குப்பத்தில் இருக்கும் அறையை நோக்கிய குறுகலான சந்துகளுக்குள் பானு ஏறிச் சென்று கொண்டிருக்கிறார். கைக்குட்டையால் வாய் கட்டப்பட்டிருந்தது. உதவியாக கிடைத்த அரையரை கிலோ அரிசியும் பருப்பும் கைகளில் பாலீதீன் பைகளில் இருந்தது. யாரோ வருவதை பார்த்ததும் சட்டென அருகே இருந்து வீட்டருகே பதுங்கிக் கொண்டார். மலையிலிருந்து இறங்கி வருபவர்களின் கைகளில் சாக்குகளும் பொட்டலங்களும் இருந்தன. தெரிந்த முகம் எதுவும் இருக்கிறதா என பார்த்துவிட்டு பானு மீண்டும் மலையேறத் தொடங்கினார்.
ஒரு சாக்கடைக் கால்வாயை தாண்டி குதித்தார். சந்தில் இருந்த எல்லா பத்துக்கு பத்தடி வீடுகளும் பூட்டப்பட்டிருந்தன. அந்த கதவுகளுக்கு பின் ஒரு ரகசியமான அமைதி குடிகொண்டிருந்தது. எவரும் பேசிக் கொள்ளும் சத்தமில்லை. சண்டை சத்தம் இல்லை, சிரிப்பொலி இல்லை. மொபல் போன்களில் சத்தமாக பேசும் சத்தங்கள் இல்லை. தொலைக்காட்சி ஓடும் சத்தங்கள் இல்லை. சமையல் மணமும் இல்லை. அடுப்புகளில் குளிர் கொண்டு பல நாட்களாகிவிட்டன.
பானுவின் அறை மலையுச்சியில் இருக்கிறது. மனைவி சரிதா ஒரு கேஸ் அடுப்பு அருகே அமர்ந்து வெறுமனே வீட்டுக்கதவை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆறு மாத கர்ப்பத்தில் உப்பியிருக்கும் வயிற்றின் மேல் கைகள் இருந்தன. ஒன்பது வயது ராகுல் பொம்மை காரை சிமெண்ட் தரையில் சுற்றி சுற்றி ஓட்டிக் கொண்டிருந்தான். அம்மாவிடம் சாப்பாடு கேட்டு அனத்திக் கொண்டிருக்கிறான்.
“அம்மா, எனக்கு பசிக்குது. காலையிலருந்து எதுவும் சாப்பிடல. பாலும் க்ரீம் பிஸ்கட்டும் கூட கொடுக்கலைம்மா…”
தன்னிச்சையாக பெருமூச்சு விட்டார் சரிதா. “ஆமாம்பா,” என சொல்லி தன்னிலைக்கு திரும்பி, “இரு.. எதாவது இருக்கா பார்க்கிறேன். உங்கப்பா இப்போ வந்திடுவார். நிறைய வாங்கிட்டு வருவாரு. நீ வெளியே விளையாடிக்கிட்டு இரு!”
உடனே “என்னோட விளையாட யாருமில்லயே,” என்றான் ராகுல். “விக்கியும் பண்ட்டியும் எங்க போனாங்கம்மா?”
“அவங்க ஊருக்கு போயிருப்பாங்க. திரும்ப வந்திடுவாங்க.”
“பள்ளிக்கூடம் நடக்கும்போது ஊருக்கு போக மாட்டாங்கம்மா. அவங்க திரும்ப வர மாட்டாங்கன்னு தோணுது. நாங்க எஞ்ஜினியர் ஆகணும்னு நெனச்சோம். பள்ளிப்படிப்ப முடிச்சதும் கார் ரிப்பேர் பண்ற கடை தொடங்கலாம்னு நினைச்சோம். ஆனா அவங்க இப்போ பள்ளிக்கூடத்துக்கு கூட வரப் போறதில்லை!”
“பெரிய கடையே நீ திறக்கலாம். இப்போ நீ வளர்ந்தவனாயிட்டே!” என்ற சரிதா அடுப்புக்கு அருகே இருக்கும் அலமாரிக்குள் தேடிக் கொண்டிருந்தார். சில காலி பானைகள், ஒரு கடாய், ஒரு குழம்புக் கரண்டி, சில சிறு கரண்டிகள், நான்கு தட்டுகள், சில கிண்ணங்கள் ஆகியவையே அந்த அலமாரிக்குள் இருந்தன. அந்த ஒற்றை அலமாரியிலிருப்பது மட்டும்தான் சமையலுக்கென இருக்கும் மொத்த விஷயங்கள். அடுத்த வரிசைகளில் உப்பு, பயிறு, அரிசி, கோதுமை மாவு, பருப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கான ப்ளாஸ்டிக் குடுவைகள் இருந்தன. எல்லா குடுவைகளும் காலி. ராகுலுக்கு ஏதோ கொடுப்பதை போல எல்லா குடுவைகளையும் திறந்து பார்த்து பாவனை செய்து கொண்டிருந்தார். ஒரு குடுவைக்குள் காலியான க்ரீம் பிஸ்கெட் கவர் மட்டும் இருந்தது. அதை கையிலெடுத்து கசக்கி ராகுலை அவர் திரும்பிப் பார்த்தபோது பானு வீட்டுக்குள் நுழைந்தார். கைக்குட்டையை வாயிலிருந்து கழற்றிவிட்டு பெருமூச்சுடன் கீழே அமர்ந்தார். எதிர்பார்ப்புடன் அப்பாவின் பைகளை வாங்க ராகுல் ஓடினான்.
“ஒருவழியா வந்து சேர்ந்தீங்க… ராகுல், அப்பாவுக்கு தண்ணீ எடுத்துட்டு வா.”
ஒப்பந்ததாரருடன் பேசியதை பானு மனதுக்குள் ஆயிரமாவது தடவையாக ஓட்டி பார்த்துக் கொண்டார்.
“அப்பா.. இந்தாங்க தண்ணி. எதுவும் பிஸ்கட் வாங்கிட்டு வரலையா?” என ராகுல் அவரின் தோளை குலுக்கினான்.
ராகுலிடமிருந்து தண்ணீரை வாங்கி அமைதியாக குடித்தார் பானு.
“காண்ட்ராக்டர் பணம் எதுவும் கொடுக்கலை. வேலை தொடங்க இன்னும் ஒரு மாசம் ஆகுமாம்.” பேசிக் கொண்டே சரிதாவை பார்த்தார்.
உப்பியிருந்த வயிற்றில் கை வைத்து சரிதா தடவிக் கொடுத்தார். வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு ஆறுதல் கொடுக்கவா அல்லது குழந்தையிடமிருந்து ஆறுதல் பெற்றுக் கொள்ளவா எனத் தெரியவில்லை.
“அரசாங்கம் எல்லாத்தையும் மூடிடுச்சு,” என்ற பானு, “ஏதோ நோயாம். எப்போ திரும்ப வேலை செய்றதுன்னு அரசாங்கம்தான் சொல்லுமாம்,” என்றார்.
“பணமில்லாம ஒன்றரை மாசம் ஓடிடுச்சு. பருப்பு, அரிசின்னு எதுவும் இல்ல. பிச்சை எடுத்து எத்தன நாள் வாழறது?”
“உன்னை இங்க நான் கூப்பிட்டு வந்திருக்கவே கூடாது,” என சொல்லும்போது குரலிலிருந்து குற்றவுணர்வை பானுவால் மறைக்க முடியவில்லை. “உனக்கிருக்கற நிலைமைல, சாப்பாட்டுக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. இன்னும் எத்தன மாசத்துக்கு இது போகும்னும் தெரியல!”
கோபத்துடன் கைகளை உதறினார். ஒன்றரை மாதமாக ஒருவேளை உணவுதான் பானுவின் குடும்பம் சாப்பிடுகிறது. பருப்பரிசி உணவு. அதுவும் ஏதேனும் தொண்டு நிறுவனம் கொடுத்தால்தான் உண்டு. இவையெல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அவர்கள் காய்கறிகளும் பாலும் சாப்பிட முடிந்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களும் சாப்பிட்டிருக்கிறார்கள்





