ஆனால் இதற்கு மாறாக பல்வான் கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மராத்வாடாவின் 100 ஏக்கர் நிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
28 வயதாகும் விஷ்ணு பக்லானியின் வார்த்தைகளில் அது பிரதிபலிக்கிறது. தொலைதூரம், அருகமை என பல்வேறு கிராமங்களில் இருந்து கால்நடைகளுடன் இலவச முகாம்களுக்கு வந்துள்ள நூற்றுக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர். இலவச மதிய உணவு, கால்நடைகளுக்கான இலவச கொட்டகைகள், நீர், தீவனம் வழங்கப்படுவதால் ஈர்க்கப்பட்டு அவர்கள் இங்கு வந்துள்ளனர். தொடர் வறட்சியால் விளைநிலங்கள் தரிசாகிவிட்டதால் அரசின் உதவியில் இயங்கும் அரசு சாரா அமைப்பினால் இவை அனைத்தும் வழங்கப்படுகிறது.
“மனம் தளரக் கூடாது என எனக்கு நானே பல முறை சொல்லிக் கொள்கிறேன்,” என்றபடி விஷ்ணு 45 டிகிரி வெப்பநிலையில் தனது 20 கால்நடைகளில் ஒன்றின் மீது ஒரு குவளை தண்ணீரை தெளிக்கிறார்.
இந்த மழைக்காலம் நன்றாக மழை பொழியும் என அவர் நம்புகிறார்.
மராத்வாடாவில் நான்காவது ஆண்டாக மழை பொய்த்த காரணத்தால், விஷ்ணுவும், அவரது 64 வயது தந்தை ரகுநாத் பக்லானியும் செப்டம்பர் மாதத்திலிருந்து இங்கு தங்கியுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை காந்லடைகளை அவரது மகன் மேய்க்கிறான். இரவு உணவிற்கு பிறகு மாட்டு தொழுவத்தில் தங்கி அவர்கள் இரவை கழிக்கின்றனர்.
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகாதீரில் இருந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் குழந்தைகளுடன் அடிக்கடி முகாமிற்கு வருகின்றனர். சில நேரங்களில், நெருங்கிய உறவினர்களும் வந்து செல்கின்றனர்.
சரா சாவோனிகளின் நெடிய வரலாறு
கால்நடை முகாம்கள் அல்லது சரா சாவோனிக்கு மகாராஷ்டிரா, கர்நாடகாவில் நெடிய வரலாறு உள்ளது. இது 17ஆம் நூற்றாண்டில் ஷிவாஜி ஆட்சியில் வறட்சி காலத்தில் குறுகிய கால நடவடிக்கையாக தொடங்கப்பட்டது. இது மகாராஷ்டிராவில், குறிப்பாக வறண்ட மத்திய, மேற்கு பகுதிகளில் 2011ஆம் ஆண்டு முதல் கோடைகால காட்சியாக மாறிவிட்டது.
கடந்த ஆண்டு தான் முதன்முறையாக குளிர்காலம், புத்தாண்டு என இந்த கோடை காலம் வரை முகாம் தொடர்கிறது.
சமூக அமைப்புகள், சர்க்கரை ஆலைகள் வறட்சியால் வறண்ட விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து இந்த முகாம்களை அமைத்து, மாநில அரசு அல்லது நல்லெண்ண நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகளின் உதவியுடன் நடத்துகின்றன.
மராத்வாடாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட லத்தூர், உஸ்மானாபாத், பீட் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படும் 350 கால்நடை முகாம்களில் சுமார் 250000 கால்நடைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. சிறிதும், பெரிதுமாக பீடில் 265 முகாம்களும், உஸ்மானாபாத்தில் 80 முகாம்களும், லத்தூரில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.
பீட் நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்வான் முகாமில் 32 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 விவசாயிகளின் 5000 சிறிய, மற்றும் பெரிய கால்நடைகள் தங்கவைக்கப்பட்டுள்ளன.