தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வலியுறுத்தி சி. வெங்கட சுப்பா ரெட்டி பங்கேற்கும் ஆறாவது போராட்டம் இது. ஆந்திர பிரதேசத்தின் YSR மாவட்ட விவசாயியான இவருக்கு 18 மாதங்களுக்கு மேலாக கரும்பிற்கான நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை.
ஆந்திர பிரதேச கரும்பு விவசாயிகள் சங்கம் சித்தூர் மாவட்டம், திருப்பதியில் 2020 பிப்ரவரி 2ஆம் தேதி ஒருங்கிணைத்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்க சுமார் 170 கிலோமீட்டருக்கு சுப்பா ரெட்டி பேருந்து பயணம் செய்துள்ளார்.
“2018ஆம் ஆண்டு விநியோகித்த கரும்பிற்கு மயூரா சர்க்கரை ஆலை எனக்கு ரூ.1.46 லட்சம் தர வேண்டும்,” என்கிறார் கமலாபுரம் மண்டலத்தில் உள்ள விபராம்புரம் கிராமத்தில் 4.5 ஏக்கர் நிலம் வைத்துள்ள சுப்பா ரெட்டி. 2018-19ஆம் ஆண்டு பருவத்தில் டன்னுக்கு ரூ.2,500 தருவதாக மயூரா ஆலை அவருக்கு உறுதி அளித்திருந்தது. “பிறகு அந்நிறுவனம் டன்னுக்கு ரூ.2,300 என குறைத்துவிட்டது. நான் ஏமாந்துவிட்டேன்.”
போராட்டத்தில் பங்கேற்ற ஆர். பாபு நாயுடு என்பவரும் சர்க்கரை ஆலையிலிருந்து வர வேண்டிய ரூ.4.5 லட்சம் நிலுவைத் தொகைக்காக காத்திருக்கிறார். சித்தூரின் ராமசந்திராபுரம் மண்டலம் கணேஷபுரம் கிராமத்தில் உறவினரிடமிருந்து எட்டு ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அவர் கரும்புகளை விளைவிக்கிறார். அவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு வறண்டு போனதால் அங்கு விவசாயத்தை கைவிட்டார். அவர் சொல்கிறார், “நிலத்தில் பயிரிட நான் [2019-20ஆம் ஆண்டுகளில்] ரூ.80,000 செலவிட்டேன். எனது உறவினர் குறைந்த தொகையில் வாடகைக்கு கொடுத்தார். பொதுவாக ஏக்கருக்கு ரூ.20,000 வரை வாடகை இருக்கும்.”
மொத்தமுள்ள ரூ.8.5 லட்சம் தொகையில் மயூரா சர்க்கரை ஆலை ரூ.4 லட்சம் மட்டுமே அளித்துள்ளது என்கிறார் பாபு நாயுடு. “மீதித் தொகை நிலுவையில் உள்ளது. விவசாயம் செய்யவே விவசாயிகளுக்கு பணம் தேவைப்படுகிறது.”
சித்தூர் மற்றும் YSR மாவட்டங்களில் (கடப்பா என்றும் அறியப்படுகிறது) மயூரா சர்க்கரை ஆலையிடமிருந்து நிலுவை தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் இப்போதும் காத்திருக்கின்றனர். “எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த நினைத்தாலும், அப்படி செய்ய முடிவதில்லை,” என்று கூறும் சுப்பா ரெட்டி 2020 மார்ச் மாதம் அறிவித்த கோவிட்-19 ஊரடங்கு பல போராட்டங்களை நடத்தவிடாமல் தடுத்துவிட்டது என்றார்.
ஆலைக்கு கரும்பு விநியோகித்த 14 நாட்களுக்குள் விவசாயிகள் தங்களின் நிலுவையைப் பெற வேண்டும். 1996 கரும்பு (கட்டுப்பாடு) உத்தரவுப்படி 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தைச் செலுத்த தவறும் ஆலைகள் பிறகு வட்டியுடன் அளிக்க வேண்டும் என்கிறது. தவறும் பட்சத்தில், 1864 ஆந்திர பிரதேச வருவாய் மீட்பு சட்டத்தின்படி கரும்பு ஆணையர் ஆலையின் சொத்துகளை ஏலம் விடலாம்.
சித்தூரின் புச்சிநாயுடு கண்டிரிகா மண்டலத்தில் உள்ள மயூரா சர்க்கரை ஆலை 2018ஆம் ஆண்டு அடைக்கப்பட்டு, முழு செயல்பாடும் 2019 பிப்ரவரியுடன் மூடப்பட்டது. எனினும் ஆலை நிர்வாகம் 2019ஆகஸ்ட் வரை துண்டு துண்டாக விவசாயிகளுக்கு பணம் கொடுத்துள்ளது. இன்னும் ரூ.36 கோடி வரை நிலுவை தொகை உள்ளது.
நிலுவை தொகையை மீட்பதற்காக ஆலையின் ரூ.50 கோடி மதிப்பிலான 160 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாக தெரிவிக்கிறார் சித்தூர் மாவட்ட கரும்பு துணை ஆணையர் ஜான் விக்டர். 2020 நவம்பர் 4ஆம் தேதி ஏலத்திற்கு செல்லும் முன் மயூரா சுகர்ஸ் ஆலைக்கு ஏழு அறிவிப்பாணைகள் அனுப்பப்பட்டன. ஒருவர் மட்டுமே ஏலத்திற்கு வந்தார். அதுவும் குறைந்த விலைதான் கிடைத்தது என்கிறார் விக்டர். பிறகு மயூராவின் சார்பில் கரும்பு ஆணையருக்கு வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட்டது. “மயூரா சுகர்ஸ் ஆலையின் நிர்வாகம் 2020 டிசம்பர் 31ஆம் தேதி காசோலை அளித்தனர்,” என்கிறார் விக்டர். “நாங்கள் அதை வங்கியில் டெபாசிட் செய்தபோது திரும்பி வந்துவிட்டது.”
அது ரூ.10 கோடிக்கான காசோலை. “ஆனால் மயூரா சுகர்ஸ் விவசாயிகளுக்கு ரூ.36 கோடி அளிக்க வேண்டும்,” என்கிறார் அனைத்திந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் குழு உறுப்பினர் பி. ஹேமலதா. “சொத்துகளை விற்ற பிறகு ஆலை நிர்வாகம் ஜனவரி 18ஆம் தேதி [2021] கடன்களை செலுத்தும் என்று எங்களிடம் சொன்னார்கள். ஆனால் விவசாயிகளுக்கு எந்தப் பணமும் கிடைக்கவில்லை.”
சித்தூரில் மயூரா நிறுவனம் மட்டுமே விவசாயிகளிடம் நிலுவை வைக்கவில்லை. நிந்திரா மண்டலில் நதேம்ஸ் சுகர் எனும் தனியார் நிறுவனமும் 2019-20 ஆண்டுகளில் கொள்முதல் செய்த கரும்பிற்கு விவசாயிகளுக்குப் பணம் தரவில்லை.
நதேம்ஸ் சுகர் ஆலையின் விவசாயிகள் கூட்டமைப்பின் செயலாளர் தாசரி ஜனார்தன் கருத்துபடி, விவசாயிகளுக்கு உரிய பணம் கொடுக்கப்படும் என்று நதேம்ஸ் நிர்வாகம் உறுதி அளித்தது. “ஆனால் ஊரடங்கு [2020] எங்களுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்திவிட்டது. நிர்வாக இயக்குநர் லண்டனில் சிக்கிக் கொண்டதால் கடனை அளிக்க முடியாது என அவர்கள் கூறிவிட்டனர்.”
2020 செப்டம்பர் வரை விவசாயிகளுக்கு நதேம்ஸ் ஆலை ரூ.36.67 கோடி வரை கொடுக்க வேண்டி உள்ளது, என்கிறார் விக்டர். ஆலையின் இயந்திரங்கள் 2020 செப்டம்பர் 19ஆம் தேதி ஏலத்தில் விடுவதாக இருந்தது. “ஆனால் ஆலையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறப்பட்டது.”
2021 ஜனவரி மாதம் நதேம்ஸ் சில கடன்களை அடைத்தது. “இப்போது வரை விவசாயிகளுக்கு நாங்கள் ரூ.32 கோடி தர வேண்டும்,” என்று நிறுவன இயக்குநர் ஆர். நந்த குமார் அந்த மாதம் தெரிவித்தார். “நான் நிதிகளை ஏற்பாடு செய்கிறேன். மாத இறுதியில் [ஜனவரி] விவசாயிகளுக்கு கொடுத்துவிட்டு, கரும்புகளை பிழிய தொடங்குவோம். ஆலையை காப்பாற்ற நான் பணம் திரட்டி வருகிறேன்.” ஆனால் விவசாயிகள் எதுவும் பெறவில்லை.
ஆந்திர பிரதேசத்தில் சர்க்கரை ஆலைகளின் நிலையும் நன்றாக இல்லை, என்கிறார் நந்த குமார். அவர் இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் (ISMA) ஆந்திர மாநிலத் தலைவராக உள்ளார். “ஒரு காலத்தில் 27 சர்க்கரை ஆலைகள் இருந்தன, இப்போது ஏழு மட்டுமே செயல்படுகின்றன.”
கொள்கைகளில் உள்ள குறைபாடுகளே பிரச்னையின் ஆணிவேர் என்கின்றனர் விவசாய தலைவர்கள். சர்க்கரையின் சில்லறை விலைக்கும், கரும்புக்கான நியாயமான மற்றும் ஊதிய விலைக்கும் பொருத்தமில்லாதது முதன்மை காரணங்களில் ஒன்று.
நிதி ஆயோகின் 2019 கரும்பு மற்றும் சர்க்கரை தொழிற்சாலைகள் குறித்த அளித்த அறிக்கையில், விற்பனை விலையை விட சர்க்கரை உற்பத்தி விலை அதிகமாக உள்ளதாக ISMA குறிப்பிட்டுள்ளது . “ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க ரூ.37-38 வரை செலவாகிறது. ஆனால் அது சென்னைக்கு ரூ. 32க்கும், ஹைதராபாத்திற்கு ரூ.31க்கும் விற்கப்படுகிறது,” என்கிறார் நந்த குமார். “கடந்தாண்டு [2019-20] எங்களுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.30 கோடி.”
நிந்திரா மண்டலில் உள்ள குரப்பா நாயுடு கந்திரிகா கிராமத்தில் தனது 15 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்யும் ஏ. ராம்பாபு நாயுடு, சர்க்கரையின் சில்லறை விலையை நிர்ணயிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என நினைக்கிறார். “ஏன் ஒரு கிலோ ரூ.50க்கு சர்க்கரை விற்கப்பட கூடாது? மற்ற தொழில்களில் அவர்களின் உற்பத்திக்கு விலையை முடிவு செய்ய முடிகிறது என்றால் ஏன் சர்க்கரை தொழிலுக்கு மட்டும் அந்த அதிகாரம் இல்லை?”
சர்க்கரை தொழிற்சாலை பணமின்றி முடங்கியுள்ளது. “அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருவதில்லை,” என்கிறார் நந்த குமார். “மூலதனத்திற்கு கூட நிதியுதவி கிடைப்பதில்லை.”
சிறு நிறுவனங்கள் விவசாயிகளின் தேவைகளுக்கு சொந்த கடன்களை அளிக்கிறது. “எங்களின் பிற பயிர்களுக்கு கடனில்தான் உரம் வாங்குகிறோம்,” என்கிறார் விவசாய பணியாளர்களுக்கு செலுத்த கடன் வாங்கியுள்ள ஜனார்தன். “கரும்பு விவசாயிகள் பணியாளர்களுக்கு கூலி வழங்குவதற்கு சர்க்கரை ஆலைதான் இயல்பாகவே பணம் தருகிறது. ஆனால் நான் ரூ.50,000 கடன் வாங்கித்தான் கொடுத்தேன். அப்பணத்திற்கான வட்டியை இப்போது நான் செலுத்தி வருகிறேன்.”
குறைந்த சர்க்கரை விலைகள் தொகுக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பயனளிக்கின்றன, என்கிறார் மாநில விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவரான மங்கதி கோபால் ரெட்டி. “விலைகள் பெரிய நிறுவனங்களின் நலனுக்கு உதவுகின்றன.” மென்பானங்கள், இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த முப்பதாண்டுகளில் நாட்டில் வளர்ந்துள்ளன. அவை சர்க்கரை பயன்பாட்டு முறையை மாற்றி அமைத்துள்ளன. இதுபோன்ற பெரிய நுகர்வோர் சர்க்கரை உற்பத்தியில் 65 சதவீதத்தை நுகர்வதாக செயல் குழுவிற்கு அளித்த அறிக்கையில் ISMA குறிப்பிடுகிறது.
இந்தியா உபரி சர்க்கரையை உற்பத்தி செய்கிறது என்கிறார் நந்தகுமார். “அது குறைக்கப்பட வேண்டும். கொஞ்சம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்போது கொஞ்சம் மட்டும் எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்படுகிறது. இப்போக்கு தொடர்ந்தால் சந்தையும் நிலைப்பெறும்.”
எத்தனால் கலந்த பெட்ரோல் எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் தொழிலதிபர்கள் கடன் பெறுகின்றனர். இதன் மூலம் சர்க்கரையின் துணைப் பொருளான மொலாசஸ் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறுது. “எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திருப்பிவிடப்படுவது சந்தையில் மிதமிஞ்சி இருப்பதை குறைக்கும்,” என்கிறார் நந்த குமார்.
2020 அக்டோபரில் சர்க்கரை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு பணம் தருவதை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு கரும்பு சார்ந்த மூலப் பொருட்களில் பெறும் எத்தனாலுக்கு கூடுதல் விலையை நிர்ணயித்துள்ளது ,
ஆனால் விவசாய தலைவர் ஜனார்தன் சமாதானம் அடையவில்லை. “சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் பிற தேவைகளுக்கு பணத்தை திருப்பி விடுவது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கிறது,” என்கிறார்.
மறுசுழற்சி ஆலையில் நதேம்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது இன்னும் கவலை அளிக்கிறது. சர்க்கரை ஆலை உற்பத்தி செய்யும் கூடுதல் மின்சாரம் மின் விநியோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. “ஆலையில் 7.5 MW உற்பத்தி திறன்கொண்டதை நிர்மானித்துள்ளோம், ஆனால் எங்கள் விலையில் வாங்குவதற்கு [மாநில] அரசு தயாராக இல்லை. மின்பரிமாற்றத்திற்கான விலைகளும் யூனிட்டிற்கு ரூ.2.50 முதல் ரூ.3 என சரிந்துள்ளது,” என்கிறார் நிறுவன இயக்குநர். இந்த விலையானது உற்பத்தி விலையை விட குறைவு என்கிறார்.
பல சர்க்கரை மில்களின் மறுசுழற்சி ஆலைகள் செயல்பாடற்ற சொத்தாக மாறியுள்ளன என விளக்குகிறார் நந்த குமார். “இதில் முதலீடு செய்துவிட்டதால், எங்களுக்கு வேறு மாற்று கிடையாது. அரசின் கொள்கை காரணமாக எங்கள் உற்பத்தி ஆலையை 20 MW என குறைத்துக் கொண்டோம். கொள்கை மாறி, நிலைமை முன்னேறும் வரை நாங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும்.”
கரும்பு உற்பத்தியில் ஆந்திராவில் இரண்டாவது இடம் வகிக்கும் சித்தூரில் நிலைமை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரின் 66 மண்டலங்களில் எட்டு ஆண்டுகளில் பயிரிடுவது பாதியாக குறைந்துள்ளதை மாவட்ட நிர்வாகத்தின் பதிவேடு காட்டுகிறது. 2011ஆம் ஆண்டு 28,400 ஹெக்டேரில் செய்யப்பட்ட கரும்பு சாகுபடி இப்போது 2019ஆம் ஆண்டு வெறும் 14,500 ஹெக்டேர் என குறைந்துள்ளது.
ஒதுக்கப்பட்ட ஆலைகளில் மட்டுமே பயிர்களை விற்க வேண்டும் என்பதோடு பணத்தைப் பெறுவதில் தாமதம் அடைவதால் கரும்பு விவசாயிகள் அதிக விளைச்சல் கிடைக்காவிட்டாலும் பிற பயிர்களை பயிரிட முயல்கின்றனர். பயிரிடுவதற்கான செலவும் இப்போது விவசாயிகளையே சார்ந்துள்ளது என்கிறார் சுப்பா ரெட்டி.
பாபு நாயுடுவின் பெரிய குடும்பம் உதவிக்கு பிறரை எதிர்பார்க்கும் நிலை ஏற்படுகிறது. “என் உறவினர்களின் உதவியால் சென்னையில் பொறியியல் கல்லூரியில் என் மகள் சேர்க்கப்பட்டாள்,” என்கிறார் அவர். “என்னுடைய நிலுவை தொகை முறையாக வந்திருந்தால் உறவினர்களிடம் உதவி கேட்கும் நிலை வந்திருக்காது.”
சர்க்கரை தொழிற்சாலைகள் எப்படி நடத்தினாலும் விவசாயிகளுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்கிறார் சுப்பா ரெட்டி. அவர் சொல்கிறார், “எங்கள் பிள்ளைகள் கல்விக் கட்டணம் செலுத்தத் தவறியதால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதுபோன்ற சூழல்களில் விவசாயிகள் ஏன் தற்கொலை பற்றி சிந்திக்க மாட்டார்கள்?”
தமிழில்: சவிதா