“சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவருடைய புகைப்படம் சுவரில் இருந்திருக்காது. இன்று அவர் எங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்” என்கிறார் ஷீலா தாரே.
அவரது கனவர் அசோக்கின் புகைப்படத்திற்கு கீழ், நீல வண்ணப் பின்னனியில், ‘இறப்பு:
30/05/2020’ என மராத்தியில் எழுதப்பட்டுள்ளது.
மேற்கு மும்பையின் பாந்த்ராவில் உள்ள கேபி பாபா மாருத்துவமனையில் இறந்தார் அசோக். இறந்ததற்கான காரணம் ‘சந்தேக’ கோவிட்-19 நோய்தொற்று. 46 வயதான அவர், கிரேட்டர் மும்பை மாநகராட்சியில் (பிஎம்சி) தூய்மைப் பணியாளராக இருந்தார்.
ஷீலா, 40, கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்கிறார். கிழக்கு மும்பையின் செம்பூரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் 269 சதுர அடி கொண்ட அவர்களின் வாடகை வீட்டில் அமைதி சூழ்ந்துள்ளது. மகன்கள் நிகேஷ் மற்றும் ஸ்வப்னில், மகள் மனிஷாவும் தங்கள் அம்மா பேசுவதற்காக காத்திருக்கின்றனர்.
ஷீலா கூறுகையில், “ஏப்ரல் 8 – ஏப்ரல் 10, இந்த இடைப்பட்ட நாளில் பந்தப்பில் உள்ள இவரது
சவுக்கியில்
பணியாற்றும் முகடமிற்கு கொரோனா (கோவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த
சவுக்கியை
மூடிவிட்டு, அனைத்து பணியாளர்களும் நகுர்
சவுக்கிக்கு
(நகரின் S வார்டில் உள்ள அதேப் பகுதியில்) மாற்றப்பட்டனர். ஒரு வாரம் கழித்து மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் கூறினார்.”
குப்பை அள்ளும் லாரியில் பணியாற்றுகிறார் அசோக். பந்தப்பில் உள்ள பல்வேறு இடங்களில் இவர்கள் குப்பையை சேகரிக்கிறார்கள். அவர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணியவில்லை. அவருக்கு சர்க்கரை நோய் வேறு இருந்தது. தனக்கு இருக்கும் அறிகுறிகளை தலைமை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார். ஆனால் அவர் கேட்ட நோய் விடுப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை புறக்கணிக்கப்பட்டன. நகுர்
சவுக்கிக்கு
அசோக்கோடு தானும் சென்ற நாளை நினைவில் வைத்துள்ளார் ஷீலா.
ஷீலா கூறுகையில், “ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்குமாறு மேலதிகாரியிடம் கேட்பதற்காக நானும் அவரோடு சென்றேன்.” சம்பளத்துடன் கூடிய விடுப்பு 21 நாட்கள் இருந்தும், அவர் ஒருநாளும் எடுத்ததில்லை. நாற்காலியில் அமர்ந்திருந்த சாகேப், “எல்லாரும் விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டால், இந்தச் சூழ்நிலையில் யார் பணியாற்றுவார்கள்?” என எங்களிடம் கேட்டார்.
அதனால் ஏப்ரல், மே மாதம் முழுவதும் பணியாற்றினார் அசோக். அவருடன் சேர்ந்து பணியாற்றும் சச்சின் பங்கர் (அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், “அசோக் சிரமப்பட்டு வேலை செய்வதை நானும் பார்த்தேன்.”
“அவர் உடனடியாக சோர்வடைந்ததோடு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நாங்கள் கூறுவதை சாகேப் கேட்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? எங்கள்
சவுக்கியில்
உள்ள எந்தப் பணியாளர்களுக்கும் – நிரந்தரம் அல்லது ஒப்பந்த தொழிலாளர் – கோவிட்-19 பரிசோதனை எடுக்கப்படவில்லை. முகடமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும், உங்களுக்கு ஏதாவது அறிகுறிகள் இருக்கிறதா என யாரும் கேட்கவில்லை. மற்றொரு
சவுக்கிக்கு
செல்லுமாறு கூறினார்கள், அவ்வுளவுதான்.” என என்னிடம் போனில் கூறினார் சச்சின். (சச்சின் மற்றும் பிற தொழிலாளர்களின் உதவியோடு முகடமின் உடல்நிலையை அறிந்துகொள்ள அவரை தொடர்புகொண்டார் இந்த நிருபர். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை.)
ஜூலை மாத கடைசி வாரத்தில்தான், சச்சினுக்கும் அவரது சக பணியாளர்களுக்கும் அவர்கள் பணியாற்றும் பகுதியிலேயே பிஎம்சி நடத்தும் முகாமில் வைத்து கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. “எனக்கு எந்த அறிகுறியோ அல்லது உடல்நலக் கோளாறோ இல்லை. ஆனாலும் சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், மார்ச்-ஏப்ரலில் எங்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது” என்கிறார் சச்சின்.
ஏப்ரல் 5-க்குள், S வார்டில் 12 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது தெரியவந்தது. ஏப்ரல் 22-க்குள் இந்த எண்ணிக்கை 103-ஆக உயர்ந்தது. ஜூன் 1, அசோக் இறந்த மறுநாள், அந்த வார்டில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,705 ஆக இருந்தது. ஜூன் 16-க்குள் இந்த எண்ணிக்கை 3,166-ஆக உயர்ந்தது என இந்த நிருபரிடம் கூறினார் பிஎம்சி சுகாதார அலுவலர்.
நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மும்பையிலுள்ள அனைத்து வார்டுகளிலும் கோவிட் தொடர்பான கழிவுகள் அதிகரிக்க தொடங்கின. பிஎம்சி-யின் திடக்கழிவு மேலாண்மை துறையிடம் பெறப்பட்ட தரவுகளின் படி, மார்ச் 19 மற்றும் மார்ச் 31-க்கும் இடைபட்ட நாட்களில் 6414 கிலோ கோவிட்-19 கழிவுகள் மும்பையில் உற்பத்தியாகியுள்ளன. ஏப்ரலில், நகரின் கோவிட்-19 கழிவு (தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் சேர்த்து) 120 டன்னுக்கு –
112,525 கிலோ – மேல் அதிகரித்தது. மே மாத இறுதிக்குள், அதாவது அசோக் இறந்த சமயத்தில், இந்த எண்ணிக்கை தோராயமாக மாதத்திற்கு 250 டன்னாக அதிகரித்தது.
இந்தக் கழிவை எடுப்பது – இவை தனியாக பிரிக்கப்படாமல், மும்பையில் கிலோ கணக்கில் உற்பத்தியாகும் பிற குப்பைகளோடு கலக்கப்படுகிறது - நகரின் தூய்மை பணியாளர்களின் பொறுப்பாகும். “தினமும் நிறைய முகக்கவசம், கையுறைகள், தூக்கியெறியப்பட்ட திசு காகிதங்களை குப்பை சேகரிக்கும் இடங்களிலிருந்து எடுப்போம்” என்கிறார் சச்சின்.
அடிக்கடி உடல்நல பரிசோதனை மற்றும் தங்கள் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கான பிரத்யேக மருத்துவமனை வேண்டும் என பல தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். (பார்க்க:
அத்தியாவசிய சேவைகளும் பறிபோகும் உயிர்களும்
) ஆனால் பிஎம்சி-யின் தூய்மை பணியாளர்கள் – நிரந்தர ஊழியர்களாக 29,000 பேரும், ஒப்பந்த தொழிலாளராக 6,500 பேரும் – “கோவிட் பாதுகாவலர்கள்” என அழைக்கப்பட்டாலும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் மருத்துவ வசதிகளும் தேவை என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
“எங்கள் கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட்டதில்லை. எல்லா முன்னெச்சரிக்கைகளும் கவனிப்பும் அமிதாப் பச்சனின் குடும்பங்களுக்குதான். ஊடகம் மற்றும் அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு அதிக கவனம் கிடைக்கிறது. நாங்கள் வெறும் தூய்மை பணியாளர்கள் தானே” என்கிறார் 45 வயதான தாதாராவ் படேகர். இவர் பிஎம்சி குப்பை லாரியில் M மேற்கு வார்டில் பணியாற்றுகிறார்.
சச்சின் கூறுகையில், “முகக்கவசமோ, கையுறையோ அல்லது கிருமி நாசினியோ மார்ச் – ஏப்ரல் வரை எங்களுக்கு தரப்படவில்லை. தனது
சவுக்கியில்
உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மே மாத கடைசியில்தான் N95 முககவசம் வழங்கப்பட்டது. அதுவும் அனைவருக்கும் இல்லை. 55 பணியாளர்களில் 20-25 பேருக்குதான் முகக்கவசமும், கையுறையும், 4-5 நாட்களில் முடிந்து போகக்கூடிய 50மிலி கிருமி நாசினியும் கிடைத்தது. நான் உட்பட மீதமுள்ள பணியாளர்களுக்கு ஜூன் மாதம்தான் முகக்கவசம் கிடைத்தது. முகக்கவசமும் கையுறையும் கிழிந்து போனால், புது சரக்குகள் வர 2-3 வாரங்கள் ஆகும். அதுவரை காத்திருங்கள் என எங்கள் மேற்பார்வையாளர் கூறிவிடுவார்.”
‘துப்புரவு பணியாளர்களே கோவிட் பாதுகாவலர்கள்’ என முழங்குவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களுக்கான பாதுகாப்பும் அக்கறையும் எங்கே? கையுறையும் N95 முககவசமும் இல்லாமல் அவர் பணியாற்றியுள்ளார். அவர் இறந்த பிறகு, துப்புரவு பணியாளரின் குடும்பம் எப்படி வாழும் என யார் அக்கறைப்பட போகிறார்கள்?” என வேதனையில் கேட்கிறார் ஷீலா. தாரே குடும்பம் நவ புத்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மே மாத கடைசி வாரத்தில் அசோக்கின் நிலைமை மோசமானது. “அப்போது அப்பாவிற்கு காய்ச்சல் இருந்தது. அடுத்த 2-3 நாட்களில் எங்கள் எல்லாருக்கும் காய்ச்சல் வந்தது. இது சாதாரண காய்ச்சல்தான் என உள்ளூர் (தனியார்) மருத்துவர் கூறினார். நாங்கள் மருந்து சாப்பிட்டு குணமாகிவிட்டோம். ஆனால் அப்பா தொடர்ந்து உடல்நலமில்லாமல் இருந்ததாக” கூறுகிறார் 20 வயதாகும் மனிஷா. இவர் கிழக்கு கதோபரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். இது கோவிட்தான் என குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் மருத்துவர்கள் பரிந்துரை (அந்த சமயத்தில் அத்தியாவசியம்) இல்லாததால் அசோக்கால் அரசாங்க மருத்துவமனையில் பரிசோதனை செய்ய முடியவில்லை.
காலை 6 முதல் மதியம் 2 வரையிலான வேலை நேரத்திற்கு சென்றிருந்த அசோக், மே 28 அன்று காய்ச்சல் குறைந்து, மிகவும் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பினார். உணவருந்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டார். இரவு 9 மணிக்கு எழும்பிய போது, வாந்தி எடுக்க தொடங்கினார். “அவருக்கு காய்ச்சலோடு லேசான மயக்கமும் இருந்தது. மருத்துவரிடம் செல்ல மறுத்து அப்படியே தூங்கிவிட்டார்” என்கிறார் ஷீலா.
அடுத்த நாள் காலை, மே 29 அன்று, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என ஷீலா, நிகேஷ், மனிஷா மற்றும் ஸ்வப்னில் முடிவு செய்தனர். காலை 10 மணி முதல் 1 மணி வரை, பல மருத்துவமனைக்குச் சென்றனர். “இரண்டு ரிக்ஷாக்களை பிடித்தோம். ஒன்றில் அம்மாவும் அப்பாவும், மற்றொன்றில் நாங்கள் மூவரும் சென்றோம்” என்கிறார் 18 வயதாகும் ஸ்வப்னில். இவர் செம்பூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்து வருகிறார்.
“எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை என கூறினர். ராஜவதி மருத்துவமனை, ஜாய் மருத்துவமனை மற்றும் கே.ஜி சோமையா மருத்துவமனைக்கு நாங்கள் சென்றோம். தரையில் வேண்டுமானால் படுத்துக் கொள்கிறேன், எனக்கு சிகிச்சை அளியுங்கள் என கே.ஜி.சோமையா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் தன் தந்தை கெஞ்சியதாக” கூறுகிறார் 21 வயதான நிகேஷ். இரண்டு வருடங்களுக்கு முன் பி.எஸ்சி படித்து முடித்த இவர், தற்போது வேலை தேடி வருகிறார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் தன்னுடைய பிஎம்சி பணியாளர் அடையாள அட்டையை அசோக் காண்பித்தும் எந்தப் பயனும் இல்லை.
இறுதியாக, பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனையில் அசோக்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சளி மாதிரியை எடுத்துக்கொண்டனர். “பின்பு அவரை கோவிட்-19 தனிமை அறைக்கு அழைத்துச் சென்றனர்” என்கிறார் ஸ்வப்னில்.
அசோக்கின் துணிகள், பற்குச்சி, பற்பசை, சோப் போன்றவற்றை கொடுக்க அந்த அறைக்கு மனிஷா சென்றபோது, தரையெங்கும் சிறுநீர் நாற்றமும் உணவும் சிந்திக் கிடந்தன. “அறைக்கு வெளியே எந்தப் பணியாளரும் இல்லை. மெல்ல உள்ளே நுழைந்து பையை வாங்கிக் கொள்ளுமாறு என் அப்பாவை அழைத்தேன். தனது ஆக்சிஜன் கவசத்தை கழற்றிவிட்டு, கதவருகே வந்து என்னிடமிருந்து பையை வாங்கிச் சென்றார்” என நினைவுகூர்கிறார் மனிஷா.
பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் அசோக் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் கூறி தாரே குடும்பத்தை மருத்துவமனையிலிந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர் மருத்துவர்கள். அன்றிரவு 10 மணிக்கு தனது கனவரிடம் போனில் பேசினார் ஷீலா. “அவரது குரலை கேட்பது இதுதான் கடைசி முறை என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. என்னிடம் பேசுகையில் இப்போது நன்றாக இருப்பதாக கூறினார்.”
அடுத்த நாள் காலை, மே 30, ஷீலாவும் மனிஷாவும் மருத்துவமனைக்குச் சென்றனர். “உங்கள் நோயாளி அதிகாலை 1.15 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் எங்களிடம் கூறினர். ஆனால் நேற்று இரவுதானே அவரிடம் பேசினேன்…..” என்கிறார் ஷீலா.
அதிர்ச்சியிலும் துக்கத்திலும் இருந்ததால் அந்த சமயத்தில் தாரே குடும்பத்தால் அசோக் இறந்ததற்கான காரணத்தை விசாரிக்க முடியவில்லை. “நாங்கள் உணர்வின்றி இருந்தோம். உடலை எடுத்துச் செல்வதற்கான எழுத்துப்பூர்வ வேலை, ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்வது, பணம், அம்மாவை சமாதனப் படுத்துவது எனப் பல விஷயங்களை செய்து கொண்டிருந்ததால், அப்பா இறந்ததற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்கிறார் நிகேஷ்.
அசோக்கின் இறுதிச்சடங்கு முடிந்து இரண்டு நாள் கழித்து, இறப்பிற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தருமாறு கேட்க பாபா மருத்துவமனைக்குச் சென்றனர் தாரே குடும்பத்தினர். அசோக்கின் மருமகனான 22 வயது வசந்த் மகரே கூறுகையில், “ஜூன் மாத்ததில் 15 நாட்கள் மருத்துவமனைக்கு நடையாய் நடந்தோம். அறிக்கை முழுமையானதாக இல்லை. அசோக்கின் இறப்புச் சான்றிதழை நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள் என மருத்துவர் கூறிவிட்டார்.”
ஜூன் 24, முலுந்தில் (இங்குதான் அசோக் பணியாளராக பதிவு செய்துள்ளார்) உள்ள T வார்டைச் சேர்ந்த பிஎம்சி அதிகாரிகள் அசோக் இறந்ததற்கான காரணத்தை கேட்டு கடிதம் எழுதிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதிலை அளித்தது: இறப்பிற்கான காரணம் ‘சந்தேக கோவிட்-19’. மருத்துவமனையில் சேர்த்தப் பிறகு அசோக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தொண்டைலிருந்து எடுக்கப்பட்ட சளி போதுமானதாக இல்லை என்றும் மறுபடியும் நோயாளியை பரிசோதனைக்கு அனுப்புமாறும் மே 30, இரவு 8.11 மணிக்கு மெட்ரோபோலிஸ் ஆய்வகம் மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால் நோயாளி ஏற்கனவே இறந்து போனதால், மறுபடியும் சளியை எடுப்பது சாத்தியமில்லை. ஆகையால், ‘சந்தேக கோவிட்-19’ மரணம் என நாங்கள் குறிப்பிட்டோம்.”
பாபா மருத்துவமனையில் அசோக்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவரை இந்த நிருபர் பல முறை தொடர்பு கொண்டும் எந்தப் பதிலும் அவர் அளிக்கவில்லை.
அசோக் போன்ற ‘கோவிட்-19 பாதுகாவலர்கள்’ குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வழிவகை செய்யும் தீர்மானத்தை மே 29, 2020
அன்று மகராஷ்ட்ரா அரசாங்கம் நிறைவேற்றியது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் கணக்கெடுப்பு, தடமறிதல், கண்காணித்தல், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் 50 லட்ச ரூபாய்க்கு விரிவான தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
ஜூன் 8, 2020 அன்று, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது பிஎம்சி. எந்தவொரு ஒப்பந்த தொழிலாளர்/ வெளியிலிருந்து வந்த பணியாளர்/ தினக்கூலி/ கௌரவ பணியாளர்கள் யாரும் கோவிட்-19 பணிகளின் போது இறந்தால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ. 50 லட்சம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அந்தச் சுற்றறிக்கை கூறுகிறது.
அசோக் போல் இறப்பதற்கு அல்லது மருத்துவமனையில் சேர்வதற்கு முன் 14 நாட்கள் பணியில் இருந்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை கோவிட்-19 பரிசோதனை போதுமான அளவில் செய்யப்படவில்லை என்றாலோ அல்லது உறுதி செய்யப்படவில்லை என்றாலோ, பிஎம்சி அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். சம்மந்தப்பட்ட ஊழியர் கோவிட்-19 தொற்றால்தான் இறந்தார் என்பதை உறுதி செய்ய, அவர்கள் நோயாளியின் நோய் விவரங்களையும் மருத்துவ ஆவணங்களையும் ஆராய்வார்கள்.
ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில், பிஎம்சி திடக் கழிவு மேலாண்மை துறையின் தொழிலாளர் நல அதிகாரி வழங்கிய தரவுகளின் படி, மொத்தமுள்ள 29,000 நிரந்தர பணியாளர்களில் 210 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 37 பேர் இறந்துள்ளதாகவும், மீதமுள்ள 166 பேர் குணமாகி பணிக்கு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்த எந்த ஆவணமும் இல்லை என அந்த அதிகாரி கூறினார்.
இறந்துபோன 37 தூய்மை பணியாளர்களில், 14 பேரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையான 50 லட்சத்திற்கு விண்ணப்பத்துள்ளனர். ஆகஸ்ட் 31 வரை, இரண்டு குடும்பங்கள் காப்பீடு தொகையைப் பெற்றுள்ளன.
அசோக்கின் இறப்பிற்கான காரணத்தை எழுத்துப்பூர்வ ஆவணமாக பெற்றபிறகு, ரூ. 50 லட்ச காப்பீடு தொகையை வாங்குவதற்காக பிஎம்சி-யின் T வார்ட் அலுவலகத்திற்கு நடையாய் நடந்தனர் தாரே குடும்பத்தினர். நோட்டரி கட்டணங்கள், நகல்கள், ஆட்டோவில் செல்வதற்கான செலவுகள் மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து இதுவரை 8,000 ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது.
அசோக்கின் சம்பள கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாததால், 9,000 ரூபாய்க்கு தனது அரை டோலா (5 கிராம்) தங்க தோடை அடமானம் வைத்துள்ளார் ஷீலா. “ஒவ்வொரு முறையும் சான்றளித்தப் பிறகு ஆவணத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 50 லட்ச ரூபாய் தராவிட்டாலும் பரவாயில்லை, விதிகளின் படி தந்தையின் வேலையை என் மூத்த மகனுக்கு பிஎம்சி கொடுக்க வேண்டும்” என்று கூறியபடியே, எல்லா சான்றிதழ்களையும் ஆவணங்களையும் என்னிடம் அவர் காண்பித்தார்.
ஆகஸ்ட் 27 அன்று, இந்த நிருபர், T வார்டின் இணை ஆணையரிடம் பேசியபோது, இதுதான் அவரது பதிலாக இருந்தது: “ஆமாம், அவர் எங்கள் ஊழியர்தான். இழப்பீடு பெற அவரது கோப்புகளை அனுப்பியுள்ளோம். பிஎம்சி அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைப்பதற்கான முடிவு வர வேண்டியுள்ளது. இது சம்மந்தமாக பிஎம்சி விரைந்து பணியாற்றி வருகிறது.”
அசோக்கின் வருமானத்தில்தான் இவர்களின் குடும்பம் நடந்து வந்தது. ஜூன் மாதத்திலிருந்து அருகிலுள்ள இரண்டு வீடுகளில் சமையலராக வேலைப் பார்த்து வருகிறார் ஷீலா. “தற்போது செலவை சமாளிப்பது கடினமாக உள்ளது. நான் இதற்கு முன் வேலை செய்ததில்லை. ஆனால் இப்போது கண்டிப்பாக செய்தாக வேண்டும். என் குழந்தைகளில் இரண்டு பேர் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ஷீலா. இவரின் மூத்த சகோதரர், பகவான் மகரே, 48, நவி மும்பை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக இருக்கிறார். நிலுவையில் உள்ள மாத வாடகையான 12,000 ரூபாயைக் கட்டுவதற்கு இவர்தான் உதவி செய்தார்.
2016-ம் ஆண்டில்தான் ‘நிரந்தர’ தூய்மைப் பணியாளராக ஆனார் அசோக். அதுவரை ஒப்பந்த தொழிலாளராக ரூ. 10,000 சம்பளமாக பெற்றுவந்தவர், அதன்பிறகு மாதச் சம்பளமாக ரூ. 34,000 பெறத் தொடங்கினார். “அவர் நல்ல சம்பளம் பெறத் தொடங்கியதும் முலுந்தில் உள்ள சேரியிலிருந்து SRA கட்டிடத்திற்கு நாங்கள் மாறினோம். நாங்கள் படிப்படியாக வளர்ந்து வந்தோம்” என்றார் ஷீலா.
அசோக்கின் இறப்பால், தாரே குடும்பத்தின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. “எங்கள் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும். ஏன் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது? ஏன் அவருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் உடனடியாக பரிசோதனை செய்யப்படவில்லை? ஏன் மருத்துவமனையில் அவரைச் சேர்க்க கெஞ்ச வேண்டியிருந்தது? அவர் இறப்பிற்கு யார் பொறுப்பு?” என கேட்கிறார் ஷீலா.
தமிழில்: வி கோபி மாவடிராஜா