அவரைப் பார்க்கும் போது, இப்போதுதான் டிக்கன்ஸ் நாவலில் இருந்து வெளிவந்தது போல் உள்ளார். காலி வீடுகள் வரிசையாக நிற்க, தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் 71 வயதான எஸ். கந்தசாமி, தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் இலையுதிர் காலங்களை பகிர்ந்து கொள்கிறார். இவரது பார்வையில் படாமல் மீனாட்சிபுரத்தை யாராலும் கடந்து செல்ல முடியாது. 50 குடும்பங்கள் வாழ்ந்து வந்த கிராமத்தில் இப்போது இவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக் குடும்பமும் கூட ஐந்து வருடங்களுக்கு முன் வெளியேறிவிட்டனர்.
இந்த பாழடைந்த கிராமத்தில் இவரது தனிமை, காதலையும் இழப்பையும் நம்பிக்கையையும் விரக்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் இங்கு வசித்தவர்கள் அனைவரும் மீனாட்சிபுரத்தை கைவிட்டுவிட்டனர். ஆனால், “இருபது வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி வீரலட்சுமி இறந்த இதே அறையில்தான் தன்னுடைய கடைசி காலத்தை கழிப்பேன்” என்பதில் உறுதியாக இருக்கிறார் கந்தசாமி. அவரது முடிவை உறவினர்களாலோ நண்பர்களாலோ மாற்ற முடியவில்லை.
“என்னுடைய குடும்பத்தினர் செல்வதற்கு முன்னரே மற்றவர்கள் அனைவரும் இங்கிருந்து சென்றுவிட்டதாக” அவர் கூறுகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அவரது இரண்டாவது மகன் திருமணமாகி சென்றதும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருக்கும் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒரே நபராகிப் போனார் கந்தசாமி. தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த இந்த மாவட்டத்திற்குள்ளேயே மிகுந்த பற்றாக்குறையுள்ள பகுதிகளில் ஒன்றாக மீனாட்சிபுரம் திகழ்கிறது.
“எந்தக் குடும்பமும் வெகு தூரம் சென்றிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். 10 குடும்பங்கள் செக்காரக்குடி கிராமத்தில் வசிக்கிறார்கள்.” இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்தக் கிராமமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இதைவிட கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறது. ஆனால் எதையும் சமாளிக்க கூடிய, துடிப்பான கிராமமாக பார்க்க தோன்றுகிறது. செயல்பாடு மிகுந்த கிராமமாக இது இருக்க, அமைதியாக இருக்கிறது மீனாட்சிபுரம். வெறிச்சோடிய இந்தக் கிராமத்திற்குச் செல்லும் வழியை யாரிடமாவது கேட்டால், திகைப்படைவதை பர்க்கலாம். குறிப்பாக டீக்கடை உரிமையாளர் தடுமாறியபடி, “அங்கிருக்கும் கோயிலுக்கா நீங்கள் செல்கிறீர்கள்? அந்தக் கிராமத்தில் வேறெதுவும் இல்லை” என்றார்.
“தூத்துக்குடியின் சராசரி மழையளவு (708மிமீ) மாநிலத்தின் சராசரியை (945மிமீ) விட குறைவாக உள்ளது. அதனால் தண்ணீர் தேவைக்கு தாமிரபராணி ஆற்றையே இந்த மாவட்டம் பெரிதும் நம்பியுள்ளது. எனினும், சமீப வருடங்களாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. இப்போது இது முழுதாக நிறுத்தப்பட்டுவிட்டது என நான் கூற மாட்டேன். ஆனால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பலனளிக்கும். கிராமப்புற பகுதிகள் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. நிலத்தடிநீரும் அசுத்தமாகியுள்ளது” என்கிறார் தூத்துக்குடி நகர சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பி. பிரபு.
2011 மக்கள் தொகை கணக்கின் படி, இக்கிராமத்தில் 1,135 பேர் வசித்து வந்தனர். அதிகமானோர் வெளியேறிய போதும் கூட, “ஆறு வருடங்களுக்கு முன்பு வரை 50 குடும்பங்கள் இங்கு வசித்து வந்ததாக” கூறுகிறார் கந்தசாமி. முன்பு இவரிடம் இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் கம்பும் பருத்தியும் பயிரிட்டு வந்தார். இவரது வயலில் விளைச்சல் நன்றாக இருந்த நிலையிலும் பல வருடங்களுக்கு முன்பே அதை விற்றுவிட்டார். “அந்த நிலத்தை வைத்துதான் என் குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தோடு திருமணமும் செய்து வைக்க முடிந்தது.” அவரின் குழந்தைகள் அனைவரும் – இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் – தூத்துக்குடியில் வசிக்கிறார்கள்.
“யாருக்கும் நான் பணம் கொடுக்க வேண்டியதில்லை. குற்றவுணர்ச்சி இல்லா மனுஷனாக இறப்பேன். என்னுடைய நிலத்திலிருந்துதான் எனக்கு எல்லாம் கிடைத்தது. விவசாயத்தில் தொடர்ந்து நல்ல உற்பத்தி இருந்திருந்தால் என் நிலத்தை விற்றிருக்க மாட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் மோசமடைந்தது. தண்ணீர் இல்லை. உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி மக்கள் வெளியேறத் தொடங்கினர்” என்கிறார் கந்தசாமி.
“தண்ணீர்தான் இங்கு மிகப்பெரிய பிரச்சனை” எனக் கூறும் பெருமாள் மணி, 61, பத்து வருடங்களுக்கு முன் கிராமத்தை விட்டு வெளியேறிய ஆரம்பகட்ட குடியிருப்புவாசிகளில் இவரும் ஒருவர். மீனாட்சிபுரத்தின் முன்னாள் அதிமுக பிரமுகரான இவர், தற்போது தூத்துக்குடியில் வசிக்கிறார். கிராமத்தில் இருந்ததை விட அவர் இப்போது நல்ல நிலமையில் இருக்கிறார். “எங்கள் வயலில் இருந்து எதுவும் கிடைப்பதில்லை. சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்திற்கு எப்படி செலவு செய்ய முடியும்?” இவரது வீடும் சிதிலமடைந்து கிடக்கிறது. “உண்மையில் அங்கு எதுவும் இல்லை” என கிராமத்தைப் பற்றி இவர் கூறுகிறார்.
ஊரில் உள்ள இரு கோயில்கள்தாம் கிராமத்திற்கும் இங்கிருந்து சென்றவர்களுக்கும் ஒரே பிணைப்பாக உள்ளது. மீனாட்சிபுரத்திற்கு செல்லும் சாலையில் வைஷ்ணவ கோயிலான காரிய சித்தி ஸ்ரீனிவாசா பெருமாள் கோயில் அடையாளம் தென்படுகிறது. கந்தசாமியின் பிரார்த்தனைகளுக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. இங்கிருந்து வெளியேறியவர்கள் நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறார். அவர்கள் இங்கேயே நிரந்தரமாக இருந்துவிட்டால் நிச்சயம் அது அதிசயமே. இதுவரை, கடவுள் அதற்கு உதவி புரியவில்லை.
ஆனால் சில சமயங்களில், இவரது குடும்பம் பராமரித்து வரும் சைவ கோயிலான பராசக்தி மாரியம்மன் கோயிலின் திருவிழாவிற்கு மக்கள் வருகை தருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான், இதன் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க 65 பேர் மீனாட்சிபுரத்திற்கு வந்திருந்தனர். “எல்லாருக்கும் இங்குதான் உணவு சமைத்தோம்” என ஓரமாக இருக்கும் சமையலறையை சுட்டிக் காட்டுகிறார் கந்தசாமி. “அன்றைய நாள் பரபரப்பாக இருந்தது. மற்ற சமயங்களில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைத்து அதை சூடுபடுத்திக் கொள்வேன்.”
அப்படியென்றால் இவர் எப்படி உயிர் வாழ்கிறார்? இவருக்குச் சொந்தமாக நிலமோ, தனது வீட்டைத் தவிர வேறு சொத்தோ, வங்கி கையிருப்போ கிடையாது. கையில் கொஞ்சம் பணம் வைத்துள்ளார். ரூ. 1000 முதியோர் ஓய்வூதியமும் இவருக்கு கிடையாது. தமிழ்நாடு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும் இவர் தகுதியுடையவர் இல்லை. ஏனென்றால் இவருக்கு இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் தூத்துக்குடியில் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள். (சொந்தமாக குடிசையோ அல்லது 5000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வீடோ இருந்தால் விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படுவார்).
இவரது இளைய மகன் பாலகிருஷ்ணன் அவ்வப்போது இவரைப் பார்க்க வருவதோடு மாதத்திற்கு ரூ. 1500 செலவுக்கு வழங்குகிறார். அதில், “பீடி வாங்க தினமும் 30 ரூபாய் செலவழிப்பேன். மீதமுள்ளதில் மளிகை பொருட்கள் வாங்குவேன்.” இவருடைய நண்பர் ஒருவர் கிராமத்தை விட்டுச் செல்லும்போது இவருக்கு பரிசாக கொடுத்த இரு சக்கர வாகனத்தக்கு பெட்ரோல் போட அவ்வப்போது சிறு தொகை வைத்துள்ளார். “எனக்கு பெரிய செலவுகள் எதுவும் இல்லை” எனக் கூறும் கந்தசாமி, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மளிகைப் பொருட்கள் வாங்க ஸ்கூட்டரில் செக்காரக்குடி செல்வார். ஒவ்வொரு முறை அக்கிராமத்திற்கு செல்லும் போதும் சில மணி நேரங்கள் அங்கு செலவழிப்பார்.
வீட்டில் அவருக்கு துணையாக அரசாங்கம் வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. மேலும் அவரது தனிமையைப் போக்க ராஜா, ராணி என இரண்டு நாய்கள் உள்ளது. “இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த தெரு நாய்கள் என்னிடம் வந்தன. நான் தனியாக இருக்கிறேன் என அதற்கும் எப்படியோ தெரிந்துவிட்டது போல. ராஜா, ராணி என அதற்கு பெயர் வைத்துள்ளேன். இதற்கும் சேர்த்து நானே சமைக்கிறேன். இன்னொரு உயிருக்கு சமைப்பது நல்ல விஷயம் தானே” எனக் கூறிச் சிரிக்கிறார்.
ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த அவரது வயலும் மீனாட்சிபுரத்தின் நினைவுகளும் இன்றும் அவரது மனதை விட்டு அகலவில்லை. “அன்றைய நாட்களில் அரிசி பிரதானமான உணவு கிடையாது. சிறுதானியங்களையே அதிகம் பயன்படுத்தினோம்” என நினைவுகூர்கிறார். மக்கள் இங்கு உளுந்தும் பயிரிட்டுள்ளார்கள். ஆனால் இன்றோ காலியான நிலங்களும் கைவிடப்பட்ட வீடுகளுமே கிராமத்தில் உள்ளது.
அவருடைய செருப்பு, இரு சக்கர வாகனம் மற்றும் பரவிக் கிடக்கும் உடைகள் இவற்றை தவிர்த்து கந்தசாமி வாழ்ந்து வருவதற்கான அறிகுறிகள் சிலவையே தென்படுகின்றன. அழுக்கேறிய சுவரில் குடும்ப புகைப்படங்கள் எதுவும் இல்லை. இறந்துபோன அவரது மனைவியின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்தும் அவரது மகன் பாலகிருஷ்ணன் பாதுகாப்பில் உள்ளது. அங்கிருக்கும் இரண்டு காலண்டரில், ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறது. எனினும் அவர் எம்ஜிஆரைப் பற்றியே அதிகம் பேசுகிறார். “என்றைக்கும் நான் அவருக்கு விசுவாசி” என்கிறார். தனியாக இருக்கும் இந்த வாக்காளரை ஈர்க்க எந்த அரசியல் கட்சி பரப்புரையாளர்களும் மீனாட்சிபுரத்திற்கு வருவதில்லை. ஆனாலும் எம்ஜிஆர் மீதான தனது விசுவாசத்தை பறைசாற்ற வாக்குச்சாவடியை பயன்படுத்தும் கந்தசாமியின் ஆர்வத்தை இதெல்லாம் தடுப்பதில்லை.
என்றாவது ஒருநாள், கிராமம் மறுபடியும் தனது பொன்னான நாட்களுக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வாரமும் பராசக்தி கோயிலில் பூஜை செய்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது எல்லாம் சிறப்பாக இருக்கிறது. கந்தசாமியின் வீட்டில் அவரது தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது. “போன வருடம் தொலைக்காட்சி சேனல் என்னை நேர்காணல் செய்த பிறகு, பல அதிகாரிகள் என் வீட்டில் குவிந்தனர். உடனடியாக எனக்கு தண்ணீர் இணைப்பைக் கொடுத்தனர். இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை.” கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேறிவிட்ட காரணத்தாலும் இவருக்கு தண்ணீர் அதிகமாக கிடைக்கிறது.
மீனாட்சிபுரத்திற்கு திரும்ப விரும்பும் மக்களுக்கு உதவ தங்களது நிர்வாகம் தயாராக இருப்பதாக கூறுகிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. “தண்ணீர் இப்போது பிரச்சனையாக இருக்காது. அப்படியே இருந்தாலும், சீராக வழங்க நாங்கள் ஏற்பாடு செய்து கொடுப்போம். கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் நல்ல வாழ்வாதாரத்தை தேடியே வேறு ஊர்களுக்கு சென்றிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஆகையால் அவர்கள் மறுபடியும் இங்கு வர விரும்பமாட்டார்கள்.”
இதற்கிடையில்,
தன்னுடைய வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் கந்தசாமி, ஏதாவது அதிசயம் நிகழாதா
என்ற நம்பிக்கையில் மணிக்கணக்கில் காலியாக இருக்கும் சாலைகளையும் கைவிடப்பட்ட
வயல்வெளிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில்: வி கோபி
மாவடிராஜா