"என் வாழ்நாளில் இந்த ஆறு இவ்வளவு சீற்றம் கொண்டு நான் பார்த்ததே இல்லை", என்கிறார் 55 வயதான சக்குபாய் வாக்ஃ. ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று, காலை 10 மணி அளவில், அவரும்அவரது 20 வயது மகன் மனோஜும் அவர்களது வீட்டில் இருந்தார்கள். "வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது", என்று அவர் நினைவு கூர்கிறார். "திடீரென்று ஒரு பெரிய அலை எங்கள் குடிசைக்குள் புகுந்தது. நாங்கள் சிறிது நேரம் கழுத்தளவு தண்ணீரில், ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். கண் இமைக்கும் நேரத்தில், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், நான் கவனமாய் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் ஒரே நொடியில் தண்ணீர் அடித்து சென்று விட்டது", என்கிறார் அவர்.

திகிலூட்டும் அந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு சக்குபாய் மற்றும் மனோஜால் அருகிலுள்ள உயரமான இடத்திற்கு செல்ல முடிந்தது. அங்கிருந்து அவர்கள் இந்த அழிவை பார்த்தார்கள். அன்று காலை, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலுள்ள வடா தாலுகாவின் கேட்ஸ் கே கிராமத்தில், வைதர்ணா ஆற்றிலிருந்து வந்த நீர் இவர்களது குடிசையுடன் மற்ற 24 குடிசைகளையும் அடித்துச் சென்றது. பல மணி நேரங்களுக்கு பிறகு மாலையே தண்ணீரின் அளவு குறைய துவங்கியது.

"இங்கே பாருங்கள், இதுதான் எனது உலகம்", என்று ஆற்றின் கரையில் இடிந்து கிடக்கும் குடிசையை சுட்டிக்காட்டி கூறுகிறார் சக்குபாய். அந்தச் சேற்று நிலத்தில், உடைந்த ஓடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக கிடக்கின்றன, எஞ்சிய மூங்கில் கூரைகளும், சுவர்களும் கிடைக்கின்றன, மேலும் கந்தலான தார்பாய்களும் கிடைக்கின்றன. சேற்றில் பல நாட்களாக கிடந்து அழுகிய அரிசி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் நாற்றம் அங்கேயே ஒரு மேகம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது. "இந்த நாற்றத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை, எனக்கு குமட்டல் வருகிறது", என்கிறார் சக்குபாய்.

PHOTO • Rishikesh Wagh
PHOTO • Jyoti

இடிந்து கிடக்கும் வீட்டின் இடிபாடுகளுக்கு மத்தியில் மனோஜ் வாக்ஃ. வலது: மழையால் கெட்டுப்போன அரிசியுடன் அவரது தந்தை பரசுராம்.

வெள்ளம் ஏற்பட்ட 10 நாட்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 13 ஆம் தேதி, 58 வயதான அவரது கணவர் பரசுராம், ஒரு அலுமினிய கொள்கலனில் உள்ள ஈரமான அரிசியை அவருக்கு காட்டுகிறார். "இது ஒரு மாதத்திற்கான எனது குடும்பத்தின் உணவுப் படி. எங்களது வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டு, பாத்திரங்கள், உடைகள் - அனைத்தும் போய்விட்டன", என்று அவர் கூறுகிறார். "இந்த மூன்று கோதாதிகள் மட்டுமே காப்பாற்றப்பட்டன". கைகளால் தைக்கப்பட்ட அந்த தாள்கள் கயிற்றில் காய்ந்து கொண்டிருக்கின்றன.

"நாங்கள் ஆற்றின் அருகே வசிக்கிறோம், ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் நீர் மட்டம் அதிகரிக்கும்", என்று பரசுராம் கூறுகிறார். " அது எங்கள் வீட்டு வாசல் வரை வரும், ஆனால் ஒருபோதும் உள்ளே வந்ததில்லை, அதுவும் ஒரு சில மணி நேரங்களிலேயே தண்ணீரின் அளவு குறைந்து விடும். 2005 இல், மட்டும் ஒரே ஒரு முறை, எங்கள் குடிசைக்குள் தண்ணீர் வந்தது, ஆனால் அதுவும் முழங்கால் அளவுதான் இருந்தது அப்போது, மேலும் அது எங்களது குடிசைகளை அழிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு அது மிகவும் மோசமானதாக இருந்தது".

பரசுராம் மற்றும் சக்குபாய் ஆகியோர் கட்கரி ஆதிவாசிகள் -  மகாராஷ்டிராவில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாகப் பட்டியலிடப்பட்ட ஒரு சமூகம் - மேலும் அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர், நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 150 சம்பளமாகப் பெறுகின்றனர். அவர்களின் குடிசை இடிந்து விழுந்த பிறகு அவர்கள் அதே கிராமத்தில் ஆற்றின் மறுகரையில்  உள்ள சக்குபாயின் சகோதரர் வீட்டில் சென்று தங்கி இருக்கின்றனர். கேட்ஸ் கே கிராமத்தை வைதர்ணா நிதி இரண்டாகப் பிரிக்கிறது மேலும் அதன் கிழக்குக் கரையில் உள்ள பெரும்பாலான கான்கிரீட் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. இது 881 மக்களைக் கொண்ட கிராமம் (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி), இதில் 227 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

கவிதா போயிர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட சில பாத்திரங்களுடன் தனது சமையலறையை மறுசீரமைத்தார். வலது: குறைந்து வரும் உணவு கையிருப்பினை எண்ணி அவர் கவலை கொள்கிறார்.

"எங்களுக்கு என சொந்தமாக நிலம் இல்லை. நாங்கள் சம்பாதிப்பது விவசாயக் கூலி தொழிலின் மூலமே", என்று அருகில் இருக்கும் குடிசையில் இருக்கும் 35 வயதான கவிதா போயிர் கூறுகிறார். "நாங்கள் ஜூன் - ஜூலை மாதங்களில் சுமார் ரூபாய் 20,000 வரை சம்பாதிப்போம். (அவரும் அவரது கணவர் கேஷவும் 50 நாட்களுக்கு தலா 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர்). விதைப்புப் பருவத்திற்கு பிறகு நாங்கள் அதிகம் சம்பாதிக்கவில்லை. நான் 10,000 ரூபாயை பத்திரமாக எனது பருப்பு டப்பாவில் வைத்திருந்தேன்.  கஷ்ட காலங்களில் பயன்படுத்துவதற்கு எங்களிடம் இருந்த சேமிப்பு அதுவே.  இப்போது எதுவுமே இல்லை..." என்கிறார்.

கவிதாவும், கேஷவும், கவிதாவின் சகோதரரின் கிராமத்தில் (ஆற்றின் மறுபுறம் இருக்கும்) உள்ள அவரது ஒரு ஏக்கர் தோட்டத்தில் அவருக்கு உதவி புரியச் சென்றிருக்கின்றனர். "எங்களுக்கு தகவல் வந்தது, இங்கே வெள்ளத்தில் எல்லாம் மூழ்கிவிட்டது என்று", என்று கூறுகிறார் கவிதா. "நாங்கள் மறுநாள் அங்கே சென்று பார்த்தபோது, எங்களது கூரைச் சுவர் இடிந்து கிடந்தது. அங்கு கணுக்கால் அளவு சகதியாக இருந்தது". போயிர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு வாளிகளில் சேற்றை வாரி இறைத்து விட்டு,  மீதமுள்ள பொருட்களை வைத்து தங்களது வீட்டை மறு சீரமைத்தனர். ஒரு துணிகள் இருந்த பை, பிளாஸ்டிக் கலன், ஸ்டீல் கலன், 2 - 3 ஸ்டீல் தட்டுகள், மற்றும் சில போர்வைகள், ஆகியவை எல்லாம் சகதியில் புதைந்து இருந்தது. "எஞ்சி இருந்ததை எல்லாம் கழுவி விட்டு, பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். எனது மகனின் புத்தகங்களும், நோட்டுகளும் கூட நனைந்துவிட்டன, நான் அவற்றை சூலில் (மண் அடுப்பில்) வைத்து உலர்த்தினேன்", என்றார். தனது வெற்று சமையல்கட்டை பார்த்தபடி இதில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது", என்று கூறினார் கவிதா.

"பஞ்சாயத்து மக்களும் மற்றும் சில சமூக சேவகர்களும் எங்களுக்கு சில உணவுப் பொருட்களை வழங்கினர். ஆனால் இதுவரை பஞ்சனமாவிற்காக (விசாரணை பதிவிற்காக) யாரும் தாலுகா (வடா தாசில்தார்  அலுவலகம்) அலுவலகத்தில் இருந்து வரவில்லை, எங்களுக்கு எந்த இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை", என்கிறார் கேஷவ். "எங்களது மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்", என்று கூறுகிறார் கவிதா. "அரசாங்கம் நாங்கள் வாழ ஒரு பாதுகாப்பான இடத்தை கொடுக்க வேண்டும். ஆற்றில் மீண்டும் வெள்ளம் வந்தால் என்ன செய்வது?", என்று வினவுகிறார்.

வெள்ளம் வந்த மறுநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று, கேட்ஸ் கே கிராம பஞ்சாயத்து 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மாவு, 2 கிலோ பருப்பு, 2 கிலோ சக்கரை, 250 கிராம் தேயிலைத்தூள், 2 அரை கிலோ எண்ணெய் பாக்கெட்டுகள், ஒரு பாக்கெட் உப்பு, கொஞ்சம் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கேட்ஸ் கே கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு கொடுத்தனர். "அவர்கள் கொடுத்த அனைத்து பொருட்களும் தீரப்போகிறது", என்று கூறுகிறார் கவிதா.

PHOTO • Jyoti
PHOTO • Rishikesh Wagh

வெள்ளத்திற்கு பிறகான கேட்ஸ் கே கிராமத்தில் ஓடும் வைதர்ணா நதி. வலது: அதே ஆறு ஆகஸ்டில் வெள்ளம் வந்த பொழுது.

ஆகஸ்ட் 4 - 5 தேதிகளில் பெய்த கனமழையால் வடா தாலுகாவிலுள்ள 57 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தாசில்தார் தினேஷ் குராதே, என்னிடம் கூறினார். மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில், வைதர்ணா ஆற்றின் அருகில் இருக்கும் கிராமங்களான கேட்ஸ் கே, போரண்டே, கரஞ்சே, நானே மற்றும் கோரே ஆகிய கிராமங்கள் அடங்கும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பால்கரில் 729.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது - இங்கு சாதாரணமாக இதே வாரத்தில் பெய்யும் மழையின் அளவு 204 மி. மீ ஆகும்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று, கேட்ஸ் கே கிராமத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போரண்டே கிராமமும் நீரில் மூழ்கியது, அங்கு 120 குடும்பங்களைச் சேர்ந்த 499 பேர் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வசித்து வருகின்றனர். கூரைகளும், மின் கம்பங்களும் மட்டுமே வெளியே தெரிந்தன. இங்குள்ள ஒவ்வொரு கான்கிரீட் வீட்டுச் சுவர்களிலும் தண்ணீரின் அளவு கரையாக படிந்துள்ளது, அதேசமயம் கூரை வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன.

"அப்போது காலை 6 மணி. நான் எனது போர்வையில் தண்ணீரை உணர்ந்த போது நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம். நான் எழுந்து பார்த்தபோது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து இருந்தது. நான் விரைவாக என் குழந்தைகளையும், மனைவியையும் எழுப்பினேன், நாங்கள் எங்கள் உயிரை காப்பாற்ற ஓடினோம். அதன் பின்னர் ஒரு பெரிய அலை எங்கள் வீட்டிற்குள் வந்தது. அது எல்லாவற்றையும் அடித்துச் சென்றதுவிட்டது, எங்களால் எதையுமே காப்பாற்ற முடியவில்லை", என்கிறார் 45 வயதான அனில் ராஜ்காவர். "எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீராக இருந்தது, அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்தனர். எல்லோரும் கூச்சலிட்டு அலறிக் கொண்டிருந்தார்கள்..." என்றார்.

அனில், அவரது 32 வயதான மனைவி பார்வதி மற்றும் அவர்களது குழந்தைகளுடன், அவர்களது கிராமத்தைச் சேர்ந்த மற்ற சிலருடன் கிராமத்தை விட்டு வெளியேறி தண்ணீரில் அரை மணி நேரம் நடந்த பிறகு ஒரு திறந்தவெளி நிலத்தை அடைந்தனர். நீர்மட்டம் குறையும் வரை பலர் அங்கேயே தகர கொட்டகைகளில் இரண்டு நாட்களுக்குத் தங்கினர். அனில் மற்றும் பார்வதி ஆகியோர் வருடத்தில் எட்டு மாதங்களுக்கு விவசாயக் கூலிகளாக, நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதுவரை 102 குடும்பங்கள் சில உதவிகளை பெற்று இருந்தாலும் அனிலின் குடும்பம் எந்த உதவியும் பெறவில்லை என்று கூறுகிறார் தாசில்தார் தினேஷ் குராதே.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

மயூரி ஹிலீமும் அவரது சகோதரரும் தங்கள் வீட்டின் முன் நிற்கின்றனர், அங்கு ஒரு சுவர் இடிந்து விழுந்துள்ளது. வலது: அனில் ராஜ்காவர் தனது இடிந்த கூரை வீட்டின் இடிபாடுகளுக்கு மத்தியில் நிற்கிறார்.

"அதிர்ஷ்டவசமாக, போரண்டேயில்  உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். நாங்கள் அந்த இரண்டு நாட்களை சேமிப்புக் கிடங்கில் கழித்தோம். சில சமூக சேவகர்கள் எங்களுக்கு உணவும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்தனர். நீர்மட்டம் குறைய தொடங்கிய பின்பு நாங்கள் எங்கள் வீடுகளுக்கு திரும்பினோம். எல்லா இடங்களிலும் ஒரே சேறாக இருந்தது. ஒரு சுவர் இடிந்து விழுந்து கிடந்தது", என்கிறார் 32 வயதான மயூரி ஹிலீம். அவர் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை விவசாய கூலியாகப் பணியாற்றி, நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் சம்பாதிக்கிறார். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருடன் இங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தஹானு தாலுகாவிலுள்ள, செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்கு புலம்பெயர்கின்றனர்.

"ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில், வடா தாலுகாவில் இரண்டே நாட்களில் 400 மி மீ (மொத்தமாக) மழை பெய்தது. அதன் விளைவாக வைதர்ணா நதியில் வெள்ளம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று உயர் ஓதம் என்பதால், வைதர்ணாவின் உபரி நீரை கடலில் வெளியேற்ற முடியவில்லை, அதனால் அது ஆற்றோர கிராமங்களில் புகுந்தது," என்கிறார் தாசில்தார் தினேஷ் குராதே. "அந்த நாட்களில் இந்த தாலுகாவில் மனித அல்லது விலங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அனைத்து கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்கும் எங்களது பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது", என்று கூறினார்.

வைதர்ணா நிதி இப்போது அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சக்குபாயின் கவலை அமைதி கொண்டதாக தெரியவில்லை, மேலும் அவர், "மீண்டும் ஆறு சீற்றம் கொண்டால் என்ன செய்வது?", என்று வினவுகிறார்.

PHOTO • Jyoti

வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த கேட்ஸ் கே கிராமத்தைச் சேர்ந்த கட்கரி ஆதிவாசிகள்.

தமிழில்: சோனியா போஸ்

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Other stories by Jyoti
Translator : Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Other stories by Soniya Bose