ஒரு காலத்தில் கொச்சாரா கிராமத்தில் பழங்களும் பசுமையும் நிறைந்த 500 அல்ஃபோன்ஸ் மாமரங்களை கொண்ட சந்தோஷ் ஹல்தான்கரின் பழத்தோட்டம் இப்போது வறண்டு கிடக்கிறது.
பருவம் தப்பிய மழையும் திடீர் தட்பவெப்ப மாறுபாடுகளும் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்ட அல்ஃபோன்ஸா விவசாயிகளுக்கு குறைந்த அறுவடைகளே தருகிறது. கொல்ஹாப்பூர் மற்றும் சங்க்லி சந்தைகளுக்கு செல்லும் மாம்பழ லோடுகளின் எண்ணிக்கை பெருமளவுக்கு குறைந்துவிட்டது.
“கடந்த மூன்று வருடங்கள் சவாலாக இருந்தன. எங்களின் கிராமத்திலிருந்து 10-12 வாகனங்களில் மாம்பழங்கள் நிரப்பி சந்தைகளுக்கு அனுப்புவோம். இப்போதோ ஒன்று கூட அனுப்புவது கடினமாக இருக்கிறது,” என்கிறார் பத்தாண்டுகளுக்கும் மேலாக அல்ஃபோன்ஸா மாம்பழங்களை விளைவிக்கும் சந்தோஷ்.
வென்குர்லா ஒன்றிய (கணக்கெடுப்பு 2011) சிந்துதுர்கில் உற்பத்தி செய்யப்படும் பிரதானமான பொருட்களில் இந்த மாம்பழமும் ஒன்று. இந்த வருடத்தில் இப்பகுதியின் அல்ஃபோன்ஸா மாம்பழ உற்பத்தி, சராசரி உற்பத்தியின் 10 சதவிகிதமே வருமளவுக்கு வானிலை மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
“கடந்த 2-3 வருடங்களில் நேர்ந்த காலநிலை மாற்றங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டன,” என்கிறார் விவசாயியான ஸ்வரா ஹல்தாங்கர். மேலும் வானிலை மாறுபாடுகளால் புது வகை பூச்சிகள் அதிகமாகி உற்பத்தியை கடுமையாக பாதித்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
விவசாயியும் விவசாயக் கல்வியில் பட்டம் பெற்றவருமான நிலேஷ் பராப், பூச்சிகளால் மாம்பழங்களில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்து வருகிறார். “தற்கால பூச்சிக்கொல்லிகள் எதுவும் அவற்றை அழிக்க முடியவில்லை,” எனக் கண்டறிந்திருக்கிறார்.
லாபமுமின்றி, விளைச்சலும் சரிந்து, சந்தோஷ் மற்றும் ஸ்வரா போன்ற விவசாயிகள், தம் குழந்தைகளும் விவசாயத்தைத் தொடர வேண்டாமென விரும்புகிறார்கள். “மாம்பழங்களுக்கான சந்தை விலை மிகவும் குறைவு. வணிகர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள். கடுமையாக வேலை பார்த்தும் எங்களின் எல்லா வருமானமும் பூச்சிக்கொல்ல புகையூட்டவும் கூலி தரவும் போய்விடுகிறது,” என விளக்குகிறார் ஸ்வரா.
தமிழில்: ராஜசங்கீதன்