குல்ஷார் அஹமது பாட், தால் ஏரியின் படித்துறை எண் 15தில், ஒரு மர பெஞ்சில் அமைதியாக அமர்ந்து இருக்கிறார். ஸ்ரீநகரில் உள்ள மற்ற ஷிகரா படகோட்டிகளைப் போலவே ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுமாறு வெளியிட்ட ஒரு ஆணையில் இருந்து, அவர் எந்த வாடிக்கையாளரையும் சந்திக்கவில்லை. "அது எங்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாக ஆக்கிவிட்டது. நான் இங்கு வந்த கடந்த 18 ஆண்டுகளில் இதைப் போன்ற மொத்த முன்பதிவுகளும் (ரத்து செய்யப்படுவதை) நான் கண்டதில்லை", என்று 32 வயதாகும் குல்ஷார் கூறுகிறார்.
அக்டோபர் மாதம், 10 ஆம் தேதி அரசாங்கம் அந்த ஆணையை நீக்கிய பின்னர் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஷிகரா சவாரிகளுக்கு வந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பயண முகவர்களால் கொண்டு வரப்பட்டனர், அவர்கள் எங்களிடம் கடுமையாக பேரம் பேசினர். ஒரு வாடிக்கையாளர் எங்களிடம் நேரடியாக வந்தால், தால் ஏரியின் நீரில் ஒரு மணி நேரம் சவாரி செய்வதற்கு நாங்கள் 600 ரூபாய் வசூலிக்கிறோம் (அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விலை), அதே சவாரிக்கு ஒரு முகவர் எங்களுக்கு 250 ரூபாய் தான் கொடுப்பார். இதைப் போன்ற இக்கட்டான காலங்களில், எங்களால் அதை மறுக்கக் கூட முடியாது, என்று 42 வயதாகும் மெஹராஜ் - உத் - தின் - பஃதூ கூறுகிறார், அவர் நவம்பர் மாத நடுப்பகுதியான பிறகும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார், குளிர்காலத்தில் தனது குடும்பத்தை எப்படியும் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
ஷிகராக்கள் பெரும்பாலும் படகின் உரிமையாளர்களாலோ அல்லது ஒரு பருவத்திற்கு 30,000 ரூபாய்க்கு படகினை வாடகைக்கு எடுத்த படகோட்டிகளாலோ செலுத்தப்படுகிறது. ஒரு படகோட்டி ஆறு மாத கால சுற்றுலா பருவத்தில் 2 லட்சம் ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதில் வாடகை மற்றும் இதர செலவுகள் போக, அவரிடம் எஞ்சி இருப்பது சுமார் 180,000 ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தையே அவர்கள் ஆண்டின் 12 மாதங்களுக்கும் பரவலாக வைத்து செலவு செய்யப் பயன்படுத்த வேண்டும் - மேலும் அது ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய் என்ற அளவில் வந்து நிற்கும். சுற்றுலா பருவம் அல்லாத காலத்தில் ஷிகராவாலாக்களுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது அல்லது அவர்கள் கிடைக்கின்ற ஏதோ ஒரு வேலையைச் செய்வார் மேலும் அவர்களில் சிலர் ஏரியில் மீன்களைப் பிடித்து விற்கவோ அல்லது அவர்களது குடும்பத்திற்கோ வைத்துக் கொள்வர்.
பள்ளத்தாக்கில் சுற்றுலா பருவம் மே முதல் அக்டோபர் மாதம் வரை இருக்கும். நவம்பர் முதல் வாரம் முதல் இந்த ஆண்டு காஷ்மீரில் ஆரம்பகாலப் பனிப்பொழிவுக்குப் பின்னர் ஷிகராக்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வரும் வாய்ப்புகள் இன்னும் அரிதாகிவிடும். சுற்றுலா பயணிகள் குறைவாக வந்த கடந்த ஆண்டில் (2018), காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.5 லட்சமாக இருந்தது - இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை. அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மிகவும் கடுமையாக குறைந்து இருக்கிறது அதன் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் தால் ஏரி உட்பட காஷ்மீரின் பல்வேறு நீர் நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 4,800 ஷிகராக்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் ஷிகரா டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து ஜம்மு மற்றும் -காஷ்மீர் ஷிகரா தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான 60 வயதாகும் வாலி முகமது பாட் கூறுகிறார். தால் ஏரி, நைஜீன் ஏரி மானஸ்பால் ஏரி மற்றும் ஜீலம் நதி ஆகியவற்றில் இயங்கும் 960 படகுகளின் உரிமையாளர்களும் மற்றும் காஷ்மீர் படகு இல்ல உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ரஷீத் கல்லூவும் அவரைப் போலவே கூறுகிறார்.
"தால் ஏரியில் உள்ள (37 படித்துறைகள் அல்லது சிறிய படகு நிறுத்தங்களில் இருக்கின்ற) ஷிகராவாலாக்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பு 8 கோடி ரூபாய்", என்று மதிப்பிடுகிறார் பாட். சிலர் ஷிகராக்களை வாங்குவதற்காக பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் கடன்களைப் பெற்றிருக்கின்றனர் - ஒரு புதிய ஷிகராவின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய், மேலும் அவர்களால் இப்போது கடன் தவணைகளைத் திருப்பி செலுத்த முடியாமல் இருக்கின்றனர், என்று அவர் கூறுகிறார். சிலர், கடன்காரர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக தங்களது ஷிகராக்களை விற்றுவிட்டனர் என்று மேலும் பாட் கூறுகிறார். ஷிகராக்களை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் குடும்பங்களுக்கு இதுவரை அரசாங்கம் எந்த இழப்பீட்டுத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார் அவர்.
![](/media/images/02-IMG_0478-MB.width-1440.jpg)
ஶ்ரீநகரின் தால் ஏரியின் அமைதியான நீரில் நிறுத்தப்பட்டிருக்கும் ஷிகராக்கள் வாடிக்கையாளர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன
![](/media/images/03-IMG_0291-MB.width-1440.jpg)
ஒரு சிலர் நவம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் காரியக்கார வாடிக்கையாளர்களுக்காக படகில் துடுப்பு போடத் துவங்கிவிட்டனர்
![](/media/images/04-IMG_0492-MB.width-1440.jpg)
"நான் 2017 ஆம் ஆண்டில் எனது மகளின் திருமணத்திற்காக எனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை கடனாக பெற்று இருந்தேன் மேலும் அதில் ஒரு லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தி இருக்கிறேன். இந்தப் பருவத்தில் நிலுவையிலுள்ள தொகையை திருப்பிச் செலுத்தலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். நான் எனது கடனை எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை", என்று கூறுகிறார் 60 வயதாகும் குலாம் அஹமத் மாட்டோ. அவர் தனது மகன் ஷாகூரை கேரளாவில் நடக்கும் மாநில படகு பந்தயத்தில் கலந்து கொண்டு தங்களது குடும்பத்திற்காக ஏதாவது சம்பாதிக்க முயற்சித்து விட்டு வரும்படி கூறி அனுப்பி வைத்திருக்கிறார்
![](/media/images/05-IMG_0488-MB.width-1440.jpg)
மெஹராஜ் - உத் - தின் - பஃதூ கடந்த 20 வருடங்களாக தால் ஏரியில் ஷிகரா படகினை ஓட்டி வருகிறார். "பள்ளத்தாக்கில் இருந்து உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வெளியேற வேண்டி அரசாங்கம் அறிவுறுத்திய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எனக்கு ஒரு சவாரி கூட கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் இந்த ஷிகரா தொழில் மட்டுமே", என்று கூறுகிறார் அவர். "மேலும் என்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது படிப்பினையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் இந்த குளிர்காலத்தை சமாளித்து எப்படி பிழைப்பு நடத்த போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் சுற்றுலா பருவத்தில் சம்பாதிக்கும் பணத்தை வைத்துத் தான் எங்களது குளிர்கால தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வோம்", என்று கூறுகிறார் அவர்
![](/media/images/07-IMG_0497-MB.width-1440.jpg)
"அது ஒரு சாதாரண நாளாகத்தான் இருந்தது (அந்த ஆலோசனை ஆணை வழங்கப்பட்ட நாள்); நாங்கள் தால் ஏரியில் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் வெவ்வேறு பகுதிகளைச் சுற்றிக் காண்பித்து கொண்டிருந்தோம். நாங்கள், சுற்றுலாப் பயணிகளை மாநிலத்தில் இருந்து வெளியேறச் சொல்லி அரசாங்கம் தந்த ஆலோசனை வெறும் வதந்தி என்று நினைத்தோம். உண்மையில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை", என்று 50 வயதாகும் அப்துல் ரஷீத் ஷா கூறுகிறார். "போன பருவத்திலிருந்து சேமித்து வைத்த பணம் என்னிடம் கொஞ்சம் இருந்தது அதுவும் இப்போது தீர்ந்துவிட்டது. நான் இப்போது எனது குடும்பம் பட்டினி கிடக்க வேண்டி வருமோ என்று எண்ணி அஞ்சுகிறேன்...",என்று கூறினார்
![](/media/images/08-IMG_0506-MB.width-1440.jpg)
அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் ஷிகரா டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் ஷிகரா தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான, வாலி முகமது பாட், சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கிறார்
![](/media/images/09-IMG_0324-MB.width-1440.jpg)
நவம்பர் மாதத்தின் முன் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் 13 ஆம் எண் படித்துறையில் இருந்து (பெயர் வெளியிட விரும்பாத) ஷிகரா படகோட்டி ஒருவர் சுற்றுலா பயணிகளை தனது படகு இல்லத்தில் அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். பள்ளத்தாக்கில் இருந்து ஆகஸ்ட் மாதம் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டி அரசாங்கம் ஆலோசனை தெரிவித்த பிறகு இதுவே இந்த சுற்றுலா பருவத்தின் எனது 3 வது சவாரி என்று கூறினார்
![](/media/images/10-IMG_0504-MB.width-1440.jpg)
குல்ஷார் அஹமது பாட், 32 வயதாகும் ஒரு ஷிகரா படகோட்டி ('புனிதர்களின் பள்ளத்தாக்கு' என்ற தலைப்பில் வெளியான நன்கு அறியப்பட்ட படத்தில் அவர் நடித்துள்ளார்) அவர் இத்தொழிலில் கடந்த 18 வருடமாக இருந்து வருகிறார். "சுற்றுலா பயணிகளிடையே நாங்கள் கொண்டிருந்த அடையாளத்தை இழந்து விட்டோம் என்று நான் அஞ்சுகிறேன் - நாங்கள் எங்களது விருந்தோம்பலுக்காக நன்கு அறியப்பட்டோம்", என்று அவர் கூறுகிறார். "ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து எல்லாம் மாறிவிட்டது. மொத்த நாட்டினரிடமும் நாங்கள் எங்களது மதிப்பினை இழந்துவிட்டோம். சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர்", என்று கூறுகிறார். இந்தப் பருவத்தில் அவர் எப்படி பிழைப்பார்? "இங்கு நடக்கும் மோதல்கள் எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது, அதில் ஒன்று தான் தொடர்ந்து சேமிக்கும் பழக்கமும் ஏனெனில் காஷ்மீரில் விஷயங்கள் அனைத்தும் நிச்சயம் அற்றதாகவே இருக்கும், என்று அவர் பதில் கூறினார். எங்களுக்கு தெரியும் ஒவ்வொரு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும் இத்தகைய சங்கடங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்", என்று கூறினார்
![](/media/images/11-IMG_0526-MB.width-1440.jpg)
40 வயதாகும் இம்தியாஸ் ஜாலா 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்பு தான் இந்த ஷிகராவை கடன் எடுத்து வாங்கியிருந்தார். இந்த வருடத்திற்கான முன்பதிவுகள் அவருக்கு நல்ல வருமானம் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்து இருந்தன. ஆனால் இப்போது, சுற்றுலா பருவம் முடியும் தருவாயில் அவர் கடனை திருப்பி கொடுக்க முடியாதபடியால் தனது ஷிகராவை விற்றுவிடலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரது 3 பெண் குழந்தைகளும் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர், நான் அவர்களது தேர்வு முடிவுகளை பார்க்கவில்லை, ஏனெனில் பள்ளியைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த 3 மாத நிலுவைத் தொகையை என்னை செலுத்தச் சொல்லி (அவற்றை நிறுத்தி வைத்திருக்கின்றனர்)", என்று அவர் கூறினார்
![](/media/images/12-IMG_0576-MB.width-1440.jpg)
ராணுவம் நிறைந்திருக்கும் ஒரு இடத்திற்கு சுற்றுலா பயணிகள் எப்படி வருவார்கள் என்று வடக்கு ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியைச் சேர்ந்த ஷிகரா படகோட்டியான 50 வயதாகும் முகமது அப்துல்லா கேட்கிறார். "இந்த ஆண்டு அரசாங்கம் காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பிய ராணுவப் படையினரை திரும்பப் பெற்றால் கூட, சில சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்", என்று அவர் கூறுகிறார். "90 களுக்கு முன்பு இருந்ததை போல எங்களது பகுதியில் எந்த சண்டைகளும் இல்லாமல் இருந்த, எங்களது காஷ்மீரை நான் காண விரும்புகிறேன்", என்று அவர் கூறுகிறார்
![](/media/images/13-IMG_0554-MB.width-1440.jpg)
குலாம் முகமது, ஒரு தச்சர், அவர் கடந்த 40 ஆண்டுகளாக ஷிகராக்களை உருவாக்கி வருகிறார்; அவர் இந்த கைவினைத் தொழிலை தனது தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டார். "2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு முன்பு வரை என்னிடம் எட்டு ஷிகராக்கள் செய்து தரும்படி ஆர்டர்கள் வந்திருந்தன, ஆனால் அரசாங்கத்தின் ஆலோசனைக்குப் பிறகு என்னுடைய ஆர்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன", என்று அவர் கூறுகிறார்
![](/media/images/14-IMG_0567-MB.width-1440.jpg)
அவரது ஆர்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில் ஷிகராக்கள் செய்வதற்காக 3 லட்ச ரூபாய்க்கு குலாம் முகமது வாங்கி வைத்திருந்த தியோடர் மரங்கள் அவரது பணிமனையில் வெறுமனே கிடக்கின்றன. "என்னை போன்ற மக்கள் இப்படிப்பட்ட பருவத்தில் பிழைத்து வருவது என்பது மிகவும் சிரமமான காரியம்", என்று அவர் கூறினார்
![](/media/images/15-IMG_0501-MB.width-1440.jpg)
நவம்பர் மாதத் துவக்கத்தில், தால் ஏரிக்கு அருகிலுள்ள தங்களது சங்க அலுவலகத்தை சுற்றி அமர்ந்தபடி ஷிகராவாலாக்கள் தங்களது நேரத்தை கடத்தி வருகின்றனர்
![](/media/images/16-IMG_0550-MB.width-1440.jpg)
சுற்றுலா தொடர்பான அனைத்து வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன ஏரியைச் சுற்றியுள்ள கைத்தறி கடைக்காரர்கள், பொதுவாக ஷிகராவாலாக்கள் தங்களது கடைகளுக்கு அழைத்துக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றனர்
![](/media/images/06-IMG_1014-MB.width-1440.jpg)
சுற்றுலா பருவம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், பார்வையாளர்களுக்காக பல மாதங்கள் காத்திருந்த பின் ஷிகராவாலாக்கள் இப்போது நீண்ட, கடினமான மற்றும் நிச்சயமற்ற குளிர்காலத்தை எதிர்நோக்கியபடி இருக்கின்றனர்
தமிழில்: சோனியா போஸ்