மணிராமின் உயிரை காப்பாற்றியது வத்சலாதான்.
“பாண்டவர் அருவிக்கு நாங்கள் சென்றிருந்தோம்,” எனத் தொடங்குகிறார் மணிராம். “வத்சலா மேய்வதற்கு சென்றிருந்தாள். அவளைப் பிடிக்க செல்லும்போது புலி வந்தது.”
உதவி கேட்டு மணிராம் அலறியதும், “அவள் ஓடி வந்து, முன்னங்காலை உயர்த்திக் காட்டில் தன் முதுகில் என்னை ஏற்றிக் கொள்ள வழி கொடுத்தாள். நான் ஏறி அமர்ந்ததும், அவள் தன் கால்களை ஓங்கி உதைத்து, மரங்களை உடைத்தெறிந்தாள். புலி ஓடி விட்டது,” என்கிறார் அந்த மாவுத்தன்.
பன்னா புலிகள் சரணாலயத்தின் பெருந்தாயான வத்சலாவுக்கு வயது நூறுக்கும் மேல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது உண்மை என்கிற பட்சத்தில் அவள்தான் உலகிலேயே முதிய யானையாக இருப்பாள். “சிலர் அவளுக்கு 100 வயது என்கின்றனர். சிலர் 115 என்கின்றனர். எனக்கும் அது உண்மையென்றே தோன்றுகிறது,” என்கிறார் கோண்ட் பழங்குடியான மணிராம். 1996ம் ஆண்டிலிருந்து அவர் வத்சலாவை பராமரித்து வருகிறார்.
வத்சலா ஓர் ஆசிய யானை ஆகும். கேரளா மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் வசித்து வருகிறது. மென்மையானவள் என அதை குறிப்பிடும் மணிராம், சிறுவயதில் அதை யாராலும் எதிர்கொள்ள முடியாது என்றும் கூறினார். இப்போதும் கூட, பார்வையும் கேட்கும் திறனும் சரியாக இல்லையென்றாலும் ஆபத்தை உணர்ந்ததுமே மந்தையை அது எச்சரித்து விடும்.
அதன் மோப்ப சக்தி இன்றுமே வலிமையாக இருப்பதாக மணிராம் சொல்கிறார். அச்சுறுத்தும் விலங்கு இருப்பதை எளிதாக மோப்பம் பிடித்து விடும் என்கிறார். உடனே அது சத்தம் எழுப்பி, மந்தையைக் கூட்டி குட்டிகளை மந்தைக்கு நடுவே நிற்க வைத்து விடும். “விலங்குகள் தாக்குவதற்கு முயற்சித்தால், துதிக்கையில் கிளைகளையும் குச்சிகளையும் கற்களையும் தூக்கி எறிந்து அவை விரட்டும்,” என்னும் மணிராம், “கூர்மையாக அவள் இருந்தாள்,” என்கிறார்.
யானையைப் போலவே மணிராமும் பிற வனவிலங்குகள் எதற்கும் அஞ்சியதில்லை. புலிகளுக்கு கூட அவர் அஞ்சியதில்லை. 2022ம் ஆண்டு அறிக்கை யின்படி பன்னா புலிகள் சரணாலயத்தில் 57லிருந்து 60 புலிகள் இருக்கின்றன. ”நான் யானையுடன் இருப்பேன். எனவே எனக்கு புலிகள் பற்றிய அச்சம் கிடையாது,” என்கிறார் அவர்.
பன்னா புலிகள் சரணாலயத்துக்கருகே இருக்கும் யானைகள் காப்பகமான கினாவுதா கேட்டருகே அவருடன் பாரிக் குழுவினர் பேசினோம். ஒரு யானைக் கன்று உள்ளிட்ட 10 யானைகள், நாளின் முதல் உணவுக்காக காத்திருக்கின்றன. மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் வத்சலாவிடம் நம்மை அழைத்து செல்கிறார் மணிராம். யானையின் கால்கள் சங்கிலியால் தற்காலிகமாக பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே இரு மாதக் குட்டியுடன் கிருஷ்ணகாளி நின்று கொண்டிருக்கிறது.
வத்சலாவுக்கு குட்டிகள் இல்லை. “பிற யானைகளின் குட்டிகளையும் அவள் பார்த்துக் கொள்வாள். யானைக்குட்டிகள் அவளுக்கு பிடிக்கும்,” என்கிறார் மணிராம் துயரப் புன்னகையுடன். “குட்டிகளுடன் அவள் விளையாடுவாள்.”
*****
வத்சலாவும் மணிராமும் மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்குப்பகுதி மாவட்டமான பன்னாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். அப்பகுதியின் 50 சதவிகிதம் காடுகளால் நிறைந்தது. வத்சலா கேரளத்தில் பிறந்தது. மத்தியப்பிரதேசத்திலுள்ள ஹொஷாங்காபாத்துக்கு (நர்மதாபுரம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) 1993ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. மணிராமும் அங்குதான் பிறந்தார். அங்குதான் வத்சலாவை அவர் சந்தித்தார்.
”யானைகள் எனக்கு பிடிக்கும்,” என்கிறார் 50 வயதுகளில் இருக்கும் மணிராம். அவருடைய குடும்பத்தில் எவரும் இதுவரை விலங்குகளை பராமரித்ததில்லை. அவரின் தந்தை ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்தார். மணிராமின் மகனும் அதில் விவசாயம் பார்க்கிறார். “கோதுமையும் கொண்டைக்கடலையும் எள்ளும் விளைவிக்கிறோம்,” என்கிறார் அவர்.
வத்சலாவுக்கு 100 வயதுக்கு மேல் என சொல்லப்படுகிறது. அதுதான் உலகிலேயே முதிய யானை என சொல்கிறார் மாவுத்தனான மணிராம்
ஹொஷாங்காபாத்துக்கு வத்சலா வந்தபோது உதவி மாவுத்தனாக இருந்தார் மணிராம். “வண்டியில் மரங்களை ஏற்றும் வேலையை அவள் செய்தாள்,” என நினைவுகூருகிறார் அவர். சில வருடங்கள் கழித்து, பன்னாவுக்கு வத்சலா சென்றது. “சில வருடங்களில் பன்னாவின் மாவுத்தன் பணியிடமாற்றத்தில் சென்றார். எனவே அவர்கள் என்னை அழைத்தனர்,” என்கிறார் மணிராம். அப்போதிருந்து பன்னா புலிகள் சரணாலயத்தில் உள்ள ஈரறை வசிப்பிடத்தில் வாழ்ந்து அவர், முதிய யானையைப் பராமரித்து வருகிறார்.
அவரின் நண்பரை போலல்லாது, மணிராம் வனத்துறையின் நிரந்தரப் பணியாளராக இருக்கிறார். “அரசாங்கம் என்னை வேலையிலிருந்து விடுவித்ததும் நான் சென்று விடுவேன்,” என்கிறார் அவர். மாதந்தோறும் 21,000 ரூபாய் ஊதியம் தரும் அவரது பணிக்கான ஒப்பந்தம் வருடந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. எத்தனை நாள் வேலை பார்க்க முடியுமென அவருக்கு உறுதியாக தெரியவில்லை.
“அதிகாலை 5 மணிக்கு என் வேலையைத் தொடங்குவேன்,” என்கிறார் மணிராம். “உடைந்த கோதுமையை நான் சமைத்து, வத்சலாவுக்கு கொடுத்து, காட்டுக்கு அனுப்பி வைப்பேன்,” என்கிறார். மணிராமின் கணக்குப்படி 20 யானைகளுடன் மேயச் செல்லும்போது, அதற்கான இரவுணவை அவர் தயார் செய்வார். கிட்டத்தட்ட 10 கிலோ உடைந்த கோதுமையை சமைப்பார். பிறகு தனக்கான மதிய உணவாக ரொட்டி அல்லது சாதம் சமைப்பார். யானைகள் மாலை 4 மணிக்கு திரும்பும். பிறகு வத்சலாவை குளிப்பாட்டி இரவுணவு கொடுத்ததும்தான் நாள் முடியும்.
“சாதம் சாப்பிட அவளுக்கு பிடிக்கும். கேரளாவில் இருக்கும்போது அதைத்தான் அவள் சாப்பிடுவாள்,” என்கிறார் மணிராம். ஆனால் 15 வருடங்களுக்கு முன் ராம் பகதூர் என்கிற ஆண் யானை, 90-100 வயதிலிருந்து வத்சலாவை தாக்கிய பிறகு அது மாறியது. முதுகிலும் வயிற்றிலும் காயம் ஏற்பட்டது. மருத்துவர் அழைக்கப்பட்டார். “நானும் மருத்துவரும் அவளை பார்த்துக் கொண்டோம்,” என்கிறார் மணிராம். ஆனால் அந்தத் தாக்குவல் யானையை பலவீனமாக்கியது. மீண்டும் வலிமை பெற உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டி வந்தது.
வத்சலா வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டது. மரங்களை வண்டியில் ஏற்றும் அதன் வேலை, புலிகளை கண்டறிவதும் காட்டில் ரோந்து செல்வதுமாக மாற்றப்பட்டது.
நண்பர்கள் பிரிந்தபிறகு வாடுகின்றனர். “அவள் இல்லாமல் நான் வீட்டில் வாடுகிறேன். அவள் என்ன செய்வாள், சரியாக சாப்பிட்டாளா என யோசிப்பேன்…” யானையும் அந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. ஒரு வாரத்துக்கு மேலாக மாவுத்தன் வரவில்லையெனில், அது ஒழுங்காக சாப்பிடுவதில்லை.
“மாவுத்தன் திரும்பி விட்டதாக அவள் புரிந்து கொள்வாள்,” என்கிறார் மணிராம். கேட்டில் நின்று கொண்டிருந்தாலும் நான்கைந்து மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அது தெரிந்து கொள்ளும். அவர் வருவதை கண்டுவிட்டதை காட்டும் வகையில் சத்தமாக பிளிறும்.
இத்தனை வருடங்களில் அவர்களின் உறவு வலுவாகி இருக்கிறது. “அவள் எனக்கு பாட்டி போல,” என்கிறார் மணிராம் புன்சிரிப்போடு.
இக்கட்டுரை எழுத உதவி செய்த தேவஸ்ரீ சோமனிக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்