”கடன் வசூலிக்கும் முகவர்கள் எங்களது வீடு தேடி வருவதை தற்போது நிறுத்து விட்டனர்”, என்றார் யவத்மால் மாவட்டதவரான சரஸ்வதி அம்பேர்வர். ஜூன் 15ம் தியதி அ ப ஜெ அப்துல் கலாம் வருகை தரவிருக்கும் இடத்திற்க்கு மிக அருகாமையில் தான் இவர் வசிக்கிறார். 1998ம் ஆண்டு நடந்த இவரது கணவர் ராம்தாசின் மரணம் தான் விதர்பா பகுதியிலிருந்து ஊடகங்களின் மூலம் வெளிவந்த முதல் விவசாய தற்கொலை குறித்த செய்தியாகும். அவரது மரணத்தைத் தொடர்ந்து கடன் வழங்கியவர்கள் கடனை திருப்பிச் செலுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டார். அப்படியான சூழலைக் கடந்து தற்போது எவரும் கடனை திரும்பச் செலுத்தக் கேட்டு வரவில்லை என்பதே ஆச்சர்யமான செய்தி தான்.
“கடந்த முறை கடனை வசூலிக்க வந்தவர்களிடம் கிஷோர் வழங்கிய கடிதத்தை காண்பித்தேன், பின்னர் அவர்கள் இங்கு வருவதை நிறுத்தி விட்டனர்”. ஒரு கடிதம் கடன் வசூலிப்பவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்தியது?. விதர்பா மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக செயல்படுபவர் தான் கிஷோர் திவாரி. அப்பகுதியில் விவசாயிகள் உரிமைக்காக தொடர்ந்து போராடுபவர். வங்கிகளை கண்டித்து முற்றுகை போராட்டங்கள் நடத்தி அவர்களை துரத்தியவர். இப்படியானவரின் கடிதத்தால் எப்படி கடன் வசூலிப்பாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது?
“அன்பிற்குரிய கடன் வசூலிக்கும் அதிகாரிக்கு, ராம்தாஸ் பல முறை சொர்கத்திலிருந்து என் கனவில் தோன்றி உங்களது கடனை திருப்பி செலுத்தும் அளவு பணம் அவரிடம் உள்ளதாகவும், உடனே கடன் வசூலிப்பாளர்களை சொர்கத்திற்க்கு வந்து பணத்தை பெற்று கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். இவண், கிஷோர் திவாரி”, என்பது தான் அக்கடிதத்தின் சாரம்.
திவாரி ஜனாதிபதி கலாமிற்க்கு எழுதிய மடல் சற்று பணிவுடனே எழுதப்பட்டிருந்தது. “இந்த துரதிருஷ்டமான விதவைகளை யவத்மால் அல்லது வார்தாவில் சந்திக்க ஒரு சில நிமிடங்களை ஒதுக்க பணிவோடு விழைகிறேன்”, என கோரியிருந்தார்.
நாக்பூர் மற்றும் மேற்கூறிய இடங்களை ஜனாதிபதி கடந்து செல்கிறார். அவரது பயணத்திட்டத்தில் யவத்மால் மாவட்டத்தில் அமோல்க்சந்த் கல்லூரியின் நிகழ்வும், வார்தா மாவட்டம் மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைகழகத்தில் ஒரு நிகழ்வும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாய நெருக்கடி குறித்த எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதாக தகவல் இல்லை.
பருத்தி விலை பிரச்சனைகள்
ஜனாதிபதி கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகள் விவசாய நெருக்கடியால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட யவத்மால் மாவட்டதில் தான் நடைபெறுகின்றன. “இந்த ஆண்டு மட்டும் விதர்பா பகுதியில் 428 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்”, என குறிப்பிடுகிறார் திவாரி. “பருத்தி விலை நிர்ணயத்தில் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வருடம் மிக மோசமானதாக அமையும். கடந்த ஆண்டு 1,296 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விதர்பாவின் ஆறு மாவட்டங்களில் மேலும் 1,348 தற்கொலைகள் நடந்ததாக ஒத்துக்கொள்ளும் அரசு, அவை விவசாய நெருக்கடியால் நடைபெற்றவை அல்ல எனவும் அறிவித்துள்ளது.
2001ம் ஆண்டு முதல் யவத்மால் மாவட்டத்தை உள்ளிட்ட விதர்பா பகுதியில் 6000 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 1990ம் ஆண்டுக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்ட சுமார் 1,00,000 விவசாயிகள் ஒருவரின் விதவை தான் சரஸ்வதியும். இவரை போன்ற பல நூறு பெண்கள் யவத்மால் மாவட்டத்தில் தனித்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவரது வீட்டிற்க்கு சிவ சேனாவின் தலைவரான அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாராயண் ரானே உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். அப்போது வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் உதவித் தொகை அவர்களது கடனை முழுமையாக செலுத்தக் கூட போதுமானதாக இல்லை.
“எங்கள் மகள் மீனாட்சியின் மருத்துவச் செலவிற்காக ரூ.30,000/ செலவு செய்கிறோம்”, என்றார். (மற்றொரு மகள் 2004ம் ஆண்டு மரணமடைந்து விட்டார்). “மருத்துவ செலவை ஈடுகட்ட பல ஏக்கர் நிலங்களையும், இருந்து சில கால்நடைகளையும் விற்க நேர்ந்தது. தற்போது விவசாயமும் அதிக செலவு மிகுந்ததாக மாறி விட்டது”, என்றார். எனினும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் அவரது முயற்சிகளை கைவிடாமல் தொடர்கிறார்.
அதே யவத்மால் மாவட்டத்தின் பிஸ்கோன் கிராமத்தில் வர்ஷா ராஸே எவ்வளவு குறைவான கூலி கிடைத்தாலும் தனக்கு கிடைக்கும் வேலையை செய்து கொள்கிறார். இரு பருவகாலங்களாக அவரது கணவர் மாருதி எட்டு ஏக்கர் நிலத்தோடு தனது உடலுழைப்பையும் சேர்ந்து குத்தகைக்கு கொடுத்து விட்டார். அவரது அண்டை வீட்டார் கூறும் போது, “தனது சகோதரிகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நெருக்கடியாலும் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததாலும் இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்”, என தெரிவித்தனர். அதிக மழைப் பொழிவின் காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால் 2004ம் ஆண்டு ராஸே தற்கொலை செய்து கொண்டார். அப்போது உருவான கடன் சுமையை விட்டு வர்ஷாவால் மீண்டு வர இயலவில்லை. அவரது மகன், மகள் இருவரும் ஐந்து வயதை இன்னும் கடக்கவில்லை.
இப்பகுதியில் விவசாயம் குறித்து நன்கறிந்த ஆய்வாளர் விஜய் ஜவாண்டியா கூறுகையில், “அவர்கள் (விவசாயிகள்) மேலும் மேலும் கடினமாக உழைக்கின்றனர். அதன் மூலம் அதிக மகசூல் கிடைத்தாலும், அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது” என தெரிவித்தார். “வெல்ல முடியாத ஒரு கடுமையான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மிக அடிப்படையான பிரச்சனைகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. கடன் காரணமாக விதவை பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அன்றாட செலவுகள் அதிகரிக்கின்றன, விவசாய இடுபொருட்கள் விலை அதிகரிக்கிறது, குறைந்து கொண்டே இருப்பது விவசாயிகளின் வருமானம் மட்டும் தான்”, என்றார்.
”பிரதமரின் புதிய அறிவிப்புகள் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் கிடைக்க வழி செய்த போதும், பழைய கடன்களின் துயரை நீக்க உதவில்லை. புதிய கடன்கள் மூலம் அவர்களது மொத்த கடன் இருமடங்கானது. விலை நிர்ணயம் என்ற முக்கிய பிரச்சனைக்கு அரசு எந்த தீர்வும் காண முயலவில்லை. மேற்கு பகுதியின் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அதிக மானியம் குறித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. இதனால் விலை பெருமளவு சரிந்து, விவசாயிகளால் உற்பத்தி செலவைக் கூட விற்பனை மூலம் ஈட்ட இயலாமல் போனது. கடன்களை திரும்ப செலுத்தாததால் வங்கிகளின் நம்பிக்கையை இழந்துவிட்ட விவசாயிகள், இந்த பருவ சாகுபடிக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது”
இவரது கருத்துக்களை நாகேஷ்வாடி கிராமத்தை சேர்ந்தவரான அன்னபூர்ணா சுரோஷே முழுமையாக ஏற்றுக்கொள்வார். “இழப்பீடாக கிடைத்த பணத்தின் மூலம் கடனை திரும்ப செலுத்திவிட்டோம். அதனால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விட வில்லை”. இரு மகன்கள் மற்றும் ஒரே மகளுக்கு தேவையான கல்வியை வழங்க அவரால் இயலவில்லை. அவரது கணவர் ராமேஷ்வர் தற்கொலை செய்து கொள்ளும் முன் குத்தகைக்கு கொடுத்திருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் குத்தகை காலம் முடிந்த பின் இவர் தான் விவசாயம் செய்ய வேண்டும். “எனது உழைப்பையும் இந்த நிலத்தில் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது”, என்கிறார்.
அன்றாடம் வேலைக்கு செல்வதால் கிடைக்கும் ரூ.25/ ஊதியத்தால் தான் தனது குடும்பத்தை நிர்வகித்து வருகிறார்.
ராம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரே பிராமண குடும்பத்தை சேர்ந்த மங்கள்பாய் மொகாத்கர் பெரும் சிரமங்களோடு வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் பிரபாகர்ராவ் மரணமடைந்த பின்னர் தனது எட்டு மகள்களில் மூவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். வரதட்சணை எதுவும் இல்லாமல் தன் மகள்களின் திருமணங்களை நடத்திவிட்ட போதிலும், ஒவ்வொரு திருமணத்திற்க்கும் ரூ.40,000/ வரை செலவு செய்துள்ளார். அவரது மருமகன்களிடமிருந்து எந்த தொகையும் அவர் பெற்றுக்கொள்ளவும் இல்லை. ஓரளவு அவரது மகள்களை படிக்கவும் வைத்துள்ளார். “அனைவரும் உயர் நிலைக் கல்வி வரை பயின்றவர்கள். ஆனால் அனைவரும் தேர்ச்சி பெறவில்லை”, என்கிறார். “மூன்று மகள்கள் அவரது மரணத்திற்க்கு பின்னர் தான் பள்ளிப் படிப்பையே முடித்தனர்”.
பல ஆண்டுகளாக குத்தகைக்கு விட்டிருந்த ஏழு ஏக்கர் நிலத்தில், “இந்த ஆண்டு முதல் பயிர் செய்ய துவங்க வேண்டும்”, என தெரிவித்தார். ”எங்கள் கிராமத்தில் அனைவரும் பெரும் சிக்கல்களோடு தான் விவசாயத்தை தொடர்கின்றனர். முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றால் அனைவரது நிலையும் மேலும் சிக்கலாகிவிடும்”, என்கிறார் விவசாயத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கும் ஆபத்துக்களை உணர்ந்தவராய்.
“யவத்மால் மற்றும் பிற மாவட்டங்களின் நிலை இது தான். இந்த விதவைகளான விவசாயிகள் உண்மை நிலையை பிரதிபலிக்கின்றனர்”, என்றார் திவாரி.
ஜனாதிபதிக்கு திவாரி எழுதிய கடிதத்தில், “விதர்பா பகுதியின் நிலை மிகவும் துயரம் நிறைந்தாக உள்ளது. கலை அல்லது நடன நிகழ்ச்சிகளை துவங்கி வைப்பதற்கான நேரம் இதுவல்ல.. இந்த துரதிருஷ்டமான விதவைகளை சந்திக்க ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்டால் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாவோம்” என குறிப்பிடப்பட்டிருந்த்து.
இந்த கட்டுரையின் ஒரு வடிவம் ஜூன் 13, 2007 தேதியிட்ட தி இந்து நாளிதழில் வெளியானது.
( http://www.hindu.com/2007/06/13/stories/2007061301671100.htm )
தமிழில்: ஆ நீலாம்பரன்