“அவர்கள் என்னை கொன்றிருப்பார்கள்…” என்கிறார் 28 வயது அருணா அருகே விளையாடிக் கொண்டிருக்கும் ஆறு வயது மகளை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே. ‘அவர்கள்’ என்பவர்கள் அருணாவின் குடும்பத்தினர். அவர் நடந்து கொண்ட விதத்தையும் அதற்கான காரணத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ”பொருட்களை தூக்கி எறிவேன். வீட்டில் தங்க மாட்டேன். யாரும் எங்களின் வீட்டருகே கூட வர மாட்டார்கள்…”
காஞ்சிபுர மாவட்டத்திலிருக்கும் அவரது வீட்டருகே இருக்கும் மலைகளில் அடிக்கடி அவர் சுற்றிக் கொண்டிருப்பார். அவர் காயப்படுத்துவார் என்கிற அச்சத்தில் சிலர் அவரிடமிருந்து தப்பி ஓடுவார்கள். பிறர் அவர் மீது கல்லெறிவார்கள். அவரது அப்பா அவரை வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவார். சில சமயங்களில் வெளியே செல்லாமலிருக்க நாற்காலியில் அவரை கட்டிப் போடுவார்.
மனச்சிதைவு நோய் கண்டறியப்பட்டபோது அருணாவுக்கு (உண்மையான பெயரில்லை) 18 வயது. யோசிக்கும் விதம், உணரும் விதம், நடத்தை ஆகியவற்றை அந்த நோய் பாதிக்கிறது.
செங்கல்பட்டு தாலுகாவில் இருக்கும் கொண்டாங்கி கிராமத்தின் தலித் காலனியிலுள்ள வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் அருணா, கடினமான நாட்களை பற்றிய பேச்சை நிறுத்துகிறார். சட்டென விலகி செல்கிறார். ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன் பிங்க் நிற நைட்டி அணிந்திருக்கும் உயரமான அவர் சற்று குனிந்து நடக்கிறார். ஓரறை கொண்ட குடிசைக்குள் நுழைந்து மருந்துச் சீட்டையும் இரண்டு மாத்திரை அட்டைகளையும் எடுத்து வருகிறார். ”இது எனக்கு தூக்கத்தை தரும். இன்னொன்று நரம்பு தளர்ச்சி வராமலிருக்க கொடுத்திருக்கிறார்கள்,” என்கிறார் அவர் மாத்திரைகளை காண்பித்து. “இப்போது நல்லபடியாக தூங்குகிறேன். ஒவ்வொரு மாதமும் செம்பாக்கத்துக்கு (ஆரம்ப சுகாதார மையம்) சென்று மருந்துகள் பெற்று வருகிறேன்.
ஷாந்தி சேஷா இல்லையெனில் அருணாவின் நோயைக் கண்டறிந்திருக்க முடியாது.
61 வயது ஷாந்தியால் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அருணா போல மனச்சிதைவில் இருந்த நூற்றுக்கணக்கான பேருக்கு அவர் உதவியிருக்கிறார். 2017-2022-ல் மட்டும் செங்கல்பட்டில் 98 நோயாளிகளை அவர் அடையாளம் கண்டிருக்கிறார். மருத்துவப் பராமரிப்பு பெற உதவியிருக்கிறார். மனச்சிதைவு ஆய்வு அறக்கட்டளையில் ஒப்பந்தத்துக்கு பணிபுரியும் சமூக செயற்பாட்டு ஊழியர் ஷாந்தியை மனநலமற்றவர்களுக்கு பணிபுரிபவராக கொண்டாங்கி கிராமத்தில் நன்றாக தெரியும்.
பத்து வருடங்களுக்கு முன் ஷாந்தி அருணாவை சந்தித்தபோது, “அவர் இளமையாக ஒல்லியாக இருந்தார். திருமணம் நடந்திருக்கவில்லை,” என்கிறார் அவர். “அவர் சுற்றிக் கொண்டிருந்தார். சாப்பிடவில்லை. திருக்கழுக்குன்ற மருத்துவ முகாமுக்கு அவரைக் கொண்டு வருமாறு அவரது பெற்றோரிடம் கூறினேன்.” மனச்சிதைவு நோயால் பாதித்த மக்களிடம் நோயை கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் SCARF அமைப்பு மாதமொரு முறை அம்முகாமை நடத்துகிறது.
கொண்டாங்கியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருக்கழுக்குன்றத்துக்கு அருணாவை அவரது குடும்பம் கொண்டு செல்ல முயலுகையில், அவர் வன்முறையாக நடந்து கொண்டார். அருகே எவரையும் விட மறுத்தார். கைகளும் கால்களும் கட்டப்பட்டு முகாமுக்கு அவர் தூக்கி செல்லப்பட்டார். “15 நாட்களுக்கு ஒருமுறை ஊசி போடும்படி என்னிடம் (மனநல மருத்துவர்) சொன்னார்கள்,” என்கிறார் ஷாந்தி.
ஊசிகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை தாண்டி, அருணாவுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை முகாமில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. “சில வருடங்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு, அவரை நான் செம்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றேன்,” என்கிறார் ஷாந்தி. அங்கு இன்னொரு தொண்டு நிறுவனம் (பான்யன்) மனநல மருத்துவ மையத்தை நடத்திக் கொண்டிருந்தது. “அருணா இப்போது மிகவும் நன்றாக இருக்கிறார்,” என்கிறார் ஷாந்தி. “அவர் நன்றாகவும் பேசுகிறார்.”
கொண்டாங்கி கிராமத்தின் மையம் அருணாவின் வீட்டிலிருந்து சில அடிகள்தாம். நாயுடு, நாயக்கர் போன்ற ஆதிக்க சாதியினர் இங்கு வசிக்கின்றனர். ஷாந்தி, நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். “அருணா, அவர்களின் சாதி (பட்டியல் சாதி) என்பதால் இங்கு (தலித் காலனி) அவரை சகித்துக் கொண்டனர்,” என நம்புகிறார் ஷாந்தி. காலனியில் வசிப்பவர்கள், நாயுடு - நாயக்கர் பகுதிகளுக்கு வர மாட்டார்கள் என விளக்குகிறார். “அருணா அங்கு சென்றிருந்தால், மோதல் உருவாகியிருக்கும்.”
நான்கு வருட சிகிச்சையில் இருந்தபோது, அருணாவுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தபோது கணவர் அவரை விட்டு சென்று விட்டார். பெற்றோரின் வீட்டுக்கு திரும்பிய அவர், அப்பா மற்றும் அண்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார். சென்னையில் வசிக்கும் அக்கா, அவரின் குழந்தையை பார்த்துக் கொள்கிறார். அருணா தன் நோயை மருந்துகள் கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது அவருக்கு இருக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கு காரணம் ஷாந்தி அக்காதான் என்கிறார் அவர்.
*****
மதிய உணவு கட்டிக் கொண்டு, செங்கல்பட்டு தாலுகாவில் செல்ல வேண்டிய கிராமப் பட்டியலுடன் அன்றாடம் காலை 8 மணிக்கு ஷாந்தி கிளம்பிவிடுவார். 15 கிலோமீட்டர் தூரத்தை தினமும் ஒருமணி நேரம் நடந்து மதுராந்தகத்திலுள்ள பேருந்து நிலையத்தை அடைவார். “பிற கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்குதான் கிடைக்கும்,” என்கிறார் அவர்.
தாலுகா முழுக்க சென்று, மனநோய் கொண்டவர்களை கண்டறிந்து மருத்துவ பராமரிப்பு அவர்களுக்கு கிடைக்க உதவுவதுதான் அவரது பணி.
“சுலபமாக அடைய முடிகிற கிராமங்களுக்கு முதலில் செல்வோம். பிறகு தூரப் பகுதிகளுக்கு செல்வோம். அப்பகுதிகளுக்கான பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில்தான் கிடைக்கும். சில நேரங்களில் நாங்கள் பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் மதியம் வரை கூட காத்திருந்திருக்கிறோம்,” என ஷாந்தி நினைவு கூருகிறார்.
மாதம் முழுக்க பணிபுரியும் ஷாந்திக்கு ஞாயிற்றுக் கிழமைகள் மட்டும்தான் விடுமுறை. சமூக சுகாதார ஊழராக அவரின் அன்றாடப் பணி ஒரே பாணியில் முப்பது வருடங்களாக தொடர்ந்திருக்கிறது. வெளிப்படையாக தெரியவில்லை எனினும் அவரின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தியாவின் இளைஞர்களில் 10.6 சதவிகிதம் பேர் அகச்சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 13.7 சதவிகிதம் பேர் மன நோயால் பாதிப்படைகின்றனர். ஆனால் சிகிச்சையின் அளவு குறைவாகவே இருக்கிறது. 83 சதவிகிதம்தான். மனச்சிதைவு நோய் கொண்டவர்களில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் பேர் தேவையான பராமரிப்பை பெற முடியவில்லை.
ஷாந்தியின் சுகாதார ஊழியர் வாழ்க்கை 1986-ல் தொடங்கியது. அச்சமயத்தில் பல இந்திய மாநிலங்களில் மனநலத்துக்கான வல்லுநர்கள் போதிய அளவில் இருக்கவில்லை. நகரங்களில் பயிற்சி பெற்றிருந்த சிலரும் கிராமப்புறங்களில் மிகக் குறைவாகதான் இருந்தனர். இப்பிரச்சினையைக் கையாளவென தேசிய மன நல செயல்திட்டம் (NMHP) 1982ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் குறைந்தபட்ச மனநல மருத்துவம் சென்றடைவதும் கிடைக்கப்பெறுவதும்தான் அத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, வசதி வாய்ப்பற்ற மக்கள் மற்றும் அதிக பாதிப்பை அடையும் நிலையில் இருக்கும் மக்கள்.
செஞ்சிலுவை சங்கத்தில் சமூகப் பணியாளராக 1986ம் ஆண்டு ஷாந்தி சேர்ந்தார். செங்கல்பட்டின் தூரப்பகுதிகளுக்கு பயணித்தார். மாற்றுத்திறனாளிகளை கண்டுபிடித்து அவர்களின் உடனடித் தேவைகளை அமைப்புக்கு அளித்தார்.
1987ம் ஆண்டில் SCARF ஷாந்தியை அணுகியபோது, காஞ்சிபுரத்தின் திருப்போரூர் ஒன்றியத்திலிருந்த மன நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை அந்த அமைப்பு NMHP திட்டத்தின்படி செயல்படுத்திக் கொண்டிருந்தது. கிராமப்புற தமிழ்நாட்டில் சமூகப்பணி செய்யும் செயற்பாட்டாளர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது. “பள்ளிக் கல்வி முடித்த மக்கள் சேர்க்கப்பட்டனர். மனக்குறைபாடுகளை அடையாளம் கண்டு, நோயாளிகளை கண்டறிந்து மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன,” என்கிறார் SCARF-ன் இயக்குநரான டாக்டர் ஆர்.பத்மாவதி. அவரும் 1987ம் ஆண்டில்தான் அமைப்பில் சேர்ந்தார்.
இந்த முகாம்களில் பல வகையான மனக்குறைபாடுகளை பற்றியும் அவர்களை கண்டறியும் விதங்கள் குறித்தும் ஷாந்தி கற்றுக் கொண்டார். மனநோயில் இருப்பவரை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் திறனையும் அவர் உருவாக்கிக் கொண்டார். அவரது தொடக்க சம்பளம் மாதத்துக்கு ரூ.25 என்கிறார் அவர். மனநோய் கொண்டவர்களை கண்டறிந்து மருத்துவ முகாம்களுக்கு அவர்களை வர வைப்பதுதான் அவரது வேலை. “நானும் இன்னொருவரும் மூன்று பஞ்சாயத்துகளுக்கு நியமிக்கப்பட்டோம். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2-4 கிராமங்கள் இருக்கும்,” என்கிறார் அவர். இத்தனை வருட அனுபவத்தினூடாக அவரது ஊதியமும் அதிகரித்தது. 2022ம் ஆண்டில் அவர் SCARF அமைப்பிலிருந்து ஓய்வு பெறும்போது பிடித்தங்கள் போக மாதத்துக்கு 10,000 ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தார்.
அவரது பணி, கடினமான காலத்திலும் வாழ்க்கை ஓடத் தேவையானளவு, நிலையான வருமானத்தை அவருக்குக் கொடுத்தது. மதுப்பழக்கம் கொண்ட அவரது கணவர், குடும்பத்துக்கென பணம் தந்ததில்லை. எலக்ட்ரீசியனாக இருக்கும் 37 வயது மகன் நாளொன்றுக்கு 700 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரின் வருமானம் நிலையானதல்ல. மாதத்தில் 10 நாளளவுக்குதான் அவருக்கு வேலை இருக்கும். மனைவி, மகளை பார்த்துக் கொள்ள அவருக்கு அந்த வருமானம் போதாது. ஷாந்தியின் தாயும் அவர்களுடன்தான் வாழ்கிறார். 2022ம் ஆண்டில் SCARF-ன் மனச்சிதைவு குறித்த திட்டம் முடிவுற்றதும் ஷாந்தி தஞ்சாவூர் பொம்மைகளை செய்து விற்று, 50 பொம்மைகளுக்கு 3000 ரூபாய் என வருமானம் ஈட்டினார்.
30 வருடப் பணி ஷாந்திக்கு அலுப்பு தரவில்லை. கடைசி ஐந்து வருடப் பணியில், அவர் செங்கல்பட்டின் 180 கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு சென்றிருக்கிறார். “வயதாகி விட்டது, ஆனாலும் இந்த வேலையை நான் செய்தேன்,” என்கிறார் அவர். “அதிக வருவாய் இல்லையென்றாலும் சம்பாதித்ததை கொண்டு சமாளித்தேன். எனக்கு மன திருப்தி இருக்கிறது. மரியாதை கிடைக்கிறது.”
*****
49 வயது செல்வி இ., ஷாந்தியுடன் மனச்சிதைவு நோயாளிகளை தேடி செங்கல்பட்டு முழுக்க பயணித்திருக்கிறார். 2017லிருந்து 2022 வரை செல்வி 117 கிராமங்களுக்கு சென்றிருக்கிறார். உத்திரமேரூர், காட்டாங்கொளத்தூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று ஒன்றிய பஞ்சாயத்து எல்லைகள் முழுவதும் சென்றிருக்கிறார். 500 பேருக்கு மருத்துவ பராமரிப்பு கிடைக்கும் வழி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். SCARF-ல் அவர் 25 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். இப்போது மறதி நோய் கொண்ட நோயாளிகளை கண்டறியும் இன்னொரு திட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
செங்கல்பட்டின் செம்பாக்கம் கிராமத்தில் செல்வி பிறந்தார். பள்ளி முடித்த பிறகு சுகாதார ஊழியராக பணி தொடங்கினார். நெசவை பிரதானமாக செய்யும் செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியாக அச்சமூகம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. “10ம் வகுப்புக்கு பிறகு நான் படிக்கவில்லை,” என்கிறார் அவர். “கல்லூரி செல்ல நான் திருப்போரூருக்கு செல்ல வேண்டும். வீட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவு. நான் படிக்க விரும்பினேன். ஆனால் தூரத்தினால் என் பெற்றோர் என்னை அனுமதிக்கவில்லை,” என்கிறார் அவர்.
26 வயதில் திருமணமான பிறகு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே உறுப்பினராக செல்வி ஆனார். எலக்ட்ரீசியனாக அவரது கணவரின் வருமானம் நிலையானது இல்லை. எனவே அவரின் குறைவான வருமானத்தைக் கொண்டுதான் வீட்டுச் செலவையும் இரண்டு மகன்களின் கல்விச் செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும். 22 வயதான மூத்த மகன் ஆறு மாதங்களுக்கு முன் எம்எஸ்சி கணிணிவியல் முடித்தார். 20 வயதாகும் இரண்டாம் மகன் செங்கல்பட்டிலுள்ள அரசு கல்லூரியில் படிக்கிறார்.
கிராமங்களுக்கு பயணித்து மனச்சிதைவு நோயாளிகளை சிகிச்சைக்கு செல்ல ஊக்குவிக்கும் முன்பு, செல்வி மனநல ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார். 10 நோயாளிகளுக்கு மூன்று வருடங்கள் ஆலோசனை வழங்கினார். “வாரத்துக்கு ஒரு முறை அவர்களை சென்று பார்த்தேன்,” என்கிறார் அவர். “ஆலோசனை வழங்கும் நேரங்களில் சிகிச்சை, தொடர் சிகிச்சை, உணவுமுறை, சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து நோயாளிகளிடமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் நாங்கள் பேசினோம்.”
தொடக்கத்தில் செல்விக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. “பிரச்சினை இருப்பதாகவே முதலில் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,” என்கிறார் அவர். “இது நோய்தான், சிகிச்சை அளிக்க முடியும் என நாங்கள் அவர்களிடம் சொல்வோம். நோயாளிகளின் குடும்பங்கள் கோபம் கொள்ளும். நோயாளிகளை சிலர் மருத்துவமனைகளுக்கு பதிலாக மதம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து சென்றனர். கடுமையான முயற்சி தேவைப்பட்டது. பலமுறை வீட்டுக்கு செல்வோம். மருத்துவ முகாமுக்கு வரும்படி வற்புறுத்துவோம். நோயாளியால் பயணிக்க முடியவில்லை எனில், மருத்துவர் வீடுகளுக்கு செல்வார்.”
பிரச்சினையை தீர்க்க செல்வி ஓர் உத்தி வகுத்தார். ஒரு கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் அவர் செல்வார். மக்கள் கூடும் டீக்கடைக்கும் செல்வார். பள்ளி ஆசிரியர்களிடமும் பஞ்சாயத்து தலைவர்களிடமும் பேசுவார். அவரின் முக்கிய தொடர்புகளாக அவர்கள் ஆயினர். மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகளை விவரித்து, மருத்துவப் பராமரிப்பின் பயனை குறிப்பிட்டு, கிராமத்தில் மனநோய் கொண்டவர்கள் பற்றிய தகவல்களை கொடுக்குமாறு வேண்டுவார். “சிலர் தயங்கினர். சிலர் நோயாளியின் வீட்டை சுட்டிக் காட்டினர்,” என்கிறார் செல்வி. “பலருக்கு பிரச்சினையின் ஆழம் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட நபரிடம் காணப்படும் நடத்தை மாற்றத்தை சொல்வார்கள். சிலர் தொடர் தூக்கமின்மையை சொல்வார்கள்,” என்கிறார் அவர்.
அகமணமுறையும் ரத்த சொந்தங்களுக்கு இடையேயான திருமணங்களும் வழக்கமாக இருக்கும் சூழலில் வளர்ந்த செல்வி, அறிதிறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதை பார்த்திருக்கிறார். மனநல குறைபாடுகளுக்கும் அறிதிறன் குறைபாடுகளுக்கும் உள்ள வேற்றுமையை கண்டறியும் திறனை இது வழங்கியதாக கூறுகிறார் அவர். இப்பணிக்கு தேவையான முக்கியமான திறன் அது.
நோயாளியின் வீட்டுக்கே சென்று மருந்துகளை கொடுக்க வேண்டியது செல்வியின் முக்கியமான வேலைகளில் ஒன்று. மனநல குறைபாடுகள் கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் சுகாதார சேவைகளுக்கும் மருந்துகளுக்கும் தங்களின் சொந்த பணத்தை செலவழிக்கின்றனர். கிட்டத்தட்ட 40 சதவிகித நோயாளிகள், தேசிய மனநல ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சேவைகளை பெற, 10 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டும். தூர கிராமங்களில் இருக்கும் மக்கள், சிகிச்சையை தொடர்ந்து பெறுவது கஷ்டமாக இருக்கிறது. நோய் அறிகுறிகளுடன் போராடி சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நோயாளிகளின்பால் சமூகம் காட்டும் பாரபட்சமும் இன்னொரு தடையாக இருக்கிறது.
“சமீபமாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தால் ஓரளவுக்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது,” என்கிறார் செல்வி. “மக்களிடம் பெரியளவில் அச்சமில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிப்பது சுலபமாகிவிட்டது.” மேலும் அவர், “ஆனால் மனநோய் கொண்டிருப்போரின் குடும்பங்களை அணுகுகையில் இன்னும் அவர்கள் கோபம் கொள்கின்றனர். ‘ஏன் இங்கு வருகிறாய்.. இங்கு மனநிலை தவறியவர் இருப்பதாக யார் சொன்னார்கள்?’ எனக் கேட்பார்கள்,” என்கிறார்.
*****
செங்கல்பட்டின் மானாமதி கிராமத்தை சேர்ந்த 44 வயது சுகாதார ஊழியர் டி.லிலி புஷ்பமும் மனநலம் பற்றி கிராமங்களில் நிலவும் கற்பிதங்களை ஒப்புக் கொள்கிறார். “நிறைய சந்தேகம் இருக்கிறது. மனநல மருத்துவர் நோயாளிகளை கடத்தி சித்ரவதை செய்வார்களென பலர் நினைக்கின்றனர். அவர்கள் சிகிச்சைக்கு வந்தாலும், பயத்தில்தான் இருப்பார்கள்,” என்கிறார் லிலி. “எங்களின் அடையாள அட்டையை காட்டி, மருத்துவமனையில் இருந்து வந்திருப்பதாக விளக்குவோம். ஆனாலும் அவர்கள் எங்களை சந்தேகமாகத்தான் பார்ப்பார்கள். நிறையப் போராட வேண்டும்.”
மானாமதியின் தலித் காலனியின் வளர்ந்தவர் லிலி. களத்தில் காட்டப்படும் பாரபட்சம் பற்றிய புரிதல் அவர் கொண்டிருக்கிறார். சில சமயங்களில், அவரின் சாதி அவரை இக்கட்டான நிலையில் நிறுத்தும். எனவே வீடு இருக்கும் இடத்தை கேட்டாலும் அவர் சொல்ல மாட்டார். “சொன்னால், என் சாதி தெரிந்து விடும். என்னை பாரபட்சமாக நடத்துவார்கள் என்ற பயம் எனக்கு உண்டு,” என்கிறார் அவர். லிலி தலித் கிறித்துவராக இருந்தாலும் அவர் தன்னை கிறித்துவராகதான் அடையாளப்படுத்துகிறார்.
சுகாதார ஊழியர்கள் வரவேற்கப்படும் விதம் ஊருக்கு ஊர் மாறும் என்கிறார் லிலி. “பணக்காரர்களும் உயர்சாதிகளும் வசிக்கும் சில இடங்களில், குடிக்க தண்ணீர் கூட எங்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்,” என்கிறார் அவர். “சில நேரங்களில் நாங்கள் மிகவும் அலுப்பாக இருப்போம். எங்கேனும் அமர்ந்து உண்ண விரும்புவோம். ஆனால் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மோசமாக, மிக மோசமாக உணர்வோம். அமர்ந்து உண்பதற்காக மட்டும் ஒரு 3, 4 கிலோமீட்டர்கள் நாங்கள் நடப்போம். ஆனால் சில இடங்களில் குடிக்க தண்ணீர் கொடுப்பார்கள். மதிய உணவு சாப்பிட அமரும்போது வேறேதும் வேண்டுமா என்று கூட கேட்பார்கள்.”
12 வயதிலேயே அத்தை மகனுக்கு லிலி மணம் முடித்து வைக்கப்பட்டார். அவரை காட்டிலும் கணவர் 16 வயது மூத்தவர். “நாங்கள் மொத்தம் நான்கு சகோதரிகள். நான் மூத்தவள்,” என்கிறார் அவர். குடும்பத்துக்கு 3 செண்ட் நிலம் இருக்கிறது. அதில் ஒரு மண் வீட்டை கட்டியிருக்கின்றனர். “சொத்தை காக்கவும் விவசாயத்தில் தனக்கு உதவவும் கூடிய ஒருவரை என் தந்தை தேடினார். எனவே அவர் என்னை அவரது அக்காவின் மகனுக்கு கட்டிக் கொடுத்தார்.” திருமணம் சந்தோஷமாக இருக்கவில்லை. அவரின் கணவர் உண்மையாக இருக்கவில்லை. பல மாதங்களாக வீட்டுக்கு வர மாட்டார். வந்தபோதும் லிலியை போட்டு அடிப்பார். 2014ம் ஆண்டில் சிறுநீரக புற்றுநோயால் 18, 14 வயதுகளை கொண்ட குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துபோனார்.
சுகாதார ஊழியர் பணியை 2006ம் ஆண்டில் SCARF வழங்கும் வரை, லிலி தையற்காரராக பணிபுரிந்தார். வாரத்துக்கு 450-500 ரூபாய் சம்பாதித்தார். அந்த வருமானமும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. நல்ல வருமானம் என்பதால் சுகாதார ஊழியர் பணிக்கு வந்ததாக சொல்கிறார். கோவிட் பரவல் அவரது மாத வருமானமான 10,000 ரூபாய் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்றுக்கு முன் பேருந்து செலவுகளும் செல்பேசி கட்டணங்களும் அவருக்கு திரும்ப அளிக்கப்பட்டன. “ஆனால் கொரோனாவால் இரண்டு வருடங்களுக்கு என் செல்பேசி கட்டணத்தையும் பேருந்து செலவையும் என் 10,000 ரூபாய்க்குள்ளேயே சமாளித்து கொள்ள வேண்டியிருந்தது. மிகவும் கடினம்,” என்கிறார் அவர்.
NMHP கீழ் செயல்பட்ட SCARF-ன் திட்டம் முடிவுற்றதால், மறதி நோயாளிகளை கண்டறியும் அதே அமைப்பின் பணியில் லிலி சேர்த்துக் கொள்ளப்பட்டார். மார்ச் மாதத்தில் பணி தொடங்கியது. வாரத்துக்கு ஒருமுறை அவர் செல்கிறார். ஆனால் மனச்சிதைவு நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்களை செங்கல்பட்டு, கோவளம் மற்றும் செம்பாக்கம் பகுதிகளில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் செய்கிறார்.
ஷாந்தி, செல்வி, லிலி போன்ற பெண்கள் சமூகத்தின் ஆரோக்கியத்தை கையாளுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் 4-5 வருட ஒப்பந்த பணிகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். SCARF போன்ற அமைப்புகள், குறிப்பிட்ட காலத்துக்கான திட்டங்களை எடுத்து அவற்றுக்கு கிடைக்கும் நிதியை அடிப்படையாக கொண்டுதான் ஊழியர்களை பணிக்கமர்த்துகின்றனர். “மாநில அளவில் ஓர் அமைப்பை உருவாக்கும்படி அரசாங்கத்திடம் நாங்கள் பேசி வருகிறோம்,” என்கிறார் SCARF-ஐ சேர்ந்த பத்மாவதி. அத்தகைய அமைப்பு, சமூக சுகாதார ஊழியர்களின் பணியை ஒழுங்கமைக்க உதவுமென அவர் நம்புகிறார்.
மனநல ஆரோக்கியத்துக்கான நிதிநிலை ஒதுக்கீடு மிகக் குறைவாக இல்லாமல் இருந்திருந்தால் நிலவரம் வேறாக இருந்திருக்கும். 2023-24-ல் மனநலத்துக்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடான 919 கோடி ரூபாய் என்பது ஒன்றிய அரசின் மொத்த சுகாதார நிதிநிலை அறிக்கையில் ஒரு சதவிகிதம். 721 கோடி ரூபாய் நிதி, பெங்களூருவை சேர்ந்த மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல்கள் தேசிய நிறுவனத்துக்கு (NIMHANS) ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிச்சம், தேஜ்பூரின் லோக்ப்ரியா கோபிநாத் மனநல வட்டார நிறுவனத்துக்கும் (ரூ.64 கோடி) தேசிய தொலைத்தொடர்பு மனநல ஆரோக்கிய திட்டத்துக்கும் (ரூ.134 கோடி) ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் தேசிய மனநல ஆரோக்கியத் திட்டம், இந்த வருடத்தில் தேசிய சுகாதார இலக்குக்கான ‘மூன்றாம் நிலை நடவடிக்கைகள்’ என்கிற பெயரில் உள்ளடக்கப்பட்டது. எனவே மனநலத்துக்கான மூன்றாம் நிலை ஒதுக்கீட்டை நிர்ணயிக்க முடியாது.
மானாமதியில் லிலி புஷ்பம், தனக்கு கிடைக்க வேண்டிய சமூக பாதுகாப்பு திட்டத்தை பெற இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். “கைம்பெண் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் நான் லஞ்சம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்க 500, 1000 ரூபாய் கூட என்னிடம் இல்லை. “என்னால் ஊசிகளும் மருந்துகளும் கொடுக்க முடியும். நோயாளிகளை தேடிச் சென்று மனநல ஆலோசனை வழங்க முடியும். ஆனால் இவை யாவும் SCARF-ஐ தாண்டி பயன் தரும் விஷயமாக எங்கும் கருதப்படுவதில்லை. என் வாழ்க்கையின் அன்றாடம் கண்ணீரால் நிரம்பியது. யாரும் எனக்கு உதவ இல்லையென்பதால் நான் சோகமாக இருக்கிறேன்.”
முகப்பு படம்: இளம்பெண்ணாக ஷாந்தி சேஷா
தமிழில்: ராஜசங்கீதன்