உடையும் கற்களோடு, நொறுங்கும் எலும்புகள்

பாரி தன்னார்வலர் சங்கேத் ஜெயின் இந்தியா முழுவதும் 300 கிராமங்களுக்கு பயணித்து இந்த கட்டுரையை தயாரித்துள்ளார்: இது ஒரு கிராமப்புற காட்சி அல்லது ஒரு நிகழ்வின் புகைப்படம் அல்லது அந்த புகைப்படத்தின் வரைபடம் எனலாம். பாரியில் வெளியாகும் தொகுப்பில் இது ஏழாவது கட்டுரை. புகைப்படம் அல்லது ஸ்கெட்ச்சை முழுமையாகக் காண ஸ்லைடரை நகர்த்தவும்

"எலும்பு முறிவு என்பது எங்கள் அன்றாட வேலையில் ஏற்படும் விளைவுகளில் ஒன்று," என்று சுத்தியலை எடுத்தபடி பீமாபாய் பவார் கூறுகிறார். புகைப்படத்தில் நீங்கள் காணும் சுருக்கம் விழுந்த கைகள்  பீமாபாயுடையது. இவர் கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிண்ட்கி (குக்கிராமம்) கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து கல் உடைக்கும் வேலை செய்யும் நிலமற்ற தலித் தொழிலாளி.

வயது 30களின் முற்பகுதியில் இருக்கும் பீமாபாய், 15 வயதில் இருந்து வேலை தேடி புலம்பெயர்ந்து வருகிறார். "மகாராஷ்டிராவின் கிராமங்களில் கற்களை உடைக்க நாங்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் [நவம்பர்-ஏப்ரல்] புலம்பெயர்கிறோம்," என்று அவர் கூறுகிறார். மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு அவர் சிண்ட்கி தாலுகாவில் உள்ள வயல்களில் வேலை தேடிச் செல்கிறார்.

ஒரு பித்தளை (சிவில் இன்ஜினியரிங் மொழி நடையில் 100 கன அடி) கற்களை நொறுக்குவதற்கு அவருக்கு ரூ. 300 கிடைக்கிறது. "2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இதே வேலைக்கு 30 ரூபாய் பெற்றேன். கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றால் ஒரு பித்தளையை உடைக்க எங்களுக்கு இரண்டு நாட்கள் தேவைப்படும்", என்று அவர் கூறுகிறார்.

முதுகெலும்பை உடைக்கும் கடின உழைப்பும், மோசமான வாழ்க்கை சூழல்களும் புலம்பெயர்ந்தோருக்கு வாழ்க்கையை இன்னும் கடினமாக்குகின்றன. ஒரு பாழடைந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் கூடாரத்தில் கணவருடன் அவர் வசித்து வருகிறார். அவர்கள் வேலை தேடி வண்டியில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள்.

பீமாபாயின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். இந்த புகைப்படம் கோலாப்பூர் மாவட்டத்தின் ராதானகிரி தாலுகாவில் உள்ள கம்பல்வாடி கிராமத்தில் எடுக்கப்பட்டது. அங்கு சிண்ட்கி (குக்கிராமம்) கிராமத்தைச் சேர்ந்த 10 பெண்கள் வேலை செய்கின்றனர். மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சதாரா, புனே மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வேலை செய்துள்ளதாக அப்பெண்கள் தெரிவித்தனர். இவர்களது கணவர்களும் கல் வேலை தான் செய்கிறார்கள். ஆண்கள் அருகிலுள்ள மலைகளிலிருந்து பெரிய கற்களை உடைத்து அவற்றை டிராக்டர்களில் பணி தளத்திற்கு கொண்டு வருகிறார்கள். பெண்கள் அவற்றை  சிறு துண்டுகளாக உடைக்கிறார்கள். அவர்களின் குழுவில் இருக்கும் 10 - 12 ஆண்களுக்கு, "ஒரு டிராக்டர் சுமைக்கு ரூ.150 வழங்கப்படுகிறது.  ஒரு நாளில் குறைந்தது 10 டிராக்டர்கள் [10 பித்தளை] நிரப்பும் அளவுக்கு கற்களை உடைக்கிறோம்," என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளையும் பணியிடத்திற்கு அழைத்து வருகின்றனர். அவர்களில் சில பச்சிளம் குழந்தைகள், சேலைகளால் கட்டப்பட்ட தொட்டில்களில் தூங்குகிறார்கள். பெரும்பாலான பிள்ளைகள் தொடக்க நிலையுடன்  பள்ளியை விட்டு இடைநின்று விடுகிறார்கள்.

எங்களுக்கு காயங்கள் எல்லாம் சகஜம். பீமாபாய் கூறுகையில், "காயம் ஏற்படுவதால் வேலை தடைபடுவதில்லை. பலத்த காயம் ஏற்பட்டால், சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டியது தான்." சில நேரங்களில், கற்களை உடைக்கும் போது,  சிறிய துண்டுகள் அல்லது கூர்மையான விளிம்புகள் தெறித்து அருகில் இருக்கும் தொழிலாளர்களை காயப்படுத்துகின்றன. "எங்களுக்கு லேசான காயங்கள் அடிக்கடி ஏற்படும்," என்று கூறுகிறார் கங்குபாய், அவரது இடது கண்ணில் கல் துண்டு தெறித்து ஏற்பட்ட காயம் உள்ளது.

மாலை 4 மணிக்கு வெயில் சுட்டெரிக்கும் போது, கல் உடைக்கும் சத்தம் திடீரென நிற்கிறது. பெண்கள் ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுக்கவும், தண்ணீர் குடிக்கவும் முடிவு செய்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவாக அமர்ந்து, மார்வாரி மொழி நாட்டுப்புற பாடலைப் பாடுகிறார்கள். இது இயற்கைக்கான பாடல். "எங்கள் மூதாதையர் ராஜஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்," என்று அவர்கள் கூறுகிறார்கள். "எங்களுக்கு மார்வாரி, கன்னடம், மராத்தி மொழிகள் பேச தெரியும்."

தமிழில்: சவிதா

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Other stories by Sanket Jain
Editor : Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Other stories by Sharmila Joshi
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha