சஞ்சய் கோப் தனது எந்த அடியிலும் விழுந்தது கிடையாது. ஏனெனில் அவர் ஒரு அடி கூட எடுத்து வைத்ததில்லை. 18 வயதான அவர் தனது வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரை நான் பேங்கோவில் சந்தித்தேன். ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் உள்ள ஜடுகுடா (கணக்கெடுப்பில் ஜடுகோரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது) நகரத்தில் உள்ள இந்திய யுரேனிய நிறுவனத்தின் (UCIL) சுரங்கத்திற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் உள்ளது.
UCIL, இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம். இது 1967ம் ஆண்டு தனது முதல் சுரங்கத்தை தோண்டியது. இங்கிருந்து எடுக்கப்படும் தாதுக்கள் ஜடுகுடா மற்றும் அருகில் உள்ள 6 சுரங்கங்களில் அவற்றை சுத்திகரிக்கும் வேலைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிறக் கட்டிகளாக (யுரேனியம் ஆக்சைடுகளின் கலவை) உருவாக்கப்படுகிறது. அது ஹைதராபாத்துக்கு அணு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது.
சஞ்சய்க்கு இரண்டு வயதானபோது, கவலையுற்ற அவரது பெற்றோர் இந்திய யுரேனியம் நிறுவனத்தின் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர். ஏனெனில் அவர் அதுவரை நடக்க துவங்கவேயில்லை. அவரது தந்தை தின்கூலித் தொழிலாளர். தாய் நெல் வயல்களில் வேலை செய்கிறார். இதே வேலைகளைதான் இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். சிலர் யுரேனிய சுரங்களில் வேலை செய்கிறார்கள். மற்றவர்களுக்கும் வேலை வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், தரப்படவில்லை என்று கூறுகிறார்கள். மருத்துவர்கள் சஞ்சய்யின் பெற்றோரிடம் கவலைப்பட ஒன்றுமில்லை என்று உறுதியாக கூறினார்கள். எனவே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் மகன் தன் முதல் அடியையும் அல்லது எந்த அடியையும் கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
பேங்கோவில் சஞ்சய் போல் பல குழந்தைகள் இருக்கின்றனர். பேங்கோவில் கிட்டதட்ட 800 பேர் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) வசிக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் சாண்டல், முண்டா, ஆர்யான், ஹோ, பும்ஜி மற்றும் கரியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிறவி குறைபாடுகளுடன் பிறந்தார்கள் அல்லது அதனால் இறந்தார்கள். 2007ம் ஆண்டு அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையில், இந்த பிறவிக் குறைபாடுகளினால், சுரங்கத்திற்கு அருகில் (0-2.5 கிமீ) வசிக்கும் மக்களின் இறப்புவிகிதம், தொலைவில் (அதாவது 30 முதல் 35 கிலோ மீட்டர் தொலைவில்) உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களின் இறப்பு விகிதத்தைவிட 5.86 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
இக்கிராமங்களில் உள்ள பெண்களுக்கு அதிகளவு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் வேலை செய்தவர்கள், சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு பகுதிகள் மற்றும் யுரேனிய தாதுக்களை சுத்திகரித்த நச்சு கழிவுகளை சேகரிக்கும் குளங்களுக்கு அருகில் வசித்த பலர் புற்றுநோய், காசநோய் போன்ற நோய்களினால் இறந்துள்ளார்கள்.
இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்கள், இந்தக் குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும், அதிகளவிலான கதிர்வீச்சு மற்றும் கதிரியக்க கழிவுகளுக்கும் தொடர்பு உள்ளது என்று நீண்ட காலமாகவே கூறி வருகின்றார்கள். குறிப்பாக கதிரியக்கக் கழிவுகள் வெளியேற்றப்படும் குளத்திற்கு அருகில் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளதோடு, அவர்கள் அந்தத் தண்ணீருடன் தவிர்க்க முடியாத வகையில் நேரடி தொடர்பில் உள்ளார்கள். எனினும், இந்திய யுரேனிய நிறுவன இணையதளத்தில், “இந்த நோய்களுக்கு காரணம் கதிர்வீச்சு இல்லையென்றும், ஊட்டசத்து குறைபாடு, மலேரியா மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையால்தான் இந்த கிராமங்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது“ என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய யுரேனிய நிறுவனத்திற்கு ஜடுகுடா சிங்பம்மில் 7 சுரங்கங்கள் உள்ளன. அவை பாட்டின், நார்வாபஹார், பக்ஜட்டா, டுராம்டி, மகுல்டி மற்றும் பந்துகுந்தாங் ஆகியவை ஆகும். கதிரியக்கத்தால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் வருவது குறித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கும் ஒன்று. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு, அதைத் தள்ளுபடி செய்தது. இந்திய அணுசக்திக் கழகம் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், “யுரேனியக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜடுகுடாவில் உள்ள கதிர்வீச்சுக்கு எதிரான ஜார்கண்டி அமைப்பு, நாட்டின் யுரேனியத் தேவைக்காக இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் கொடுக்கும் விலை குறைத்து முன்னிலைப்படுத்த நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றனர்.
தமிழில்: பிரியதர்சினி. R.