பிப்ரவரி 20, 21ல் நாசிக்கில் நடைபெற்ற விவசாயப் பேரணியில் கலந்துகொண்ட மங்கல் பாண்டே, 47, தன் தலையில் உள்ள சூரிய ஒளி தகடைச் சரி செய்தபடியே, “இந்தப் பாத்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் கிராமம் இன்னும் இருட்டில் உள்ளது. அதனால்தான் நானும் இன்று பேரணிக்குச் செல்கிறேன். இப்போதாவது எங்களுக்கு வெளிச்சத்தைத் தாருங்கள். மாலை நேரத்தில் டார்ச் அல்லது மொபைல் போனை சார்ஜ் செய்ய இதை பயன்படுத்துவோம். ஓரளவிற்கு இது எங்களுக்கு உதவியாக இருக்கிறது” என்கிறார்.
மங்கலைப் (மேலே முகப்பு படத்தில் உள்ளவர்) போல், கிராமத்தில் உள்ள பலரும் சூரிய ஒளி தகடைப் பயன்படுத்துகிறார்கள். 40 வீடுகளைக் கொண்ட இந்தக் குக்கிராமம், நாசிக் மாவட்டத்தின் திந்தோரி தாலுகாவில் உள்ள ஷிந்த்வாத் கிராமத்திலிருந்து அரை கிமீ தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் பழங்குடி இனமான மகாதேவ் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் நெல், ராகி மற்றும் துவரம் பருப்பு போன்றவற்றை பயிரிடுகிறார்கள். 2018-ல் மழை பொய்த்துப் போனதால், ஒன்று அவர்கள் எல்லா பயிர்களையும் இழந்திருப்பார்கள் அல்லது குறைவான விளைச்சலையே பெற்றிருப்பார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சூரியஒளி தகடை வாங்கினார் மங்கல். “என் கிராமத்திலுள்ள ஒருவர் இதை வாங்கினார். எனக்கும் இதேப்போல் ஒன்று வாங்கி தாருங்கள் என அவரிடம் கேட்டேன். அதன்பிறகு பலரும் இதை வாங்க ஆரம்பித்தனர். இதன் விலை 250 ரூபாய். எங்களைப் போன்றவர்களின் ஒருநாள் கூலி இது” என்கிறார் அவர்.
மங்கலின் வீட்டில் ரீசார்ஜ் விளக்கு உள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் இரவில் அதை வைத்துதான் படிக்கிறான். “இந்த இருட்டில் இது கொஞ்சமாவது நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது” என சிரித்தபடி கூறுகிறார்.
விவசாயப் பேரணியில் பலரும் இதேப்போன்ற சூரியஒளி தகடுகளையோ அல்லது பேனல்களையோ தங்கள் தலையில் அல்லது கையில் கொண்டு செல்கின்றனர். அவர்களில் பயார்படா கிராமத்தைச் சேர்ந்த பவான் சோனு, 28 மற்றும் ஜானு டோக்ரே, 30 ஆகியோரும் உண்டு. இவர்களின் கிராமத்தில் 108 வீடுகள் உள்ளது (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011). இவர்களும் தண்ணீர் பற்றாக்குறை குறித்தும் மோசமான பயிர் விளைச்சல் குறித்தும் பேசுகின்றனர்.
“எங்கள் 12 குடிசைகளும் கிராமத்தின் எல்லையில் உள்ளது. கிராமத்தின் பிரதான இடத்தில் விளக்கு உள்ளது. எங்களுக்கு இல்லை. இருட்டில் எங்கள் குழந்தைகள் எப்படிப் படிக்கும்? ரேஷன் கடையில் மாதந்தோறும் இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் எங்களுக்கு கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு நாங்கள் சமைக்க பயன்படுத்தவா அல்லது விளக்கை ஏற்றவா? அரசாங்கமோ எங்கள் நிலத்தின் உரிமையையும் எங்களுக்கு தருவதில்லை, அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை. அதனால் எங்களுக்கு கிடைக்கும் குறைவான வருமானத்தைக் கொண்டு எங்களுக்கு தேவையான இதுபோன்ற பொருட்களை (சூரியஒளி தகடு) ஏன் நாங்களே செய்துக்கொள்ளக் கூடாது?”
தமிழில்: வி. கோபி மாவடிராஜா