ஜெயபாலின் இரண்டு அறை கொண்ட செங்கல் மற்றும் தகரக்கூரை கொண்ட வீட்டிற்கு மற்ற பல அலங்கார பங்களாக்கள், அதில் பல மாடிகள், பால்கனிகள், கோபுரங்கள், மாடங்கள் உள்ளன.
அவையனைத்தும் பேப்பர் மற்றும் பசை கொண்டு தயாரிக்கப்பட்டவை.
கடந்த 4-5 ஆண்டுகளாக, ஜெயபால் சவுகான் (19), அவரது சில காலை மற்றும் மதியங்களை இதுபோன்ற பேப்பர் வீடுகளை செய்வதில் செலிவிடுகிறார். அவரது வீடு மத்திய பிரதேச மாநிலம் கன்வா மாவட்டத்தில் உள்ள கரோலி என்ற கிராமத்தில் உள்ளது. அவர் பொறுமையாக பேப்பர்களை சுருட்டி, அவற்றை ஒவ்வொன்றாக வைத்து அடுக்கி, சுவர்போன்ற அமைப்பை உருவாக்கி, பின்னர் அவற்றை பசை வைத்து ஒட்டி கோட்டை போன்ற அமைப்புகளை உருவாக்குகிறார்.
“எனக்கு கட்டிடங்கள் மீதும், அவை எவ்வாறு கட்டப்படுகின்றன என்பதன் மீதும் ஆர்வம் உள்ளது“ என்று அவர் கூறுகிறார்.
ஜெயபால் தனது 13 வயது முதல் அட்டைகள் வைத்து கோயில் போன்ற மாதிரிகளை உருவாக்கி வருகிறார். அவர் மற்றொரு கிராமத்தில் ஒரு திருமண நிகழ்விற்கு சென்றிருந்தபோது, ஒருவரின் வீட்டில் சிறிய கண்ணாடி கோயிலை பார்த்தார். அது அவருக்கு அட்டையை வைத்து அதுபோன்ற உருவங்களை உருவாக்கும் ஆர்வத்தை தூண்டியது. அவர் அதுபோல் சிலவற்றை செய்து, உறவினர்களுக்கு பரிசளித்தார். 2017ல் பள்ளியில் நடந்த கண்காட்சியில் அவர் வடித்த ஒரு மாதிரிக்கு பரிசும் பெற்றார்.
அட்டையில் உருவாக்கிய பைக்குக்கும் பள்ளியில் பரிசு பெற்றுள்ளார். அவர் இதுபோல் டேபிள் பேன், கார் மற்றும் கிரேன் ஆகியவற்றையும், பொம்மைகளிலிருந்து எடுத்த சக்கரத்தை வைத்து செய்துள்ளார்.
“கொஞ்ச நாட்களில் ஈரப்பதம் காரணமாக அட்டைகள் வளைந்துவிடும்“ என்று ஜெய்பால் கூறுகிறார். “பின்னர் ஒருநாள் வீட்டில் விற்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பள்ளி புத்தகங்களை வைத்து செய்யலாம் என நான் நினைத்தேன். அது திடீரென தோன்றிய யோசனை. அதன் பக்கங்களை சுருட்டி, குழாய் போன்ற அமைப்புகளை உருவாக்கி, அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி பெரிய, பெரிய வீடுகள் போன்ற அமைப்பு மாதிரிகளை உருவாக்கினேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
புனாசா வட்டத்தில் உள்ள அவரது கிராமமான கரோலியில் புதிதாக கட்டப்படும் வீடுகள் அவரது மாதிரிகளே அவர் இதுபோன்ற மாதிரிகளை உருவாக்குவதற்கான துவக்கம். “புதிய வீடுகளை கட்டுபவர்கள் கிராமத்திற்குள்ளும், மற்றவர்களின் வயல்களில் வேலை செய்யும் எங்களை போன்றவர்கள் கிராமத்திற்கு வெளியே குடிசை வீடுகளிலும் வசிக்கிறோம்“ என்று ஜெயபால் கூறுகிறார். “சிமெண்ட் வீடுகளின் தோற்றங்கள் எனக்கு முழுவதுமாக பிடிக்கவில்லை. எனவே நான் இரண்டு, மூன்று யோசனைகளை சேர்த்து உருவாக்குவேன். சாதாரண வடிவங்கள் என்றால், அது ஒன்றுமில்லாமல் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. ஆனால், ஒரு புதிய வடிவத்தில் இருந்தால், நான் அப்போது அதை பேப்பர் மாதிரியில் செய்வேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
வழக்கமான முறையில் வாசல், கதவு, ஜன்னல் வைத்து கட்டப்படும் வீடுகளில் அவருக்கு விருப்பமில்லை. அலங்காரமாக கட்டப்பட்டுள்ள வீடுகளை மட்டுமே பார்க்கிறார். அவர் செய்த ஒரு மாதிரி குறித்து இவ்வாறு கூறுகிறார். “மேல் தளத்தை நான் கிராமத்தில் உள்ள வீடுபோல் கட்டியுள்ளேன். ஆனால், தரைதளம் வேறு மாதிரி இருக்கும்.“ அந்த மாதிரி உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டின் மாதிரி. அந்த ஆசிரியர்தான் எனக்கு பள்ளியில் வீணாகக்கிடந்த நோட்டு புத்தங்களை கொடுத்தார். அதில் நிறைய படங்களும், கார்டூன்களும் இருந்தன. அது வழக்கமாக இருப்பதுபோல் இல்லாததால், அவர் அருகில் உள்ள மற்றொரு அரசு பள்ளியிலிருந்து நோட்டுபுத்தகங்களை வாங்கிக்கொண்டார்.
“நான் எப்படி செய்வது என்று முதலிலே திட்டம் வகுத்துக்கொள்ள மாட்டேன். நேரடியாகவே வீடுகள் செய்ய துவங்கிவிடுவேன்“ என்று ஜெயபால் கூறுகிறார். முதலில் செய்த சிலவற்றை உறவினர்களுக்கு பரிசாக கொடுத்துவிட்டேன். பின்னர் மற்றவர்கள் இவரின் வீட்டிற்கு வந்து இவர் செய்த மாதிரிகளை பார்க்கத்துவங்கியது முதல், அவ்வாறு பரிசு கொடுப்பதை நிறுத்திவிட்டேன். அவர் அதில் ஒன்றைக்கூட இதுவரை விற்றதில்லை. சிலவற்றை வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மாதிரியின் வடிவங்கள் மற்றும் அதில் செய்யப்படும் சிக்கலான வேலைபாடுகளைப் பொருத்து, அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் காலஅளவைப்பொருத்து, ஜெயபாலுக்கு பேப்பரில் ஒரு வீடு மாதிரியை உருவாக்குவதற்கு 4 முதல் 20 நாட்கள் வரை தேவைப்படுகிறது. ஒவ்வொரு வீடும் 2X2 அடி உயரம் மற்றும் நீளம் உள்ளது. இரண்டரை அடி அகலம் உள்ளது.
அவர் இந்த வீடு மற்றும் கோட்டை மாதிரிகளை செய்யாதபோது படிக்கிறார். அவர் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் தற்போதுதான் 12ம் வகுப்பு முடித்துள்ளார். தொற்றுக்காலம் என்பதால், ஆன்லைன் வழியாகத்தான் படித்துள்ளார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து பணி செய்கிறார். அவரது தந்தை திலாவார் சிங் கவுகான் (45), தச்சர், மரத்தாலன நாற்காலிகள், மேஜைகள், குழந்தைகளுக்கான ஊஞ்சல்கள் மற்றும் மற்ற மரச்சாமான்கள், கதவுகள், நிலைப்படிகள் ஆகியவற்றை கரோலி மற்றும் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் சென்று செய்கிறார்.
ஜெயபாலுக்கு மர வேலைகளில் விருப்பமில்லை, ஆனால், அவர் அழகான வடிவங்களை ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வரைவதற்கும், கூரைகளை பொருத்துவதற்கும், கருவிகளை கொடுப்பதிலும் உதவுகிறார். “நான் அருகில் உள்ள ஊர்களில் மூன்று கதவுகளையும், கரோலியில் இரண்டு கதவுகளையும் வடிவமைத்துள்ளேன்“ என்று அவர் கூறுகிறார். “நான் இணையதளம் மற்றும் ஆன்லைன் புத்தங்களிலிருந்தும் பார்த்து தனித்துவமாக வடிவங்களை சில நேரங்களில் பேப்பரிலும், பல நேரங்களில் நேரடியாக மரத்திலும் செய்கிறேன். பின்னர் எனது தந்தை அதற்கு முழு வடிவம் கொடுப்பார்.
மற்ற நேரங்களில், ஜெயபால் அவரது சகோதரியின் கணவருடன் சேர்ந்தும் பணிசெய்கிறார். அவர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் துணி தைக்கும் தையல்காரராக இருக்கிறார். அவர் அவ்வப்போது அங்கு சென்று துணியை வெட்டி, கால்சட்டைகள் தைப்பார்.
ஜெயபாலின் தாய் ராஜீ சவுகான் (41), வீட்டை பராமரித்துக்கொள்கிறார். சில காலங்களுக்கு முன்பு வரை அவரும் தனது வீட்டின் தச்சு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். “கயிற்றுக்கட்டில்கள் செய்யும்போது, 4 கால்களை அவர் செய்வார். எனது தந்தை மற்ற பாகங்களை செய்வார்“ என்று ஜெயபால் கூறுகிறார். பின்னர் குடும்பத்தின் பொருளாதார நிலை கொஞ்சம் உயர்ந்தவுடன், அவர் பெரும்பாலும் வேலைகள் செய்வதை விட்டுவிட்டார்.
ஜெயபாலின் மாமா மனோகர் சிங் தன்வார். அவர் ஒரு விவசாயி. ஜெயபாலின் இந்த கலைத்திறனை அவர் மிகவும் ஊக்குவித்துள்ளார். அருகில் வசிக்கும் அவர், வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து ஜெயபாலின் கலை பொருட்களை காட்டுவார். ஆனால், அந்த மாமா கடந்த ஆண்டு டெங்குவால் இறந்துவிட்டார்.
திலாவார் மற்றும் ராஜீ, இருவரும் தங்கள் மகன் அர்ப்பணிப்புடன் செய்யும் இந்த வேலையை ஊக்குவித்துள்ளனர். “நான் படிக்காதவர்தான், ஆனால், என் மகன் சரியான பாதையிலே சென்று கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். அவனது படைப்புகளை நிறைய பேர் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்“ என்று திலாவார் கூறுகிறார். “அவனால் முடிந்த வரை அவன் படிக்கட்டும், என்னால் முடிந்தளவு நான் அவனுக்கு உதவி செய்வேன். அவன் படிப்பதற்காக என் நிலம், வீட்டைகூட விற்று உதவுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். நான் செய்வேன். ஏனெனில், நிலம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அவன் படிக்கும் காலம் திரும்ப வராது. ராஜீ எப்போதும், என்னிடம் அவனை பார்த்துக்கொள்ளும்படி கூறுவார். அவன் மட்டும்தான் எங்களுடன் வசிக்கிறான். அவனது மற்ற இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பேப்பர் வைத்து ஜெயபால் உருவாக்கும் மாதிரிகளே அவரது வீட்டை அலங்கரிக்கின்றன. அவர்கள் இடம்பெயர்ந்தவர்கள். கரோலியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோக்கியிலிருந்து 2008ம் ஆண்டு அவர்கள் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. டோக்கி, ஓம்காரேஸ்வர் அணையிலிருந்து வழிந்த நீரில் அப்போது மூழ்கியது. இதனால் அவர்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர்கள் குடும்பத்தை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு கிராமத்தில் செல்லும்படி கூறினர். ஆனால், திலாவார் அங்கு செல்வதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் அது மிகுந்த தொலைவில் உள்ளதோடு மட்டுமின்றி, அது தரிசு நிலமாகும். “அங்கு கடைகள் கூட இல்லை. அங்கு வேறு வேலையும் இல்லை“ என்று ஜெயபால் கூறுகிறார். பின்னர் அவரது தந்தை, அரசு கொடுத்த நஷ்டஈட்டில், கரோலியில் ஒரு இடத்தை வாங்கினார். அந்த வீட்டில்தான் அவர்கள் இன்று வசிக்கின்றனர். திலாவாருக்கு அவர் தந்தை கொடுத்த இரண்டு ஏக்கர் நிலம் கரோலியிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் உள்ளது. அவர்கள் அங்கு கோதுமை, சோயா பீன்ஸ் மற்றும் வெங்காயம் பயிரிடுகிறார்கள்.
டோக்கியில் ஜெயபால் இருந்த தகரக்கூரை வேயப்பட்ட ஒரு மண் குடிசை குறித்து அவருக்கு சிறிதளவே நினைவு உள்ளது. “எனக்கு அதுகுறித்து அதிக நினைவில்லை. நான் இப்போது மாதிரிகளை உருவாக்கும்போது, என்னால் அங்கு செல்ல முடியாது. ஏனெனில் அது நீரில் மூழ்கிவிட்டது. ஆனால், நான் இப்போது வசிக்கும் வீட்டின் மாதிரியை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார்.
எனினும் அவர்கள் குடும்பத்தினர் இந்த வீட்டிலிருந்தும் இடம்பெயர வேண்டும். ஏனெனில், அந்த இடம் தெரு முனையில் உள்ளது. அரசு அந்த சாலையை 6 வழிச்சாலையாக்க திட்டமிட்டுள்ளது. எனவே அதற்காக இடம் எடுக்கும்போது மீண்டும் அவர்கள் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். “நாங்கள் மீண்டும் எங்காவது செல்ல வேண்டும்“ என்று ஜெயபால் கூறுகிறார்.
அவருக்கு கட்டிடகலை மீது உள்ள ஆர்வத்தால், அவர் மேற்படிப்பு படித்து, சிவில் இன்ஜினியராகவேண்டும் என்று விரும்புகிறார். அதை வைத்து அரசு வேலையில் சேரவேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அண்மையில், அவர் தாஜ்மகாலின் மாதிரியை செய்ய துவங்கியுள்ளார். “எங்கள் வீட்டிற்கு வந்து எனது மாதிரிகளை பார்க்கும் அனைவரும் நான் தாஜ்மகாலின் மாதிரியை செய்துள்ளேனா? என்று கேட்கிறார்கள்“ என்று அவர் கூறுகிறார். அதை செய்வதற்கு நிறைய பேப்பர் வேண்டும். சில காலத்தில் மற்றவற்றின் பிரதியும் வரும், ஒவ்வொன்றும் பொறுமையாகவும், திறனுடம், பசை மற்றும் தேவையற்ற பேப்பர் கொண்டும் செய்யப்படுகிறது.
தமிழில்: பிரியதர்சினி R.