திரைப்படத்தை காண்க : பேராற்றலைத் தேடியும், குருவிற்கான அஞ்சலி குறித்தும் பாசுதேப் பாவுல் பாடுகிறார்

‘பாவுல்’ என்ற சொல் சமஸ்கிருதத்தின் ‘வதுலா’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் பித்து கொள்ளுதல், ஆட்கொள்ளுதல் அல்லது ஒழுங்கற்றது என்று பொருள். ‘பாவுல்’ என்பது வங்கத்தில் தோன்றிய இசைப் பண்பாட்டையும் குறிக்கிறது.

பாவுல் சமூகத்தினர் பொதுவாக நாடோடிகள். பாவுல்கள்  இஸ்லாம், இந்து மற்றும் பவுத்த சமயங்களின் ஒத்திசைவைக் கொண்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். சமூகத்தின் மரபு விதிகளை மறுக்கும் அவர்கள் தனித்துவமான சக்தியாக இசையைக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்கின்றனர். குருவினால் தூண்டப்படுகின்றனர்.

பாவுல் சமூக ஆண்களும், பெண்களும் தனித்துவமானவர்கள், வெட்டப்படாத சடை விழுந்த முடி, காவி உடை அல்லது புடவை, ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி ஒற்றை கம்பி கொண்ட தம்புராவை சுமக்கின்றனர். வாய் வழியாக கடத்தப்படும் இந்த இசை இன்றும் தொடர்கிறது. பாடல்களைப் பாடி அதற்குப் பதிலாக யாசகத்தைப் பெற்று மட்டுமே அவர்கள் பிழைக்கின்றனர். பாடகரின் புகழைப் பொறுத்து ஒரு பாவுல் ரூ.200-1000 வரை சம்பாதிக்கிறார்

பாவுல்கள் பயன்படுத்தும் பல்வேறு இசைக் கருவிகளில் தோத்தரா, காமக் ஆகிய இரண்டும் வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படுத்த பாடும் போது பயன்படுத்தப்படுகின்றன

புல்லாங்குழல், டோல், காமக், கொர்டல், தோத்தரா, தபலா, குங்குரு, துப்கி போன்ற இசைக் கருவிகளை அதிலும் குறிப்பாக தம்புராவைக் கொண்டு பாவுல் பாடும்போது, இரண்டு தலைப்புகளில் கவனம் செலுத்துகிறார்: தேக சாதனம் (உடலின் வெளிப்பாடு) மற்றும மன சாதனம் (மனத்தின் வெளிப்பாடு).

மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பாவுல் இசைக்காக இரண்டு முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன – ஜனவரி மத்தியில் ஜோய்தேவ் – கெண்டுலி கிராமத்தில் நடைபெறும் கெண்டுலி மேளா, டிசம்பர் இறுதியில் போலாப்பூர் நகரில் உள்ள சாந்திநிகேதனில் நடைபெறும் பவுஸ் மேளா. இந்நிகழ்வுகள் தொலைவில் உள்ள பாவுல்களையும் வரவழைக்கிறது. சிறிய நிகழ்ச்சிகளில் கூட பாவுல்கள் பங்கேற்கின்றனர்.

40களின் மத்தியில் உள்ள பாசுதேப் தாஸ் பாவுல் மேற்குவங்கத்தின் போல்பூர் நகரைச் சேர்ந்தவர். இவர் பாடகர் மட்டுமின்றி பல மாணவர்களுக்கு ஆசானாகவும் உள்ளார். அவர் அனைவரையும் தனது வீட்டிற்கு வரவைத்து குடும்பத்தினரைப் போன்று நடத்துகிறார். அவருடன் தங்கும்போது மாணவர்கள் பாவுல் வடிவ வாழ்க்கையை கற்கின்றனர்.

போல்பூரில் உள்ள தனது வீட்டில் பாவுல் வாழ்க்கை முறையை முன்னெடுப்பது குறித்துப் பேசுகிறார் பாசுதேப் தாஸ்

இங்குள்ளத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அவர் பாடுகிறார். முதல் பாடல் பேராற்றலைத் தேடி: இறைவன் என் அருகில் இருக்கிறார், என்னால் அவரைக் காண முடியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் அவரைத் தேடுகிறேன். அவர் இருக்கும் திசையை என்னிடம் காட்டுங்கள்.

இரண்டாவது பாடல் ஆசானைப் பற்றியது: இது குரு / ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்துகிறது. உனக்கு கற்பிப்பவரை வழிபடு. எந்த உலகியல் இன்பமும் உன்னிடம் நிலைப்பதில்லை, ஆனால் நீ கற்றது வாழ்க்கை முழுவதும் நிலைக்கும். எனவே உனது குருவிற்கு நன்றி செலுத்த மறவாதே. உனது நிலம், வீட்டை விட்டு நீ செல்லக்கூடும், நீ எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை... உன்னை நீ அறியாவிட்டால் இப்பிரபஞ்சத்தில் நீ ஒரு பயனும் அற்றவன்...எனவே குருவின் ஒளியை பின்பற்று.

சிஞ்சிதா மாஜியின் 2015-16 பாரி மானியப்பணியின் கீழ் இந்த குறும்படமும், கதையும் வெளியிடப்பட்டது.

தமிழில்: சவிதா

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Other stories by Sinchita Parbat
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha