கோடா (பீகார்): 4 அடி 3 அங்குலம் உயரமுள்ள தார்மி பஹாரினி, 40 கிலோவுக்கு குறையாத விறகுகட்டையை தன் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறார். தனது கிராமமான சேர்காட்டியாவிலிருந்து ஏழு கிமீ தொலைவிலுள்ள தேவ்தான்மூடில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கூடும் சந்தைக்கு அவர் வந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு காட்டிற்குள் சென்று விறகை வெட்டி எடுத்து வர 24 கிமீ தூரம் என ஒட்டுமொத்தமாக 31கிமீ நடந்துள்ளார். இதற்கு அவருக்கு கிடைக்கும் தொகை எட்டு அல்லது ஒன்பது ரூபாய் மட்டுமே.

ராஜ்மஹால் மலை வழியாக செல்லும் இந்த பாதையின் நிலப்பரப்பு கடினமான ஒன்று. ஆனால் உயிர் வாழ்வதற்காக குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை இந்த பாதையை கடந்து செல்கிறார் தார்மி. இவர் இந்தியாவில் மிக மோசமான நிலமையில் இருக்கும் பஹாரியா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பழைய சந்தல் பராக்னாஸ் பிரிவில் பரவியுள்ள இவர்கள், கோடா மாவட்டத்தில் மட்டும் 20,000 பஹாரியாக்கள் உள்ளனர். பல வருட வாக்குறுதிகள், ‘முன்னேற்றங்கள்’, திட்டங்கள் எதுவும் அவர்களது இருப்பை எந்த விதத்திலும் மாற்றவில்லை.

வறுமையின் காரணமாக தார்மியும் அவரைப் போல ஆயிரக்கணக்கானவர்களும், மகாஜன்களின் (கடன் கொடுப்பவர்கள்/வணிகர்கள்) பிடியில் சிக்கி உயிர் வாழ்வதற்காக விறகுகட்டைகளை சுமக்கின்றனர். பல பஹாரியாக்களுக்கு இந்த மரக்கட்டைகளே வருமானத்திற்கான முக்கிய ஆதாரம். மரம் கடத்தலில் ஈடுபடும் சில மகாஜன்களுக்காகவும் பலர் இதை செய்கின்றனர். “இதன் விளைவாக மிகப்பெரிய அளவில் காடழிப்பு நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழல் சமநிலையில் மாற்றம் ஏற்படுகிறது” என்கிறார் கோடா கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் சுமன் தராதியார்.

Woman assessing weight of load of wood

நீண்ட தூர நடைபயணத்திற்கு முன்பு சரியான சமநிலை இருக்க வேண்டும் என்பதற்காக, தன் உடலை விட பெரிதாக இருக்கும் விறகு சுமையின் எடையை சரி பார்க்கிறார்

இவ்வுளவு தூரம் நீங்கள் நடந்து வந்ததை என்னால் நம்ப முடியவில்லை என சந்தையில் வைத்து தார்மியிடம் கூறினேன். எங்களைச் சுற்றி நின்ற சிறு கும்பல கோபமடைந்தது. தார்மியை விட பல பெண்கள் அதிக தூரம் நடக்கின்றனர் என சிலர் குரல் எழுப்பினர். இதை சோதித்து பார்ப்பது தான் ஒரே வழி என தோன்றியது. அடுத்த நாள் பஹாரியா பெண்களோடு மலைகளை கடந்து பல மைல் தூரம் நடந்து செல்ல தயாரானோம்.

தெதிரிகோடா பகத் பாதையில் பாதி தூரம் சென்று கொண்டிருக்கும் போது, இது சரியான யோசனை தானா என தோன்றியது. அப்போது காலை ஆறு மணி இருக்கும். சில பஹாரியா கிராமங்களை அடைய, இரண்டு அல்லது மூன்று மலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் நடந்து சென்ற எட்டு கிலோ மீட்டரில் பெரும் பகுதி மலை ஏறியே சென்றோம். பல மைல் சந்தேக அலைச்சலுக்குப் பிறகு, கையில் அரிவாளோடு மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி வரிசையாக நடந்து செல்லும் பஹாரியா பெண்களை பார்த்தோம். அவர்களது துரிதமான, மென்மையான நடைக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனாலும் மூச்சு வாங்கிகொண்டே அவர்கள் பின்னால் சென்றோம். அப்போது காட்டை நோக்கியோ அல்லது தங்கள் கிராமத்தை நோக்கியோ பல பெண்கள் கீழே நடந்து சென்றதை நாங்கள் பார்த்தோம். நடந்து செல்லும் ஒவ்வொரு பெண்களின் தலையிலும், 30 முதல் 40 கிலோ எடையுள்ள விறகுகட்டை இருந்தது.

*

பார்ப்பதற்கு சுறுசுறுப்பாகவும் உடல் வலிமையோடும் இருப்பது போல் தோன்றினாலும், யதார்த்தம் என்னவெனில் பஹாரியா பெண்களில் ஒரு சிலரே 50 வயதை கடக்கின்றனர். கோடாவில் உள்ள பல பஹாரியா கிராமங்களில் 50 வயதை கடந்த ஆண்களையோ, பெண்களையோ பார்ப்பது அரிதாக உள்ளது. குறிப்பாக பல பெண்கள் 45 வயதை தாண்டி உயிர் வாழ்வதே இல்லை.

விறகுகட்டையை சந்தைக்கு எடுத்துவந்த நாளன்று நாற்பது கிலோமீட்டர் நடந்திருக்கிறார் குகு பஹாரினி. ஆனால் அவருடைய குறுகிய வாழ்வில் இதுபோன்ற நீண்ட நடையின் ஒரு பகுதி மட்டுமே பார்த்துள்ளீர்கள். தினமும் தண்ணீருக்காக ஆறு முதல் எட்டு கிலோமீட்டர் தூரம் வரை இவர் நடந்து செல்கிறார்.

“தன்ணீர் கிடைக்குமிடம் வெகு தூரமில்லை (இரண்டு கிமீ தூரத்தையே இப்படி கூறுகிறார்). ஆனால் ஒரு நடைக்கு என்னால் கொஞ்சமாகவே எடுக்க முடிவதால், சில நாட்கள் இதே தூரத்தை மூன்று அல்லது நான்கு முறை கூட நடப்பேன்” என சந்தோஷமாக கூறுகிறார். வாரத்தில் இரண்டு முறை சந்தைக்கு நடப்பது போக, இதற்கும் நடக்கிறார். தண்ணீர் கிடைக்குமிடம் ‘வெறும்’ இரண்டு கிமீ தூரத்தில்தான் உள்ளது. ஆனால் போகும் பாதை செங்குத்தாகவும் கடினமாகவும் இருப்பதால் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.

குஹியின் சூழ்நிலை ஒன்றும் தனித்துவமானது அல்ல. பல பஹாரியா பெண்கள் இப்படித்தான் தங்களை வருத்தி கொள்கின்றனர். சரிவுகளில் நாங்கள் சறுக்கி விழுந்தபோது, பருவமழை காலத்தில் இந்த பாதை எவ்வளவு ஆபத்தாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டோம். குஹி போன்ற பஹாரியா பெண்கள் டெல்லிக்கும் மும்பைக்கும் இடையேயான தூரம் அளவிற்கு ஒரு வருடத்தில் நான்கு, ஐந்து தடவை நடக்கின்றனர்.

இங்குள்ள ஆண்கள் மலைப்பகுதியில் மாற்று சாகுபடியை பின்பற்றுகின்றனர். பயிரிடப்பட்ட நிலத்தை பத்து வருடங்களுக்கு ஒன்றும் செய்யாமல் மறு உற்பத்தி ஆகும் வரை அனுமதித்தால், இது நீடித்திருக்க கூடியதோடு சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இப்படித்தான் முன்பு பஹாரியாக்கள் செயல்பட்டார்கள். ஆனால் கடன், நிலம் மீதான அழுத்தம் மற்றும் வாழ்க்கை தேவைக்காக பயிர்களை அழித்து எரித்துவிடும் விவசாய நடைமுறையை பின்பற்ற தொடங்கினர். பத்து வருடத்திற்கு முன்பாகவே அதே பகுதியில் மீண்டும் பயிர் செய்யப்பட்டன. இந்த சுழற்சியில் சிக்கி, காடுகள் தரிசாகிப் போனது. இதுதவிர, ஒரே பகுதியில் அதிகப்படியான விவசாயம் செய்ததால் விளைச்சலும் குறைந்து போனது.

இங்கு விளைவிக்கப்படும் சில பீன்ஸ் வகைகள் மும்பையில் அதிக விலைக்கு போகிறது. ஆனால், இவை எதுவும் பஹாரியாக்களுக்கு கிடைப்பதில்லை. “எனக்கு கடன் கொடுத்த மகாஜனுக்கு எனது பயிரை விற்க வேண்டும்” என்கிறார் சந்திரசேகர் பஹாரியா. தாங்கள் விளைவித்த இந்த பொருளை பஹாரியாக்கள் ஒருபோதும் உண்டதில்லை. இவை அனைத்தும் மகாஜன்களுக்கு “விற்கப்படுகின்றன”. பஹாரியாக்களின் வருமானத்தில் 46 சதவிகிதம் மகாஜங்களுக்கு கடனை திருப்பி செலுத்தவே சென்று விடுகிறது. இன்னொரு 39 சதவிகிதம் கடன்கொடுப்பவர்களுக்கு மறைமுகமாக செல்கிறது (தேவையான பொருட்களை வாங்குவதற்காக) என டாக்டர் தராதியரின் ஆய்வு கூறுகிறது.

ஒவ்வொரு மலையாக ஏறி, இறங்கி பெருமூச்சு விட்டுக்கொண்டே பெண்களின் பின்னால் நடந்து செல்கையில், மொட்டையாக்கப்பட்ட மலைப்பகுதிகள் பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தன. நாங்கள் கடந்து சென்ற கிராமங்களில், பள்ளிக்கூடங்கள் வெற்று கட்டிடங்களாகவோ அல்லது பெயரளவிற்கோ உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்ற பஹாரியா பெண்ணை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

பெண்களுக்கு முன்னால் இருபது அடிக்கு நகர்ந்து சென்று புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதில்லை. சுட்டெரிக்கும் வெயிலில், இவர்களுடைய வேகத்திற்கு இணையாக இனியும் நடக்க முடியாது என நாங்கள் நினைத்தபோது, சற்று ஓய்வெடுப்பதற்காகவும் ஒடையில் நீர் அருந்துவதற்காகவும் சரிவில் நின்றனர். வெடித்துக் கொண்டிருந்த எங்களின் நுரையீரலுக்கும் சுருங்கி கொண்டிருந்த ஆணவத்திற்கும் இந்த இடைவேளை தேவையாக இருந்தது. கடந்த மூன்று மணி நேரமாக அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள ஆறுகளில் அயோடின் குறைபாடு உள்ளதோடு மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக டாக்டர் தராதியாரின் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்குள்ள மக்களின் “பரிதாபகரமான உடல்நலத்திற்கு” இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்பது இதை பார்த்தாலே தெரிகிறது.

தண்ணீர் விநியோக அமைப்பு என்ற ஒன்று இங்கு பெயரளவிற்கு கூட இல்லை. பல வருட புறக்கணிப்பு இதை உறுதிப்படுத்துகிறது. இதனால் நீரினால் ஏற்படும் பலவித நோய்களால் பஹாரியாக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயிற்றுப்போக்கு, கல்லீரல் வீக்கம். மேலும் பலர் நாள்பட்ட நோய்களான காசநோய், இரத்த சோகை நோயால் பாதிப்படைகின்றனர். இதுதவிர இது மலேரியா தாக்ககூடிய பகுதியாகும். தோரியா கிராமத்தில் வசிப்பவர்களிலேயே மூத்தவரான 45 வயதாகும் கந்தே பஹாரியா கூறுகையில், “இங்கு யாராவது ஒருவர் நோய்வாய்பட்டால், அருகில் எந்த மருத்துவமனையும் கிடையாது. மூங்கிலில் துணியை கட்டி 15 கிமீ கரடுமுரடான பாதையில் தான் அவரை நாங்கள் தூக்கிச் செல்ல வேண்டும்”.

தண்ணீரை குடித்து முடித்த பெண்கள் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தனர். தனது வருங்கால மாமியாரோடு தண்ணீர் சுமந்து செல்வதை வைத்தே பெண்களின் திறன் இங்கு பரிசோதிக்கப்படுகிறது. பஹாரியா சமூகத்தில் கணவர் வீட்டுக்கு பெண்கள் சென்ற பிறகே திருமண சடங்குகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

சப்தர்பஹாரியா பிளாக்கில் உள்ள உபர் சிட்லர் கிராமத்தைச் சேர்ந்த மூத்தவரான எட்ரோ பஹாரியா கூறுகையில், “தண்ணீர் சுமப்பது முக்கியமான சோதனை. எங்கள் சூழ்நிலையில் தண்ணீர் சுமக்கும் திறன் இருந்தால் மட்டுமே பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்” என்றார்.

“தகுதிகாணும்” அம்சம் மிகைப்படுத்தப்படுவதாக கூறுகிறார் பழங்குடி இனத்தவரிடையே பதினான்கு வருடங்களாக பணியாற்றி வரும் சந்தல் பஹாரியா மண்டலைச் சேர்ந்த கிரிதர் மதூர். அதேசமயம் ஆண்களின் வேலை செய்யும் திறனை இதேப்போன்று சோதிப்பதில்லை என்பதையும் அவர்  ஒத்துக்கொள்கிறார். ஆனால், கனவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகும் வேறு பல காரணங்களுக்காக ஆண்களை பெண்கள் நிராகரிக்கலாம் என சுட்டி காட்டுகிறார் மதூர்.

*

தெரிகோடா மற்றும் போடா கோடா இடையே உள்ள சரிவு செங்குத்தாகவும், சறுக்கலாகவும், கூர்மையான கற்களையும் கொண்டுள்ளது. பஹாரியாக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. “இங்கு சாலை என்பது வளர்ச்சி அல்ல, சுரண்டலுக்கான அறிகுறி” என்கிறார் மதூர். அவர் சொல்வது சரிதான். மலை உச்சியில் உள்ள கிராமத்தினரை விட சமவெளிக்கு அருகே வசிக்கும் பஹாரியாக்களே அதிகமாக மகாஜன்கள் பிடியில் உள்ளனர்.

இங்கு கொண்டு வரப்படுகிற இதுபோன்ற வளர்ச்சி திட்டங்கள் எதிலும் முடிவெடுப்பவர்களாக பஹாரியாக்களை பங்கேற்க விடுவதில்லை. ஒருமுறை சோதனை முயற்சியாக ஒவ்வொரு பஹாரியா குடும்பங்களுக்கும் இரண்டு பசு மாடுகள் கொடுக்கப்பட்டன. பஹாரியாக்கள் மாட்டிலிருந்து பால் கறப்பதில்லை – உண்மையில் இந்த பால் கன்றுக்குட்டிக்கு தானே?

பஹாரியாக்கள் பால் பொருட்களையும் உண்பதில்லை. ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் மாட்டிறைச்சியை உண்பார்கள். இப்படித்தான் சில “கடன்கள்” உண்ணப்பட்டன. மற்றவர்களோ, தங்கள் பசுமாடுகளை பாரம் இழுக்க பயன்படுத்தியதால், வித்தியாசமான நிலப்பரப்பிற்கு தாக்குபிடிக்க முடியாமல் அவை இறந்து போயின. இப்படி நாட்டில் வாழும் மிகவும் ஏழ்மையான மக்கள் தாங்கள் ஒருபோதும் வாங்காத கடனுக்கு பணத்தை திருப்பி செலுத்தி கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கம் தரும் நிதிகள் இங்குள்ள ஒப்பந்ததாரர்களையே வளப்படுத்தியுள்ளது என சுட்டி காட்டுகிறார் மதூர். ஊழல் அதிகாரிகளின் அடாவடித்தனத்தால், மேலும் மேலும் மகாஜன்களின் ஆபத்தான பிடியில் போய் பஹாரியாக்கள் சிக்குகின்றனர். “அதிகாரிகள் தற்காலிகமானவர்கள். மகாஜன்கள் தான் நிரந்தர தொந்தரவு” என சுருக்கமாக கூறுகிறார் பஹாரியாக்களில் சற்று அரசியல் தெளிவுகொண்ட மதுசிங்.

அரசியல் இயக்கங்களால் ஒரளவிற்கே தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. சிபிஐ தலைமையிலான போராட்டத்தால் 1960, 70-களில் மகாஜன் கட்டுப்பாட்டில் இருந்த பஹாரியா நிலம் மீட்கப்பட்டது. ஆனால் மாநில அரசின் மெத்தனத்தால், மறுபடியும் பழைய நிலமையே நீடிக்கிறது. பல அரசு சாரா நிறுவனங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக பணியாற்றியும் எந்த வெற்றியும் பெற முடியவில்லை.

இந்த பழங்குடி இனம் படிப்படியாக குறைந்து வருவதாக டாக்டர் தராதியாரும் அவரது சக ஆய்வாளருமான பி.கே.வர்மாவும் நம்புகின்றனர். அரசாங்கம் இதை மறுத்தாலும், இப்படியொரு ஆபத்து இருப்பதை ஒத்துக்கொள்கிறது. இதை எதிர்கொள்ள பல திட்டங்களை அறிவித்தது அரசாங்கம். ஆனால் இவையெதுவும் பஹாரியாக்களுக்கு போய் சேராமல், ஒப்பந்ததாரர்களுக்கும் மகாஜன்களுக்கும் நல்ல பலனை கொடுக்கிறது. இதற்கிடையே, “எங்கள் காடுகள் அழிந்து வருகின்றன. எங்களிடம் நிலம் குறைவாக இருக்கிறது, ஆனால் வேதனையோ அதிகமாக இருக்கிறது” என்கிறார் மதுசிங்.

*

பஹர்பூரை கடந்து சந்தையை அடைந்தபோது, நாங்கள் முதலில் பார்த்த பெண்ணின் இடத்திலிருந்து 24 கிமீ நடந்து வந்திருந்தோம். அடுத்த எட்டு நாட்களும் இதேபோல் நான் நடக்க வேண்டும் என நினைத்தபோது வேடிக்கையாக தோன்றவில்லை. தாங்கள் சுமந்து வந்த 30 முதல் 40 கிலோ எடையுள்ள விறகுகட்டைகளை, வெறும் ஐந்து முதல் ஏழு ரூபாய்களுக்கு எங்கள் முன் விற்றனர்.

அடுத்த நாள் காலை என் கை, கால்களில் வலி அதிகமாக இருந்தது. அப்போதுதான் கோடாவில் 1947-ம் ஆண்டு அமைக்கப்பட்ட “சுதந்திர தூணை” பார்த்தேன். அதில் முதலாவதாக ஒரு பஹாரியாவின் பெயர் இருந்தது. உண்மையில், அந்த தூணில் பட்டியலிடப்பட்டிருந்த தியாகிகளில் பலர் பஹாரியாக்கள்.

சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை முதலில் தியாகம் செய்தவர்கள், இன்று அதன் பலனை பெற கடைசியாக நிற்கிறார்கள்.

இது பி. சாய்நாத் எழுதிய Everybody Loves A Good Drought (எல்லோரும் ஒரு நல்ல வறட்சியை விரும்புகிறார்கள்) எனும் நூலின் சிறு பகுதி. நன்றி, பென்குயின் இந்தியா.

Ordfront-ன் 20-ம் நூற்றாண்டின் சிறந்த செய்தி கட்டுரையில் ஒன்றாக The Hills of Hardship தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழில்: கோபி வி. மாவடிராஜா

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Other stories by V. Gopi Mavadiraja