ஒரு திங்கட்கிழமை காலை 11 மணியளவில், 41 வயது முனேஷ்வர் மஞ்சி, தனது பூச்சு போடப்படாத, பாழடைந்த வீட்டிற்கு வெளிப்புறத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். குடியிருப்புக்கு முன்னால் உள்ள அந்த திறந்தவெளியில், மூங்கில் கம்புகளால் பிடிக்கப்பட்ட ஒரு நீல நிற பாலிதீன் தாள் அவரை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் இது ஈரப்பதத்திலிருந்து எந்த நிவாரணத்தையும் தருவதில்லை. பாட்னா நகரத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகோ நகருக்கு அருகில் உள்ள முசாஹரி தோலாவில் வசிக்கும் முனேஷ்வர் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக எனக்கு வேலை இல்லை,” என்கிறார்.
முசாஹரி தோலாவில் - தலித் சமூகமான முசாஹரைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் - 60 குடும்பங்கள் வசிக்கின்றன. முனேஷ்வர் மற்றும் அவரது தோலாவில் உள்ள மற்றவர்கள் அருகிலுள்ள விவசாய வயல்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் தினசரி கூலியை நம்பியிருக்கிறார்கள். ஆனால் வேலை சீராக இல்லை என்கிறார் முனேஷ்வர். குறுவை மற்றும் சம்பா பயிர்களின் விதைப்பு மற்றும் அறுவடைக்காலத்தில் (வருடத்தில் 3-4 மாதங்களுக்கு) மட்டுமே வேலை கிடைக்கும்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஒரு நில உரிமையாளரான ‘பாபு சாஹிப்’ என்பவரின் பண்ணையில்தான் அவர் கடைசியாக வேலை பார்த்தார். “எட்டு மணி நேர வேலைக்கு எங்களுக்கு 150 ரூபாய் ரொக்கம் அல்லது 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார் விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலியைப் பற்றி முனேஷ்வர். பணத்திற்கு பதிலாக 4-5 ரொட்டிகள் அல்லது அரிசி மற்றும் பருப்பு போன்ற மதிய உணவு இணைக்கப்பட்டுள்ளது. .
அவரது தாத்தா 1955-ல் பூமிதான இயக்கத்தின் போது மூன்று பிகா (கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர்) விவசாய நிலத்தைப் பெற்றிருந்தாலும் - நிலப்பிரபுக்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை நிலமற்றவர்களுக்கு மறுபங்கீடு செய்வதற்காக வழங்கியபோது - அதிகப் பயனில்லை. “நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நிலம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாம் பயிர்களை விதைக்கும் போதெல்லாம், விலங்குகள் அவற்றைத் தின்று நஷ்டம் அடைகிறோம்,” என்று விளக்குகிறார் முனேஷ்வர்.
பெரும்பாலான நாட்களில், முனேஷ்வரின் குடும்பத்தினரும் தோலாவில் உள்ள மற்றவர்களும் இலுப்பை மரத்தின் பூக்களில் மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வாழ்கின்றனர்.
ஆனால், இது ஆபத்தான வணிகமாகும். ஒரு கடுமையான மாநிலச் சட்டம் - பீகார் தடை மற்றும் கலால் சட்டம், 2016 - மதுபானம் அல்லது போதைப்பொருட்களின் உற்பத்தி, உடைமை, விற்பனை அல்லது நுகர்வு ஆகியவற்றை தடை செய்கிறது. மேலும் ' நாட்டுச் சரக்கு அல்லது பாரம்பரிய மதுபானம்' என வரையறுக்கப்பட்ட இலுப்பை பானமும் கூட சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறது.
மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமை, சோதனைகள், கைதுகள் மற்றும் வழக்குத் தொடரப்படும் என்ற அச்சத்தையும் மீறி, முனேஷ்வர் தொடர்ந்து மதுபானம் தயாரிக்கத் தூண்டுகிறது. “யாருக்கு பயமில்லை? நாங்கள் பயத்தை உணர்கிறோம். ஆனால், போலீசார் சோதனை நடத்தும்போது, மதுபாட்டில்களை மறைத்துவிட்டு தப்பி ஓடுகிறோம்,'' என்றார். 2016 அக்டோபரில் தடை அமல்படுத்தப்பட்டதில் இருந்து 10 முறைக்கு மேல் போலீசார் சோதனை செய்துள்ளனர். “நான் கைது செய்யப்படவில்லை. அவர்கள் பாத்திரங்கள் மற்றும் சூல்ஹா [மண் அடுப்பு] ஆகியவற்றைப் பலமுறை அழித்துள்ளனர், ஆனால் நாங்கள் எங்கள் வேலையைத் தொடர்கிறோம்.”
முசாஹர்களில் பெரும்பாலானவர்கள் நிலமற்றவர்கள். மேலும் அவர்கள் நாட்டில் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் களங்கப்படுத்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்கள். சமூகத்தின் பெயர் இரண்டு வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது. மூசா (எலி) மற்றும் அஹர் (உணவு). 'எலிகளை உண்பவர்கள்' என்று பொருள். பீகாரில், முசாஹர்கள் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய தலித்துகளில் மகாதலித் என்று பட்டியலிடப்பட்டுள்ளனர். குறைந்த கல்வியறிவு விகிதம் - 29 சதவீதம் - மற்றும் திறன்கள் இல்லாததால், மாநிலத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்தத் திறன் வாய்ந்த உழைப்பிலும் ஈடுபடவில்லை. இலுப்பை மது சமூகத்தின் பாரம்பரிய பானமாக இருந்தாலும், இப்போது அது வாழ்வாதாரத்திற்காக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
முனேஷ்வர் தனது 15 வயதில் இருந்து இலுப்பை மது தயாரித்து வருகிறார். “என் அப்பா ஏழை. அவர் பளு தள்ளும் வண்டியை இழுக்கும் வேலை பார்த்தார்; வருமானம் போதுமானதாக இல்லை. நான் சில நேரங்களில் வெறும் வயிற்றில் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது,” என்று அவர் கூறுகிறார். "எனவே சில மாதங்களுக்குப் பிறகு நான் செல்வதை நிறுத்திவிட்டேன். சுற்றியிருந்த சில குடும்பங்கள் சாராயம் காய்ச்சுவதால் நானும் ஆரம்பித்தேன். இதை நான் 25 வருடங்களாக செய்து வருகிறேன்” என்றார்.
மது வடித்தல் என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். முதலில், இலுப்பைப் பூக்கள் வெல்லம் மற்றும் தண்ணீருடன் கலந்து, எட்டு நாட்களுக்கு ஊற வைக்கப்படுகிறது. கலவையான பின்னர் ஒரு உலோகப் பானைக்கு நகர்த்தப்படுகிறது. அது ஒரு மண் அடுப்பில் கொதிக்க வைக்கப்படுகிறது. மற்றொரு பானை, சிறியது மற்றும் களிமண்ணால் ஆனது, திறந்த அடிப்பகுதியுடன், உலோகத்தின் மேல் வைக்கப்பட்டும். இந்தக் களிமண் பானையில் ஒரு துளை உள்ளது. அங்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டு, அதற்கு மேல் தண்ணீர் அடங்கிய மற்றொரு உலோகப் பானை வைக்கப்பட்டுள்ளது. மூன்று கைகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகள் நீராவியைப் பிடிக்க மண் மற்றும் துணிகளால் நிரப்பப்படுகின்றன.
கொதிக்கும் இலுப்பைக் கலவையால் உற்பத்தி செய்யப்படும் நீராவி களிமண் பானையில் குவிகிறது. இது குழாய் வழியாக கீழே ஒரு உலோக பாத்திரத்துக்குச் செல்கிறது. இது சொட்டுகளைச் சேகரிக்கிறது. சுமார் எட்டு லிட்டர் மதுவை வடிகட்ட மூன்று முதல் நான்கு மணிநேரம் தொடர்ந்து நெருப்பில் சூடாக்குகிறது. "தீப்பிழம்புகள் எரியாமல் இருக்க நாங்கள் அங்கேயே [அடுப்புக்கு அருகில்] இருக்க வேண்டும்" என்று முனேஷ்வர் கூறுகிறார். "இது மிகவும் சூடாக இருக்கிறது. நம் உடல் எரிகிறது. ஆனாலும், எங்கள் வாழ்க்கையை நடத்த நாங்கள் அதைச் செய்ய வேண்டும். அவர் வடிகட்டுதல் செயல்முறைக்கு 'இலுப்பை வடிகட்டல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
முனேஷ்வர் ஒரு மாதத்தில் 40 லிட்டர் இலுப்பை மதுவை பிரித்தெடுக்கிறார், அதற்கு அவருக்கு 7 கிலோ பூக்கள், 30 கிலோ வெல்லம் மற்றும் 10 லிட்டர் தண்ணீர் தேவை. பூக்களை ரூ.700-க்கு வாங்குகிறார். வெல்லத்தை ரூ.1,200-க்கு வாங்குகிறார். அடுப்பை பற்ற வைக்கத் தேவையான 10 கிலோ விறகுக்கு 80 ரூபாய் கொடுக்கிறார்.. மூலப்பொருட்களுக்கான அவரது மாதச் செலவு ரூ.2,000.
“நாங்கள் மதுபானங்களை விற்பதன் மூலம் மாதம் 4,500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம்” என்கிறார் முனேஷ்வர். “உணவுக்காக செலவழித்த பிறகு, 400-500 ரூபாய் கூட சேமிக்க முடியாது. அடிக்கடி பிஸ்கட் மற்றும் சாக்லெட் கேட்கும் குழந்தைகளுக்காக இந்தப் பணம் செலவிடப்படுகிறது. அவருக்கும் அவரது மனைவி 36 வயதான சமேலி தேவிக்கும் 5 வயது முதல் 16 வயது வரையிலான மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களின் இளைய மகனுக்கு 4 வயது. சமேலியும் விவசாயக் கூலி வேலை செய்த பிறகு கணவருடன் சேர்ந்து மது தயாரிக்கிறார் .
அவர்களின் வாடிக்கையாளர்கள் முக்கியமாக அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தாம். “ 250 மில்லி மதுவை ரூ. 35-க்கு விற்கிறோம்,” என்கிறார் முனேஷ்வர். “வாடிக்கையாளர்கள் பணமாக செலுத்த வேண்டும். கடன் வைக்க விரும்பும் எவருக்கும் நாங்கள் விற்பதில்லை.”.
மதுபானத்தின் தேவை மிகப்பெரியது - மூன்று நாட்களில் எட்டு லிட்டர் விற்பனையாகும்.. ஆனால் அதிக அளவில் மதுபானம் தயாரிப்பது ஆபத்தானது. "காவல்துறை சோதனையின் போது, அவர்கள் அனைத்து மதுபானங்களையும் அழித்து விடுவார்கள். நாங்கள் இழப்பை சந்திக்கிறோம்," என்று முனேஷ்வர் கூறுகிறார். 'குற்றம்' கண்டுபிடிக்கப்பட்டால் சிறைத்தண்டனை கிடைக்கும். அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கலாம். மேலும் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
முனேஷ்வரைப் பொறுத்தவரை, மது என்பது உயிர்வாழ்வதற்கான ஒரு வழியாகும், அது லாபம் ஈட்டும் நிறுவனமல்ல. “என்னுடைய வீட்டைப் பாருங்கள். அதைச் சரிசெய்யக் கூட எங்களிடம் பணம் இல்லை,” என்று அவர் ஓரறை வீட்டைச் சுட்டிக் காட்டுகிறார். அவருக்கு அதை சரிசெய்ய குறைந்தபட்சம் ரூ. 40,000-50,000 வரை பணம் தேவைப்படும். அறையில் ஒரு மண் தரை உள்ளது; உட்புறச் சுவர்கள் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளன, மேலும் காற்றோட்டத்திற்கான சாளரம் இல்லை. அறையின் ஒரு முனையில் சுல்ஹா உள்ளது, அங்கு அரிசிக்கான உலோகப் பாத்திரமும் பன்றி இறைச்சிக்கான கடாயும் வைக்கப்பட்டுள்ளன. “நாங்கள் பன்றி இறைச்சியை அதிகம் சாப்பிடுகிறோம். இது எங்களுக்கு ஆரோக்கியமானது” என்கிறார் முனேஷ்வர். தோலாவில் இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் தோலாவில் உள்ள 3-4 கடைகளில் விற்கப்படும் பன்றி இறைச்சியின் விலை ஒரு கிலோ ரூ.150-200 என்கிறார் முனேஷ்வர். காய்கறிச் சந்தை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. "நாங்கள் சில சமயங்களில் இலுப்பை மதுவையும் சாப்பிடுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.
2020-ம் ஆண்டில் கோவிட்-19 ஊரடங்கு மதுபான விற்பனையில் சிறியத் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் முனேஷ்வர் அந்தக் காலகட்டத்தில் மாதம் ரூ.3,500-4,000 வரை வருமானம் ஈட்டினார். "நாங்கள் இலுப்பை ஏற்பாடு செய்து தயார் செய்தோம்," என்று அவர் கூறுகிறார். "தொலைதூரப் பகுதிகளில் அதிகக் கட்டுப்பாடுகள் இல்லை. அது எங்களுக்கு உதவியது. வாடிக்கையாளர்களையும் பெற்றோம். மது அருந்துவது மிகவும் பொதுவானது. மக்கள் அதை எந்த விலையிலும் சாப்பிடுவார்கள்.”
இருப்பினும், மார்ச் 2021-ல் அவரது தந்தை இறந்தபோது அவர் கடனில் தள்ளப்பட்டார். இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கும், வந்தவர்களுக்கு உணவை ஏற்பாடு செய்வதற்கும், முனேஷ்வர் ரூ.20,000 வரை கடன் வாங்க வேண்டியிருந்தது. ராஜ்புத் சாதியைச் சேர்ந்த ஒரு தனியார் கந்துவட்டிக்காரரிடம் இருந்து மாதம் ஐந்து சதவீத வட்டியில் 20,000 ரூபாய் கடன் பெற்றார். "மதுவிலக்கு இல்லை என்றால், நான் போதுமான பணத்தை [அதிகமாக சம்பாதிப்பதன் மூலம்] சேமித்துக் கடனை திருப்பிச் செலுத்தியிருப்பேன்," என்று அவர் கூறுகிறார். “யாராவது நோய்வாய்ப்பட்டால் நான் கடன் வாங்க வேண்டும். எப்படி நாங்கள் இப்படி வாழ முடியும்?"
கடந்த காலங்களில், முனேஷ்வர் சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தார். ஆனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார். அவர் முதலில் 2016-ல் மகாராஷ்டிராவில் உள்ள புனேவுக்கு கட்டுமானப் பணிகளுக்காகச் சென்றார். ஆனால் மூன்று மாதங்களில் வீடு திரும்பினார். ”அங்கு என்னை அழைத்துச் சென்ற ஒப்பந்ததாரர் எனக்கு வேலை தரவில்லை. அதனால் விரக்தியடைந்து வெளியேறினேன்,” என்கிறார். 2018-ல், அவர் உத்தரபிரதேசத்திற்குச் சென்றார். ஒரு மாதத்திலேயே திரும்பினார். “சாலைகளைத் தோண்டும் வேலைக்கு மாதம் 6,000 ரூபாய்தான் கொடுத்தார்கள். எனவே நான் திரும்பி வந்தேன்,” என்று அவர் கூறுகிறார். "பிறகு நான் எங்கும் செல்லவில்லை."
முசாஹரி தோலாவை மாநில நலக் கொள்கைகள் சென்றடையவில்லை. வேலை வாய்ப்பு உருவாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தோலாவை நிர்வகிக்கும் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மதுபானம் தயாரிப்பதை நிறுத்துமாறு உள்ளூர்வாசிகளை வலியுறுத்தி வருகிறார். “அரசாங்கம் எங்களைக் கைவிட்டுவிட்டது,” என்கிறார் முனேஷ்வர். “நாங்கள் ஆதரவற்றவர்கள். தயவு செய்து அரசாங்கத்திடம் சென்று, தோலாவில் ஒரு கழிப்பறை கூட நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்லுங்கள். அரசு எங்களுக்கு உதவாததால், நாங்கள் சாராயம் தயாரிக்கிறோம். அரசாங்கம் எங்களுக்கு மாற்று வேலைகளையோ அல்லது சிறிய கடை தொடங்கவோ அல்லது இறைச்சி-மீன் விற்கவோ பணத்தை கொடுத்திருந்தால், நாங்கள் மது வியாபாரத்தை தொடர்ந்திருக்க மாட்டோம்.”
முசாஹரி தோலாவில் வசிக்கும் 21 வயது மோதிலால் குமாருக்கு, இலுப்பை மதுதான் இப்போது முக்கிய வருமான ஆதாரம். 2016-ம் ஆண்டு தடை செய்யப்படுவதற்கு 2-3 மாதங்களுக்கு முன்பே, நிலையற்ற விவசாய வேலைகள் மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக மதுபானம் காய்ச்சத் தொடங்கினார். "எங்களுக்கு தினசரி கூலியாக ஐந்து கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டது." 2020-ல் இரண்டு மாத விவசாய வேலை தான் கிடைத்தது என்கிறார்.
மோதிலால், அவரது 51 வயது தாயார் கோலி தேவி, மற்றும் 20 வயது மனைவி புலகி தேவி ஆகியோர் இலுப்பை மது தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 24 லிட்டர் மதுவை அவர்கள் தயாரிக்கின்றனர். "மது காய்ச்சுவதன் மூலம் நான் சம்பாதிக்கும் பணம் உணவு, உடைகள் மற்றும் மருந்துகளுக்கு செலவிடப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். “நாங்கள் மிகவும் ஏழைகள். மது தயாரித்த பிறகும் பணத்தை சேமிக்க முடியவில்லை. என் மகள் அனுவை கஷ்டப்பட்டு பார்த்துக்கொள்கிறேன். நான் அதிகமாக [மதுபானம்] தயாரித்தால், எனது வருமானம் அதிகரிக்கும். அதற்கு, என்னிடம் மூலதன, வேண்டும்.”
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) இங்குள்ள முசாஹர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை. முனேஷ்வர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வேலைத் திட்ட அட்டையைப் பெற்றிருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. மோதிலாலிடம் ஊரக வேலை அட்டை அல்லது ஆதார் அட்டை இல்லை. தோலாவில் உள்ள பல குடியிருப்பாளர்கள் ஆதார் அட்டையை வரி விதிக்ப்பதற்கான நடைமுறையாகக் கருதுகின்றனர். “நாங்கள் [மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள] ஒன்றிய அலுவலகத்துக்குச் செல்லும்போது, அவர்கள் ஊர்த் தலைவர் கையெழுத்துடன் ஒரு கடிதத்தைக் கேட்டார்கள். ஊர்த் தலைவர் கடிதத்தை அவர்களிடம் கொடுக்கும்போது, பள்ளியிலிருந்து கடிதம் கேட்கிறார்கள். நான் பள்ளிக் கடிதத்தை சமர்ப்பிக்கும் போது, அவர்கள் பணம் கேட்கிறார்கள்,” என்று மோதிலால் கூறுகிறார். ”அதிகாரிகள் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆதார் அட்டை கொடுப்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னிடம் பணம் இல்லை."
முசாஹரி தோலாவில் வாழ்க்கை நிலைமைகள் தெளிவாக போதுமானதாக இல்லை. கழிப்பறைகள் இல்லை. சமுதாயக் கழிப்பறை கூட இல்லை. எந்த வீட்டிலும் எரிவாயு இணைப்பு இல்லை - மக்கள் இன்னும் சமைக்கவும் மது தயாரிக்கவும் விறகைத்தான் பயன்படுத்துகிறார்கள். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், அது ஒரு டஜன் ஊராட்சிகளுக்கு சேவை செய்கிறது. "சிகிச்சை வசதிகள் மோசமாக உள்ளன. எனவே மக்கள் தனியார் மருத்துவ மையங்களை நம்பியிருக்கிறார்கள்," என்கிறார் ஊர்த் தலைவர். குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, தொற்றுநோய்களின் போது தோலாவில் ஒரு தடுப்பூசி முகாம் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், மது விற்பனைதான் தோலாவில் குடும்பங்களை வாழ வைத்தது. "எங்களுக்கு எங்கும் வேலை கிடைக்காது. எனவே நிர்பந்தத்தால் மது தயாரிக்கிறோம்," என்கிறார் மோதிலால். “நாங்கள் மதுவால்தான் வாழ்கிறோம். அதைச் செய்வதை நிறுத்தினால், நாங்கள் இறந்துவிடுவோம்.”
தனிநபர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க கதையில் நபர்களின் பெயர்கள் மற்றும் இடத்தின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழில் : ராஜசங்கீதன்