கடந்தாண்டு காலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 72 வயது ஆதிலக்ஷ்மிக்கு சரிவுப் பாதையில் ஏறி, சந்தில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வது கடினமானது. தெற்கு பெங்களூரின் சுட்டாகுண்டே பல்யா பகுதியின் பவானி நகர் குடிசைப் பகுதிகளில் உள்ள அந்த ஒற்றை அறை கொண்ட வீட்டை குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருடன் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட கிராமத்திலிருந்து பெங்களூருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி ஆதிலக்ஷ்மியும், அவரது 83 வயது கணவர் கண்ணையா ராமும் புலம்பெயர்ந்தனர். கணவருக்கு கிடைத்த தச்சு வேலையைக் கொண்டு அவர் தனது இரண்டு மகன்கள், மகள்களை வளர்த்துள்ளார்.
“வயதாகிவிட்டது என்பதற்காக நான் சாப்பிடத் தேவையில்லையா?” என அவர் கேட்கிறார். இந்த துரதிஷ்டவசமான கேள்வியை கடந்த ஆறு மாதங்களாக அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மாதந்தோறும் ஒருவருக்கு ஏழு கிலோ என அளிக்கப்படும் இலவச அரிசி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அரிசியுடன் மானிய விலையில் ரூ.150 செலுத்தி வாங்கி வந்த உப்பு, சர்க்கரை, பாமாயில், சோப் போன்றவையும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்த முதிய தம்பதிகளுக்கு ரேஷன் ஏன் மறுக்கப்படுகிறது? வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு இருவரது கைரேகையும் பொருந்தவில்லை. பெங்களூருவில் உள்ள ரேஷன் கடைகளில் இதற்காக சிறிய இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று நகரில் சுமார் 1,800 கடைகள் உள்ளன.
இந்திய நகரங்களில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் மக்கள் ஒவ்வொரு முறை பொருள் வாங்கும் போதும் அடையாளச் சான்றாக அவர்களது கைரேகையை செலுத்த வேண்டும். கர்நாடகாவில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் குடும்ப அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூன் வரை அவகாசம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள சுமார் 80 லட்சம் (கணக்கெடுப்பில் மாறுபடலாம்) பிபிஎல் அட்டையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் யு.டி. காதர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆதாருடன் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் 'போலி' என கருதப்படும் என்றுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஆதார் அடையாள முறை அறிமுகம் செய்யப்பட்ட போது பொது விநியோக திட்டத்தை முறைப்படுத்த “தேர்வு” முறையாக இதை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. காலபோக்கில் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள், கல்வி உதவித்தொகை போன்ற அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. வங்கிக் கணக்குகள், கைப்பேசி இணைப்புகள் என பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் அடையாள எண் தனியார் நிறுவனங்களாலும் இணைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அமைப்பில் உள்ள குறைபாடுகள், மோசடி மற்றும் இந்திய குடிமக்கள் கண்காணிக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன போன்ற விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஆதாரின் அரசியலமைப்பு அதிகாரத்தை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் கண்ணையா ராமும், ஆதிலக்ஷ்மியும் ஆதார் அட்டைகள் பெற்றபோதும் இழப்பை சந்தித்து வருகின்றனர். “எங்களது பழைய கைரேகை பதிவு [ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில்] பொருந்தவில்லை என்று எங்களை மீண்டும் சென்று, [ஆதார் மையத்தில் கைரேகையை மீண்டும் பதிவு செய்ய] பதிவு செய்ய சொன்னார்கள்,” என்கிறார் கண்ணையா ராம்.
இங்கு மற்றொரு பிரச்னை உள்ளது. “நீங்கள் உங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும். சலுகைகளைப் பெறுவதற்கு அந்த கைரேகைப் பதிவு உங்களுக்கு கடவுச்சொல்லாக மாறும். எனினும், உடலுழைப்புத் தொழிலாளிகள் அவர்கள் செய்யும் வேலை காரணமாக கைரேகைகளில் குறைபாடு ஏற்படும் அல்லது வயதாகும்போது கைரேகைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை தொழில்நுட்பம் அங்கீகரிப்பதில்லை,” என விளக்குகிறார் பெங்களூரில் உள்ள இணையம் மற்றும் சமூகத்திற்கான மையத்தில் பணியாற்றியவரும், உலக மனித உரிமை அமைப்பின் சட்டப்பிரிவு 19ன் சட்டப்பூர்வ ஆராய்ச்சியாளருமான விதுஷி மர்தா. “ஆதார் முறை மக்களை பாதுகாப்பதாகக் கூறினாலும், உள்ளார்ந்த சிக்கல் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.”
ஆதிலக்ஷ்மியும், கண்ணையா ராமும் கட்டுமானப் பணியாளரான அவர்களது மூத்த மகன், அவரது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் (தச்சு வேலை செய்யும் இளைய மகன் தனியாக வசிக்கிறார்) வாழ்ந்து வருகின்றனர்.
“எங்கள் மகனை இப்போதும் சார்ந்திருப்பது எங்களுக்கு அவமானம். மூன்று பிள்ளைகளுக்கும் அவன் உணவளித்து, படிக்க வைக்க வேண்டும். அவர்கள் ஏன் ரேஷன் பொருட்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்?” என கேட்கிறார் கையறு நிலையில் ஆதிலக்ஷ்மி.
உடல்நலம் சார்ந்த செலவுக்கே அவர்களின் முதியோர் உதவித்தொகையான மாதம் தலா ரூ.500 போய்விடுகிறது. ஆதிலக்ஷ்மிக்கு அண்மையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் காலுடைந்த நிலையில் அவர் குணமடைந்து வருகிறார். கண்ணையா ராமிற்கு இதய நோய், முழங்கால் பலவீனம், அடிக்கடி மயக்கம் ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் உள்ளன.
பெயர் வெளியிட விரும்பாத ரேஷன் கடை பணியாளர் ஒருவரிடம் நான் பேசிய போது, ரேஷன் அட்டையே முதியோர்களுக்கு போதுமானது. ஒருவரது கைரேகையை குடும்பத்தின் ஒரு உறுப்பினராவது உறுதி செய்ய வேண்டும். கணவன், மனைவி என இருவருக்கும் பயோமெட்ரிக்ஸ் பொருந்தாத போது என்ன செய்வது?
“எனக்கு அவர்கள் நீண்ட காலமாக தெரிந்திருந்தாலும், இயந்திர பரிசோதனையில் அவர்கள் சோபிக்காவிட்டால் என்னால் ரேஷன் பொருட்களை தர முடியாது,” என்கிறார் அப்பணியாளர். “அவர்கள் மீண்டும் சென்று மறுபதிவு செய்து கைரேகைகளை பொருத்த வேண்டும். உணவு மற்றும் பொது விநியோகத் துறை, பெங்களூரு வளர்ச்சி ஆணையம் அல்லது ஏதேனும் ஒரு பதிவு மையத்திற்கு சென்று மறுபதிவு செய்யலாம்,” என்கிறார் அவர். அதே விரல்களாக இருந்தாலும், கைரேகை பொருந்தாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
10அடிக்கும் குறைவான சரிவுப்பாதையில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து செல்ல ஆதிலக்ஷ்மி போராடுகிறார். இதுபோன்ற குடிமக்கள் எப்படி நகரத்தைச் சுற்றி அலைந்து தங்களது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவார்கள் என மாநில அரசு எதிர்பார்க்கிறது?
“மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என ஆதார் எண்களுடன் லட்சக்கணக்கான இந்தியர்கள் உள்ளனர். உடலுழைப்பு செய்பவர்களின் பயோமெட்ரிக்குகளை இயந்திரங்கள் அங்கீகரிக்க தவறுவதால் கொடுமையான யதார்த்தத்துடன் வாழ வேண்டிய கட்டாயம். இத்தொழில்நுட்ப முறையில் பிரச்னையை சரிசெய்வதற்கு வழியில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களை யாரென நிரூபிக்க வெவ்வேறு அலுவலகங்களுக்கு ஓட வேண்டும்,” என்கிறார் பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியின் பேராசிரியரும், உணவு உரிமை செயற்பாட்டாளருமான க்ஷிதிஜ் அர்ஸ்.
ஆதிலக்ஷ்மி வீட்டிலிருந்து 200 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள முன்னாள் கட்டுமான பணியாளரும், தற்போது மூத்த காய்கறி வியாபாரியாகவும் உள்ள விஜயலக்ஷ்மிக்கும் பயோமெட்ரிக் பரிசோதனையில் சிக்கல் ஏற்பட்டு ஓராண்டாக ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. “இப்பிரச்னையை சரிசெய்ய இருமுறை முயற்சித்தும், அதிர்ஷ்டமில்லை,” என்கிறார் அவர். காய்கறி விற்று தினமும் கிடைக்கும் ரூ.150ஐக் கொண்டு அன்றாட தேவைகளை அவர் தீர்த்துக் கொள்கிறார்.
முதியோர், உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல குழந்தைகளும்கூட ஆதாரின் தொழில்நுட்ப திறனின்மைக்கான விலையைக் கொடுக்கின்றனர்.
பயோமெட்ரிக் தரவுகள் பொருந்தாத காரணத்தால் மேற்கு பெங்களூரின் பரபரப்பான காட்டன்பெட் பசார் குடிசைப் பகுதியைச் சேர்ந்த வீட்டில் வசிக்கும் சகோதர, சகோதரிகளான 14 வயது கிஷோரும், 13 வயது கீர்த்தனாவும் இரண்டு ஆண்டுகளாக தங்களின் ரேஷன் பொருட்களுக்கான பங்கைப் பெறுவதில்லை. 15 வயதிற்கு முன் ஒரு குழந்தை பதிவு செய்தால், அவர்கள் அந்த வயதை அடையும் வரை அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பயோமெட்ரிக் பொருந்தாவிட்டால் என்ன செய்வது? உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது. அவர்களின் பெற்றோர் நகராட்சி கார்ப்ரேஷனின் துப்புரவுப் பணியாளர்கள். இருவரும் சேர்ந்து மாதம் ரூ.12,000 சம்பாதிக்கின்றனர்.
நன்றாக படிக்கும் மாணவன் கிஷோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஆனால் செலவு அதிகரித்து, ரேஷன் பொருட்களும் மறுக்கப்பட்டதால் அவனை மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்க்கும் நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது அவன் தனது பகுதியில் பால் விநியோகம் செய்து வருவாய் ஈட்டி குடும்பத்திற்கு உதவி வருகிறான். பிறகு அவசரமாக கிளம்பி காலை 9 மணிக்கு பள்ளிக்குச் செல்கிறான். மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்தவுடன், மாலையில் பால் விநியோகத்திற்கு செல்கிறான். அவனது நாள் பொழுது இரவு 8 மணிக்கு முடிகிறது.
வீட்டுப்பாடம் எப்போது செய்வது? “பள்ளியிலேயே முடிந்தவரை நான் முடிக்க முயல்கிறேன்,” என்கிறார் கிஷோர். தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்யும் அவன் ரூ.3,500 சம்பாதித்து பெற்றோரிடம் கொடுக்கிறான். கூடுதல் வருவாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை அவர்கள் கையாளுகின்றனர். கிலோ ரூ.15க்கு அண்டை வீட்டார்களிடம் அவர்கள் அவ்வப்போது அரிசி வாங்குகின்றனர். இரு பிள்ளைகளுக்கும் ரேஷன் கிடைத்தால், இருவருக்கும் தலா ஏழு கிலோ அரிசி கிடைக்கும்.
ஒரே ரேஷன் கடைக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து செல்வதால், “டீலர் உங்களை அறியலாம், இயந்திரம் அறியாது,” என்கிறார் உணவு உரிமை பிரச்சார செயற்பாட்டாளர் ரேஷ்மா.
தமிழில்: சவிதா