பிரசன்னா சாபர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரிக்ஷா இழுக்கிறார். அந்த ரிக்ஷாவும், சில சமயம் சத்திஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் ரயில் நிலைய நடைபாதையும்தான் அவருக்கு வீடு. நகரில் எங்கும் அவர் வாடகைக்கு தங்கியதில்லை.

ஒருநாள் அதிகாலை ராய்ப்பூர் நிலையத்தில் அவரை நாங்கள் சந்தித்தபோது பயணிகளுக்காக அவர் ரிக்ஷாவில் அமர்ந்தபடி காத்திருந்தார். அவரது சொந்த மொழி கொஸ்லியில் (ஒடியாவின் வட்டார மொழி) பேசினோம். அவரது கதையை உற்சாகத்துடன் எங்களிடம் கூறினார்.

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டம் சன்மஹேஸ்வர் கிராமத்திலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள் ராய்ப்பூருக்கு பிரசன்னா வந்துள்ளார். இப்போது 50 வயதுகளில் உள்ள பிரசன்னா பத்தாண்டுகளுக்கு முன் ரிக்ஷா இழுக்க வாகனத்திற்கான நாள் வாடகை ரூ.5 என இருந்தது. இப்போது அது ரூ.40. சில ஆயிரம் சம்பாதித்ததும் தனது கிராமத்திற்கு சென்று சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் நகருக்கு திரும்புகிறார். 30 ஆண்டுகளாக இந்த சுழற்சியை அவர் தொடர்கிறார்.

தினமும் அவர் ரூ.100-300 வரை சம்பாதிக்கிறார். அதில் உணவிற்காக ரூ.110 செலவிடுகிறார். நல்ல வருமான நாட்களில் மூன்றில் ஒரு பங்கும், மோசமான நாளில் முழுவதையும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு அவர் செலவிடுகிறார். கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைத்தால் ரூ.60க்கு மதுபானம் வாங்குகிறார். ஆனால் தினமும் அப்படி குடிப்பதில்லை, என்கிறார் அவர். “சில ஆண்டுகளுக்கு முன்பு சக புலம்பெயர்ந்தோருடன் பழகியதில் சூதாடுதல், மது பழக்கம் ஏற்பட்டது. என் உடல்நலம் குன்றியது. என் குடும்பத்தினர் கிராமத்திலிருந்து ரூ.3,000 கடன் வாங்கி வந்து என்னைக் காப்பாற்றினர். அதில் பாடம் கற்று கவனமாக இருந்து வருகிறேன்.”

1960களில் இருந்து மாநிலத்தில் வாட்டும் பஞ்சத்தால் பிரசன்னாவைப் போன்று ஆயிரக்கணக்கான ஒடியாவினர் ராய்பூருக்கு புலம் பெயர்ந்துள்ளனர். ரயில் தண்டவாளங்களின் இருபுறமும் உள்ள குடிசைப் பகுதிகளில், அருகில் உள்ள காலனிகளில் பல தலைமுறைகளாக தங்கியுள்ளனர். ஆனால் பழங்குடியின குடும்பத்திலிருந்து நகருக்கு வந்த முதல் நபர் பிரசன்னாதான்.

அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மருமகள், பேரக்குழந்தை, பெரியப்பா உள்ளனர். “என் தந்தையின் பெயரில் 1.14 ஏக்கர் நிலம் தான் உள்ளது,” என்கிறார் அவர்.  “என் தாய் தினமும் 12 கிலோமீட்டர் நடந்து விறகு சேகரித்து அருகில் உள்ள நகரத்தில் விற்று பணம் சேர்த்து 80 டிஸ்மால் (0.80 ஏக்கர்) நிலம் வாங்கினார். ஆனால் அந்த நிலம் இப்போது தந்தை வழி மாமாவிற்கு சொந்தமாகிவிட்டது.”

PHOTO • Purusottam Thakur

சில ஆயிரம் சம்பாதித்ததும் தனது கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு விரைவில் மீண்டும் சத்திஸ்கரில் உள்ள நகருக்குத் திரும்புகிறார் பிரசன்னா. 30 ஆண்டுகளாக இந்த சுழற்சியை அவர் தொடர்கிறார்

16 வயதில் பிரசன்னாவிற்கு திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு மகன்கள் – மூத்த மகன் ஜித்துவிற்கு 23 வயதில் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். குழந்தையின் 21ஆம் நாள் சடங்கிற்கு அக்குடும்பம் ரூ.15,000 செலவிட்டது – அவன்தான் அவர்களின் முதல் பேரன். அவன் படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என நாம் கேட்டோம், “கட்டாயம்,” என்று வானை நோக்கி கைகளை மடக்கி சொல்கிறார் அவர்.  “இறைவன் என்னை வாழ அனுமதித்தால், அவனை நன்றாக படிக்க வைப்பேன்.”

5ஆம் வகுப்பு வரை பிரசன்னா படித்துள்ளார். பிறகு அவரை பெற்றோர் தங்களது சிறு துண்டு நிலத்தில் வேலை செய்ய வைத்துள்ளனர். 1965ஆம் ஆண்டு பிரசன்னா பிறந்தார். அப்போது காலஹண்டியில் கடுமையான பஞ்சம் இருந்தது. ஒரு ஆண்டுவிட்டு அடுத்த ஆண்டு என வறட்சி தொடர்ந்தது. நிலைமையை ஆராய கரியார் வந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை காண சில வாரங்களே ஆன பிரசன்னாவையும் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பஞ்சத்தில் நோய், பசி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர் என்கிறார் அவர்.

பிரசன்னாவின் மகன்களும் அதிகம் படிக்கவில்லை. ஜித்து 10ஆம் வகுப்பை முடிக்கவில்லை. இளைய மகன் ரபி 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இருவரும் புலம்பெயர் தொழிலாளர்களாக மும்பையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்திலிருந்து சிறுவர்கள் வேலை தேடி குழுவாக நகரங்களுக்குச் செல்கின்றனர். கட்டுமான இடங்களிலேயே அவர் வாழ்கின்றனர். தினக்கூலியாக ரூ.300 அளிக்கப்படுகிறது. பலரும் அதிக நேரம் வேலை பார்த்து கூடுதலாக சம்பாதிக்கின்றனர். 3-6 மாதங்கள் வேலை செய்து குறிப்பிட்ட தொகையுடன் வீடு திரும்பி குடும்பத்துடன் சிறிது காலம் செலவிடுகின்றனர் அல்லது வயலில் வேலை செய்கின்றனர். பிறகு மீண்டும் புலம் பெயர்கின்றனர். இது தொடர்கிறது.

“அறுவடைக்கு பிறகு கிராமத்தில் பாதிப்பேர் செங்கல் சூளைகளில் வேலைசெய்ய ஆந்திரப் பிரதேசம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரூ.20,000 ஒப்பந்தக் கூலியாக கொடுத்து குடும்பத்தையே வேலைசெய்ய வைக்கின்றனர். மும்பையில் கட்டுமானத் தொழிலில் மூன்று மாதங்கள் ஈடுபட்டால் ரூ.30,000 வரை நான் சம்பாதித்துவிடுவேன், என்பதால் இதுபோன்ற வேலைகளை விரும்புவதில்லை,” என்கிறார் பிரசன்னா. “இதுபோன்ற கஷ்டமான வாழ்க்கையை என் குடும்பத்தினர் ஏன் வாழ வேண்டும்?”

ஒரு பத்ரியாவிற்கு முன் பணமாக ரூ.20,000-30,000 வரை சூளை ஒப்பந்தக்காரர்கள் தருகின்றனர். ஒரு பத்ரியாவில் மூன்று பேர் ஒரே செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். தொழிலாளர் ஒப்பந்தக்காரர்களிடம் உள்ளூர் சர்தார்கள் அல்லது ஏஜென்டுகள் புலம்பெயர் தொழிலாளர்களை ஒப்படைக்கின்றனர். அவர்கள் சூளை உரிமையாளர்களிடம் அழைத்துச் செல்கின்றனர். ஆறு மாதங்கள் சூளைகளில் வேலை செய்துவிட்டு மழைக் காலத்திற்கு முன் மே, ஜூன் மாதங்களில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர்.

பயணம், மோசமான வாழ்க்கை நிலைகள், கடின உழைப்பு போன்றவை அடிக்கடி உடல்நலத்தையும் பாதிக்கிறது. தொழிலாளர்கள் பலருக்கும் டிபி வருகிறது. ஆனால் முன்கூட்டியே தரப்படும் பணம் அவர்களை ஏமாற வைக்கிறது. குடும்பத்தில் திருமணச் செலவு, மருத்துவம், வீடு கட்டுதல், கடனை அடைத்தல் அல்லது காளைகளை வாங்குவது போன்ற முதன்மையான பொருளாதார தேவைகளை சந்திக்க அவர்களுக்கும் வேறு வழி தெரிவதில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதில்லை. சம்பளம் முறையாக இருப்பதில்லை, ஒழுங்கான வேலை என்பது உறுதியில்லை. கூலிக்காக காத்திருக்கக் கூடியவர்கள் மட்டுமே கிராமங்களில் இந்த 100 நாள் வேலை திட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.

பிரசன்னாவின் குடும்பம் கடந்தாண்டு இளைய மகன் ரபியின் திருமணத்திற்கு ரூ.1,00,000 வரை செலவிட்டது. தந்தையும், மகன்களையும் தங்களது வருமானத்தையும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் செலவிட்டுள்ளனர். அசைவ விருந்து, ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒளிப்பதிவு செய்வது என அவர்கள் செலவிட்டுள்ளனர். “எங்களிடம் திருமண டிவிடிக்கள் இரண்டு உள்ளது,” என்று பெருமையுடன் சொல்கிறார் பிரசன்னா.

உங்களிடம் வறுமை கோட்டிற்கு கீழுள்ளோர் அட்டை உள்ளதா? “ஆம், என்னிடம் ஒன்றும், என் தந்தையிடம் ஒன்றும் உள்ளது,” என பதிலளிக்கிறார் பிரசன்னா. பொது விநியோக முறையின் (பிடிஎஸ்) கீழ் ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 25 கிலோ வழங்கப்படுகிறது. அதாவது மாதந்தோறும் 4 லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.70க்கும், 50 கிலோ அரிசி ரூ.50க்கும் கிடைக்கிறது.

பிரசன்னா போன்ற குடும்பத்தினருக்கு மானிய விலை அரிசி என்பது பேருதவி அளிப்பது. இது அவர்களின் பசியை விரட்டுகிறது. முன்பெல்லாம் சிறிதளவு உணவு தானியத்திற்காக மக்கள் எவ்வகை வேலையையும் செய்தனர். ஆனால் பிடிஎஸ் உதவியால் அவர்கள் கூலிக்கு பேரம் பேச முடிகிறது. இதனால் கூலியும் அதிகரித்துள்ளது. மானியங்கள் குடும்பங்களை உணவு தாண்டி சுகாதாரம், கல்வி குறித்தும் சிந்திக்க வைக்கிறது.

பிரசன்னாவின் தந்தை 60 வயதை கடந்தோருக்கு மாதம் வழங்கப்படும் ரூ.300, 80 வயதை கடந்தோருக்கு வழங்கப்படும் மாதம் ரூ.500 ஆகியவற்றை ஓய்வூதியமாகப் பெறுகிறார். பிடிஎஸ், முதியோர் உதவித்தொகை அல்லது கைம்பெண் உதவித்தொகை ஆகியவை குடும்பத்தினர் மத்தியில் வயோதிகர்களுக்கு ஒரு பங்களிப்பை தந்து புதிய மரியாதையை பெற்றுத் தருகிறது.

இங்குள்ள பல சமூகங்களுக்கு நலத்திட்டங்கள் பாதுகாப்பு அளித்தாலும், கிராமங்களில் இருந்து புலம்பெயர்வதை தடுக்க முடியவில்லை. இதனால் பிரசன்னா உள்ளிட்டோர் வேலை தேடி நகரங்களுக்கு இப்போதும் செல்கின்றனர்.

தமிழில்: சவிதா

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Other stories by Purusottam Thakur
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha