58 வயது ரமேஷ் உகார் நவம்பர் 28ஆம் தேதி அதிகாலை எழுந்தார். அவரது மனதில் இரண்டு விஷயங்கள் மட்டுமே இருந்தன. “நான் வாக்களிக்க வேண்டும்,” என்றார் அவர். “அடுத்த நாள் நான் டெல்லி சென்றடைய வேண்டும்.”

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா மாவட்டம் பெட்லாவாட் தாலுக்கா மானஸ்சியா கிராமத்தில் உகார் வசிக்கிறார். அவர்களுக்கு அருகமை இரயில் நிலையம் என்பது சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தூரில் உள்ளது. இந்தூரில் ரயில் ஏறினால் டெல்லியை அடைவதற்கு 14 மணி நேரம் ஆகும். “நேற்றிரவே என் துணிகளை மடித்துவைத்து விட்டேன், பயணத்திற்குத் தேவையான உணவை மனைவி காலையில் தயார் செய்ய சொல்லிவிட்டேன், ” என்ற அவர் நவம்பர் 29ஆம் தேதி டெல்லியில் உள்ள குருத்வாரா ஸ்ரீ பாலா சாஹிப்ஜி முகாம்களில் கம்பு ஏந்தி அமர்ந்திருந்தார். “நான் வாக்களித்துவிட்டு மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டேன். பேருந்து மூலம் மாலையில் இந்தூருக்கு வந்து அங்கிருந்து டெல்லிக்கு நள்ளிரவில் ரயில் ஏறினேன்.”

மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற்றன. 150-200 வேளாண் குழுக்கள், சங்கங்களின் கூட்டமைப்பான அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு நாடெங்கிலும் இருந்து சுமார் 50,000 விவசாயிகளை தலைநகருக்கு கொண்டு வந்தது. நாட்டின் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து கவனத்தை திருப்பும் வகையில் 21நாள் கூட்டம் மற்றும் இரண்டு நாள் பேரணியில் பங்கேற்க அவர்கள் வந்திருந்தனர். 1995 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் நெருக்கடி காரணமாக 3,00,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

PHOTO • Shrirang Swarge

மானஸ்யா கிராமத்தில் ரமேஷ் உகார் பேசுகையில், ‘நான் வாக்களித்தேன். அடுத்த நாள் டெல்லிக்கு வந்தடைந்தேன்’ என்றார்

2008-17 காலகட்டத்தில் மத்திய பிரதேசத்தில் 11,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு பீரோ தெரிவித்துள்ளது. “நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்றார் குருத்வாராவில் நாடெங்கிலும் இருந்து ஒன்று திரண்டுள்ள விவசாயிகளிடையே உரையாற்றிய உகார். ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டிக் கொண்டு விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் தப்பித்துக் கொண்டனர் என்பதை குறிப்பிட்டு பேச்சாளர் விளக்கினார். “அவர் சரியாக செய்துள்ளார்,” உகார் சொல்கிறார். “நரேந்திர மோடியும், ஷிவராஜ் சிங் சவுஹானும் [தற்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர்] விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. நான் எனது வாக்கை செலுத்திவிட்டேன். செல்வந்தவர்கள் பலனைப் பெறுகின்றனர், நாம் தோட்டாக்களை பெறுகிறோம்.”

தனது இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் சோயாபீன் பயிரிடும் உகார் பேசுகையில், “ஒரு குவிண்டால் விதையின் விலை ரூ.4,000. அறுவடை செய்யப்பட்டால் குவிண்டால் ரூ.2,000க்கு விற்கலாம்.” அவர் 2017ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மண்டுசார் போராட்டத்தைக் குறிப்பிட்டார். வெங்காயத்திற்கு நல்ல விலைக் கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஆறு பேரை மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். “ஒரு கிலோ வெங்காயம் ரூ.1க்கு விற்றால் ஒரு விவசாயி எப்படி வாழ முடியும்?” என கேட்டார் உகார்.

நவம்பர் 28ஆம் தேதி காலை 4-5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 120 விவசாயிகள் மானஸ்யாவிற்கு வந்தனர். “வாக்குப்பதிவு நாளுக்குப் பிறகு பேரணி இருந்திருந்தால், இன்னும் நிறையப் பேர் வந்திருப்பார்கள்,” என்றார் உகார். “இம்மாநிலத்தில் விவசாயிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.”

முரணாக, கடந்த சில ஆண்டுகளில் வேளாண் வளர்ச்சி கிட்டதட்ட 20 சதவீதம் அடைந்துள்ளதாக மத்திய பிரதேசம் அரசு கூறுகிறது. மாநில அரசு அண்மையில் 2016க்கான க்ரிஷி கர்மான் விருதை இந்திய குடியரசுத் தலைவரிடம் பெற்றது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இவ்விருதைப் பெற்று வருகிறது.

டெல்லி போராட்டத்திற்காக வந்துள்ள ஹர்தா மாவட்டம் புவான் கேடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தலைவர் கேதர் சிரோஹி பேசுகையில், வேளாண் வளர்ச்சி என்பது தவறானது என்றார். “நிலத்தின் வளர்ச்சிக்கும், காகிதத்தில் சொல்லப்படும் வளர்ச்சிக்கும் வேறுபாடு உள்ளது,” என்றார் அவர். “மத்திய பிரதேசத்தில் வேளாண்மை செழித்தால் ஏன் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? ஏன் விவசாய கடன்கள் அதிகரிக்கின்றன? ஏன் விவசாயிகளால் கடன்களை திருப்பி செலுத்த முடிவதில்லை? இந்த அரசு ஏழைகளுக்கு எதிரான அரசு, விவசாயிகள், தொழிலாளர்கள் பற்றி சிந்திக்காத அரசு.”

PHOTO • Shrirang Swarge
PHOTO • Shrirang Swarge

இடது: குருத்வாரா ஸ்ரீபாலா சாஹிப்ஜியிலிருந்து ராம்லீலா மைதான் நோக்கி பேரணி செல்லும் மத்திய பிரதேச விவசாயிகள். வலது: வேலையிழப்பு காரணமாக சத்ரதி கிராமத்திலிருந்து போராட்டத்திற்கு வந்த ஷர்மிளா முலேவா

அதே நாளில் நவம்பர் 30ஆம் தேதி அன்று, மத்திய பிரதேசத்தின் கார்கோனைச் சுற்றியுள்ள சுமார் 200 பணியாளர்கள் ராம்லீலா மைதானத்திற்கு வந்தனர். டெல்லியில் உள்ள சன்சத் மார்க் (நாடாளுமன்றத் தெரு) நோக்கி புறப்படுவதற்கு முன் அங்கு அவர்கள் திரண்டனர். செஞ்சுரி ஆடைகள் மற்றும் தொழிற்சாலைகள் லிமிடெட் 2017 ஆகஸ்ட் மாதம் மற்றொரு நிறுவனத்திடம் நூல் மற்றும் டெனிம்  ஆலையை விற்றதால் பணியாளர்கள் வேலையிழந்தனர். “எங்களில் சுமார் 1,500 பேர் வேலையிழந்தோம்,” என்கிறார் கார்கோன் மாவட்டம், கஸ்ரவாத் தாலுக்கா, சத்ரதி கிராமத்தைச் சேர்ந்த 45 வயது ஷர்மிளா முலேவா. “அவர்களில் என் கணவரும் ஒருவர். எங்களை ஐந்து மாதங்கள் வேலையில் அமர்த்தி ஒரு மாதத்தில் நீக்கினர். பிறகு மீண்டும் வேலையில் அமர்த்தி நிரந்தர பணி கிடையாது என்றனர். நாங்கள் தற்காலிக பணியாளர்கள் என்பதால் நாங்கள் தேவையில்லை என்றனர்.”

கர்கோனின் ஜவுளி மஸ்தூர் சங்கம் நீதிமன்றங்களுக்குச் சென்று தொழில்துறை விவகாரச் சட்டம் (1947ன் படி) வழக்கு தொடர்ந்தது. இந்தாண்டு மே மாதம் இந்தூர் உயர் நீதிமன்றம் பணியாளர்களுக்கு ஆதரவாக, நிறுவனம் வேலை வழங்குமாறு உத்தரவிட்டது. “ஆனால் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை,” என்றார் முலேவா. “என் கணவர் மாதம் ரூ.10,000 சம்பாதிப்பார். இந்த வருமானம் திடீரென நின்றுவிட்டது. அதிலிருந்து நாங்கள் நிறுவனத்தின் வாசலில் நின்று போராடி வருகிறோம்.”

சில மாதங்களுக்கு முன் சிவராஜ் சிங் சவுஹானையும் பணியாளர்கள் சந்தித்தனர். சில நாட்களில் அரசு பதிலளிக்கும் என்றார் – ஆனால் யாரும் எதுவும் கூறவில்லை. பணியாளர்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு தனது 10 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு பேரணியில் பங்கேற்க வந்துள்ளதாக முலேவா தெரிவித்தார். “நான் இதுவரை இப்படி செய்தது இல்லை. ரயிலில் வந்தது இது இரண்டாவது முறை. அரசின் கவனத்தைப் பெறுவதற்கே இந்த பேரணியை நடத்தினோம். மத்திய பிரதேசத்தில் எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதால், எங்கள் குரலை டெல்லியில் ஒலிக்க வைக்க நினைத்தோம்.”

தமிழில்: சவிதா

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Other stories by Parth M.N.
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha