“போராட்டக்காரர்கள் ஒரு சாலையை மறித்தாலோ அதற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ குற்றவாளிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். அதையே அரசு செய்தால் என்ன செய்வது? அதே முத்திரையை அவர்களுக்கும் கொடுக்கலாம் இல்லையா?” என கேட்கிறார் 70 வயது ஹரிந்தர் சிங் லகா. பஞ்சாபின் மெஹ்னா கிராமத்தை சேர்ந்த விவசாயி அவர்.
பஞ்சாப் விவசாயிகளின் பேரணி தில்லிக்குள் நுழைவதை தடுக்க அதிகாரிகள் தோண்டிய பத்தடி குழிகளைத்தான் லக்கா குறிப்பிடுகிறார். 1 லட்சத்துக்கும் மேலான பஞ்சாப் விவசாயிகள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா விவசாயிகளுடன் சேர்ந்து நாட்டின் தலைநகருக்குள் நுழையும் உரிமைக்காக காவல்துறை மற்றும் பிற அதிகாரங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று நாட்கள் தொடர் போராட்டத்துக்கு பிறகு தில்லி காவல்துறை ஒருவ்ழியாய் விவசாயிகளின் நுழைவுக்கு இசைவளித்தும் கூட, ஹரியானா அரசு மாநில எல்லைகள் போராட்டக்காரர்கள் கடப்பதை இன்னும் தடுத்துக் கொண்டிருக்கிறது. தலைநகருக்குள் நுழைய பெயரளவுக்குதான் அனுமதி கொடுக்கப்பட்டது. களத்தில் மத்திய அரசு விவசாயிகள் தில்லி நுழைவதை கடினமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மறுக்கப்படும் அனுமதி, குழிகள், முள்வேலிகள், காவல்தடுப்புகள் எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகள் அங்கேயேதான் இருக்கிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகளும் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் அழிவின் தடத்தை அங்கு விட்டுச் சென்றிருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயப் பொருட்களுக்கான சந்தை கமிட்டிக்கு தொடர்பான சட்டம் , விவசாயிகளுக்கு உதவிய மண்டி முறையை அழிக்கும் என்கின்றனர் விவசாயிகள். குறைந்தபட்ச ஆதார விலை அமைப்பையும் அது அழித்துவிடும். பெரிய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் விலையை தீர்மானிக்கும் நிலையை உருவாக்கும். இந்த விஷயம் விவசாயிகளுக்கு தெரியும். மற்ற இரண்டு சட்டங்களும் குறைந்தபட்ச ஆதார விலையை கட்டாயமாக்கவில்லை. மேலும் சுவாமிநாதன் (தேசிய விவசாயிகள் ஆணையம்) அறிக்கைகளை குறிப்பிடக் கூட இல்லை. ஒப்பந்தங்களை பற்றி பேசும் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் தனியார் வணிகர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் பெருநிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறது. பதுக்கலை ஊக்குவிக்கிறது. விலை பேசும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது.
போராட்டக்காரர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.
”இது (மண்டிகளுக்கான சட்டம்) ஒரு மரண சாசனம்,” என்கிறார் ஹரியானாவை சேர்ந்த சுர்ஜீத் மன். ஹரியானாவின் பகோலா கிராமத்திலுள்ள தன் 2.5 ஏக்கர் நிலத்தில் கோதுமையையும் நெல்லையும் விளைவிக்கிறார் அவர். ”எங்களின் பயிர்கள் நாசமானால் (போராட்டத்தால்), இந்த ஒரு முறை ஆகட்டும். ஆனால் வருங்கால சந்ததியினர் கஷ்டப்படக் கூடாது.”
இச்சட்டங்களால் ஆதாயமடையும் தனியார் நிறுவனங்கள் நாட்டின் விவசாயத்தில் பெறும் அதிகாரம் விவசாயிகளை அச்சத்துக்குள்ளும் கவலைக்குள்ளும் ஆழ்த்தியுள்ளது. “அதானிகளும் அம்பானிகளும் பஞ்சாப்புக்குள் அனுமதிக்க மாட்டோம்,” என்கிறார் 72 வயது பல்தேவ் சிங். பஞ்சாபின் கோட் புதா கிராமத்தை சேர்ந்தவர். பல தடுப்புகளை தாண்டி ஐநூறு கிலோமீட்டர்கள் பயணித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார் அவர். வாழ்க்கை முழுவதும் 12 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்த சிங் இப்போதும் அவரின் நிலத்தில் இருக்க வேண்டும். ஆனால் அவர், “என்னுடைய வாழ்வின் கடைசி காலத்தில் நான் இந்த சாலைகளில் நிச்சயமற்ற சூழலால் வந்து சேர்ந்திருக்கிறேன்,” என்கிறார்.
இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்து கோத் புதா கிராமம் வெகு தூரத்தில் இல்லை. “‘நான் முள்வேலிகளை பார்த்திருக்கிறேன்,’ என்கிறார் 72 வயது பல்தேவ் சிங் (போட்டோவில் இல்லை). ’அவற்றை ஒருநாள் நான் பார்க்க நேருமென நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதுவும் என் நாட்டின் தலைநகருக்கு செல்லும் வழியில்!”
”இது மத்திய அரசுடனான நேரடி மோதல்,” என்கிறார் பீம் சிங் கண்கள் ஒளிர. ஹரியானாவின் கான்பூர் கலன் கிராமத்தை சேர்ந்த 68 வயது விவசாயி 1.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடுபவர். ஒன்று, அரசு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவரும் பிற விவசாயிகளும் அனைவருக்குமென விளைவிப்பதை நிறுத்தி விடுவார்களென சொல்கிறார்.
விவசாயிகளுக்காக பிரிட்டிஷ்ஷை எதிர்த்து போராடிய சோட்டு ராமை அவர் நினைவுகூருகிறார். “ஒரு குவிண்டாலுக்கு (தானியம்) 25-50 பைசா வரை ஆங்கிலேயர்கள் கொடுத்தனர். ஐயா பத்து ரூபாய் கொடுக்கச் சொன்னார். காலனியரசுக்கு பணிவதைக் காட்டிலும் விவசாயிகள் தங்களின் விளைச்சலை கூட எரிப்பார்கள் என்றார்,” என நினைவுகூருகிறார் பீம். “மோடியின் அரசு கேட்கவில்லையெனில் நாங்கள் அதைத்தான் செய்ய வேண்டியிருக்கும்.”
2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், பிரதமர் சோட்டு ராமின் சிலையை ரோஹ்தக்கில் திறந்து வைத்தார். அவரின் பாரம்பரியத்தை மறுப்பதால் இந்தியா முடங்கிவிட்டது என பேசியிருக்கிறார். இப்போது பீம் சிங் சொல்கிறார், “அவரின் அரசு மூன்று சட்டங்களை கொண்டு வந்து எங்களின் அய்யாவை அவமானப்படுத்திவிட்டது,” என்று.
“என் நாடு பட்டினியால் சாவதை என்னால் பார்க்க முடியாது,” என்கிறார் பஞ்சாபில் ஏழு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஹரிந்தர் சிங். “புதிய சட்டங்களால் அரசு கொள்முதல் முறைக்கு உத்தரவாதம் இல்லாமல் போகிறது. பொது விநியோக முறையே கேள்விக்குள்ளாகிவிடும்.”
கார்ப்பரெட்டுகள் ஏழைகளுக்கு உணவளிக்க மாட்டார்களா என கேட்டேன்.” ஏழைகளுக்கு உணவளிப்பார்களா? அவர்கள் ஏழைகளை உணவாக உண்ணுகிறார்கள்,” என பதில் சொல்கிறார். “அவர்கள் அதை செய்யவில்லையென்றால், நாங்கள் உங்களுக்கு பதிலளிக்க முடியும்.”
பல மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். வெவ்வேறு அதிகார மட்டங்களுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எதுவும் தீர்வை கொடுக்கவில்லை. “விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை. இனி நாங்கள் பிரதமர் மோடியிடம்தான் பேச வேண்டும்.” என்கிறார் பகோலா கிராமத்தை சேர்ந்த சுர்ஜீத் மன்.
“முதலில், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தில்லிக்கு (பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்தபோது) வந்தோம். அவர்கள் எங்களை அவமானப்படுத்தினார்கள். இப்போது மீண்டும் வந்திருக்கிறோம். இம்முறை எங்களை அவர்கள் அடிக்கிறார்கள்,” என்கிறார் பல்தேவ் சிங். “முதலில் உப்பை போட்டார்கள், பிறகு காயப்படுத்துகிறார்கள்.”
“இந்த நாட்டை பட்டினியிலிருந்து காப்பாற்றிய எங்களுக்கு அரசு செய்யும் இந்த கைமாறு எங்களை கண்ணீர் விட வைக்கிறது,” என்கின்றனர் பல்தேவ் சிங்கும் ஹரிந்தர் சிங்கும்.
“காங்கிரஸ்ஸோ பாரதீய ஜனதா கட்சியோ உள்ளூரின் அகாலி தள்ளோ எல்லா அரசியல் கட்சிகளும் பஞ்சாப்பை போட்டி போட்டு கொள்ளையடிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியும் அவர்களின் வழியில்தான் செல்கிறது,” என்கிறார் 62 வயது ஜோக்ராஜ் சிங். பஞ்சாப்பின் மோகாவில் 12 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்.
தேசிய ஊடகத்தின் மீதும் விவசாயிகள் கோபத்தில் இருக்கின்றனர். “எங்களை அவர்கள் தவறாக சித்தரிக்கிறார்கள். செய்தியாளர்கள் எங்களிடம் விரிவாக பேசுவதில்லை,” என்கிறார் ஜோக்ராஜ் சிங். “பாதிக்கப்பட்டவர்களுடன் பேசாமல் அவர்களால் பிரச்சினையை எப்படி புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் உண்மையை காண்பித்திருக்க வேண்டும். அரசு எங்களுக்காக தயார் செய்திருக்கும் மரண சாசனத்தை பற்றி அவர்கள் பேசியிருக்க வேண்டும். எங்களின் நிலங்களை அரசு எடுத்துக் கொள்ள விரும்பினால், எங்களை வெட்டி வீசிவிட்டு செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் காட்டியிருக்க வேண்டும்.”
பலவித குரல்கள் வெளிப்பட்டன.
“ஒப்பந்த விவசாயம் அதிகமாகும். ஆரம்பத்தில் அவர்கள் அதிக விலையை விவசாயத்துக்கு கொடுக்கலாம். ஆனால் இறுதியில் அது ஜியோ சிம் கார்டு திட்டத்தை போல்தான் ஆகும். மெல்ல அவர்கள் எங்களின் நிலத்தில் எஜமானர்களாக மாறுவார்கள்.”
ஒப்பந்தத்தின் வழி, எங்கள் நிலத்தில் அவர்கள் கட்டடம் கட்டலாம். அதற்கென வங்கிக் கடன் கூட அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். விளைச்சல் சரியாக இல்லை என்றாலோ ஒப்பந்தம் மீறப்பட்டாலோ, அவர்கள் ஓடிப் போவார்கள். பிறகு நாங்கள்தான் கடனை கட்ட வேண்டும். கட்ட முடியவில்லையெனில் எங்களின் நிலம் போய்விடும்.”
“காவலர்கள் எங்களின் குழந்தைகள். அரசு விவசாயிகளை துன்புறுத்துவதை அவர்களும் புரிந்திருக்கிறார்கள். அவர்களை அரசு எங்களுக்கு எதிராக நிறுத்துகிறது. எங்களை அடிப்பதற்காக அவர்கள் சம்பளம் பெறுகிறார்களெனில் எங்களின் உடல்களை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். எப்படி இருந்தாலும் நாங்களே அவர்களுக்கு உணவளிப்பவர்கள்’.
தமிழில்: ராஜசங்கீதன்