பனாமிக்கிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பதை பார்த்தேன். அது ஆகஸ்ட் 11ம் தேதி. நாட்டின் பிற பகுதிகளில் இத்தகைய மையங்களில் ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பதை போல்தானே இதுவும்? நிச்சயமாக இல்லை. லெவில் இருக்கும் பனாமிக் ஒன்றியம் கடல்மட்டத்திலிருந்து 19,091 அடி உயரத்தில் இருப்பதாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதன் பிரதான கிராமம் சில ஆயிரம் அடிகளுக்குக் கீழே இருக்கிறது. 11,000 அடி உயரமென்றாலும் கூட, உயரமான இடங்களில் இருக்கும் தடுப்பூசி மையங்களில் இந்த மையமும் ஒன்றுதான்.
கோவிட் 19 தடுப்பூசிகளை கொண்டு வந்து சேமித்து வைப்பது மட்டுமே லடாக்கின் பல பகுதிகளில் பெரிய விஷயம். தூரமான பகுதிகளிலிருந்து இந்த மையத்துக்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஆனால் இந்த மையம் இருக்கும் உயரத்தைக் காட்டிலும் இன்னும் பல சிறப்புகள் இம்மையத்துக்கு இருக்கின்றன. சியாச்சின் பனிப்பாளத்துக்கு அருகே இருக்கும் இம்மையம் ஒரு முக்கியமான சாதனையை கண்டிருக்கிறது. 250 ராணுவ அதிகாரிகளுக்கு ஒரே நாளில் இங்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. அதுவும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லாத இணைய வசதிகளையும் குறைந்த தொலைத் தொடர்பு வசதியையும் கொண்டு. எனினும் பனாமிக்கிலுள்ள இந்த ஆரம்பச் சுகாதார மையம், லடாக்கில் இருக்கும் பிற மையங்களைப் போலவே தடுப்பூசி முகாம்களை வேகமாக நடத்தியிருக்கிறது.
லெ டவுனிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு இந்த சுகாதார மையத்தில் இணைய வசதி இன்றி எப்படி சமாளித்தார்கள்? தடுப்பூசிகளை பாதுகாக்கும் பணி செய்யும் செரிங் அஞ்சோக் எளிமையாக சொல்கிறார் - “மிகவும் சுலபம்! பொறுமையாக நாங்கள் கையாண்டோம். பல மணி நேரங்கள் உழைத்தோம். இறுதியில் அது சரியாக நடந்தது”. இதன் அர்த்தம் பிற இடங்களில் சில நிமிடங்களிலேயே பல விஷயங்களை சாத்தியப்படுத்தக் கூடிய இணைய வசதி இங்கு சிக்கலாக இருப்பதால பல மணி நேரங்கள் காத்திருந்து பணிபுரிந்ததே ஆகும். தடுப்பூசி செலுத்த இன்னும் அதிகமான நேரம் செலவழிக்கப்பட்டிருக்கும்.
ஆரம்பச் சுகாதார மையத்தின் மருந்தகரான ஸ்டான்சின் டால்மா பல மணி நேரங்கள் பணிபுரிந்தது மட்டுமல்லாமல் கூடவே வந்திருக்கும் எட்டு வயது மகனையும் அவ்வப்போது கவனிக்க வேண்டியிருந்தது. “என்னுடைய இளைய மகன் அதிக நேரத்துக்கு நானில்லாமல் இருக்க மட்டான்,” என்கிறார் அவர். “எனவே நீண்ட நேரம் வேலை பார்க்கும் நாட்களில் (குறிப்பாக தடுப்பூசி முகாம்களின்போது), அவனை நான் கூட்டி வந்து விடுவேன். ஆரம்பச் சுகாதார மையத்தில் என்னுடன் இருப்பான். இரவு நேர வேலைகளின்போது கூட என்னுடன் வந்துவிடுவான்.”
உடன் அவரை அழைத்து வருவதால் நேரக் கூடிய அபாயத்தை பற்றி அவருக்கு தெரிந்திருந்தாலும் இந்த முறையில் மகனை கவனித்துக் கொள்ள முடிகிறது என்கிறார். “நோயாளிகளும் என் மகனும் என பார்த்தால் இரு தரப்புமே எனக்கு முக்கியம்,” என்கிறார் அவர்.
ஆரம்பச் சுகாதார மையத்தின் மருத்துவரான சபுங்பம் மெய்ரபா மெய்தய் மணிப்பூரை சார்ந்தவர். அவர் சொல்கையில், “ஆரம்பத்தில் குழப்பம் நிலவியது. குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் தகவல்களை கொண்டு கையாளச் சிரமப்பட்டோம். இறுதியில் ஒருவழியாக சிக்கல்களை சரியாக்கினோம். கிராமவாசிகளிடமும் தடுப்பூசிகளின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது,” என்கிறார்.
நாட்டின் பிற பகுதிகள் போலவே லடாக்கும் கோவிட் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புக்குள்ளானது. போக்குவரத்து, தொழிலாளர் வருகை, வெளியூர்களில் வேலை பார்க்கும் அல்லது படிக்கும் மக்கள் திரும்ப வந்தது முதலியவை கோவிட் எண்ணிக்கையை அதிகரிக்கும் காரணிகளாக இருந்தன.
“அது குழப்பம் நிறைந்த நேரமாக இருந்தது,” என்கிறார் லெவின் மாவட்ட தடுப்பூசி அதிகாரியான தஷி நம்க்யாள் ஆரம்ப கால தொற்றுக் காலத்தை நினைவுகூர்ந்து. “அச்சமயத்தில் லெ டவுன் மக்களை பரிசோதிக்கவென சரியான கட்டமைப்பு எதையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. எனவே ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு சண்டிகருக்கு அனுப்ப வேண்டியிருந்தது. முடிவு வர பல நாட்களானது. ஆனால் இப்போது இங்குள்ள சோனம் நர்பூ மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு எங்களால் பரிசோதிக்க முடியும். இந்த வருடத் துவக்கத்திலேயே தடுப்பூசி போடும் பணியை குளிர்காலத்துக்கு முன்பே முடித்துவிட வேண்டுமென திட்டமிட்டோம். அதாவது அக்டோபர் மாத இறுதிக்குள்,” என்கிறார்.
இங்குள்ள சுகாதார மையங்களில் நிலையான இணையத் தொடர்பு இல்லை. மக்களிடமும் தொலைத் தொடர்பு வசதிகள் இல்லை. எனவே வேலை நடப்பதற்கு புதுவகை வழிகளை கண்டுபிடிக்கும் தேவை இருந்தது. “வயதானவர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த மாட்டார்கள். இணையச் சிக்கல்களும் இருக்கிறது,” என்கிறார் குன்சாங் சோரோல். கடல்மட்டத்திலிருந்து 9,799 அடி உயரத்தில் இருக்கும் லெ மாவட்ட கிராமமான கல்ட்சேவை சேர்ந்த சுகாதார ஊழியர் அவர். எப்படி அவர்களால் சிக்கல்களை களைய முடிந்தது?
’குனே’ என அழைக்கப்படும் குன்சாங் சொல்கையில், “முதல் தடுப்பூசி போட்ட பிறகு, எண்ணிக்கையையும் இரண்டாம் தடுப்பூசிக்கான தேதியையும் ஒரு பேப்பரில் குறித்தோம். பிறகு மக்களின் முக்கியமான ஆவணங்களின் பின்னால் அதை ஒட்டினோம். உதாரணமாக ஆதார் அட்டை போன்றவற்றில். இப்படித்தான் மொத்த நடைமுறையையும் நாங்கள் கையாள முடிந்தது. கிராமவாசிகளிடம் இப்போது வரை அம்முறை சரியாக நடந்திருக்கிறது,” என்கிறார்.
“தடுப்பூசிகள் போட்ட பிறகு சான்றிதழ்களை அச்சடித்து அவர்களிடம் கொடுத்தோம்,” என்கிறார வர்.
சுகாதார மையங்களும் மருத்துவமனைகளும் தொற்றுப் பரவலை தடுக்க போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஃபியாங் கிராமத்தில் குழந்தைகள் சூழ தடுப்பூசி சேவைகள் வழங்கப்படுவது எனக்கு ஆச்சரியமளித்தது. கடல்மட்டத்திலிருந்து 12000 அடி உயரத்தில் ஃபியாங்க் இருக்கிறது.
100 சதவிகித தகுதி வாய்ந்த மக்களுக்கும் கோவிட் முதல் தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக சொல்லும் லடாக் நிர்வாகத்தின் கூற்று சவாலுக்குரிய விஷயமாக இருக்கலாம். எனினும் கேள்விக்கிடமின்றி, மலைப்பரப்புகளை கடந்து பயணிக்கும் முன்கள சுகாதார ஊழியர்களின் பணி பாராட்டுக்குரிய விஷயம். லடாக்கில் 8000லிருந்து 20000 அடி உயரத்தில் வசிக்கும் 270000 மக்களுக்கு குளிர் மிகும் காலநிலையில் பெரும் போராட்டத்தினூடாக அவர்கள் தடுப்பூசிகளை கொண்டு சென்றிருக்கின்றனர்.
தடுப்பூசிகளை பாதுகாக்கும் பணி செய்யும் ஜிக்மெத் நம்கியாள் சொல்கையில், “எங்களுக்கு பெருமளவில் சவால்கள் இருந்தன. ஆரம்ப நாட்களில், கோவின் தளத்துக்கு நாங்கள் பழக வேண்டியிருந்தது. பனாமிக் போல பல தூரமான சுகாதார மையங்களில் நிலையான இணையத் தொடர்பு கிடையாது,” என்கிறார். தடுப்பூசி மருந்துகள் சரியான தட்பவெப்பத்தில் சேமிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் சரியான அளவுகள் இருக்கின்றனவா என்பதையும் பரிசோதிக்க குளிர் பாலைவனத்தின் 300 கிலோமீட்டர்களையும் தாண்டி பயணிக்கிறார் நம்கியாள்.
“ஓ, கோவின் மட்டுமல்ல, வீணாகும் தடுப்பூசி மருந்துகள் பிரதானமான சவாலாக இருந்தது,” என்கிறார் கல்சி தாலுகாவின் சுகாதார மையத்தின் பணிபுரியும் தீச்சன் ஆங்மோ. “தடுப்பூசி மருந்துகள் வீணாகக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.”
ஆங்க்மோவை பொறுத்தவரை, “சவால் பெரியது. ஒரு குப்பியில் பத்து பேருக்கான மருந்துகள் இருக்கும். ஒரு குப்பியை திறந்ததிலிருந்து நான்கு மணி நேரத்துக்குள் அது முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிட வேண்டும். எங்களின் கல்சே போன்ற ஊர்களில் நான்கு மணி நேர அளவில் நான்கைந்து பேர்தான் வருவார்கள். ஏனெனில் அவர்கள் தூரமான பகுதிகளிலிருந்து வர வேண்டியிருக்கும். எனவே வீணாகும் அளவு அதிகமாகும் வாய்ப்பு இருந்தது. அதை தவிர்க்க, உடன் பணிபுரியும் பலர் ஒருநாளுக்கு முன்னாடியே அந்த கிராமங்களுக்கு சென்று, சரியான நேரத்தில் மையத்துக்கு மக்கள் வருவதை உறுதிபடுத்தினர். மிகவும் கஷ்டமான நடைமுறை எனினும் பலனளித்தது. விளைவாக மருந்து வீணாகவே இல்லை,” என்கிறார்.
கல்சியை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி மருந்துகளை லிங்க்ஷட் என்கிற கிராமத்துக்கு வான்வழியாகவும் கொண்டு சென்றதாக கேள்விப்பட்டேன். தடுப்பூசி முகாமுக்கு பொறுப்பாக இருந்த மகளிர் மருத்துவர் பத்மா சொல்கையில், “தடுப்பூசிகள் குறித்து தொடக்கத்தில் கிராமவாசிகளிடம் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக நாங்கள் ஆலோசனை வழங்கியதில் அவர்கள் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். ஒருநாளில் 500 பேருக்கு தடுப்பூசி போடும் சாதனையை நாங்கள் கொண்டிருக்கிறோம். குழுவாக இதை சாதித்தோம்,” என்கிறார்.
“செவிலியர்களும் மருந்தகர்களும் மருத்துவர்களும் சவால்களை எதிர்கொண்டு களைந்து தடுப்பூசி முகாம்களை நிறைவாக செயல்படுத்தியது என்னை ஆச்சரியப்பட வைத்தது,” என்கிறார் ஜிக்மெட் நம்கியாள். “தற்போது நாங்கள் லடாக்கின் மக்கள் மட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்கள், நேபாள தொழிலாளர்கள், பிற மாநிலங்களிலிருந்து தடுப்பூசி போடாமல் வந்திருப்போர் ஆகியோருக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருக்கிறோம்.”
இது பெருமைக்காக சொல்லப்படவில்லை. பனாமிக் சுகாதார மையத்துக்கு அருகே ஒரு சாலைப்பணிக்காக ஜார்கண்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த தொழிலாளர்களை சந்தித்தேன். “நல்லவேளையாக நாங்கள் லடாக்கில் இருக்கிறோம்,” என்றார்கள். “நாங்கள் அனைவரும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். தற்போது இரண்டாம் தடுப்பூசிக்காக காத்திருக்கிறோம். எங்களின் வீடுகளுக்கு நாங்கள் திரும்பும் நேரத்தில் முழுமையாக கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நாங்கள் பெற்றிருப்போம். எங்களின் குடும்பங்களையும் பாதுகாப்பாக நாங்கள் வைத்திருக்க முடியும்.”
தமிழில் : ராஜசங்கீதன்