”தங்குமிடத்துக்கு உள்ளேயே இருக்கும்படி போலீசார் சொன்னார்கள். மளிகைப்பொருளோ வேறு அத்தியாவசியப் பொருளோ வாங்க படியைவிட்டு இறங்கினால் போதும் உடனே போலீஸ் வந்து எங்களை அறைகளுக்குள் போகும்படி அடித்துத் துரத்துவார்கள். சிறுநீர் கழிப்பதற்காக இரவில் வெளியே வந்தால்கூட அவர்கள் எங்களைத் தாக்குவதற்காக அங்கு தயாராய் இருப்பார்கள்.”- நாடளாவிய கோவிட் பொதுமுடக்கத்தின் தொடக்க சில நாள்களில் மும்பையில் நடந்ததை நினைவுகூர்கிறார், தோலா இராம்.
முடக்கம் பற்றி கேள்விப்பட்டு, மலாட்டில் உள்ள வேலைக் களத்திலிருந்து, தோலா இராமும் அவரின் சக பணியாளர்களும் போரிவாலியில் உள்ள தங்கும் அறைகளுக்கு திரும்பிவந்தனர். ஒடுக்கமான அந்த அறைக்குள் அவர்கள் ஆறு நாள்களைக் கழித்தனர். சூழல் மாறிவிடும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. மொத்தம் 15 பேர் தலா ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்கு அந்த அறையை எடுத்திருந்தனர். விரைவில் அவர்களின் உணவுப்பொருள்கள் தீர்ந்துவிட்டன. எனவே, 37 வயது தோலா இராமும் மற்றவர்களும் இராஜஸ்தானில் உள்ள அவரவர் ஊர்களுக்குத் திரும்ப முடிவுசெய்தனர்.
”மும்பையில் வேலை இல்லை. ஹோலி பண்டிகைக்கு ஊருக்குப் போய்விட்டு திரும்பிய பிறகு பெரிதாக சேமிப்பு எதுவும் இல்லை. மேற்கொண்டு நகரத்தில் தங்கியிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என எங்களிடம் தொலைபேசியில் சொன்னார், தோலா இராம். நகரைவிட்டுக் கிளம்பும் முன்னரே அவருடைய 5 வயது மகனுக்கு நலக்குறைவு என்ற தகவல் வந்திருந்தது. அவருடைய இணையர், சுந்தரும் மற்ற உறவினர்களும் குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அதன்பிறகு மரபு வைத்தியரிடம் கூட்டிச்சென்றும் அவனுக்கு உடல்நலம் தேறவில்லை.
இராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள பரோலியாவில், மார்ச் 9 - 10 ஹோலி கொண்டாடிவிட்டு சில நாள்களுக்குப் பிறகு மும்பைக்குத் திரும்பியிருந்தார், தோலா இராம். பிழைப்புக்காக சலும்பார் வட்டத்தில் உள்ள தன் ஊரைவிட்டு 8 - 9 மாத காலம் அவர் வெளியில்தான் இருப்பார். கடந்த 15 ஆண்டுகளாக இராஜஸ்தானின் நகரங்களிலும் குஜராத், கோவா, மகாராஷ்டிரத்திலும் கட்டுமானக் களத்தில் கொத்தனாராக வேலைசெய்துவருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளாகத்தான் மும்பைக்கு வந்துபோகிறார். தோலா இராமின் புதிய வேலை, பளிங்குக் கற்களைப் பளபளப்பாக்குவது; அதன் மூலம் மாதத்துக்கு 12, 000 ரூபாய் சம்பாதிக்கிறார். அதில், 7 - 8 ஆயிரம் ரூபாயை வீட்டுக்கு அனுப்புவார். ஆண்டுக்கு இரண்டு முறை அவர் தன் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்வார். ஹோலிக்கு ஒரு முறை, அடுத்து அக்டோபர்-நவம்பரில். அந்த முறை 15 நாள்கள் முதல் ஒரு மாதம்வரை தங்கிவிடுவார்.
மும்பையிலிருந்து அண்மையில் பரோலியாவுக்குச் செல்வது கையில் ஒன்றுமில்லை என்பதுடன் கடினமான ஒன்றாகவும் ஆனது. முடக்கம் தொடங்கி ஆறு நாள்களுக்குப் பிறகு, மார்ச் 31 அன்று அவரும் மற்றவர்களும் நகரைவிட்டு புறப்பட்டனர். ” இராஜஸ்தானில் உள்ள எங்கள் ஊருக்குச் செல்ல மொத்தம் 19 பேர் சேர்ந்து 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு டாக்சியைப் பிடித்தோம். ஆனாலும் மகாராஷ்டிர எல்லையில் வைத்து போலீசு திருப்பி அனுப்பிவிட்டதுடன் மும்பையில் பிடித்துவைத்துவிட்டனர்.” என்கிறார் தோலா.முயற்சியைத் தளரவிடாமல், ஏப்ரல் 1 அன்று அதிகாலை 5 மணிக்கு அவர்கள் மும்பையைவிட்டுக் கிளம்பினர். இந்த முறை இருவர் இருவராக நடக்கத் தொடங்கி, மகாராஷ்டிரம்- குஜராத் எல்லையை நோக்கிச் சென்றனர். எடுத்துச்சென்ற வறண்ட சப்பாத்திகள் ஒரு நாளுக்கும் தீர்ந்துவிட்டன. மறுநாள் அவர்கள் சூரத்தை அடைந்தபோது பிரச்னை வெடித்தபடி இருந்தது. சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கும்படி புலம்பெயர்த் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த போலீசு தேநீரும் பிஸ்கட்டும் தந்ததுடன் தங்களுக்கு உதவியாக இருந்தனர் என்று தோலா கூறுகிறார். எல்லையைத் தாண்டி அங்கிருந்து 380 கி.மீ. தொலைவில் உள்ள இராஜஸ்தானின் பன்ஸ்வாராவுக்கு ஒரு சரக்குவண்டியில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.
பன்ஸ்வாராவில் உள்ள எல்லையில், அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் காய்ச்சல் சோதனை செய்தபின்னர் அடுத்து செல்ல அனுமதித்தனர். “ அங்கே எங்களுக்கு குளுகோஸ் பிஸ்கட்டுகள் தந்தனர். கொஞ்சம் சாப்பிட எடுத்துக்கொண்டதுடன், வழியில் உட்கொள்ளவும் கொஞ்சம் எடுத்துக்கொண்டோம்.” என்கிறார், தோலா. அங்கிருந்து ஆஸ்பூருக்கு 63 கிமீ நடந்து, அங்கிருந்த சத்திரத்தில் இரவு தங்கினார். பிறகு சலும்பருக்குச் செல்லும் காய்கறி வண்டி ஒன்றில் அவர் தொற்றிக்கொண்டார். 24 கிமீ பயணத்துக்கு அவரிடம் காசு பெறவே இல்லை. ஒருவழியாக சலும்பரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள பரோலியாவை அடைந்தபோது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 7 மணி ஆகியிருந்தது.
பன்ஸ்வாராவில் சில போலீசார் தோலா இராமையும் அவரின் சகாக்களையும் கொரோனா நோய் தாங்கிகள் என்று அழைத்ததை நினைவுகூர்ந்தவர், “காய்ச்சலுக்காக நாங்கள் பரிசோதிக்கப்பட்டோம். நேர்மாறாக, நாங்கள் ஏன் பாகுபாட்டோடு நடத்தப்படுகிறோம் எனப் புரிந்துகொள்ளவில்லை” என்கிறார்.
வீட்டுக்குச் செல்வதுவரை மட்டும் தோலா இராமுக்கு சிரமங்கள் என்றில்லை. நலிவுற்ற மகனை பரோலியாவிலிருந்து 5 - 6 கிமீ தள்ளியிருக்கும் மால்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கூட்டிச்சென்றார். எப்ரல் 6ஆம் தேதி நாங்கள் பேசியபோது, ”என் மகனுக்கு அதிகமான காய்ச்சல். என் இணையரும் நானும் அவனை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றபோது போலீசு எங்களைத் தாக்கியதுடன் வீட்டுக்குத் திரும்புமாறு கூறியது. மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என கூறியபோதுதான் அவர்கள் எங்களை விட்டனர்.” என்ற தோலாவின் மகனுக்கு மருத்துவமனையில் உரிய கவனிப்பு கிடைக்கவில்லை”. அப்போது மருத்துவமனையில் ஏராளமானவர்கள் இருந்தார்கள். எங்கள் மகனை அங்கிருந்த மருத்துவர் பார்க்கக்கூட இல்லை; திரும்பிச்செல்லுமாறு கூறினார்” என்று தோலா இராம் கூறினார்.
மூன்று நாள்களுக்குப் பிறகு அந்தக் குழந்தை இறந்துவிட்டான்; அவனுடைய நோய் என்னவென்றே கடைசிவரை தெரியவில்லை. ஒரு தந்தையாக அதிர்ச்சியில் சில நாள்கள் வரை இயல்பாகப் பேசமுடியாமல் இருந்தவர், இப்போது எங்களிடம் கூறுகிறார். ”அதற்கு யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. போப்பாவும் சரி மருத்துவர்களும் சரி எதுவும் செய்ய முடியவில்லை. அவனைக் காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம். ஆனால் எங்களால் முடியவில்லை” - குழந்தை மீது ஏதோ கெட்ட ஆவி புகுந்துவிட்டதாகவே அவருடைய குடும்பத்தினர் நம்புகின்றனர்.பரோலியா கிராமத்தின் மக்கள்தொகை 1,149 பேர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் - 99.56 விழுக்காட்டினர் மீனா அல்லது மினா எனும் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஊரின் கணிசமான வருவாய் ஆதாரம் என்பது புலம்பெயர்ந்து வேலைசெய்து அனுப்பும் பணம்தான்; அதாவது, தோலா இராம் செய்வதைப் போல. சலும்பர் வட்டாரத்தில் அண்மையில் புலம்பெயர்ந்தோருக்கான ஆஜீவிகா அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, 70 விழுக்காடு குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு ஆண் என்கிறபடி வேலைக்காக புலம்பெயர்ந்து செல்கின்றனர். இவர்கள் வீட்டுக்கு அனுப்பும் பணமே அந்த குடும்பங்களில் 60 விழுக்காடு வருமானம் ஆகும். பெண்களும் சிறுமிகளும் உள்ளூர் கட்டுமானப் பணிகளுக்குச் செல்கின்றனர்.
பொதுமுடக்கத்தால் மாநிலங்களுக்கிடையிலான எல்லைகள் மூடப்பட்டும் மாநிலங்களுக்கிடையிலான பயணம் நிறுத்தப்பட்டும் இருந்தபோது, ஆயிரக்கணக்கான இராஜஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் நடுவழியில் மாட்டிக்கொண்டனர். மார்ச் 25 அன்றைய தி எகனாமிக் டைம்ஸ் ஏட்டில் , அகமதாபாத்தில் வசித்துவரும் இராஜஸ்தானின் 50 ஆயிரக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைப்பயணம் தொடங்கினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்களில் 14 வயது முகேசும் (போலிப் பெயர்), முடக்கத்தின்போது பரோலியாவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பியவர் ஆவார். அகமதாபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய அவர், சப்பாத்தி செய்வார். அவருக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம். முகேசின் வருமானம்தான் அவருடைய குடும்பத்தின் முதன்மையான வாழ்வாதாரம். தந்தையை இழந்த முகேசுக்கு, காசநோயால் அவதிப்படும் தாய் இராம்லி(போலிப் பெயர்). அவர் உள்ளூரில் கட்டுமானப் பணிகளைச் செய்கிறார் என்றாலும் அது ரொம்ப காலத்துக்கு நீடிக்காது. ”நான் சிறு பையன் என எனக்குத் தெரியும். ஆனால் நான் வேலை செய்தாகவேண்டுமே.. வேறு வழி இல்லை” என்கிற முகேசுக்கு, நான்கு சகோதரர்கள்.
”பணமும் இல்லை, வேலையும் இல்லை. நாங்கள் என்ன செய்வது?” எனக் கேட்கும் இராம்லி, 40, மீனா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ”இப்போதும் நாங்கள் வேலை செய்தாகவேண்டும். சிறு குழந்தைகளுக்கும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவும் சிறிதாவது சம்பாதிக்கவேண்டும். அரசாங்கம் எங்களுக்கு எதையும் தந்துகொண்டிருக்கவில்லை” என்று தொலைபேசியில் அவர் கூறினார்.
முடக்கத்தால் கட்டுமானப் பணிகள் இல்லை என்பதால், இராம்லிக்கு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆனால் அவருக்கு உடல் நலம் குன்றியதுடன் மருந்தும் தீர்ந்துபோனதால் 2- 3 நாள்களில் வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டார். எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான மாநில அரசின் நிவாரணப் பொதியைப் பெறுவதற்காக, ஊராட்சி ஆள்களுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்கிறார். அவரின் பெயர் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. காரணம், காட்டுப்பகுதிக்கு அருகில் சாலையிலிருந்து தள்ளியிருக்கும் இருக்கும் அவருடைய வீட்டுக்கு ஊராட்சியின் சர்பாஞ்ச்சும் சச்சிவும் ஒருமுறைகூட வந்து பார்வையிட்டதில்லை.ஒருவழியாக இராம்லியும் முகேசும் ரேசன் பொருள்களை வாங்கியபோது, அவர்களுக்கான பொதி முழுமையாக இல்லை. “மற்ற அட்டைதாரர்களுக்குத் தந்ததைப் போல எங்களுக்கு கோதுமையோ அரிசியோ தரவில்லை. யாரிடம் இதைப் பற்றி கேட்பதெனத் தெரியவில்லை” என்று எங்களிடம் கூறுகிறார் முகேஷ். இவ்வளவுக்கும் அவர்களுக்கான ஒதுக்கீடு, அரை கிகி சர்க்கரையும் அரை கிகி எண்ணெயும் 100கி. மிளகாய்த் தூளும் மற்ற மசாலா பொருள்களும்தான். நிவாரணப் பொதியில் சர்க்கரையும் எண்ணெயும் ஒரு கிகி, கோதுமை மாவும் அரிசியும் தலா 5 கிகிவும் மற்ற மசாலா பொருள்களும் இருக்கவேண்டும்.
”அரசாங்க அறிவிப்பின்படி இந்த மாதத்துக்கான ரேசன் பொருள்களை முன்கூட்டியே நாங்கள் வாங்கிவிட்டோம். ஆளுக்கு 5 கிகி கோதுமைதான், மற்றது எதுவும் இல்லை. இந்த 5 கிகி ரேசன் அடுத்த 5 நாள்களில் தீர்ந்துவிடும்” என்கிறார், துங்கர்பூர் மாவட்டத்தின் சக்வாரா வட்டாரத்தைச் சேர்ந்த தம்தியா கிராமத்தின் செயற்பாட்டாளரான 43 வயது சங்கர் லால் மீனா.. பரோலியாவிலிருந்து 60 கிமீ தொலைவில் இருக்கிறது, இவரின் ஊர்.
மோசடிசெய்யும் ரேசன் கடை உரிமம்பெற்ற தரகர்கள் இதை மோசமாக்குவதாகச் சொல்கிறார் அவர். ”எங்கள் குடியிருப்புக்கு ரேசன் பொருள்களைக் கொண்டுவரும் உரிமம்பெற்ற தரகர், இப்போதும் எடைபோடும்போது ஒன்றிரண்டு கிகி கோதுமையைத் திருடிவிடுகிறார். அவர் திருடுவது எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் யாரிடம் போய் நாங்கள் முறையிட? கிராமத்தில் உள்ள மளிகைக்கடைகளில் இதேபொருள்களுக்கு இரட்டை விலை தரவேண்டியுள்ளது.” என்கிறார் சங்கர்.
பரோலியாவில் மீண்டும் தங்களின் வாழ்வாதாரத்துக்கான வழிகள் குறித்து மக்கள் அதிகமாகக் கவலைப்படுகின்றனர். முடக்கம் காரணமாக எல்லா இடங்களிலும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. நிலம் எதுவுமில்லாத தோலா இராமுக்கு, மொத்த கடன் 35 ஆயிரம் ரூபாயை எப்படி அடைப்பது எனக் கவலைப்படுகிறார். தன் குழந்தையின் சிகிச்சைக்காக உறவினர்கள் பலரிடமும் இப்போது ஊருக்குத் திரும்புவதற்காக மும்பையில் உள்ள ஒரு சிறு கடைக்காரரிடமும் அவர் கடன் வாங்கியுள்ளார். இந்த துயரம் போதாதென்கிறபடி ஏப்ரல் 12 அன்று விபத்தில் சிக்கி அவருக்கு கால் உடைந்துபோனது. எப்போது வேலைக்குத் திரும்பமுடியும் என அவருக்குத் தெரியவில்லை.
வருமான இழப்பானது தன் குடும்பத்தின் பணப் பிரச்னையை மேற்கொண்டும் தீவிரப்படுத்தும் என அஞ்சுகிறார், இராம்லி. தனியார் கடன்காரர்கள் பலரிடமும் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய் மொத்த கடனை அவர் அடைத்தாகவேண்டும். அவருக்கும் அவரின் ஒரு குழந்தைக்கு மலேரியா வந்தபோதும் சிகிச்சைக்காகவும் வீட்டைத் திருத்தியமைக்கவும் கடன் தொகை பயன்பட்டது. வாங்கிய கடன்களை அடைப்பதற்காக அவர் கடைசியாக இன்னொரு கடன் வாங்கினார்.
இழந்துவிட்ட காலத்தையும் சம்பளத்தையும் எப்படி ஈடுகட்டுவது என்பதில் தெளிவின்றி, தோலா இராமும் முகேசும் இராம்லியும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். ” என்னுடைய பெரும்பகுதி சேமிப்பை ஹோலி பண்டிகையின்போது செலவழித்துவிட்டேன். ஊர் திரும்புவதற்கு எப்படியோ சமாளித்து பணம்பெற்றோம். ஒப்பந்தகாரர் முன்பணம் தர மறுத்துவிட்டார். என்ன நடக்கப்போகிறதென்று பார்ப்போம்.” என்கிறார், தோலா இராம்.
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்