மெட்ராஸ் (தற்காலச் சென்னையின்) மாநகரின் பழைய பொருளாதார மையமாகத் திகழ்ந்த ஜார்ஜ் டவுனின் நடுவில் நிற்கிறோம். சூரிய உதயத்தோடு குறுகிய, வளைவுகளாலான அந்தத் தெருவும் விழிக்கிறது. அந்தத் தெருவின் அதிகாரப்பூர்வ பெயர் பத்ரியன் தெரு. ஆனால், பத்ரியன் தெரு என்று சொல்லி விசாரித்தால் யாருக்கும் தெரிவதில்லை. இந்தத் தெருவை அனைவரும் பூக்கடை என்றே அழைக்கிறார்கள். கோயம்பேட்டில் காய்கனி, பூச்சந்தை துவங்கப்படுவதற்கு முன்னரே 1996-ல் இருந்தே கோணிப்பையில் வைத்து மலர்கள் இங்கே விற்பனை செய்யப்படுவதே இப்பெயருக்குக் காரணம். பதினெட்டு வருடங்கள் கடந்த பின்பும், பூக்கடை அதிகாலையில் அத்தனை உயிர்ப்போடு காணப்படுகிறது. தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட சந்தைகளுக்குப் போக மனமில்லாமல் இங்கேயே பூ விற்பவர்களும், வாங்குகிறவர்களும் இன்னமும் காணப்படுகிறார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்னாலேயே, பூக்கடை மக்களால் நிரம்பி வழிகிறது. கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு விழி பிதுங்குகிறது. ஆந்திரா, தென் தமிழகத்தின் மையப்பகுதிகளில் இருந்து பெரிய மலர் மூட்டைகள் வந்து இறங்கிய வண்ணமிருக்கின்றன. பூக்கடை சாலை கிட்டத்தட்ட சகதிமயமாக இருக்கிறது. சாலையின் நடுவில் நெடிய, சிறு குப்பைக்குன்று ஒன்று காணப்படுகிறது. ஒரு நூறு கால்கள் வாடிப்போன மலர்களை மிதித்துத் துவம்சம் செய்வதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நூறு வண்டி சக்கரங்கள் அம்மலர்களை நசுக்கியவண்ணம் நகர்வதை நினைத்துப்பாருங்கள். அதனால் எழும் வாசனை எப்படி இருக்கும்? அது அத்தனை ரம்மியமானதாக இல்லை. ஆனால், இந்தத் தெருவே காணாக் கண்கொள்ளாத பகுதியாக இருக்கிறது. இரு பக்கமும் கடைகள் நிரம்பியிருக்கின்றன. சில கடைகள் சிமெண்ட் கட்டிடத்தில் அலமாரிகள், மின்விசிறிகளோடும் காட்சியளிக்கின்றன. வேறு சில கடைகள் குடில்களில் இயங்குகின்றன. ஆனால், எல்லாக் கடைகளும் வண்ணங்களால் கண்ணைப் பறிக்கின்றன. ஒரு சிமெண்ட் கட்டிடத்தில் இயங்கும் கடையில் நிற்கிறோம். தெருவின் இருபுறமும் நூறு பேர் அளவுக்கு வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். வாடி, மடிந்து போன வயல்களையும், கைக்கும், வாய்க்கும் தவித்துக்கொண்டிருந்த வேலைகளையும் விட்டுவிட்டு சென்னைக்குப் புலம்பெயர்ந்த மக்களால் பல்வேறு கடைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு உதவியாக இருக்கும் சிறு பிள்ளைகள் அவர்களின் சொந்த/பக்கத்து கிராமத்தையோ சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சிறு பிள்ளைகள் கடைக்குப் பின்புறம் உள்ள சிறு அறைகளிலோ, கட்டிடத்தின் மேல்மாடியிலோ வசிக்கிறார்கள். (ஏப்ரல் 19, 2012-ல் அதிகாலை வேளையில் பூக்கடைக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது)

PHOTO • Aparna Karthikeyan

புகைப்படத்திற்கு இடது புறம் அமர்ந்திருக்கும் வி.சண்முகவேல் திண்டுக்கல் மாவட்ட கவுண்டம்பட்டியில் இருந்து சென்னைக்கு 84-ல் குடிபெயர்ந்தார். தன்னுடைய கிராமத்தில் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாயே சம்பாதிக்க முடிந்தது, ஆனால், சென்னையில் ஒருநாள் கூலியே பத்து மடங்கு அதிகமாக இருந்ததால் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டார் சண்முகவேல். அவருடைய அப்பா மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். மழை பொய்த்து, நீர் வறண்டு, வாழ்க்கை நடத்துவதே கேள்விக்குறியானது. இப்போதுதான் கிராமத்தில் போர்வெல்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அதற்கு வெகுகாலத்திற்கு முன்பே பலர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

PHOTO • Aparna Karthikeyan

புகைப்படத்தில் வலதுபுறம் பணத்தை எண்ணிக்கொண்டிருப்பவர் திண்டுக்கல் மாவட்டம் சொங்கன்சட்டிப்பட்டியை சேர்ந்த கே.இராமச்சந்திரன். கிராமத்தில் விவசாயக் கூலியாக இருந்த ராமச்சந்திரன் மேம்பட்ட வாழ்வாதாரத்துக்காக 2003-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இன்னமும் அவருடைய பெற்றோர் கிராமத்தில் விவசாயத்திலேயே வேலை செய்கிறார்கள். இராமச்சந்திரனைப் போல அவர் ஊர்மக்களில் பெரும்பாலானோர் நகரத்துக்கு வேலைதேடி குடிபெயர்ந்து விட்டார்கள். நாற்பது, ஐம்பது வயதினர் மட்டுமே இன்னமும் ஊரில் இருக்கிறார்கள், இளைஞர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னையில் வேலை பார்க்கபோய் விட்டார்கள். ஆயிரம் மக்கள் இருக்க வேண்டிய கிராமத்தில், இப்போது பாதி மக்களே இருப்பார்கள் என்று ராமச்சந்திரன் கருதுகிறார். அவர்களிலும் ராமச்சந்திரன் வயதுள்ள இளைஞர்கள் வெகு சொற்பமே.

PHOTO • Aparna Karthikeyan

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையன்கோட்டையைச் சேர்ந்தவர் ஏ.முத்துராஜ். ஐந்து வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய ஒரு சென்ட் நிலத்தை 30,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு வந்தார். இப்போது அந்த நிலத்தின் விலையைக் கேட்டாலே தலைசுற்றுகிறது. 1 லட்சம். பெரிய நகரங்களை இணைக்கும் இணைப்புச்சாலைக்கு அருகில் அவரின் நிலம் இருப்பதும், அந்தந்த நகரங்களில் வாழ்கிறவர்கள் மற்ற நகர்களுக்கு எளிதாகப் பயணிக்க முடியும் என்பதுமே இந்த விலையேற்றத்துக்குக் காரணம். இதனால், இப்போது விவசாயம் செய்ய ஆளில்லாத நிலை. வயற்காட்டில் வேலை பார்க்க மிகக்குறைவான மக்களே இருக்கிறார்கள். முத்துராஜின் அம்மா இன்னமும் கிராமத்தில் சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்கும் வெகுசிலரில் ஒருவர். கூலி தொழிலாளர்களின் உதவியோடு அவர் அலரிப்பூ பயிரிடுகிறார். கூலிக்கு ஆட்கள் கிடைப்பதை விடத் தண்ணீர் கிடைப்பது தான் இன்னமும் கடினமாக இருக்கிறது. எண்ணூறு அடி போர்வெல்லில் சமயங்களில் கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும். மற்ற நேரங்களில் காற்று மட்டுமே வரும். வாரத்திற்கு இருமுறை ஒரு லோடு தண்ணீருக்கு 700 ரூபாய் கொடுத்து டேங்கர் லாரியைக் கொண்டு பூக்களுக்கு நீர் பாய்ச்சுகிறார் முத்துராஜின் அம்மா. பருவமழை பெய்வதால் நிலைமை மேம்பட வேண்டும், எனினும், கிராமத்தில் வாழ்வது எப்போதும் பெரும்பாடாகவே உள்ளது. அதனால், பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் வேலை தேடி நகரத்துக்குப் போக உறவினர்கள் சொன்ன அறிவுரைக்குச் செவிமடுத்து மூட்டை கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார் முத்துராஜ்.

PHOTO • Aparna Karthikeyan

புகைப்படத்தின் இடதுபுறத்தில் இருக்கும் பராக்கிரம பாண்டியனின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது. அவரின் தாத்தா தன்னுடைய பேரன் காவல்துறை அதிகாரியாக வருங்காலத்தில் ஆவான் என்று கனவு கண்டார். அப்போது அவன் அணிந்து கொள்ளும் பெயர்ப்பட்டயத்தில் மதுரையை ஆண்ட மன்னரின் பெயர் இருந்தால் கம்பீரமாக இருக்கும் என்று பராக்கிரம பாண்டியன் என்று தன்னுடைய பேரனுக்குப் பெயரிட்டார். ஆனால், ‘பராக்’ (அப்படித்தான் பூக்கடைவாசிகள் அவரை அழைக்கிறார்கள். வட்டார வழக்கினில் ‘பராக்’ என்றால் ‘கனவுகாண்பவர்’ என்று பொருள்) பள்ளிப்படிப்பை தாண்டாமல், பூ விற்க வந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தில் இருந்து பதினான்கு வயதில் சென்னைக்குப் பராக்கிரம பாண்டியன் வந்துவிட்டார். கோயம்பேட்டில் ஒரு கடை துவங்க முயன்று, கடன் கழுத்தை நெரித்து அசலும், வட்டியும் இரண்டரை லட்சம் என்று எகிறி நின்றது. ஊரில் இருந்த நிலத்தை விற்று ஒன்றரை லட்சம் கடனை அடைத்துவிட்டாலும், மீதமிருக்கும் கடனுக்காக அதிகாலையிலிருந்து அந்திமாலை வரை அயராது உழைக்கிறார் பராக்கிரம பாண்டியன்.


(தமிழில்: பூ.கொ.சரவணன்)

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Other stories by Aparna Karthikeyan
Translator : P. K. Saravanan

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.

Other stories by P. K. Saravanan