தான் வேலை செய்கிற இடத்தை குறிஞ்சி என்று பாலு ஆசையாக அழைப்பார். தமிழ்நாட்டின் சங்க இலக்கியத்தில் குறிஞ்சி என்றால் மலையும் மலை சார்ந்த இடமும் என்று அர்த்தம். “ இங்கே மூங்கில் வளர்கிறது.அதனால்தான் இதற்கு குறிஞ்சி என்று பெயர் வைத்தேன்” என்கிறார் அவர். அவர் மூங்கிலிருந்து கூடைகள், பாய்கள், நாற்காலிகள், ஜன்னல்திரைகளை கடந்த 22 வருடங்களாக செய்துவருகிறார்.
வைகை ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள அருள்தாசபுரத்தில் உள்ள அவரது பரம்பரை வீட்டின் முன் பகுதியில்தான் அவரது பட்டறை இருக்கிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூங்கில் வேலை செய்கிற, கைவினை பொருள்கள் செய்யும் மகேந்திர மேதரா சமூகத்தைச் சேர்ந்தவர் பாலா. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டையும் பேசுகிறார்கள் இவர்கள்.
இப்போது 38 வயதாகும் பாலா, வணிகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2007 முதல், தமிழ்நாடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் II தேர்வில் தேர்ச்சி பெற சில முயற்சிகளையும் மேற்கொண்டார். அதைச் செய்து முடித்தால் அவருக்கு ஒரு எழுத்தர் அல்லது துணை பதிவாளர் அல்லது மற்ற அரசுப் பணிகளுக்கான தகுதி கிடைக்கும். ஆனால் இதுவரை அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் பாலா தனது குடும்பத்தின் தொழிலில் நீடிக்கிறார். "எனக்குத் தெரிந்தவரை, சுமார் 7-8 தலைமுறைகளாக எனது குடும்பத்தின் தொழிலாக இது இருக்கிறது. இன்னும் அதிகமான காலகட்டமாகக்கூட இருக்கலாம் "என்று அவர் கூறுகிறார்.
பாலா தனது மனைவி புவனாவோடு இணைந்து பிரதானமாக செய்வது மூங்கில் ஜன்னல் திரைகளைத் தான். வாரத்திற்கு ஒரு முறை, அவர் மதுரையின் ஆல்வார்புரத்தில் உள்ள ஒரு சந்தையில் இருந்து புதிய மூங்கில் கட்டுகளை வாங்குகிறார். "இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன" என்று அவர் கூறுகிறார். "சிறந்த வகை மூங்கில் மலைகளில் வளர்கிறது. அவை கேரளாவின் பாலக்காடு மற்றும் மூணாறு பகுதிகளிலிருந்து இங்கே விற்பனைக்கு வருகின்றன. மற்றொன்று சமவெளிகளில் வளர்பவை. அவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இரண்டாவது வகை மூங்கில்கள் முதல் வகையைப்போல அவ்வளவு வலுவாக இல்லை".
பாலாவும் புவனாவும் மூங்கிலை மெல்லிய கீற்றுகளாக வெட்டுகிறார்கள். “மூங்கிலை கீற்றுகளாகப் பிரிப்பது உங்களுக்கு காயங்களை ஏற்படுத்தும். அந்தத் திறனைப் பெறுவதற்கு பல வருடம் அனுபவம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் "என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர்கள் மூன்று மீட்டர் நீளமுள்ள ஒரு கம்பத்தில் கீற்றுகளை இணைக்கின்றனர். ஒவ்வொரு நாளும், அவர்கள் சுமார் 50-55 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும் ஜன்னல் திரைகளை உருவாக்குகின்றனர். “எங்கள் பணி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இரவு 10:30 மணிக்கு மட்டுமே முடிகிறது. நாங்கள் நாள் முழுவதும் நிற்கிறோம். இந்த உழைப்பு எங்களுக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 500 ரூபாய் வரை வருமானத்தைத் தருகிறது. மூங்கில்கள் நோய்தொற்றுக்கு ஆளானவையாக இருந்தாலோ அல்லது அவை பூச்சிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ நாங்கள் சில நேரங்களில் இழப்புகளைச் சந்திக்கிறோம் "என்கிறார் பாலா.
“எங்கள் பணி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இரவு 10:30 மணிக்கு மட்டுமே முடிகிறது. நாங்கள் நாள் முழுவதும் நிற்கிறோம். இந்த உழைப்பு எங்களுக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 500 ரூபாய் வரை வருமானத்தைத் தருகிறது"
பாலாவின் வாடிக்கையாளர்கள் வேறுபட்டவர்கள் - கேரளா, கோவா, இந்தோனேசியா மற்றும் பிற இடங்களிலிருந்து வருவார்கள். "மூங்கில் ஜன்னல் திரைகளுக்கான தேவை ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் கோடைகாலத்தில் அது அதிகரிக்கும்" என்றும் அவர் கூறுகிறார். பாலா தனது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்கிறார்; வீடுகள் மற்றும் ஹோட்டல்களிலிருந்து ஆர்டர்கள் வந்தால் மட்டுமே ஜன்னல் திரைகள் உருவாக்கப்படுகின்றன. மொத்த காய்கறி மற்றும் பழச் சந்தைகளின் விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களால் கூடைகள் வாங்கப்படுகின்றன.
பாலா - புவனாவுக்கு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் சரவண வெந்தா 9 ஆம் வகுப்பிலும், மகள் ரூபா வர்ஷினிஸ்ரீ ஒன்றாம் வகுப்பிலும் படிக்கிறார். "எனது மகன் எனது வேலைக்கு உதவுகிறான். என் மகளுக்கு ரொம்ப சின்ன வயசு” என்கிறார் ஜன்னல் திரைகளைத் தயாரிப்பவர்.. . தனது மகன் ஒரு 'வெள்ளை காலர்' வேலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைக்ககோரும் குடும்பத் தொழிலைத் தொடரக்கூடாது என்றும் பாலா விரும்புகிறார். "இது உங்கள் உடல்நலத்திற்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது, நான் நாள் முழுவதும் நிற்கிறேன். இரவில் என் முதுகு, மணிக்கட்டு மற்றும் கால்கள் வலிக்கிறது," என்று அவர் கூறுகிறார். "தவிர, மூங்கில் வெட்டுவது உங்களை காயப்படுத்தக்கூடும். நான் காயமடைந்தேன் அதனால் இன்று நான் ஓய்வெடுத்துக்கிறேன் என்று நீங்கள் கேட்க முடியாது. அது சாத்தியமே இல்லாதது. "
மூங்கில் பொருள்களைத் தயாரிப்பதன் மூலம் வருகிற குறைந்த வருமானம் பலரை ஓட்டுநர்கள் அல்லது ஓவியர்களாக வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. பாலாவும் ஒரு "நல்ல ஊதியம், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான" அரசாங்க வேலையை விரும்பினார். ஆனால் இப்போது அவர் தனது சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களை வேறொருவரின் ஊழியர்களாகப் பார்க்கிறார், குறைந்தபட்சம் அவர் தனது சொந்த நிறுவனத்தை நடத்துவதாக உணர்கிறார். "கைக்கும் வாய்க்கும் பத்தாத வருமானம் வருகிற சூழல்தான். என்கிறார் அவர். இப்போதுவரையிலும் நான் திருப்தியாக இருக்கிறேன். ஏனென்றால் நானே எனது வேலைக்கான எஜமானன்."
தமிழில்: த. நீதிராஜன்