தட்டாலஷ்மியும் பொதாடாலஷ்மியும் நஷ்டத்தில் இருக்கின்றனர். டி.லஷ்மிக்கு சேர வேண்டிய ஊதியத்தை பி.லஷ்மியின் வங்கிக் கணக்கில் போட்டிருக்கிறது அரசாங்கம். பொதாடலஷ்மியின் பணம் தட்டாலஷ்மியின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கிறது.
டி.லஷ்மி மிச்ச 16000 ரூபாய்க்கு காத்திருக்கிறார். பி.லஷ்மி மிச்ச 9000 ரூபாய்க்கு காத்திருக்கிறார். இரு பெண்களுமே பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள். இருவரிடமுமே நிலம் இல்லை. இருவரும் ஊரக வேலைவாய்ப்பு ஊழியர்கள். டி.லஷ்மி முனகபகா கிராமத்தை சேர்ந்தவர். பி.லஷ்மி கனர்பதி கிராமத்தை சேர்ந்தவர். இரு கிராமங்களும் ஒரே மண்டலத்தில்தான் இருக்கிறது.
2016லிருந்து 2017 வரை டி.லஷ்மி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 95 நாட்களுக்கு வேலை செய்தனர். அவருக்கான ஊதியம் கிடைக்கவில்லை (கள அலுவலர்கள் முழு 95 நாட்களுக்கும் அதை கணக்கிடவில்லை), காரணம், ஏப்ரல் 2015லிருந்து ஆதார் அட்டைகளை ஊரக வேலைவாய்ப்பு அட்டைகளுடன் ஊழியர்கள் இணைக்க வேண்டுமென அரசு வலியுறுத்தியிருந்தது.
”முனகபகா மண்டலில் இருக்கும் கணிணி அலுவலர் ஊரக வேலைவாய்ப்பு அட்டையின் 18 இலக்கத்தையும் ஆதார் அட்டையின் 12 இலக்கத்தையும் இணைப்பதில் செய்த தவறால், எனக்கு கிடைக்க வேண்டிய பணம் (இப்போதைக்கு அவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் பாதியளவு) கணபர்தி கிராமத்திலிருக்கும் பி.லஷ்மியின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கிறது,” என்கிறார் அவர்.
“ஆனால் எங்கள் இருவராலும் வங்கியிலிருந்து (அடுத்தவரின்) பணத்தை தற்காலிக பயன்பாட்டுக்குக் கூட எடுக்க முடியவில்லை. ஏனெனில் எங்களின் வங்கிக் கணக்குகளும் கூட ஆதார் மற்றும் வேலை அட்டைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் 34 வயது லஷ்மி. விவசாய நிலங்களில் வேலை இருக்கும்போது கூலி வேலை செய்து நாட்கூலியாக 150-200 வரை சம்பாதிக்கிறார். அவருடைய ஊரில் ஊரக வேலைவாய்ப்பு வேலை இருக்கும்போது அதில் பணிபுரிந்து 203 ரூபாய் நாட்கூலியாக பெறுவார்.
10000 பேர் வசிக்கும் முனகபகா கிராமத்தில் கிட்டத்தட்ட 700 பேர் ஊதியமாக 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்க ஏப்ரல் 2015லிருந்து காத்திருக்கின்றனர். 2200 பேர் வசிக்கும் கணர்பதி கிராமத்தில் 294 பேருக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டியிருக்கிறது. இந்த கணக்குகள் யாவற்றையும் தகவல் அறியும் சட்டம், ஊரக வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் தபால்துறை வலைத்தளம் ஆகிய வழிகளின் மூலமாக கிராமத்து மக்களும் உள்ளூர் செயற்பாட்டாளர்களும் சேகரித்தவை.
மண்டலத்தில் இருக்கும் 20 பஞ்சாயத்துகளில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயளவு 6000 ஊழியர்களுக்கு தரப்பட வேண்டியிருக்கிறது. அவற்றில் 12 பஞ்சாயத்துகள் இன்னுமே ஊதியத்தை தபால் நிலையம் மூலமாகதான் பெற்று வருகிறார்கள். மிச்ச எட்டு பஞ்சாயத்துகளில் 2015ம் ஆண்டுக்கு பிறகு ஊதியங்கள் வங்கிக் கணக்குகளில் போடப்படுவதாக இருந்தது.
“ஒன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று கேட்டால் வங்கி அதிகாரிகள் மீண்டும் அடுத்த நாள் என்னை வரச் சொல்கிறார்கள்,” என்கிறார் டி.லஷ்மி. வங்கிக்கு பலமுறை அவர் நடையாக நடந்து கொண்டிருக்கிறார். பல நேரங்களில் அதனால் அவரின் விவசாயக் கூலியை கூட பெற முடியாமல் போயிருக்கிறது. மார்ச் 2016 வரை அவருக்கான ஊதியம் தபால் நிலையம் மூலமாக கிடைத்துக் கொண்டிருந்தது. அங்கு அவரால்
முனகபகா மண்டல அலுவலகத்தில் தகவல்களை கணிணிக்குள் இடும் வேலையை செய்யும் கணிணி அலுவலரான பப்லுவும் தொழில்நுட்ப சிக்கல்களால் ஊழியர்களின் ஆதார் எண்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டைகளுடன் இணைக்கப்பட முடியவில்லை என்றுதான் கூறுகிறார். அந்த சிக்கல்கள் என்னவென தனக்கு தெரியாதென கூறும் அவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் முனகபகா கிளையில் விசாரிக்கச் சொல்கிறார். வங்கி அதிகாரிகள் கணிணி அலுவலரை தொடர்பு கொள்ள சொல்கின்றனர்.
அரசின் தரவுகளின் படி விசாகப்பட்டினத்தின் 14070 ஊழியர்களுக்கு ஆதார் எண்களும் வேலை அட்டைகளும் இன்னும் இணைக்கப்படவில்லை. மொத்த ஆந்திராவிலும் இந்த எண்ணிக்கை 174755 (2018 ஜனவரி வரை) ஆக இருக்கிறது.
முனகபகா மண்டலத்தின் தபால் நிலையங்களில் கைரேகை அச்சு தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் பரவலாக இருக்கிறது. “எங்களின் கை ரேகை அச்சு (ஊதியத்தை பெற செல்லும் ஊழியர்கள் கை ரேகை வைக்க வேண்டும்) ஆதார் அட்டையில் இருக்கும் கை ரேகையுடன் பொருந்தவில்லை என்ற காரணம் சொல்லப்பட்டு ஒவ்வொரு முறையும் நாங்கள் தபால் நிலையங்களிலிருந்து திரும்ப அனுப்பப்படுகிறோம்,” என்கிறார் கணபர்தியை சேர்ந்த ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர் நூகராஜு. அவருக்கு கிடைக்க வேண்டிய 22000 ரூபாய்க்காக பல நாட்களாக அவர் காத்திருக்கிறார். “மண்ணின் மைந்தர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் உழைப்பதில் எங்கள் கைகளில் மண் படிகிறது. ஆதார் மற்றும் டிஜிட்டல்மயம் ஆகியவை நாட்டின் மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது போல் பிரதமர் பேசுகிறார். உண்மையில் இவை எங்களின் வாய்களுக்கு செல்ல வேண்டிய உணவைதான் பறித்துக் கொண்டிருக்கின்றன.”
தொழில்நுட்ப கோளாறுகள் பொருந்தா கைரேகைகள் மற்றும் இணைத்தலில் இருக்கும் தாமதம் ஆகியவற்றுடன் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. நிதி பற்றாக்குறை! ஏப்ரல் 2015லிருந்து உருவாக்கப்பட்ட வேலைகளுக்கான ஊதியமாக ஆந்திரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு 1972 கோடி ரூபாய்கள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நவம்பர் 2017ல் வெறும் 420 கோடி நிதியை மட்டும்தான் கொடுத்தது. இதற்கு காரணம் மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மாநிலத்தில் இருக்கும் தெலுகு தேசம் கட்சிக்கும் இடையே இருக்கும் அரசியல் பூசல்தான் எனவும் பலர் சொல்கின்றனர்.
” ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின்படி வேலை முடிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஊதியர்களுக்கு நஷ்ட ஈடு (14-21 நாட்களை தாண்டினால் கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அதிகமாகவும் 22 நாட்களுக்கு மேல் ஆனால் 50 சதவிகிதம் கூடுதலாகவும்) வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் ஆந்திராவின் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்கள் சங்கத்தை சேர்ந்த பாலு காடி. “எனவே மண்டலத்தில் இருக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய ஊதியத்துக்கே இன்னும் அவர்கள் காத்திருக்கிறார்கள்.”
பாலுவின் தாயான 50 வயது சினாதள்ளியும் ஓர் ஊரக வேலைவாய்ப்பு ஊழியர்தான். 2017-2018ம் ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்தார். “அதிக நாட்களுக்கு வேலை வேண்டுமென நான் கேட்டபோது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைக்குமென அதிகாரிகள் கூறினர். ஆனால் சட்டப்படி ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். எங்களுக்கான வேலை மற்றும் ஊதியத்தை நிராகரிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் சினாதள்ளி. அவருக்கு இன்னும் 12000 ரூபாய் வரை கிடைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு காரணமாக அவரின் ஆதார் எண் வேலை அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்படவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
டிஜிட்டல்மயம் மற்றும் தாமதம் உருவாக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு நடுவே பல ஊழியர்கள் குறைந்தபட்ச நூறு நாள் வேலைக்கான உரிமையை பற்றி பேசுவதில்லை. ஏனெனில் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை பெறுவதற்கான முயற்சிகளில் அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். முனகபகா மண்டலத்தை பொறுத்தவரை 2017-18ம் ஆண்டில் சராசரியாக ஒரு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட வேலைநாட்கள் வெறும் 59 மட்டும்தான். மொத்த ஆந்திராவிலும் அது வெறும் 47 நாட்களாக மட்டுமே இருக்கிறது.
இந்த நாட்களில் டி.லஷ்மி, பி.லஷ்மி, நூகராஜு மற்றும் சினாதள்ளி ஆகியோர் பிற ஊரக வேலைவாய்ப்பு ஊழியர்களுடன் சேர்ந்து வாய்க்கால் வெட்டியிருக்கின்றனர். குளங்கள் உருவாக்கியிருக்கின்றனர். புதர்களை அகற்றியிருக்கின்றனர். நிலம் சார்ந்த இன்னும் பல வேலைகளை செய்திருக்கின்றனர். ஆனால் ஆதார் எழுப்பியிருக்கும் வலிமையான சுவரை அவர்களால் உடைக்க முடியவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்