"பனிப்பொழிவு பற்றி எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், அறுவடைக்கு நாங்கள் விரைந்து சென்று இருப்போம்", என்று முஷ்தக் அகமது கூறுகிறார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள பாம்போர் வட்டத்திலுள்ள நம்பல் பால் கிராமத்தில் அகமது வசித்து வருகிறார். இங்கே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடுப்பகுதியில் அவரும் பிற விவசாயிகளும் க்ரோகஸ் சடைவசை - க்ரோகஸ் குங்குமப்பூவினை நடவு செய்கின்றனர். அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இருந்து நவம்பர் மாதம் நடுப்பகுதி வரை, அவர்கள் அதன் பூவினை அறுவடை செய்கின்றனர். அதன் கருஞ்சிவப்பு நிற பகுதிகள் (பூவின் சூலக முடி மற்றும் சூலக தண்டு) தான் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த குங்குமப்பூவாக விற்கப்படுகிறது.
இந்தியாவில் குங்குமப்பூ வளரும் ஒரே மாநிலம் (இப்போது யூனியன் பிரதேசம்) காஷ்மீர் தான். பெரும்பாலானவை நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்ற அதே வேளையில் சிலவற்றை உள்ளூர் கஹ்வா தேனீருக்குப் பயன்படுத்துகின்றனர், முக்கியமான உணவு தயாரிப்புகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும், சடங்குகளிலும் கூட பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு காஷ்மீர் அதன் முதல் பனிப்பொழிவை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பாகவே - நவம்பர் 7 அன்றே ஆரம்பித்துவிட்டது. அது பூக்கின்ற செடிகளை பாதித்தது. அதன் விளைவாக பாம்போரில் உள்ள மைஜ் கிராமத்தைச் சேர்ந்த வாசீம் காண்டே, தான் வைத்திருக்கும் 60 கானல் நிலத்தில், கனால் ஒன்றுக்கு அவர் எதிர்பார்த்த 250 - 300 கிராமுக்கு பதிலாக 30 - 40 கிராம் குங்குமப்பூவை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. கானல் ஒன்றுக்கு (எட்டு கானல் என்பது ஒரு ஏக்கருக்கு சமம்) அவர் எதிர்பார்த்த 20,000 ரூபாய் லாபத்திற்கு பதிலாக இப்போது அவர் 3 லட்ச ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறார்.
இந்தப் பருவத்தின் மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்து இருந்தோம் ஆனால் தவறான நேரத்தில் பனி விழுந்து எங்கள் பயிரை சேதப்படுத்திவிட்டது என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் குங்குமப்பூ வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான அப்துல் மஜீத் வானி கூறுகிறார், அச்சங்கத்தில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த ஆண்டு காஷ்மீரின் குங்குமப்பூ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு சுமார் 20 கோடி ரூபாய். குங்குமப்பூ வர்த்தகம் ரூபாய் 200 கோடி என்று காஷ்மீரின் உணவு பதப்படுத்தும் தொழில் குழுவின் தலைவரான டாக்டர் ஜய்னுல் ஆபுதீன் சமீபத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 226 கிராமங்களில், சுமார் 32,000 குடும்பங்கள் குங்குமப்பூவை பயிரிட்டு வருகின்றனர், இதில் அகமது மற்றும் காண்டேயின் கிராமங்களும் அடங்கும், என்று காஷ்மீர் பிரதேச ஆணையர் தயாரித்த ஆவணத்தில் குறிப்பிடுகிறார். இவர்களில் பலர் புல்வாமா மாவட்டத்தில் பாம்போர் பகுதியில் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டொன்றுக்கு சுமார் 17 டன் குங்குமப்பூவை உற்பத்தி செய்கின்றனர் என்று வேளாண் இயக்குனரான சையது அல்தாப் அய்ஜாஸ் அண்ராபி கூறுகிறார்.












