிறது,” என்கிறார் தபன் முர்மூ.

இது நடந்தது 2023 ஜனவரியில். மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டம், கஞ்சன்பூரை ஒட்டிய சார்புகுர்தங்கா என்ற சிற்றூரில் ‘பந்தனா’ என்னும் அறுவடைத் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. 30 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் விவசாயி தபன் தன்னுடைய சந்தால் பழங்குடிச் சமூகத்தின் வளமான மரபுகள் குறித்து ஆழமான கருத்துகளைக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக, மனதை கொள்ளை கொள்ளும், ‘சாதர் பாதனி’ என்னும் பொம்மலாட்டம் குறித்த அவரது உணர்வுகள் மிக ஆழமானவை.

பாரி தளத்துக்காக பேசும்போது, தபன் கையில், குவிமாடம் போலத் தோன்றும் கூண்டு ஒன்று இருந்தது. அதில் பளிச்சென்ற சிவப்பு வண்ணத் துணி சுற்றியிருந்தது. அதற்குள் மரத்தில் செதுக்கிய மனித உருவங்கள் பல இருந்தன. இந்த பொம்மைகள் கயிறு, மூங்கில் குச்சி, நெம்புகோல் ஆகியவை சேர்ந்த சிக்கலான அமைப்பால் இயக்கப்படுகின்றன.

“என் கால்களைப் பாருங்க... நான் எப்படி இந்த பொம்மைகளை நடனமாட வைக்கிறேன்னு தெரியும்.” தன் தாய் மொழியான சந்தாலியில் ஒரு பாடலை முணுமுணுக்கத் தொடங்கியவுடன் இந்த விவசாயியின் மண் படிந்த கால்களில் ஒரு வேகம் வந்து சேர்கிறது.

Left: Chadar Badni is a traditional puppetry performance of the Santhal Adivasi community.
PHOTO • Smita Khator
Right: Tapan Murmu skillfully moves the puppets with his feet
PHOTO • Smita Khator

இடது: சாதர் பாதனி என்பது சந்தாலி பங்குடிகளின் மரபான பொம்மலாட்டக் கலை. வலது: தனது கால்களால் திறமையாக பொம்மைகளை இயக்கி அவற்றை நடனமாட வைக்கிறார் தபன் முர்மூ

Tapan Murmu, a Santhal Adivasi farmer from Sarpukurdanga hamlet, stands next to the red dome-shaped cage that has numerous small wooden puppets
PHOTO • Smita Khator

சார்புகுர்தங்கா என்ற சிற்றூரைச் சேர்ந்த சந்தால் பழங்குடி விவசாயி, தபன் முர்மூ, குவிமாடம் போன்ற சிவப்பு கூண்டுக்குப் பக்கத்தில் நிற்கிறார். அந்தக் கூண்டுக்குள் ஏராளமான மரப் பாவைகள் ( பொம்மைகள் ) உள்ளன

“சாதர் பாதனியில் நீங்கள் பார்ப்பது ஒரு கொண்டாட்ட நடனம். இந்த பொம்மலாட்டம் எங்கள் கொண்டாட்டங்களின் ஒரு அங்கம். ‘பந்தனா’ அறுவடைத் திருவிழா, திருமண விழாக்கள், துர்கா பூஜையின்போது நடக்கும் தசான் (சந்தால் பழங்குடிகள் கொண்டாடும் ஒரு விழா) ஆகியவற்றில் இந்த பொம்மலாட்டம் நிகழ்த்தப்படும்,” என்கிறார் தபன்.

பொம்மைகளைக் காட்டிச் சொல்கிறார், “நடுவில் இருக்கும் இவர்தான் ‘மோரோல்’ (ஊர்த் தலைவன்). இவர் கை தட்டுகிறார். பாணம் (ஒற்றை நரம்பு யாழ்), பாரம்பரியப் புல்லாங்குழல் ஆகியவற்றை வாசிக்கிறார்.  தாம்சா, மாதோல் (பறை, மத்தளம்) அடித்துக் கொண்டிருக்கும் ஆண்களைப் பார்த்தபடியே ஒரு புறம் பெண்கள் நடனமாடுகிறார்கள்.”

பீர்பூம் சந்தால் பழங்குடிகளின் மிகப்பெரிய பண்டிகை பந்தனா. இதை சோரை என்றும் அழைக்கிறார்கள். இந்த விழாவில் பல விதமான கலைகள் நிகழ்த்தப்படுகின்றன; பலவிதமான கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன.

இந்த பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் வழக்கமாக மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்டவை; 9 அங்குல உயரம் கொண்டவை. துணிப்பந்தல் போடப்பட்ட ஒரு சின்னஞ்சிறு மேடையில் இவை வைக்கப்படுகின்றன. சாதர் எனப்படும் மறைப்புத் துணி, மேடைக்குக் கீழே உள்ள கம்பி, நெம்புகோல், குச்சி ஆகியவற்றை மறைக்கின்றன. கம்பியை இழுத்து நெம்புகோலை இயக்குகிறார் பொம்மலாட்டக்காரர். இதன் மூலம் பொம்மையின் கை, கால்கள் இயங்குகின்றன.

சாதர் அல்லது சாதோர் என்று அழைக்கப்படும் மறைப்புத் துணி, பொம்மைகள் இருக்கும் மேடை அமைப்பைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது (பந்தன் என்றால் கட்டுவது). இதில் இருந்தே ‘சாதர் பாதனி’ என்ற பெயர் வந்தது என்கிறார்கள் சமுதாயப் பெரியவர்கள்.

தபன் நடத்தும் பொம்மலாட்டம் வழக்கமான ஒரு சந்தாலி நடனத்தை நிகழ்த்திக் காட்டுகிறது. இந்த பொம்மலாட்ட நடனத்துக்கு மாதிரியாகத் திகழும், உண்மையான, மனிதர்கள் ஆடும் நடன நிகழ்வு அன்று மாலையில் நடக்கிறது

காணொளி : சாதர் பாதனி பொம்மலாட்டத்துடன் பந்தனா திருவிழா கொண்டாட்டம்

இந்த பொம்மலாட்டத்தில் பாடப்படும் பாடல்கள் ஊரில் உள்ள வயோதிகர்கள் சிலருக்கு மட்டுமே தெரியும் என்கிறார்  தபன். பெண்கள் தங்கள் ஊரில் பாடுகிறார்கள். ஆண்கள் தங்கள் சாதர் பாதனி பொம்மைகளுடன் அருகிலுள்ள ஊர்களுக்குப் பயணிக்கிறார்கள். “நாங்கள் ஏழு அல்லது எட்டு பேராக இந்தப் பகுதியில் உள்ள பழங்குடி ஊர்களுக்கு தாம்சா, மாதோல் ஆகிய இசைக் கருவிகளோடு பயணிக்கிறோம். இந்த பொம்மலாட்டத்தை நிகழ்த்த பல கருவிகள் தேவை.”

ஜனவரி தொடக்கத்தில் ஆரம்பித்து, ஜனவரி நடுவில் பாவுஸ் சங்கராந்தி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் பந்தனா திருவிழாவின்போது அந்த சமூகத்தின் உணர்வை தனது சொற்களால் படம் பிடித்துக்காட்டுகிறார் அவர்.

“பந்தனா கொண்டாடும் காலம், வீடு முழுவதும் புதிதாக அறுவடை செய்த நெல் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சியான தருணம். கொண்டாட்டங்களோடு நடக்கும் பல சடங்குகள் உள்ளன. எல்லோரும் புதிய ஆடைகள் அணிவார்கள்,” என்கிறார் அவர்.

தங்கள் மூதாதையர்களின் குறியீடாகத் திகழும் கற்களுக்கும் மரங்களுக்கும் காணிக்கை செலுத்துகிறார்கள் சந்தால் பழங்குடிகள். “சிறப்பு உணவு சமைப்போம். புத்தரிசியில் தயாரிக்கும் பாரம்பரிய மதுவான ‘ஹன்ரியா’ காய்ச்சுவோம். சம்பிரதாயமாக வேட்டைக்குச் செல்வோம். வீடுகளை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம். உழவுக் கருவிகளை சீர் செய்து, கழுவுகிறோம். எங்கள் பசுக்களையும், காளைகளையும் தொழுவோம்.”

இந்தப் பண்டிகைக் காலத்தில் இந்தச் சமூகம் முழுவதும் ஒன்று கூடி, நல்ல அறுவடை தரவேண்டும் என்று காளைகளையும், பசுக்களையும் தொழுகிறது. “எங்களுக்கு ஆதாரமாக இருக்கும் எதுவும் இந்தப் பண்டிகைக் காலத்தில் எங்களுக்குப் புனிதம்தான். வழிபாட்டுக்கு உரியவைதான்,” என்கிறார் தபன். மாலையில் ஊருக்கு நடுவே உள்ள ‘மஜிர் தான்’ (முன்னோர் உறையும் புனிதத் தலம்) என்ற இடத்தில் மக்கள் கூடுகிறார்கள். “ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமியரும், குழந்தைகளும், முதியோரும் அந்தக் கூட்டத்தில் இருப்பார்கள்,” என்கிறார் அவர்.

Residents decorate their homes (left) during the Bandna festival in Sarpukurdanga.
PHOTO • Smita Khator
Members of the community dance and sing together (right)
PHOTO • Smita Khator

இடது : பந்தனா பண்டிகையின்போது தங்கள் வீடுகளை அலங்கரிக்கும் ஊர் மக்கள். வலது : தபனது ஊரான சார்புகுர்தங்காவில் திருவிழாக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பழங்குடி மக்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறார்கள்

Left: Earthen jars used to brew their traditional liquor, Hanriya.
PHOTO • Smita Khator
Right: Tapan in front of the sacred altar where all the deities are placed, found in the centre of the village
PHOTO • Smita Khator

இடது : ஹன்ரியா மது காய்ச்சப் பயன்படுத்தும் மண் குடுவைகள். வலது : ஊரின் நடுவில் இருக்கும் புனித பீடமான மஜிர் தான் முன்பாக நிற்கும் தபன். இந்த பீடத்தில்தான்  எல்லா தெய்வத் திருவுருக்களும் ( புனிதக் கற்கள் ) வைக்கப்படும்

தபன் நடத்தும் பொம்மலாட்டம் ஒரு வழக்கமான சந்தாலி நடனத்தை நிகழ்த்திக் காட்டுகிறது. இது, முதல் காட்சிதான். இந்த பொம்மலாட்ட நடனத்துக்கு முன்மாதிரியாகத் திகழும், மனிதர்கள் ஆடும் நிஜ நடனம் அதே நாளில், மாலையில் நடக்கிறது.

வண்ண வண்ண ஆடைகளும், பூக்களும் அணிந்த, நுட்பமாக செதுக்கிய தலைப் பகுதிகள் கொண்ட, மரப் பாவைகளுக்குப் பதில், இரண்டாவது காட்சியில், உயிருள்ள, சுவாசிக்கிற, ரத்தமும் சதையுமான மனிதர்கள் பாரம்பரிய சந்தாலி உடைகள் அணிந்து அசைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆண்கள் தங்கள் தலையில் பக்டிகளும், பெண்கள் தங்கள் கொண்டைகளில் புதிதாய் மலர்ந்த பூக்களும் அணிந்திருந்தார்கள். நடனமாடுவோர் தாம்சா, மாதோல் இசைக்கேற்ப அசைந்து ஆட, அந்த மாலை நேரத்தில் உற்சாகம் மின்சாரமாகப் பரவிக்கொண்டிருந்தது.

இந்த பொம்மைகள் குறித்து வழிவழியாக சொல்லப்பட்டு வரும் கதையை சமுதாயப் பெரியவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கதை இப்படிப் போகிறது: ஒரு முறை ஒரு நடன ஆசான், தம்மோடு ஆடுவதற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள நடனமாடுவோரை திரட்டும்படி ஊர்த் தலைவரை கேட்டுக்கொண்டார். ஆனால், சந்தால் குடியைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் மனைவியரையும், மகள்களையும் நடனமாட அனுப்ப மறுத்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் இசைக்கருவிகளை இசைக்க ஒப்புக்கொண்டார்கள். எனவே வேறு வழியில்லாத அந்த நடன ஆசான், அந்தப் பெண்களின் முகங்களை நினைவில் வைத்து அவர்களைப் போலவே தோன்றும், சாதர் பாதனி பொம்மைகளை செதுக்கிவிட்டார்.

“இந்தக் காலத்தில் எனது தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் வழக்கப்படி வாழ்வதற்குத் தெரியவில்லை. பொம்மலாட்டம் குறித்து அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை, நெல் விதைகளை, அலங்காரக் கலையை, கதைகளை, பாடல்களை, இன்னும் பலவற்றை அவர்கள் இழந்துவிட்டார்கள்,” என்கிறார் தபன்.

இன்னும் அதிகம் பேசி கொண்டாட்ட மன நிலையைக் கெடுக்க விரும்பாதவராக அவர் இப்படிக் கூறினார்: “இந்த மரபுகளைக் காக்கவேண்டும் என்பதுதான் விஷயம். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.”

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Smita Khator

ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.

Other stories by Smita Khator
Editor : Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Other stories by Vishaka George
Translator : A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.

Other stories by A.D.Balasubramaniyan