மேற்கு காமெங் மற்றும் தவாங் மாவட்டத்தின் ப்ரோப்கா இன மக்கள் மோன்பா எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடிப்படையில் நாடோடிகள். ஆனால், ஒவ்வொரு காலத்திலும் சரியாக ஒவ்வொரு பகுதிக்கு இடம்பெயர்வார்கள். கடல் மட்டத்தில் இருந்து 9000 அடி முதல் 15,000 அடி வரை இவர்களின் பயணம் அமையும். நீண்ட குளிர்காலங்களில் அதாவது அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அவர்கள் குறைந்த உயரத்திலும், மே முதல் செப்டம்பர் இடைப்பட்ட மழை மற்றும் கோடை காலங்களில் இன்னும் அதிக உயரமான இடங்களிலும் அவர்கள் இடம்பெயர்கின்றனர்.
நவம்பர் 2016-ல் ஒரு காலைப் பொழுதில் நான் மேற்கு காமெங்கில் உள்ள தெமாங் கிராமத்துக்குப் பயணப்பட்டேன். தெமாங் கடல்மட்டத்தில் இருந்து சரியாகா 7,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 60 வீடுகள் உள்ளன. எல்லாவற்றிலும் மோன்பா இனத்தினர் உள்ளனர். அங்கிருந்து அருகாமையில் இருக்கும் ஊர் திராங். தெமாங்கில் இருந்து சரியாக 26 கிலோமீட்டர் தூரத்தில் திராங் உள்ளது.
அடுத்த நாள் நான் லகாம் சென்றேன். அது ப்ரோப்கா மக்கள் குளிர் காலத்தில் தங்கும் இடம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் உள்ள லகாமுக்குச் செல்ல நான் 11 கிலோமீட்டர் பயணப்பட்டேன். 8 மணி நேரம் அடர்வனத்தின் ஊடே பயணித்தேன். அங்கு நான் சென்று சேர்ந்தபோது மணி மாலை 6-ஐ தொட்டிருந்தது. ப்ரோப்கா மேய்ப்பரான 27 வயது பெம் ஷேரிங் எனை புன்னகையுடன் வரவேற்றார்.
அடுத்த நாள் காலை நான் லகாம் ப்ரோப்கா நாடோடிகளின் குளிர்கால வாசஸ்தலம் என்பதை உணர்ந்தேன். அங்கே ஒரு சிறிய மடம் இருந்தது. கற்களாலும் மூங்கிலாலும் கட்டப்பட்டு தகரத்தால் கூரை வேயப்பட்ட அங்கிருந்த 8 முதல் 10 வீடுகளில் சுமார் 40 முதல் 45 குடும்பங்கள் இருந்தன. நவம்பர் மாதத்தில் இந்த குக்கிராமம் நிரம்பிக் காணப்படும். ஏனெனில் மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்றவர்கள் குளிர் கருதி இங்கே இறங்கிவிடுகின்றனர். அதேவேளையில் மே மாதம் முதல் செப்டம்பர் வரையில் இப்பகுதி கிட்டத்தட்ட ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்களின் குதிரைகளையும் காட்டு எருதுகளையும் இன்னும் சற்றும் உயரமான இடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அங்குதான் மாகோ கிராமம் உள்ளது. முதியவர்கள் லாகம் பகுதியிலேயே தங்கிவிடுகின்றனர்.
ஷேரிங்குடனும் இன்னும் சில ப்ரோப்கா மக்களுடனும் நான் சில காலத்தைக் கழித்தேன். "கோடை காலத்தில் மேய்ச்சல் நிலங்களைத் தேடி நாங்கள் மாகோவுக்கு இடம் பெயர்வோம். அது காட்டுவழிப் பயணதான். 4 முதல் 5 நாட்கள் தொடர்ந்து நடக்க வேண்டியிருக்கும். இரவு மட்டும்தான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்" என்று பெம் கூறினார்.
வடகிழக்கு இந்தியாவையும் திபெத் நாட்டினுடனான சர்ச்சைக்குரிய மெக்மாகோன் எல்லையை ஒட்டி 11,800 அடி உயரத்தில் உள்ளது மாகோ.கோடை காலங்களில் ப்ரோப்கா மக்கள் இதைவிட இன்னும் அதிகமான உயரத்துக்குக்கூட செல்கின்றனர். அவர்களின் வழித்தடம் லாகம், துங்ரி, சாங்லா, நியாங், போடோக், லுர்திம் ஊடே மாகோவை அடைகிறது.
மற்றவர்கள் சாலை வழியாக வர வேண்டும் என்று விரும்பினால் அந்தப் பயணம் தவாங்கில் இருந்து தொடங்க வேண்டும். இந்தப் பகுதியைச் சாராத இந்தியர்கள் இங்கு ஒரே ஒரு நாள் தங்கவேண்டும் என்றாலும் கூட அதற்காக இந்திய ராணுவத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். எல்லைப் பிரச்சினை காரணமாக இந்த கெடுபிடி அமலில் உள்ளது. இதனாலேயே மாகோவுக்கு இடம்பெயரும் ப்ரோப்கா மக்கள் தவறாமல் தங்களுடன அரசாங்கம் அளித்த அடையாள அட்டைகளைக் கொண்டு செல்கின்றனர்.
ப்ரோப்காவின் அன்றாட வாழ்வை எளிமையானது அழகானது. "அவர்களின் வருமானத்தின் ஆதாரமே காட்டு எருதுகள் தான். அவற்றிடம் இருந்து பாலை சேகரித்து வெண்ணெய், பாலாடைக்கட்டிகள் தயாரிக்கின்றனர். அதனை உள்ளூர் சந்தைகளில் விற்கின்றனர். அங்கு இன்னமும் பண்ட மாற்று முறை அமலில் உள்ளது. தங்களைவிட உயரம் குறைவான பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் என்பதால் அவர்களிடம் காட்டு எருதுகளையும் பால் பொருட்களையும் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலான விவசாயப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்" என்றார் பெமா வாங்கே. பெமா வாங்கேவின் ஊர் தெம்பாங் கிராமம். அவர் டபிள்யு டபிள்யு எஃப்-ஃபொன் இந்தியாவிற்கான மேற்கு அருணாச்சலப்பிரதேச திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். "எங்களுக்கும் ப்ரோப்காக்களும் இடையேயான இணைப்பு உணவு தான். நாங்கள் பாபு பிரிவினர் அவர்களிடம் சோளம், பார்லி, கோதுமை, காய்ந்த மிளகாய் ஆகியனவற்றைத் தருகிறோம். அவர்களிடமிருந்து வெண்ணெய், காட்டு எருது இறைச்சி ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்கிறோம் " என்று விவரித்தார்.
அங்கு பெரும்பகுதி மேய்ச்சல் நிலத்தின் மீது ராயல் பாபு குடும்பத்தினர் அதிகாரம் செலுத்துகின்றனர். அந்த மேய்ச்சல் நிலத்தை மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்த வரி வசூலிக்கின்றனர். இந்த வரி செம்மறி ஆடுகளாகவோ அல்லது வெண்ணெய்யாகவோ பெறப்படுகிறது. ஆனால் "லாகம் பகுதியைச் சேர்ந்த ப்ரோப்கா மட்டும் இந்த வரியைச் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் லாகம் மக்களின் கடவுளான லாகம் லாமாவை (அதாவது அங்கிருக்கும் ஒரு பாறையை) பாதுகாப்பதால் விலக்கு அளிக்கப்படுகிறது" என்றார் வாங்கே.
அக்டோபர் இடைப்பட்ட காலத்தில் ப்ரோப்கா மக்கள் தங்களின் கோடை கால மேய்ச்சல் நிலத்தில் இருந்து கீழே இறங்கிவிடுவார்கள். பெம் கூறும்போது, "நாங்கள் காட்டுவழிப் பயணத்தின் போது விலங்குகளை மேய்ச்சலுக்கு விடுவதோடு தேவையான விறகுகளையும் சேகரித்துக் கொள்கிறோம். வனம் தான் எங்களின் அன்னை" என்றார்.
தமிழில்: மதுமிதா